தொடர்புடைய கட்டுரை


பஞ்சமூலக இயற்கை உணவுகள்

Dr.V. செல்வராஜ்

28th Mar 2019

A   A   A

அன்றாட வாழ்வில் மக்களின் ஆரோக்கியத்தின் தேவை அதிகமாக உணரப்பட்ட போதிலும் அவர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வும், கவனமும் குறைவாகவே காணப்பட்டு வருகின்றது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இயற்கை உணவு, இயற்கை மருத்துவத்தில் மட்டுமே கவனமாக இருந்த மக்கள் படிப்படியாக மாற்றம் பெற்று அலோபதி மருத்துவம், சித்தா, ஆயிர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகளுக்கு சென்றுள்ளார்கள்.

இயற்கை உணவுமுறைகளை மாற்றும் விதமாக பல மருத்துவ விளம்பரங்களும், பல அறிவுறுத்தல்களும் கால மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. என்றாலும் பாரம்பரிய முறைகளை விட்டு ஒதுங்கிவிட முடியாதபடி நாம் அதனுடன் பிணைக்கப்பட்டுள்ளோம்.

நாம் உண்ணும் உணவு அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுகிறது. மனித உடலானது நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், நிலம் என்ற ஐந்து மூலகங்களாலும் பிணைக்கப்பட்டுள்ளது.

நீர், மனித உடலிலுள்ள இரத்தம், திரவ நிலையிலுள்ள பொருட்கள், பித்தநீர், உணவு செரிமானத்திற்கு பயன்படும் திரவநீர் உட்பட எல்லா வகையான திரவங்களுக்கும் நீர் தான் காரணம்.

தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை லிட்டர் அளவுக்காவது குடித்துவர வேண்டும். அதேபோல ஒவ்வொரு வேளையும் சாப்பிடுவதற்கு முன்பு சுமார் 250 மில்லி லிட்டர் அளவுக்கு தண்ணீரை அருந்த வேண்டும். தண்ணீரை குடிக்கும் போது நிதானமாக சுவைத்து சுவைத்து குடிக்க வேண்டும்.

உடலுக்குத் தேவையான சக்தி பொருளை இரத்தத்துடன் கலந்து உடல் முழுவதும் எடுத்துச்செல்ல பெருமளவில் தண்ணீரே உதவுகிறது. உடலுக்குத் தேவையான சீதோஷ்ண நிலையை தண்ணீர் அளிக்கிறது.

உடலிலுள்ள கழிவுப் பொருட்களை ஈரப்பதத்துடன் மலமாகவும், சிறுநீராகவும், வியர்வையாகவும் வெளியேற்ற தண்ணீர் பெருமளவு உதவிபுரிகிறது.

தண்ணீரைக் குடிப்பதற்கு மட்டுமல்லாமல் தண்ணீரில் தினமும் குளிப்பதும் நல்லது. தண்ணீரில் குளிப்பதன் மூலம் தோல் பகுதிகள் சுத்தமடைவது மட்டுமல்லாமல் சவ்வுடுபரவல் (Osmosis) மூலமாக தண்ணீரை கிரகித்துக் கொள்கின்றன. எனவே பஞ்சமூலகங்களில் ஒன்றான தண்ணீரைக் குடித்தும், குளித்தும் பலன்பெற வேண்டும்.

நாம் பஞ்சமூலகங்களையே உணவாய் உட்கொள்கிறோம். நாம் உட்கொள்ளும் உணவு மண் என்ற மூலகத்திலிருந்து விளையும் தாவரப் பொருட்களை சாப்பிடுவதோடு நாம் வாழ்ந்து பலனடையவும் உதவுகிறது. மனித உடல், தோல், முடி, திசுக்கள் முதலியவை நிலத்துடன் தொடர்புடையவை. நிலத்திலிருந்து கிடைக்கும் கனிம சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளை ஏற்படுத்துகிறது.

ஆகாயம் என்னும் மூலகம்தான் மனதிற்கு தேவையான சக்தி, ஆன்மீகசக்தி ஆகியவற்றை தருகின்றன. ஆகாயம் என்னும் வெற்றிடம் வயிற்றில் உண்டாக்கப் பட்டுள்ளதால்தான் பசி என்ற ஒரு உணர்ச்சி உடலில் ஏற்படுகிறது. பசி எடுத்தால்தான் உடல் நல்ல ஆரோக்கிய நிலையில் உள்ளது என்று அர்த்தமாகிறது. பசித்து புசிக்க வேண்டும், அப்படி பசி ஏற்பட வேண்டுமெனில் நாம் உண்ணும் உணவு செரிமானம் அடைந்து குடல் உறிஞ்சிகளால் சத்துக்கள் கிரகிக்கப்பட்டு மீதி சக்கை பொருட்கள் முறையாக மலமாய், சிறுநீராய், வியர்வையாய் வெளியேற்றப்பட வேண்டும்.

பசி எடுக்க வில்லையெனில் உண்ணாவிரதத்தை கடைபிடிக்க வேண்டும். அப்போது தேவைக்கு அதிகமாக உடலில் சேர்ந்துள்ள பொருட்கள் கரைக்கப்பட்டு உடலுக்கு சக்தியை அளிப்பது மட்டுமல்ல நல்ல பசியும் உண்டாகும். இதனால் ஜீரண உறுப்புகள் நன்கு ஓய்வுபெற்று புத்துணர்ச்சி அடைந்து அடுத்த வேளை சாப்பாட்டிற்கு தயாராகிறது.

நல்ல பசி ஏற்படும்போது சுவையில்லாத உணவுகூட சுவையாக இருக்கும். பசியெடுக்கும்போது பழைய சோறா? புதிய சோறா? உப்பு இருக்கிறதா? இல்லையா என்றெல்லாம் பார்ப்பதில்லை, அப்படி சாப்பிடுவோம்.

நாம் சாப்பிடும் இயற்கை உணவில் மிகவும் முக்கியமான உணவு காற்று என்னும் உணவாகும். தண்ணீர் இல்லாமல் ஒரு சில வாரங்கள் கூட இருந்துவிடலாம். ஆனால் காற்று இல்லாமல் ஒருசில நிமிடங்கள் கூட இருக்க முடியாது. பிறந்த நாள் முதல் இறப்பது வரை காற்றை நாம் நுகர்ந்து வருகிறோமே தவிர முழு பயனையும் நாம் பெறுவதில்லை. பிராணயாமம் என்னும் மூச்சு பயிற்சி முறையை நாம் கடைபிடிப்பதில்லை.

அவசியமாக மூச்சுப்பயிற்சியை கடைபிடிக்க வேண்டும். நாம் சாப்பிடும் அனைத்து தாவர உணவு வகைகளையும் நன்கு ஜீரணித்து அதனை இரத்தத்துடன் கலக்கச் செய்யும் வேலையை காற்று என்னும் இந்த ஆக்ஸிஜன் தான் செய்கிறது.

 உடலில் உள்ள செல்கள், திசுக்கள், உறுப்புகள், மண்டலங்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு வினாடியும் தேவைப்படும் முக்கிய உணவு காற்றாகும். சுவாசித்தல் மூலமே உடல் வளர்ச்சி, ஞாபகசக்தி ஆகியவற்றை நாம் பெறுகிறோம். உடம்பிலுள்ள ஏழு நரம்பு மையங்களை ஏழு சக்கரங்கள் என்று அழைக்கிறோம்.

இந்த ஐந்து மூலகங்களும் ஏழு சக்கரங்களும் சமநிலையில் இயங்கினால் உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த ஏழு சக்கரங்களுக்கும் நாம் அக்குபிரசர் முறையில் விரல்களால் அழுத்தம் கொடுக்கும்போது உடலில் உள்ள மற்ற பகுதிகளுடன் செயல்பட்டு உடல்நலம் பெறமுடியும்.

சூரிய சக்திகள் எனும் உணவு (Solar food): உடலின் உறுப்புகளான இரத்தம், தசை, எலும்புகள் போன்றவற்றிற்கு நல்ல உறுதியையும், சக்தியையும் சூரியக்கதிர்கள் கொடுக்கின்றன. சூரியக்கதிர்கள் படாத இடத்தில் விளையும் செடி, மரம், கொடி போன்றவை எப்படி செழித்து வளராமல் பட்டு விடுகின்றனவோ அது போல சூரிய ஒளிப் படாமல் வாழும் மனிதர்களும் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.

அண்மைக் காலமாக பலர் முதுகுவலி, கழுத்துவலி போன்ற வலிகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சூரிய ஒளியிலிருந்து கிடைக்கின்ற வைட்டமின் 3டி சரிவர மனித உடலுக்கு கிடைக்காத போது இந்த வலிகள் ஏற்படுவதாய் அண்மையில் பல ஆய்வுகளில் தெரியவருகிறது.

ரொம்ப நாட்களாக முதுகு வலியால் பாதிக்கப் பட்டு அதோடு நடக்க முடியாதபடி வலியால் துடித்துக் கொண்டிருந்த ஒருவருக்கு கொடுத்த மருந்து 3டி வைட்டமின் தான். மருந்து கொடுத்துவிட்டு தினமும் 45 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்க வேண்டுமென்று மருத்துவர் ஆலோசனை கூறியுள்ளார். நல்ல பலனும் கிடைத்தது. தொடர்ந்து காலை சூரிய ஒளியில் அவர் நின்று வருகிறார். இந்த வைட்டமின் உடலில் சரியாக வேலை செய்கிறது.

எனவே தினமும் நாமும் குறைந்தபட்சமாக ஒரு மணிநேரமாவது சூரியக்குளியல் செய்தால் அனைத்து நோய்களும் விலகும் என்பதில் சந்தேகமில்லை.

நவீன யுகத்தில் சோலார் செல்கள் இயக்கப்பட்டு மின் சக்தியாகவும், மின்சக்தியால் வீட்டு அடுப்புகள், மின்விசிறிகள், வாட்டர் ஹீட்டர்கள் வாகனங்கள் என எல்லாம் இயக்கப்படுகின்றன. 

இத்தகைய சூரியசக்தியை பயன்படுத்தி மனித சமுதாயமும் நோய் நீங்கி வாழ வேண்டும். வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் கோவா, மகாபலிபுரம் போன்ற கடற்கரைகளில் சூரிய குளியல் செய்து பயன்பெறுகிறார்கள்.

நாமும் சூரிய குளியல் செய்துபலன் பெறுவோம். அதற்காக தினமும் காலை இளம் வெயிலில் நின்று சூரிய குளியல் செய்வோம். இதற்காகத்தான் நம்முன்னோர்கள் சூரிய நமஸ்காரம் மூலமாவது சூரிய ஒளியை பெற வேண்டும் என்பதற்காகவே சூரிய நமஸ்காரம் செய்யச்சொல்லி தாமும் செய்து நல்ல திடமான உடலைப்பெற்று வாழ்ந்துள்ளனர்.

சூரிய குளியல் மனதிற்குத் தேவையான சக்தி, ஆன்மீகச் சக்தியையும் உடலுக்குத் தருகிறது.

நெருப்பு மூலகத்தினால் தான் உடலுக்குத் தேவையான வெப்பம், உணர்ச்சிகள், ஜீரணம், இரத்த ஓட்டம், நரம்பு மண்டல இயக்கம், பருவ காலங்களில் ஏற்படும் உணர்ச்சிகள், சிந்திக்கும் சக்தி, நோய் நீங்குதல் முதலியன ஏற்படுகின்றன. எனவே பஞ்சமூலகங்களான விண், மண், காற்று, தீ, நீர் அனைத்தையும் உணவாக உட்கொண்டால் தான் பஞ்சமூலகத்தால் ஆன இந்த உடல் முழு நலமடையும். நாம் சாப்பிடும் உணவு மட்டும் உணவல்ல. இந்த பிரபஞ்ச மூலகங்களும் ஒரு வகையான இயற்கை உணவுகளே ஆகும்.

இதனை நாமும் உணர்ந்து பலன்பெற முயல்வோம், நலமாய் வாழ்வோம்.

 


2018 ஜூன் மாத அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.