தொடர்புடைய கட்டுரை


அறுசுவை உணவுகள்

Dr.V. செல்வராஜ்

15th Apr 2019

A   A   A

அன்றாட வாழ்வுக்கு, உயிர் வாழ்வதற்கு உணவு முக்கியமான ஒன்று. தினமும் உண்பது உடலுக்கு பலன் தரும் விதத்தில் இருக்க வேண்டும். உடலில் உள்ள செல்கள் வளர்வதற்கும் உடலில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும், உடல் வளர்ச்சி பெறுவதற்கும் உணவு பயன்படுகிறது.

நாள்தோறும் செல்கள் அழிக்கப்பட்டு உடலில் மாற்றம் நிகழ்கின்ற வேளையில் புது செல்களும் அதிகமாக உருவாவதால் தான் உடல் வளர்ச்சி பெறுகிறது. முதுமைக் காலங்களில் செல்கள் உற்பத்தி குறைந்து மேலும் அதிகமாக செல்கள் அழிவதால் வளர்ச்சி குன்றுகிறது.

இப்படியே மனிதன் படிப்படியாக மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறான். உடலுக்கு தேவையான சக்தியையும் மற்றும் தேய்வடைந்த பாகங்களை புதுப்பிக்கவும் உணவு அவசியம் தேவையாகிறது.

புரோட்டீன், கார்போஹைட்ரேட், கொழுப்புப் பொருட்கள், தாது உப்புகள், வைட்டமின்கள், தண்ணீர் போன்றவற்றையே கூட்டுப்பொருளாக நாம் உணவிலிருந்து பெறுகிறோம்.

உடல் வளர்ச்சி, எலும்பு உறுதி, இரத்தம் உறைதல், நரம்பு மண்டலம் போன்றவை சரிவர வேலை செய்ய கால்சியம் சத்து அவசியம் தேவை. கால்சியம் குறைந்தால் கால் எலும்புகளில் வளைவு, எலும்பு வலுவற்று போதல், பல்லில் சொத்தை ஏற்படுதல் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட குறைபாடுகள் உண்டாகும். பால், காய்கறிகள், வெண்ணெய், ஆரஞ்சு, கேரட் இவைகளில் கால்சியம் உள்ளது.

இரும்பு சக்தியை சமநிலைப்படுத்தவும் நரம்பு செல்களை தூண்டவும் பயன்படுகிறது. இச்சக்தி குறையுமானால் நரம்புத் தளர்ச்சி, குறைந்த வளர்ச்சி, இதயத்துடிப்பு சரியில்லாமல் போதல் போன்ற குறைபாடுகள் உண்டாகும்.

பாஸ்வரமானது எலும்பு, பல், தசைகளுக்கு உறுதி அளிக்க கூடியது. தானிய வகைகள், மாமிசம், பால் போன்றவற்றில் பாஸ்வரம் உள்ளது.

உடல் வளர்ச்சி தசைக்கட்டுப்பாடு, நரம்பு வளர்ச்சி போன்றவற்றுக்கு பொட்டாசியம் தேவை. உடல் எடை கூடுவதற்கும், ஊடு கலப்புக்கும் நரம்பு வலிமைக்கும் சோடியம் தேவை. நினைவாற்றலை சோடியம் அளிக்கும். சோடியம் அதிகமானால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளை அதிகமாக்கும்.

அடிப்படை வளர்ச்சி மாற்றத்தை உண்டுபண்ணவும் தைராய்டு, தைராக்சின் உற்பத்தியாகவும் உதவுகிறது. இரத்த சோகையும், உடல் வீக்கமும் உண்டாகும்.

உணவில் சுவைகள் ஆறு வகைப்படுகிறது. காரம், புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு, உப்பு கசப்பு என்பவைகள் ஆகும். இவ் அறுசுவைகளில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் மற்றும் இதர சக்திகள் உள்ளன. ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு.

காரமான உணவுகளை உண்ண வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் உண்டு. காரமான உணவு தயாரிக்க மிளகாய், கடுகு, மிளகு போன்றவை அதிகம் பயன்படுகிறது. காரம் உடலுக்கு சூட்டையும், உணர்வையும் கொடுக்கிறது.

பஞ்சபூதங்களில் ஒன்றான சூரியனிடமிருந்து நாம் வெப்பத்தைப் பெறுகிறோம். பொதுவாக தாம்பத்திய வாழ்க்கையில் உணர்வுகளை அதிகரிக்கக் கூடிய சக்தி காரத்திற்கு உண்டு. இதனை மிக அதிகமாக உட்கொண்டால் உடல் உஷ்ணம், உணர்ச்சி, கோபம் போன்றவை அதிகரிக்கும். அல்சர் இரத்த அழுத்த நோய், நரம்புத்தளர்ச்சி, உடலில் சிறு சிறு கொப்பளங்கள், வயிற்று வலி, சிறுநீர் போகும்போது எரிச்சல் போன்றவை உண்டாகும்.

ஒவ்வொரு பொருளையும் சுத்தம் செய்யக்கூடிய தன்மை புளிப்பு சுவைக்கு உண்டு. வீடுகளில் பாத்திரங்களை புளி போட்டு தேய்த்து கழுவி சுத்தம் செய்வதை இன்றும் பார்க்க முடியும். புளிப்பு அமிலத்தன்மை வாய்ந்தது. அழுக்கை அரித்து அகற்றக்கூடிய சக்தி வாய்ந்தது.

இரத்தத்தில் பித்தத்தை குறைக்கவும் புளிப்புச்சுவை பயன்படுகிறது. புளி, எலுமிச்சை, மாங்காய் போன்றவற்றில் புளிப்புச் சுவை உண்டு.

மகிழ்ச்சியையும், நல்ல சந்தோஷமான வற்றையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கு இனிப்பை வழங்குகின்றனர். மனதுக்கு இனிப்பு போல் உடலுக்கு சுவைக்குமா என்றால் அளவான இனிப்பு தீங்கு விளைவிக்காது. அளவுக்கு அதிகமானால் இனிப்பினால் கேடுகள் அதிகம்.

கரும்பு மற்றும் பழவகைகளில் இனிப்புச்சுவை இருந்தாலும் மற்ற சுவைகளும் இதில் உண்டு. இயற்கையான பழ உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்காது. ஆனால் சர்க்கரை, வெல்லம் போன்றவை பதப்படுத்தப்பட்டுள்ள உணவு பொருளாவதால் இவற்றில் இதரச்சுவைகள் அழிக்கப்பட்டு இனிப்புச்சுவையே அதிக அளவில் இருக்கிறது.

பொதுவாக இனிப்புச்சுவை உடலை வளர்க்கும், எடையை கூட்டும், தசைப்பாகங்கள் அதிகமாக வளரும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும், கோபத்தைத் தணிக்கும். ஓரளவுக்கு உடலுக்கு சிவப்பு நிறத்தையும் கொடுக்கிறது. வட இந்தியர்கள் அதிக அளவில் இனிப்பு உட்கொள்வார்கள். அவர்கள் பருத்தும், சிவந்த மேனியாகவும் இருப்பதை காணலாம். இனிப்புச் சுவை நீரழிவு நோய் உள்ளவர்களை அதிகமாக பாதிக்கும். அதனால் புண்கள் விரைவில் ஆறாது.

பருப்பு வகைகள், தேங்காய் போன்றவற்றில் துவர்ப்புச் சுவை அதிகம் உள்ளது. புண்களை ஆற்றும் சக்தி இச்சுவைக்கு உண்டு. இரத்தத்தை உறைய வைக்கும் ஃபை பிரினோஜன் என்னும் ஒருவித புரோட்டின் சக்தியை துவர்ப்பு சுவை அளிக்கிறது.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது முதுமொழி. உப்புக்கு நினைக்கும் ஆற்றலான ஞாபக சக்தியை கொடுக்கும் தன்மை உண்டு. பிற பொருட்களின் தாக்குதலால் உடல் அழியாத வண்ணம் காக்கும் சக்தி உப்புக்கு உண்டு. உப்புசுவை அதிகரித்தால் கை கால் வீக்கம், முகவீக்கம், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். இரத்தத்தில் உப்பு அதிகரித்தால், அதனை பிரிக்க சிறுநீரகங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உப்பு உடலில் அதிகமானால் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உண்டாகும். உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உப்புச் சுவையை குறைக்க வேண்டும்.

உடலில் அனைத்து பாகமும் உறுதி அடைய பயன்படுவது கசப்பு சுவையே ஆகும். மேலும் உடலின் தேய்மான பகுதிகளை புதுப்பிக்கும் ஆற்றல் கசப்புச் சுவைக்கு உண்டு. எலும்பும், தசையும் உறுதி அடையும். உடலில் நுழையும் நுண்கிருமிகளை அழித்து உடலை பாதுகாக்கிறது.

வேம்பு, பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை போன்றவற்றில் கசப்புச்சுவை உண்டு. வைரஸ், பாக்டீரியா போன்ற விஷக்கிருமிகளை இக்கசப்பு சுவை அழித்துவிடும்.

நரம்புகளில் பலம் பெருக கசப்பு சுவையை உண்ண வேண்டும். வேப்பம் பூ, வேப்பிலைச்சாறு இவற்றையும் சாப்பிட்டு வந்தால் நலமுடன் வாழலாம்.

உணவில் அறுசுவைகளில் ஒரு சுவை குறைவு ஏற்பட்டாலும் அதற்கேற்ப உடலில் கோளாறுகள் உண்டாகும். சமச்சீர் உணவு முறையையே கையாள வேண்டும்.

அறுசுவையும் உணவில் இருந்தால்தான் உடலில் இரத்தம் ஊறுவதாக கூறுகிறார்கள். அப்படிப்பட்ட உணவுகள் அறுசுவையுடன் உள்ள உணவாய் திருமண சாப்பாட்டில் கிடைக்கிறது என்றும் கூறுகிறார்கள். நமது உணவில் தினமும் நெல்லிக்காய் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. இதில் நான்கு சுவைகள் இருக்கிறது.

மேலும் கீரைகள், காய்கறிகள் போன்றவற்றையும் நம் உணவில் பயன்படுத்துவது மிகவும் நல்லது. உடல் திடகாத்திரமாக இருப்பதற்கும், நலமோடு வாழ்வதற்கும் இயற்கை உணவுகளையே பயன்படுத்துவோம்.

பழங்கள், காய்கறிகளை உணவில் பயன்படுத்தி வருகிறோம் என்றாலும் தேவையான அளவுக்கு எடுத்து ஆரோக்கியமுடன் வாழ்வோம்.

 


2018 செப்டம்பர் மாத அமுதம் இதழில் வெளிவந்தது…

தொடர்புடைய கட்டுரை
Error
Whoops, looks like something went wrong.