தொடர்புடைய கட்டுரை


மூலநோய்கள்

Dr.V. செல்வராஜ்

08th Apr 2019

A   A   A

வளர்ந்து வரும் அறிவியல் உலகம். அதன் செயல்பாடுகளை திறம்பட செய்வதற்கு மனித ஆற்றல் தேவைப்படுகிறது. அன்றாட பணிகள், அலுவலகப் பணிகள் இன்று மிக அதிகமாக வேலை செய்பவர்களை அழுத்துவதாகவே உள்ளது. காரணம் பத்துபேர் செய்த பணிகளை போதிய ஆள்கள் இல்லாமல் குறைந்ததால் மூன்று அல்லது நான்கு பேர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அது போன்று தனியார் துறைகளில் பணிபுரிபவர்களும் வேலை செய்யும் நேரத்தில் வேறு எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமர்ந்து வேலை பார்க்கும் நிலையும் உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து அமர்ந்து வேலை செய்வதால் உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

பொதுவாக அதிக நேரம் உட்கார்ந்தபடியே வேலையை செய்பவர்களுக்கு மூலநோய்கள் ஏற்படுகின்றது. மூலநோய் ஏற்படுவதால் ஒருவித எரிச்சலோடு வேலை செய்யும் சூழ்நிலை உருவாகிவிடுகிறது.

மியுகஸ் என்னும் ஒரு மிருதுவான சவ்வுத் தோலால் ஆன பகுதிகளில் இணைக்கப்பட வேண்டிய சிறு இரத்தக் குழாய்கள் சில காரணங்களால் சரியாக இயங்காமல் உள்ளும் புறமும் நகர்த்தப்பட்டு விடுவதாலேயே இரத்தம் உறைந்து இரத்தக் குழாய்களின் நுனிப்பகுதியில் கட்டியாக கட்டி விடுகிறது.

இவ்வாறு கட்டிபடும் கட்டியானது மலக்குடலுக்குள் உறுத்தலை ஏற்படுத்தி வலியை உண்டாக்குகிறது. சில நேரங்களில் வெளியேற்றப்படும் மலம் இரத்தக் கறையுடன் வெளியேறுகிறது. இதனை இரத்த மூலம் (Haemorrhoid) என்பர். மலக்குடல் பாதிக்கப்பட்டு இரணங்களுடன் இருக்கும்போது மலத்துடன் வெளியேறும் சிறுபூச்சிகள் இரணத்தில் பட்டு நெளிவதால் ஒருசில அரிப்பு (Itching) குதப்பகுதிகளில் ஏற்படுகிறது. இதுபோன்ற நேரத்தில் மலம் கழிக்க முயலும்போது மிருதுவான மியுகஸ் என்னும் சவ்வு போன்ற பகுதிகளே சளிபோல மலத்துடன் வெளியேறுகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது போன்று மலத்துடன் இரத்தம் சிறிதளவில் வெளியேறி நாளுக்கு நாள் அதிகமாக இரத்தம் வெளியேற மூலநோயுள்ளவர்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படுவதுண்டு, நாளடைவில் மலக்குடல் வளையங்கள் (Reetal Spineters) சுருங்கி விரியும் தன்மை குறைக்கப்பட்டு மலத்தை வெளியேற்றும் சக்தி குறைந்துவிடுகிறது.

எனவே மலக்குடலில் மலமானது அதிகமாக தங்கி விடுவதால் முக்கி மலம் கழிக்க முயலும் போது மலக்குடலையே ஆசனவாய்க்கு வெளியே இழுத்துக்கொண்டு வர நேரிடுகிறது. இதனை மலக்குடல் அடியிறக்கம் (Prolapse Rectum) என்கிறோம். இதற்கு நரம்புத்தளர்ச்சியும் காரணமாகும்.

மலக்குடலில் மலமானது அதிகமாக தங்கி இறுகி விடுவதால் மலம் கழிக்க அழுத்தம் கொடுத்து முக்குவதால் மலம் வெளியேறும்போது மிகுந்த வலியை கொடுக்கிறது. இதனாலேயே மூலம் உள்ளவர்கள் உட்கார கூட சிரமப்பட நேரிடுகிறது என்கிறார்கள்.

மனிதர்களுக்கு ஏற்படும் எல்லா நோய்களுக்கும் முக்கிய காரணம் மலச்சிக்கல் என்றே சொல்லலாம். ஒரு நோய்க்கு வைத்தியம் செய்வதற்கு முன்பு முதலில் அவருக்கு மலச்சிக்கல் இருந்தால் அதனை சரிசெய்ய வேண்டும்.

மலச்சிக்கலுக்கான காரணங்கள் உணவுடன் போதிய அளவு தண்ணீர் அருந்தாமல் இருத்தல், மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும்போது மலம் கழிக்காமல் இருப்பது, கிழங்கு வகைகள், சாதம் போன்றவற்றை அடிக்கடி அதிக அளவில் உண்ணுதல், போதிய உடற்பயிற்சி செய்யாமலிருத்தல், அதிக நேரம் தூங்குதல், சோம்பேறித்தனமாக இருத்தல் போன்றவை ஆகும்.

உடல் உஷ்ணத்தால் ஈரப்பசை காய்ந்து இறுகி மலம் கெட்டியாகிறது. அதனால் மலம் சரியாக வெளியேற்றப் படாமல் இருக்கும்போது வாயு உற்பத்தியாகி காற்றுப் பிரிதலின் போது துர்நாற்றம் ஏற்படுகிறது. வெளியேற்றப் படாத காற்றே வயிறு உப்பிசத்தையும், சோர்வையும், களைப்பையும் அஜீரணத்தையும் உருவாக்குகிறது.

மூலம் குணமாக கிழங்குவகை உணவுகளை மூலநோய் குணமாகும்வரை சுத்தமாக சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். பச்சரிசி சாதம் சாப்பிடுவதற்கு பதிலாக புழுங்கல் அரிசி சாப்பிட வேண்டும். முடிந்த அளவுக்கு சாதத்தை குறைத்து பழ உணவுகளையும், பச்சைக் காய்கறிகளையும் அதிக அளவில் உண்ண வேண்டும். கிழங்கு வகையில் கருணைக் கிழங்குகளை அதிகமாக சாப்பிடலாம்.

தினமும் காலையிலும் இரவிலும் தேங்காய் எண்ணெயை ஒவ்வொரு ஸ்பூன் அளவு சாப்பிட்டுவர வேண்டும். மிக அதிக தொல்லையுடையவர்கள் சிறிதளவு சுட்ட விளக்கெண்ணெயை தோசை போன்றவற்றில் சிறிதளவு ஊற்றி சாப்பிட வேண்டும்.

உணவில் வெண்டைக்காய், கத்தரிக்காய் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். பசலைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை, கலவைக்கீரை, துத்திக்கீரை, புளிச்சக்கீரை, மணத்தக்காளிக்கீரை போன்றவற்றை சட்னி போல செய்து சாப்பிடலாம்.

வெண்பூசணிச் சாறு தினமும் அரை டம்ளர் சாப்பிட்டு வர வேண்டும். காரம், புளிப்பு, உப்பு ஆகியவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். வயிறு புடைக்க உணவு உண்ணாது சற்று குறைத்து சாப்பிட வேண்டும்.

மூலம் மலச்சிக்கல் போன்றவை இருப்பவர்கள் இரவு ஏழு மணிக்குள் உணவை முடிப்பது நலம். ஒரு வேளை நேரம் தவறி சாப்பிட நேர்ந்தால், அரை வயிறு உணவையே உட்கொள்ள வேண்டும். இரவு உணவை பழ உணவாக உட்கொள்வது மிகவும் நல்லது. நார் பழவகைகளை அதிகமாக எடுப்பது நல்லது.

அஹிம்சா எனிமா கேனை பயன்படுத்தி மிகவும் விரைவில் மூலத்தை குணமாக்கிக் கொள்ளலாம். சிறு உடற்பயிற்சி, சிறப்பான யோகாசனங்கள் பயின்று அதனை தொடர்ந்து செய்துவர வேண்டும்.

பால் சாதம் வெல்லம் அல்லது பனை வெல்லம் சேர்த்து இரவில் சாப்பிட வேண்டும். வேப்ப எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவுக்கு எடுத்து முறையே 50 கிராம் கலந்து வைத்துக் கொண்டு தினமும் காலை, இரவு இருவேளையும் சுமார் ஐந்து சொட்டு அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மூலநோய் முற்றிலும் குணமாகும்.

பிஸ்டுலா (Fistula) என்னும் மூலநோய் உள்ளவர்களும் இந்த முறையை கடைபிடித்து வரலாம். மலம் கழித்த பின் ஆசனவாயில் அரிப்பு உள்ளது போல் கஷ்ட்ப்படுபவ்வர்கள், ஆசனவாயை கழுவிய பின் அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை தடவிவிட வேண்டும்.

பழங்கள் காய்கறிகள், கீரைவகைகளை நம் உணவோடு தினமும் எடுத்துக் கொள்வது நல்லது. கூடிய மட்டும் உடல் அதிக உஷ்ணமாகாதவாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது நல்லது.

மேலும் மன அழுத்தம் அதிகமாகும் போது உடலின் உஷ்ணம் அதிகரித்து விடுகிறது. அதிக வேலைச்சுமையால், இருக்கையிலிருந்து நீண்ட நேரம் எழும்பாதிருக்கும் போதும் உடலின் வெம்மை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. கூடிய அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது.

மலச்சிக்கல் ஏற்படாதவாறும் மூலம் ஏற்படாமலும் நம்மை பாதுகாப்பது நம் கையில் தான் உள்ளது. எனவே இந்த முறைகளை பயன்படுத்துவோம். பச்சை காய்கறிகளை நாமும் உண்போம். நம் குழந்தைகளையும் அவ்வாறே உண்பதற்கு பழக்குவோம்.. நோயின்றி நலமோடு வாழ்வோம். 

 


ஆகஸ்ட் 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை