இந்த இளைஞர்களுக்கு என்னவாயிற்று...

Dr. பா. நாகராஜன்

23rd Oct 2018

A   A   A

சில நாட்களுக்கு முன் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் ஒரு கட்டுரை படித்தேன். நாடு, இடம், நபர் தெரிவிக்காமல் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. ஒரு பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. கணவனுக்கு மிகுந்த சந்தேகம். இந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று அவனுடையது இல்லை என்பதாக. சந்தேகம் வலுத்து கணவன் மனைவி இருவரிடையே சண்டை சச்சரவுகள் உருவாகி உறவினர்களின் சமரசம் எடுபடாமல் காவல் நிலையம், நீதிமன்றம் என சென்றுவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் உண்மையான தந்தை யார் என கண்டுபிடிக்கும் மரபணு சோதனை (Paternity test) செய்யக்கூடாது என்பது சட்டம். இது இரண்டு குழந்தைகளின் கன்னத்தின் உள்பகுதியிலிருந்து சிறிய அளவுக்கு சுரண்டி எடுத்து குறிப்பிட்ட தந்தையின் உட்கன்னத்திலிருந்தும் சுரண்டி எடுத்து மரபணு சோதனை செய்வார்கள். இதன் மூலமாக குறிப்பிட்ட குழந்தைக்கு அந்த நபர் உண்மையான தந்தையா இல்லையா என தெரியவரும்.

இந்த பரிசோதனையின் பேரில் கிடைத்த முடிவுகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. காரணம் இரட்டை குழந்தைகளில் ஒன்று அப்பெண்ணின் கணவருடையது இல்லை என்பதுதான். அப்பெண் தன் கணவரிடம் உறவு கொண்டு அடுத்த 24 மணிநேரத்திற்குள்ளாக தன் நண்பரான அடுத்த வீட்டு நபருடன் உறவு கொண்டிருக்கிறார். 24 மணிநேரத்திற்குள் இரு நபருடன் உறவு கொண்டதால் அப்பெண்ணின் கருமுட்டையில் இரண்டு விந்தணுக்கள் ஒருசேர பயணித்து கருமுட்டை சினையாகியுள்ளது. இதற்கு ஆங்கிலத்தில் Heterropaternal superfecundation. இது மிக மிக அரிதான ஒரு மருத்துவ அதிசயம். இதை பற்றி கட்டுரையாளர் கூறும் பொழுது என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. இக்கால இளைஞர்கள் பொதுவாக ஆண் பெண் இருபாலருமே பொதுவாக சமூகத்தில் ஏற்பட்டுள்ள புதிய தலைமுறையினர் எதிர்பார்க்கும் நீதி மற்றும் விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை என்று தெரியவருகிறது.

என் கலந்தாலோசனை அறைக்கு வரும் தம்பதியர்களும் தங்களுக்கு உண்டான பிரச்சனைகள் அநேகமாக வாட்சப் மற்றும் பேஸ்புக் மூலமாகவே உருவாகின்றன என கூறுகின்றனர். அடையாளம் தெரியாத நபருடன் ஆண் பெண் இருவருமே எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம் கொண்டுள்ளனர். பொதுவாக கருத்து பரிமாற்றங்கள், சமூக காரியங்கள் பற்றி இருத்தல் நலம். அவரவர் தம் மிக அந்தரங்கமான பிரச்சனைகளை பிறரிடம் பகிர்ந்தளித்தலில் பல்வேறு விதமான பிரச்சனைகள் எழக்கூடும் என்பதை அனைவரும் அறிவதில்லை.

கடந்த மாதம் சென்னையிலிருந்து ஓர் மென்பொறியாளர் என் அறைக்கு வந்திருந்தார். அவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகியுள்ளது. ஒட்டுமொத்தமாக 30 நாட்கள் கூட அவர்கள் இருவரும் ஒன்றாக வசித்ததில்லையாம். காரணம் அப்பெண் மிகுந்த கட்டுப்பெட்டித்தனமான பாரம்பரியம் உள்ள வட இந்திய பெண்மணி. இவரோ கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர். மொழி வேறு, ஜாதி வேறு, இனம் வேறு. ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதால் மணமுடித்துள்ளனர். அந்நிறுவனத்தில் அப்பெண்ணுக்கு மேலதிகாரியாக இருக்கிறார். இவர்கள் இருவரும் மணமுடித்தது நிறுவனத்தில்கூட மிக சிலருக்கே தெரியுமாம். அந்நபரின் பெற்றோருக்கு தெரியுமாம். அப்பெண்ணின் பெற்றோருக்கு நீண்ட நாட்களுக்கு பின்னரே தெரிய வந்துள்ளது. ஏறக்குறைய 9 மாதங்கள் பெண்ணின் பெற்றோருக்கு தெரியாமலேயே இருந்து வந்தது. அப்பெண்ணின் மூத்த சகோதரிகள் இருவரும் மணமுடித்து தனிக்குடித்தனம் நடத்துகின்றனர். அப்பெண்ணின் தந்தை பான்போரோக்கராக இருந்து தொழிலில் நலிவடைந்தவர். தாய் ஒரு நோயாளி. இப்பெண்தான் பெற்றோர் இருவருக்கும் பொருளாதாரம் மற்றும் உடல் ரீதியாகவும் பொறுப்பேற்க வேண்டி இருந்திருக்கிறது. எனவே தன் திருமணத்தை பற்றி கூறினால் மனமுடைந்து விடுவர் என்று எண்ணி இவ்வளவு நாட்களும் தள்ளிப் போட்டிருக்கிறார். இதை கூறிய பின் அவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்து பின் சமாதானம் அடைந்து இன்னும் இரண்டு மாதத்தில் முறைப்படி சிறியளவில் ஒரு திருமண வரவேற்பை நடத்திக் கொள்ளலாம் என குடிவெடுத்துள்ளனர்.

ஆனால் இந்நிலையில் அந்த பெண் இவர்கள் இருவரும் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் இன்னொரு நபருடன் சிறிது நெருங்கி பழகியதை அவரது கணவன் கண்டுபிடித்துள்ளார். பேஸ்புக் மற்றும் வாட்ஸப்-ல் அவர்களது சாட்டிங் சிறிது எல்லைமீறி இருப்பதை கண்காணித்து அதை கண்டித்திருக்கிறார். கணவர் இந்த குறிப்பிட்ட ஆண் நபர் நேர்மையான ஆளுமையுள்ளவர் அல்ல என்று எச்சரித்திருக்கிறார். இவரது எச்சரிக்கையையும் மீறி திரும்பவும் அதே போன்று பழகி கொண்டிருந்ததால் அப்பெண்ணின் கணவர் தகுந்த அறிவுரைக்காக என்னிடம் வந்திருந்தார். தன் மனைவியை இவர் மிகவும் நேசித்ததால் இன்னும் ஒரு வாரத்தில் சென்னையில் இருந்து கூட்டிகொண்டு வருவேன் அவளுக்கு தகுந்த அறிவுரை தரவேண்டும் என்று என்னை வேண்டிக்கொண்டார்.

அவர் அந்த பெண்ணை கூட்டிக்கொண்டு வந்த பொழுது நான் விசாரித்து அறிந்தது கீழ்வருமாறு. இவர்கள் மணமுடித்திருந்தாலும் நெருங்கிய உறவு இன்னும் ஏற்படவில்லை என்பது முதல் காரணம். அப்பெண்ணின் வீட்டார் மணமகனை தகுந்த முறையில் வரவேற்பது, உபசரிப்பது இல்லை என்பது இரண்டாவது காரியம். இவர்கள் இருவருக்குமே தொடர்ந்து ஒன்றாக வாழலாமா இல்லையேல் பிரிந்து விடலாமா? என்ற எண்ணம் உள்ளுக்குள் இருந்துகொண்டே இருந்திருக்கிறது. மொழி, இனம், ஜாதி, அந்தஸ்து, மதம், சடங்கு சம்பிரதாயங்கள் இவை அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு ஆண் பெண் இருவரும் ஆத்மார்த்தமாக ஒருவரையொருவர் நேசித்தாலொழிய ஆயுள் முழுவதும் ஒன்றாக குடும்பம் நடத்துவது என்பது இயலாத காரியம்.

இதன் காரணமாகவே நம் முன்னோர் முடிந்தளவில் நெருங்கிய பந்தங்களுக்குள் மணமுடித்துள்ளனர். பின்னர் காலம் மாற மாற கல்வி மற்றும் வேலைகளுக்காக வேறு மாநிலம், வேறு நாடு என வெளியே வந்ததின் காரணமாக தூர இடங்களிலிருந்து மணமக்களை தேடவேண்டி வந்தது. இன்றும்கூட சில சமூகங்களில் ஒரே தெருவுக்குள் மணமக்களை தேடுவதை காணலாம். நான் கூறிய மணப்பெண் குஜராத்தை சேர்ந்தவராகவும், இவர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவராகவும் இருப்பதால் மொழி, இன, மத பழக்கவழக்கங்களில் மிகுந்த வேறுபாடுகள் இருந்திருக்கிறது. இவற்றைத் தாண்டி இவர்களுடைய எதிர்பார்ப்புகள் ஒன்றையொன்று ஒத்துவராமல் போனது நியாயமே. இதில் என்னவொரு விபரீதம் என்னவெனில் அப்பெண் நேசித்த இரண்டாம் நபர் ஒரு இஸ்லாமியர். நான் அப்பெண்ணிடம் கணவரை விட எந்தவிதத்தில் அவர் சிறந்தவராகப் பட்டார் என்று கேட்டதற்கு அவரது பழக்கவழக்கம் மற்றும் நடையுடை பாவனைகள் பிடித்திருந்தது என்றாள். நான் இருவருக்கும் தகுந்த அறிவுரைகள் கூறி எவ்வளவு விரைவில் திருமண வரவேற்பு நடத்துவீர்களோ அதை நடத்தி இருவரும் ஒன்றாக வசிக்க வேண்டும் எனவும், அறிவுறுத்தி அனுப்பி வைத்தேன்.

சென்னையில் வேலை செய்பவர்களது நேரமும், சக்தியும் பயணத்திலேயே அதிகம் போய்விடுகிறது என்பது பெரிய உண்மை. அநேகமாக பெரிய நகரங்களில் வசிப்பவர்களின் கதையே இதுதான். பயண களைப்பில் அன்றாட அத்தியாவசியமான வேலைகளுக்கு அவர்களது நேரமும், சக்தியும் இருப்பதில்லை. பின் தம்பதியரின் நெருங்கிய உறவுக்கு ஏது நேரம். எப்பொழுதுமே நெருங்கிய உறவு என்பது தொடர்ந்து இருத்தல் நலம். ஏனெனில் உடன் பிறந்தோர்கூட நெடுந்தூரத்தில் இருக்கும்போது. அவர்களது உறவு விட்டுப்போய் விடுவதை காணமுடிகிறது. இத்தம்பதியரின் சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் காரணம் நெருங்கிய உறவு இல்லாமல் போனதே என்பது என் முடிவு.

 


பெப்ரவரி 2017 அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.