தொடர்புடைய கட்டுரை


கீரை உணவுகள்

Dr.V. செல்வராஜ்

11th Mar 2019

A   A   A

இன்றைய சூழலில் மனிதர்கள் நோயினின்று தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ வேண்டியது அவசியமாகி விட்டது. ஆரம்பகால மனிதன் இயற்கையோடு வாழ்ந்தான். பழங்களையும் பச்சைக் காய்கறிகளையும் உண்டு வாழ்ந்தான்.

நோய்நொடியின்றி வலிமையுடனும் திடமாகவும் வாழ்ந்தான். நாகரீக வளர்ச்சி அறிவியல் புரட்சியில் மனிதன் உண்ணும் முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தினான். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இதை சாப்பிடாதே நோய்வரும் என்று பயமுறுத்தி, அறிவுறுத்தி பல உணவுகளை உணவுப் பொருட்களை சாப்பிட சொன்னார்கள்.

இதன் விளைவு பச்சைக்காய்கறிகள் உண்டது மாறி, வேகவைத்து வாய்க்கு ருசியாக சமைத்து சாப்பிட ஆரம்பித்தான். இதன் விளைவு பல நோய்களுக்கு ஆளாகி உடல் வலிமையை இழந்தான். புதிய நோய்களுக்கு தீர்வு காண புதிய மாத்திரைகள் என புதிய மருத்துவ முறைகளை ஏற்கும் நிலையும் ஏற்பட்டது.

ஆனால் இன்று நிலைமை மாறி வருகிறது. மக்கள் மெல்ல மெல்ல இயற்கை உணவுகள் மற்றும் இயற்கை மருத்துவத்திற்கு மாறி வருகிறார்கள். வெயிலின் வெம்மையை தணிக்கவும் உடல் வெப்பத்தால் பாதிப்புக்குள்ளாகாமலும், உடல் நலம் பெறவும் பழங்கள் பழச்சாறுகள் உண்கிறோம்.

அது போன்று கீரைச்சாறுகளையும் உண்டு நலம் பெறலாம். கீரைகளில் சிலவற்றை அப்படியே சாப்பிட முடியும். எடுத்துக்காட்டாக மணத்தக்காளி கீரையை வாய்ப்புண் உள்ளவர்கள் அப்படியே மென்று சாப்பிடலாம்.

கொத்தமல்லி இலைகளை சமையலில் பயன்படுத்துகிறோம். சளி, தொண்டை கரகரப்புக்கு கற்பூரவல்லி, துளசி இலைகளை சாப்பிடுகிறோம். இதுபோன்று மற்ற கீரை வகைகளையும் சாப்பிட பழகிக்கொள்ள வேண்டும். பழகிவிட்டால் அனைத்து கீரைகளையும் சமைக்காமலே சாப்பிட்டுவிட முடியும். கீரைகளை இடித்துப்பிழிந்து சாறு எடுத்து தண்ணீர் கலந்தும் சாப்பிடலாம். உப்பு சேர்க்க வேண்டியதில்லை. ஏனெனில் பழங்கள் காய்களைக் காட்டிலும் கீரைகளில் உப்புச் சத்து இயற்கையாகவே அதிகமாக இருக்கிறது.

அருகம்புல் சாறு என்பதனை கேள்விப்பட்டிருப்போம். இன்று மக்களிடம் வேகமாக அருகம்புல் சாறு உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அருகம்புல் சாறு அனைத்து நோய்களையும் தீர்க்கும் ஒரு டானிக் ஆகும். நோய் எதிர்ப்பு டானிக் மற்றும் சர்வரோக நிவாரண டானிக் என்று கூட சொல்லலாம். அருகம்புல் சாறுக்கு இயற்கை மருத்துவத்தில் ‘பச்சை இரத்தம்’ (Green Blood) என்ற பெயருமுண்டு.

சுவையுள்ள கீரைகளை தண்ணீரில் கழுவிய பிறகு கீரை சாலட் போல தயார் செய்து சாப்பிடலாம். அலசி எடுத்து ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு சிறிது மிளகுத் தூளை கலந்தும் சாப்பிடலாம். மேலும் சுவைக்கு இஞ்சி சாற்றையும், நறுக்கிய வெங்காயம், தக்காளி இவற்றை சேர்த்து, சீரகத்தூளையும் கலந்து எந்த கீரையையும் சுவையுடன் சாப்பிட்டுவிட முடியும்.

கொத்தமல்லி கட்டு ஒன்றை வாங்கி நன்றாக சுத்தப்படுத்தி அதன் வேர்களை அகற்றிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் சிறிது தேங்காய் துருவல் சேர்த்து மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து பின்பு பிழிந்து சாறு எடுத்து அத்துடன் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து சாப்பிடலாம். இச்சாறுடன் தேன் மற்றும் வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். இது கொத்தமல்லி கீர் எனப்படுகிறது.

இது போன்று புதினா இலைகளை பயன்படுத்தி புதினா கீர் தயாரிக்கலாம். புதினா கீர், கொத்தமல்லி கீர் சாப்பிட்டால் ஜீரண சக்தி கூடும். நன்றாக பசிக்கும், அஜீரணக் கோளாறு உடையவர்கள் இதனை தயார் செய்து சாப்பிடலாம். இதில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் இரத்தசோகை உள்ளவர்களும் சாப்பிடலாம்.

புதினாவை துவையல் செய்தும் சாப்பிடலாம். கடலைப்பருப்பு, உளுந்து, மிள்காய்வற்றல், பூண்டு, இஞ்சி, புளி, தேங்காய், புதினா இலைகள், தேவைகேற்ப உப்பு சேர்த்து தயாரிக்கலாம்.

புதினா, தேங்காய், உப்பு தவிர மற்றவற்றை கொஞ்சம் எண்ணெயில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் புதினா, தேங்காய், உப்பு சேர்த்து சட்னி போல அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இது அஜீரணத்தை நீக்கும். உடல்நலம் சரியில்லாதவர்கள் கூட சாப்பிடலாம்.

வேப்பிலைக் கொழுந்து ஒரு கைப்பிடி, மிளகாய்வற்றல், புளி, உளுந்தம்பருப்பு இவற்றை அரைத்து துவையல் செய்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு இதைச் செய்து கொடுத்தால் கிருமிகள் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

தூதுவளை இலை ஒரு கைப்பிடி, மிளகாய்வற்றல், புளி, உளுந்தம்பருப்பு இவற்றைக் கொண்டு தூதுவளைத் துவையல் செய்யலாம். தூதுவளையை வதக்கி அத்துடன் மிளகாய்வற்றலை வதக்கி துவையல் செய்து நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் சாப்பிட்டு வரலாம். ஆஸ்துமா நோயாளிகள் இதை தினமும் உணவுடன் உண்டு வர நலம் பெறலாம்.

முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி எடுத்துக்கொண்டு சிறிதாக அரிந்து இரண்டு டம்ளர் நீரில் வேக வைத்து வடிகட்டி, அந்த நீரில் வெந்த பருப்பை கடைந்து சிறிதளவு மிளகுத்தூள், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை பொடி செய்து நல்லெண்ணெயில் தாளித்து வாரம் இரண்டு முறை பருக மூட்டுவலி, இடுப்புவலி, கழுத்துப்புறங்களில் ஏற்படும் வலிகள் யாவும் நீங்கும்.

முடக்கத்தான் கீரையை சூப் செய்தது போன்றே, வாதநாராயணன் கீரையை கொண்டு சூப் செய்து மாதம் இரண்டுமுறை மூட்டுவலி, உடம்புவலி உள்ளவர்கள் சாப்பிடலாம். மற்றவர்கள் மாதம் ஒருமுறை சாப்பிட, ஒருமுறை பேதியாகி, குடல் சுத்தப்படுவதோடு குடலிலுள்ள கிருமிகள் மொத்தமாக வெளியேறும். குழந்தைகளுக்கு பூச்சிகள் வெளியேற நான்கு மாதங்களுக்கு ஒருமுறை செய்து கொடுக்கலாம்.

கோதுமை மாவை எடுத்து சப்பாத்திக்கு பிசைவது போல உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும், இதில் நறுக்கி சுத்தம் செய்த கீரைவகைகளுள் ஏதாவதொன்றை சேர்த்துக் கொள்ளவும், நறுக்கிய வெங்காயம், மிளகு, சீரகத்தூள் சேர்த்து எல்லாவற்றையும் போட்டு நன்றாக பிசைந்து வைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து சப்பாத்தி போல செய்து தோசைக்கல்லில் போட்டு எடுக்க வேண்டும். தேவையெனில் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். இதனை சாப்பிட சுவையாகவும் இருக்கும் உடலுக்கும் நல்லது.

குழந்தைகள் கீரையை சாப்பாட்டுடன் சாப்பிட மாட்டார்கள். அப்படிபட்டவர்களுக்கு கீரையை பொடியாக அரிந்து மிக்சியில் போட்டு அரைத்து மாவுடன் கலந்து தோசையாக செய்து கொடுக்கலாம். அல்லது தோசை செய்து பொடியாக அரிந்த கீரையை தோசைமீது தூவி ஒரு தட்டு போட்டு தோசையின் மேல் பக்கத்தை மூடி வேக வைத்து சாப்பிடலாம். மிக சுவையாக இருக்கும். உடல் நலனுக்கும் நல்லது.

ஆக கீரைகளை உண்டுவந்தால் வாத பித்த நோய்கள் குணமாகும். ஆஸ்துமா, நீரழிவு, நரம்புத்தளர்ச்சி, சளித்தொல்லை, வயிற்றுவலி போன்ற உபாதைகள் நீங்கும். கீரைகளில் புரதச்சத்தும், இரும்புச்சத்தும், சுண்ணாம்பு சத்தும், ஊட்டச்சத்துகளும், வைட்டமின்களும் அடங்கியிருக்கிறது. உடலுக்கு நலம்தரும் இக்கீரைகளை உணவாக்கி கொள்வோம். உடல் நலனுடன் வாழ்வோம்.

 


2018 மே மாத அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.