தொடர்புடைய கட்டுரை


உடல்நலம் பேணும் பேரீச்சம்பழம்

Dr.V. செல்வராஜ்

21st Aug 2018

A   A   A

உலர் பழங்களை பயன்படுத்துவோர் இன்று அதிகரித்து வருகிறார்கள். இந்த உலர் பழங்களின் பயன்கள் பற்றிய விபரங்களும் இன்று பரவி வருகின்றன. அந்த வகையில் அவை தருகின்ற நன்மைகள் உடல் நலனுக்கு மிகவும் உகந்ததாய் இருக்கிறது.

சத்துக்கள் நிறைந்த இந்த பழங்களை அன்றாட உணவுடன் பயன்படுத்தும் போது பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஏற்ற மருந்தாகவும் பயன்படுகிறது. பலவிதமான சத்துக்கள் உடலுக்கு மட்டுமல்லாது நோய்களுக்கு மருந்து என என்னும்போது இதனை பயன்படுத்த நாம் ஆவல் கொள்வதில் தவறில்லை.

அந்த வகையில் சத்துக்கள் நிறைந்த ஒரு பெட்டகமாய் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் இருபாலரும் உட்கொள்ள சிறந்தது பேரீச்சம்பழமாகும்.

பேரீச்சம் பழத்தில் கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் ஈ சத்துக்களும் நிறைந்துள்ளன.

குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரீச்சம் பழத்தில் அதிகம் இருக்கின்றன. அதனால், தினமும் பேரீச்சம் பழம் உட்கொண்டால் உடல் வலிமையும், சக்தியும் பெருமளவில் அதிகரிக்கும்.

உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன. உடல் எடையை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் பேரீச்சம் பழத்துடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து சாப்பிடலாம். 

பேரீச்சம் பழத்தில் இருக்கும் தாதுக்கள் எலும்பின் வலிமையை அதிகரிக்கிறது. எலும்புத் தேய்மானம், எலும்பு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் தினசரி பேரீச்சம் பழம் சாப்பிடலாம்.

பேரீச்சம் பழத்தில் செலினியம், தாமிரம் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. இவை எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகின்றன. தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. குடலிறக்கத்தையும் சீர் செய்கிறது.

பேரீச்சம் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, பி போன்றவை சருமத்தின் தன்மையை மிருதுவாக்குகிறது, சுருக்கங்களைப் போக்கவும், கோடுகள் மறையவும் உதவுகின்றன.

பேரீச்சம் பழத்திலுள்ள பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றன. இதில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் சி, பி6 போன்றவை இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை சீராக்க உதவுகின்றன. இதனால் இரத்தசோகை பிரச்சனைக்கு நல்ல தீர்வு காணலாம்.

உலர்ந்த பேரீச்சம் பழங்கள் அப்படியே உண்ணவும் ஏற்றவை. பேரீச்சம் பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படும் என்று ஒரு கருத்து உண்டு, அது உண்மையல்ல. மலமிளக்கி உணவுகளில் ஒன்றாக நம் முன்னோர் இதனை சேர்த்துள்ளனர். மலச்சிக்கலை போக்க முதல்நாள் இரவு மூன்று பேரீச்சம் பழங்களை தண்ணீரில் ஊற வைத்து விடவேண்டும். காலையில் இந்தப் பேரீச்சம் பழசாற்றை பருகலாம். இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் குடல் இயக்கங்கள் ஆரோக்கியமாக இருக்கும், மலச்சிக்கலும் நீங்கும்.

எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் துணைபுரிகிறது. அதோடு ஆஸ்டியோ போரோசிஸ் உள்ளிட்ட எலும்பு தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கும். குறிப்பாக எலும்பு தேய்மானத்தால் பெரிதும் அவதிப்படும் வயதானவர்கள் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது.

பேரீச்சம் பழத்தில் இருக்கும் நிக்கோட்டின் அளவு குடலில் இருக்கும் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து குடல் கோளாறுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். இதில் அமினோ அமிலம் கரையாத மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானக் கோளாறுகளை சீராக்கும்.

இது இரும்புச்சத்து குறைபாட்டை சரிசெய்ய சிறந்த ஒன்றாகும். தாதுக்களின் அளவு அதிகமாக இதில் அடங்கியிருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது. அதோடு உடல் சோர்வு சரிசெய்யப்படுகிறது. மேலும் மந்தத்தன்மையை சரிசெய்கிறது. உடல் ஆற்றல் மற்றும் வலிமையை அதிகரிக்கச் செய்கிறது.

பெரும்பாலான உணவுகளில் இல்லாத மகத்துவம் பேரீச்சம் பழத்தில் இருக்கிறது. கரிம கந்தகம் உடலில் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் பருவகால ஒவ்வாமைகளுக்கு சிறந்த தீர்வு தரக் கூடியதாகும்.

ஒரு கிலோ பேரீச்சம் பழத்தில் 3000 கலோரிகள் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்ல ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் பேரீச்சம் பழமே தந்து விடுகிறது.

குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் இதில் அதிகம் இருப்பதால் இடையே ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், இதை சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான ஆற்றல் உடனடியாக கிடைக்கும்.

இதிலுள்ள வைட்டமின் மற்றும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்தில் ஆரோக்கியத்தையும் செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்வதால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். ஞாபக மறதியால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

இரவில் ஊறவைத்த பேரீச்சம் பழத்தை காலையில் சாப்பிடுவதால் பலவீனமான இதயத்துக்கு நல்ல பலம் கிடைக்கும். இதிலிருக்கும் பொட்டாசியம் இதயம் தொடர்பான பிரச்சனைகளின் வீரியத்தைக் குறைக்கும் கெட்ட கொழுப்பினாலும் இதயம் பாதிப்படைய வாய்ப்பு உண்டு. இந்த கெட்ட கொழுப்பை குறைக்க, ஆரோக்கியமான நிலைக்கு ஒரே வழி பேரீச்சம் பழம் உண்பதுதான்.

பேரீச்சம் பழம் காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகளை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது. தொடர்ந்து இதை உண்டுவந்தால் மாலைக்கண் நோயையும் குணப்படுத்த முடியும்.

பேரீச்சம் பழம் வயிற்றுப் புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது என்பது சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. மேலும் தினமும் ஐந்து பேரீச்சம் பழங்களை பாலுடன் உட்கொண்டு வந்தால் 15 நாட்களில் உடலில் வித்தியாசத்தை உணரலாம். மேலும் ஆண்மையை அதிகரிக்கும்.

பேரீச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து உண்பதை பல வீடுகளில் காணலாம். அது போன்று தேனில் ஊறவைத்து பேரீச்சம் பழத்தை நமது குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வருவது மிகவும் நல்லது.

நமது உடல் நலத்தை நாம்தான் பேண வேண்டும். அந்த வகையில் கிடைக்கும் எளிய உணவுகளை நாம் பயன்படுத்தலாம். இப்படிப்பட்ட பலனுள்ள இந்த பழத்தை நம்முன்னோர்கள் பாரம்பரியமாக உண்டு வந்துள்ளார்கள்.

உணவில் எளிய பழங்களை பயன்படுத்துவோம், உடல் சுகத்தை பெற்று நலமோடு வாழும் வழிமுறைகளை கற்றுக்கொள்வோம். நம் சந்ததியும் பயன்பெற வழி காட்டுவோம்.

 


ஆகஸ்ட் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை
Error
Whoops, looks like something went wrong.