தொடர்புடைய கட்டுரை


தொண்டை வலியிருந்து விடுதலை…

Dr.V. செல்வராஜ்

22nd Sep 2018

A   A   A

உடல் பலவித செயல்பாடுகளின் தொகுப்பாக இருக்கிறது. இயந்திரம் போல ஒவ்வொரு உறுப்பும் அதனதன் பணிகளை செய்கிறது. ஏதாவது ஒன்றில் குறை ஏற்படும் போது, சரியாக செயல்படாத போது உடல் முழுவதும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

உடலில் வலி ஏற்படுவது என்பது சகஜமானது பல்வலி, முதுகுவலி, தொண்டை வலி, கழுத்துவலி, மூட்டுவலி, கை கால்கள் வலி என வலிகள் ஏற்படுகிறது. ஆனால் இவைகளில் சில தொடர்ச்சியாக உடல் வலி ஏற்படுத்துவதாய் மாறி விடுகிறது.

அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் இந்த வலிக்கு தகுந்த சிகிட்சை முறைகள் தேவைப்படுகிறது. மருத்துவரை நாடி தக்க மருத்துவ முறையும் தேவையாகிறது.

அன்றாட வாழ்வில் நமக்கு தொண்டைவலி அவ்வப்போது ஏற்படுகிறது. தொண்டைவலி எல்லா வயதினருக்கும் எந்நேரமும் வரக்கூடியது. தொண்டைவலி ஏற்படும் போது எச்சில் விழுங்கக் கூட முடியாது. சாப்பிடும்போதும், உணவு செல்லும் போதும் கூட வலியாக இருக்கும்.

தொண்டையில் புண் இருக்கும் போதும் தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்கவும் வாய்ப்பு உண்டு. இதற்கு சிகிட்சை எடுத்துக் கொண்டால் உடனடியாக குறைந்து விடுகிறது. ஆனால் நாம் அப்படி செய்வதில்லை. எனவே கஷ்டப்பட நேரிடுகிறது.

சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கும் போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும் போது பாக்டீரியா தொற்றும் ஏற்படுகிறது. இதன் அடுத்த கட்டமாக தொண்டைவறட்சி, குரல் கரகரப்பு, காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

பாக்டீரியா தொற்றால் ஏற்படும் தொண்டைப்புண் எளிதில் அடுத்தவருக்கும் பரவுகிறது. இதற்கு ஸ்டிரெப்போகாக்கஸ் கிருமி நோய் பரவலுக்கு காரணமாகிறது. தொற்று பரவும் போது டான்சில்ஸ் வீங்கும் இதனால் எச்சில் விழுங்கும் போது வலி ஏற்படும். தொண்டையின் பின்சுவர் சிவந்து வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். மேலும் குளிர் காய்ச்சல் ஏற்படும். சளி எச்சில் மற்றும் கைகள் வழியாக இந்த நோய் மற்றவருக்கும் எளிதில் பரவுகிறது.

தொடக்கத்தில் சிகிட்சை எடுத்துக் கொள்ளாதிருக்கும் போது நோய் கடுமையாகி மூச்சுக்குழல் தொற்று உண்டாகி வீக்கத்தால் காற்றுப்பாதை அடைபடலாம். இதனால் மூச்சு விடுவது கூட கஷ்டமாகும். கடும் தலைவலி மற்றும் அதிக காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உடனடியாக சிகிட்சை எடுத்துக்கொள்வது அவசியமாகும்.

தொண்டைப்புண்ணுக்கு மருந்துகள் தரப்பட்டால் அவற்றை முழுமையாக உட்கொள்ள வேண்டும். பாதியில் நிறுத்துவதால் சில பாக்டீரியாக்கள் தொண்டையிலேயே தங்கிவிடுவதற்கு வாய்ப்பு உண்டு. இவற்றை கண்டுகொள்ளாமல் விடும்போது ருமாட்டிக் காய்ச்சல் மற்றும் ரத்தத்தில் தொற்று போன்ற சிக்கல்களை உருவாக்கும். தீராத மூட்டுவயை ஏற்படுத்தவும் செய்கிறது.

எளிய மருத்துவ முறை மூலம் தொண்டை வலியிருந்து குணம்பெற முடியும். தொண்டையில் நோய் தொற்று இருக்கும் பட்சத்தில் இதமான சூட்டில் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். அப்போது தொண்டை, ஸ்டான்சில் உள்ள ஸ்டிரெப்டோ காக்கஸ் கிருமி வெளியேறும். அதோடு இது தொண்டைக்கு இதமளிப்பதுடன் சளி வெளியேறவும் உதவும்.

தொடர்ந்து டான்சில் தொற்று ஏற்படும்பட்சத்தில் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகுவதும் நல்லது. இதில் உள்ள கிருமிகள் இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கும் பரவ வாய்ப்பு உண்டு.

சிறிய சிகிட்சை முறைகள் தொண்டை வலியை எளிதில் குணப்படுத்துகிறது. இஞ்சி தொண்டையில் உள்ள புண்ணிற்கு சிறந்த ஒரு மருத்துவப் பொருளாகும். இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு சில நிமிடங்களில் சரியாகி விடுவதோடு தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

தயிர் உடலுக்கும் அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் பொருள் அதனை ஃபிரிட்ஜில் வைத்து குளிரவைத்து சாப்பிடாமல் அறை வெப்பத்தில் வைத்துசாப்பிட்டால் தொண்டையில் ஏற்படும் வலி சரியாகும்.

தேன், சிட்ரஸ் அமிலம் உள்ள பழங்களில் ஆண்டிவைரஸ் பொருள் அதிகமாக உள்ளது. எனவே, அத்தகைய பழங்களில் ஒன்றான எலுமிச்சை சாற்றில், வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது தேன் சேர்த்து குடித்தால் தொண்டையில் வைரஸால் ஏற்பட்டிருக்கும் புண் குணமாகும்.

காரப் பொருள்களில் ஒன்றான மிளகை உணவுடன் சேர்த்தோ அல்லது அதை தூளாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தாலோ தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் புண் விரைவில் சரியாகி விடும். எனவே இருமல் அல்லது சளி இருக்கும்போது மிளகு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்து விடுகிறது.

பாலில்மிளகு பொடி சேர்த்து நன்கு கலக்கி குடிக்கும் போது தொண்டையில் உள்ள கரகரப்பு, தொண்டைப் புண்ணில் இருந்து குணம் பெறலாம்.

அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்துஅரைத்து அதன் சாற்றைக் குடித்தால் சளி நீங்கும். ஆடாதொடா இலை வேர் சம அளவு எடுத்து இத்துடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலியால் ஏற்படும் இருமல், காய்ச்சல் குணமாகும்.

இஞ்சிசாறு, துளசிச்சாறு, தேன் மூன்றையும் சமஅளவில் கலந்து குடித்தால், சளி இருமல் மற்றும் நெஞ்சுக்கபம் சேருதல் குணமாகும். இஞ்சியுடன், தேன், இலவங்கப்பட்டை துளசி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும். உப்பை வெந்நீரில் கரைத்து தொண்டையில் படும்படியாக வாய் கொப்பளித்தால் தொண்டைக்கட்டு குணமாகும்.

கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும். கற்பூரவல்லிச் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் மூக்கில் நீர் கொட்டுதல் தலைவலி குணமாகும்.

குப்பை மேனிக் கீரையை அரைத்து அதில் சுண்ணாம்பு கலந்து தொண்டைப் பகுதியில் தடவினால் தொண்டைக் கட்டு சரியாகும். தொண்டை வலி உள்ளவர்கள் எள் எண்ணெய் சாப்பிடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குடிக்கும் தண்ணீர் மற்றும் சாப்பிடும் உணவு ஆகியவை சுத்தம் இல்லாத போது அதில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் ஆகியவற்றால் தொண்டையில் நோய் தொற்று ஏற்படுகிறது. எனவே கண்டிப்பாக தொண்டை வலி வருவதை தடுக்க ரோட்டோரங்களில் விற்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

சிலநேரங்களில் பாட்டில் தண்ணீர் குடித்த உடனேயே தொண்டையில் கரகரப்பு ஏற்படுகிறது. குளிர்பானம், ஐஸ்கிரீம், தண்ணீர் இவைகளைச் சாப்பிடும் முன்னர் அதன் சுத்தத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

தொண்டைவலி இருக்கும் பட்சத்தில் சூடான மற்றும் காரமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இந்த சமயத்தில் அசைவ சூப் மற்றும் அசைவ உணவுகளை எடுத்துக்கொள்வதும் நல்லது. உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்தல் மற்றும் சுடு தண்ணீரில் குளிப்பது அவசியம்.

குளிர்பானம், நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி, பால், மோர் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. சர்க்கரை சேர்த்த இனிப்பு பதார்த்தங்களையும் சாப்பிடாமல் இருந்து இருமல் தொல்லையிருந்து விடுபடலாம்.

வைட்டமின் சி மற்றும் ஆரஞ்சு மற்றும் சிவப்பு வண்ணப் பழங்கள், பச்சைக் காய்கறிகள், அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் அதிக அளவு பூண்டு சேர்க்கும் போது நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதமான உணவுடன் நிறையத் தண்ணீர் குடிப்பதுடன் கண்டிப்பாக எட்டு மணி நேரம் தூங்குவதன் மூலமும் தொண்டை வலியை விரைவில் விரட்ட முடியும்.

அன்றாடம் நாம் சந்திக்கும் இந்த தொண்டைவலி பெரும்பாலும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே உள்ளது. எனவே தொண்டை வலி வரும் விதம் பற்றி அறிந்துள்ளோம். மாற்று வழிகள் மூலம் இதனை கட்டுப்படுத்திடுவோம்.

இந்த வைரஸால் மூட்டுவலி, இதயம், சிறுநீரகம் பாதிக்கப்படாமல் நம்மை பாதுகாத்துக்கொள்வோம்.

 


மே 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.