தொடர்புடைய கட்டுரை


உணவு பொருள்களில் இரசாயனங்களின் தாக்கம்

அக்ரி சுரேஷ்

14th Apr 2019

A   A   A

உணவு பொருள்களில் இரசாயனங்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வயல்வெளியில் உணவு பொருள்களை உற்பத்தி செய்து அதனை மதிப்பூட்டப்பட்ட பொருள்களாக மாற்றும் பொழுது இரசாயனங்கள் சேர்க்கப்படுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. குறிப்பாக ஊறுகாய் தயாரிக்கும்போது அசிட்டிக் அமிலம் சேர்க்கப்படுவது, பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பொழுது இரசாயனங்களை சேர்ப்பதையும் நாம் கூறலாம்

இரசாயனங்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாகும் போதுதான் பிரச்சனை ஏற்படுகிறது. இனிப்புகள் தயாரிக்கும்போது பலவித நிறங்களை கொண்ட இனிப்புகளாக மாற்றுவதற்கு நிறமூட்டிகள் (Dye) சேர்க்கப்படுகிறது. மேலும் இனிப்புகள் கெடாமல் இருப்பதற்கும் இரசாயனங்கள் பயன்படுத்தப் படுகின்றன. தற்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள விஷயம் சீனியில் இரசாயனம் கலந்திருக்கும் விஷயமாகும்.

இரசாயனங்கள் வரிசையில் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் மனிதனின் ஆயுள் காலத்தை குறைக்கும் வரிசையில் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தும் வழக்கம் இயல்பாக உள்ளது. விவசாயத்தில் பயிர்களுக்கு வரும் பூச்சிகளை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட இரசாயன கொல்லிகள் பயன்படுத்துவதால் மனிதனுக்கு புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வருகின்றன.

பழங்களில் திராட்சை தோட்டங்களில் நீலநிற தாமிர வகை இரசாயன கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. காய்கறிகளில் வெண்டை, கத்தரி, மிளகாய் போன்றவற்றிற்கு அதிகம் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. பூச்சிகளின் வீழ்படிவு உள்ளதா என உணவு பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது வெளிநாடுகளில் சோதனை செய்யப்படுகிறது. உணவு பொருட்களை நீண்ட நாள் கெடாமல் பாதுகாக்க சேமிப்பு கிடங்குகளில் இரசாயன மருந்துகள் அதிகம் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக மஞ்சளை கெடாமல் பாதுகாக்க அலுமினியம் பாஸ்பைடு என்ற மருந்தால் புகைமூட்டம் செய்யப்படுகிறது.

பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீழ்படிவு நாம் பயன்படுத்தும் பாலில் உள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கால்நடைகள் உண்ணும் உணவு வழியாக இரசாயன மருந்துகளின் வீழ்படிவு உணவு மண்டலத்தினுள் செல்கிறது. மேலும் கால்நடைகளுக்கு பயன்படுத்தும் ஆண்டிபயாடிக்குகளின் வீழ்படிவு இறைச்சி உணவுகளில் காணப்படுகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வரையறை செய்யப்பட்ட அளவைக் காட்டிலும் ஆண்டிபயாடிக்குகள் அதிகம் பயன்படுத்தும்போது மனிதர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

உளுந்து மற்றும் பருப்பு வகைகளின் தோலை நீக்குவதற்கு இரசாயனங்களை பயன்படுத்தும் முறையை சில நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள பூச்சிக்கொல்லி வீழ்படிவுகளை உப்புகரைச்சல் கொண்டு அவற்றை சுத்தப்படுத்துவதன் மூலம் நீக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளும், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் விவசாயிகளும் வரையறை செய்யப்பட்ட வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் ஓரளவு இரசாயங்களால் ஏற்படும் பின்விளைவுகளை குறைக்கலாம்.

 


2018 செப்டம்பர் மாத அமுதம் இதழில் வெளிவந்தது…

தொடர்புடைய கட்டுரை
Error
Whoops, looks like something went wrong.