தொடர்புடைய கட்டுரை


உலர் பழங்கள்

Dr.V. செல்வராஜ்

17th Sep 2018

A   A   A

பழங்கள் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. அதனை உண்ணும் போது ஏராளமான நோய்களுக்கு மருந்தாகவும் ஆகிறது. அது போன்று உலர் பழங்களும் உள்ளன. அண்மை காலத்தில் உலர் பழங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.

இந்த உலர் பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வற்றச்செய்து உலர் பழங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம் பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கின்றன. உலர்த்துவதன் மூலம் ஒரு பருவ காலத்தின் பழங்களை எல்லா காலத்திலும் உண்ண முடிகிறது. உலர் பழங்களின் சுவையும் மணமும் வெகு நாட்கள் அப்படியே இருக்கிறது.

உலர் பழங்களுக்கு கலோரிகள் அதிகம். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் வைட்டமின்கள், மினரல்கள் இவற்றில் நிறைய உள்ளன. இவை எளிதில் செரிமானமாகக் கூடியவை. இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. உடல் பலவீனமானவர்கள் உலர் பழங்களை உண்டால் விரைவில் இயல்பான ஆரோக்கிய நிலையை அடையலாம்.

உலர் பழங்களை உண்பதை பழக்கமாகக் கொண்டால் உடல் சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை போக்கக் கூடியவை. தோலின் சுருக்கங்களை நீக்கி சருமத்தை பாதுகாக்கக் கூடியவை இதயத்திற்கும் நல்லது, அன்றாடம் உண்டுவர நலம் பெற முடியும்.

தினம் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான 5 கிராம் நார்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் நீங்கி குடலியக்கம் சீராக நடைபெறுகிறது.

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்சத்து அதிகம் இருப்பதோடு கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளன. இதனால் 0.2 கிராம் கொழுப்பைத்தான் இதிலிருந்து பெற முடியும். எனவே உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறந்த ஒன்றாகும்.

உணவில் உப்பு அதிகம் சேர்த்து வந்தால், உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். அப்படி சோடியத்தின் அளவு அதிகரித்து பொட்டாசியத்தின் அளவு குறைந்திருந்தால் அதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆனால் உலர்ந்த அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் இருப்பதால் இதனை தொடர்ந்து உண்டுவந்தால் உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கலாம்.

உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் மற்ற பழங்களைவிட அத்திப்பழத்திலுள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் மிகவும் தரமானது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் நிறைந்துள்ளது.

ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் இருப்பதால் ப்ரீ-ராடிக்கல்களால் உடலின் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு இதய நோயின் தாக்கம் தடுக்கப்படும். மேலும் இது உயர் இரத்த அழுத்தத்தை தடுப்பதால் கரோனரி இதய நோயின் தாக்கமும் குறையும். அதோடு உலர் அத்திப்பழம் ட்ரை-கிளிசரைடுகளின் அளவை குறைப்பதால் இதய நோய் வரும் வாய்ப்பு சீராக குறையும்.

ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்த அத்திப்பழம், ப்ரீ-ராடிக்கல்களால் செல்லுலார் டி என் ஏ பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு அதனால் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் ஆற்றல் பெற்றவை.

இதில் 3% கால்சியல் நிறைந்துள்ளது. இது ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய கால்சியத்தின் அளவாகும். எனவே தினமும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து எலும்புகள் வலிமையாகும்.

உலர்ந்த அத்திப்பழம் இனிப்பாக இருப்பதால் நீரழிவு நோயாளிகள் சாப்பிட யோசிப்பார்கள். ஆனால் இதில் உள்ள நார்சத்து, நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. என்றாலும் இதனை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது.

உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2% இருப்புச்சத்து நிறைந்துள்ளது. உடல் முழுவதும் ஹீமோகுளோபின் எடுத்துச்செல்ல இந்த கனிமச்சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே இதனை தினமும் உட்கொண்டு வந்தால் உடலின் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்தசோகை வருவது தடுக்கப்படுகிறது.

அத்திப்பழம், கருவுறுதலை அதிகரிக்கவும் பாலுணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது. இதற்கு அத்திப்பழத்தில் உள்ள துத்தநாகம், மாங்கனீசு மற்றும் மெக்னிசியம் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுதான் காரணமாகும்.

உலர்ந்த திராட்சைப்பழம்:

உலர்ந்த திராட்சை பழத்தில் வைட்டமின் பி. சி, போலிக் அமிலம், இரும்புச்சத்து, கரோட்டின்கள், லுமீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னிசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பலன் தரக்கூடிய ஒன்றாகும்.

கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளது. திராட்சைப் பழங்களை பதப்படுத்தி உலர்த்தி பெறப்படுவது தான் இந்த பழம். இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளது. மேலும் அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச் சத்துக்கள் இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இருவேளை உண்டுவர காமாலை நோய் குணமடையும்.

உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து பழத்தை சாப்பிட்டுவிட்டு பாலைக் குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

குழந்தைகளுக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை போட்டு காய்ச்சி பின் பாலை வடிகட்டி கொடுத்தால் தேக புஷ்டி உண்டாகும். குழந்தைகள் திடமாக வளரும்.

தொண்டைக்கட்டு பிரச்சனை இருந்தால் இரவு படுக்கும்முன் 20 உலர் திராட்சை பழங்களை பசும் பாலில் போட்டு காய்ச்சி வால்மிளகுத் தூளை கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி குடித்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்கு பின்னர் காலையிலும் மாலையிலும் 25 உலர் திராட்சை பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.

உலர் திராட்சை பழத்தை வெது வெதுப்பான நீரில் ஊறவைத்து காலையில் அருந்தினால் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், இதய நோய்கள் தீரும். வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இதுவாகும். எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுபெறவும், உடல் வளர்ச்சிக்கும் தேவையான கால்சியம் சத்தும் இப்பழத்தில் அதிகம் உள்ளது.

எலும்பு மஜ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு உலர் திராட்சை மிகவும் உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வு கொடுக்கிறது.

கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதில் கிடைக்கிறது. உலர் திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகிவந்தால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.

மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி பிரச்சனை தீர உலர்திராட்சை மருந்தாக பயன்படுகிறது. மலச்சிக்கல் நீக்கி மலமிளக்கியாக செயல்படுகிறது. உலர்ந்த திராட்சை பழங்களை நீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல காய்ச்சி அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.

தினமும் படுக்கைக்கு செல்லும்முன் பாலில் 5 உலர்ந்த திராட்சை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.

தினமும் இரவு அத்திப்பழம் மற்றும் உலர் திராட்சைப் பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் ரத்தசோகை தீரும், இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும், சிறுநீரக நோய்த்தொற்று குணமாகும், உடல்வெப்பம் தணியும், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். மேலும் எலும்புகளின் வலிமை, ஆரோக்கியத்துக்கு தேவையான கால்சியம் கிடைப்பதால் ஆஸ்டியோ போரோசிஸ் ஏற்படாமல் தடுக்கலாம்.

விலை மலிவானதுமான இந்த உலர் பழங்களை வாங்கி பயன்படுத்தி நோயிலிருந்து விடுபடுவோம். நமது குழந்தைகளுக்கு இதை கொடுப்போம், உடல்நலத்தோடு வாழ்வோம். ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்.

 


ஜூன் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை