தொடர்புடைய கட்டுரை


இயற்கை உணவு

Dr.V. செல்வராஜ்

26th Jul 2018

A   A   A

வாழும் மனிதர்கள் அனைவருமே நோயின்றி வாழ வேண்டும் என்றே நினைக்கிறார்கள். ஆனால், அதற்கேற்ற வழிமுறைகளை சரிவர செய்யாதிருப்பது பல வழிகளில் கஷ்டப்படும் நிலையை உருவாக்குகிறது.

நோயின்றி வாழவும் நீடித்த வாழ்நாளை பெறவும் கடைபிடிக்க வேண்டியது உணவு முறையே ஆகும். நமது உடலுக்கு ஏற்ற உணவு எது? ஏற்காத உணவு எது என்பதனை முதலில் அறிந்துகொள்வது மிக முக்கியமாகும்.

நோய் இல்லாமல் வாழவும், வந்த நோய்களை குணப்படுத்திக் கொள்ளவும் மனித சமுதாயத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் அரிய வரப்பிரசாதமே இயற்கை உணவுகளாகும்.

அப்படிப்பட்ட உணவு வகைகள் பெருமளவில் நமக்கு கிடைக்கும்போது அது பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும். இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து தினமும் சாப்பிட்டு வருவதனால் ஏற்படும் நன்மைகளை நாம் தினமும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால் ஊட்டுகிறோம். வளர வளர பழ வகைகளை கொடுக்கிறோம். குழந்தைகள் எந்த சிரமமுமின்றி பழங்கள் சாப்பிட்டு விடுகிறார்கள். பிறகு படிப்படியாக ஐந்து மாதம் முடிந்தபிறகு நெய்ச்சோறு, பால் சோறு என காரமில்லா, புளிப்பு இல்லா உணவுகளை கொடுத்து சாப்பிட வைக்கிறோம்.

பிறகு காரம், புளிப்புடன் இருக்கும் குழம்புசாதம், ரசம் சாதம் கொடுத்து பழக்கி வருவோம். காரத்தை கொடுக்கும்போது முகம் சுழித்துக் கொண்டோ, அழுகையுடனோ சாப்பிட்டு பழகி விடுகின்றன.  

வளர்ந்து இளமைப்பருவம் அடையும் போது அக்குழந்தைகளுக்கு சமைக்காத உணவை காட்டிலும் சமைத்த உணவுகளை உண்பதிலேயே நாட்டம் ஏற்பட்டு விடுகிறது. உண்மையில் பெரியவர்களே குழந்தைப் பருவமுதல் உணவு பழக்க வழக்கங்களை அமைத்து விடுகிறார்கள் என்பது தான் உண்மை.

இவ்வாறு படிப்படியாக மனிதன் இயற்கை உணவான பச்சை காய்கறிகள் பழங்கள் போன்றவற்றிலிருந்து மாறிப்போய் விடுகிறான். பின்னர் எப்போதும் நெருப்பின் துணை கொண்டு செய்யப்பட்ட உணவுகளையே ருசியாக இருக்கின்ற காரணத்தால் சாப்பிட கற்றுக் கொள்கிறான்.

இதன் காரணமாக தேவைக்கும் அதிகமான உணவை உட்கொண்டு விடுகிறோம். தேவைக்கு அதிகம் உண்டாலே அது நோய்களுக்கு காரணமாகி விடுகிறது. அந்த நோயை தீர்ப்பதற்கு மருந்துகளை நாடவேண்டியும் உள்ளது.

உண்மையில் நமக்குத் தேவையான உணவு எதுவென்றால் அது இயற்கை உணவுதான். இயற்கையாக சமைக்கப்படாத பழவகைகள், பச்சைக் காய்கறிகளுமே ஆகும்.

இயற்கை உணவு உண்ணும்போது சாப்பிடும் அளவு தானாகவே குறைந்துவிடுகிறது.  தேவைக்குமேல் சாப்பிடும் எண்ணமோ, பழக்கமோ ஏற்படாது. இயற்கை உணவு உண்ணும்போது நல்ல உடல் நலத்தையும் பெறமுடிகிறது.

பல இடங்களில் இயற்கை நலவாழ்வு மையங்கள் இன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பழங்கள், தேங்காய் மட்டுமே உணவாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் இயற்கையான இந்த உணவை உண்பதால் இயற்கை வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள். தேங்காய், பழங்களையே உண்டு, நீரைப் பருகி, இனிய காற்றை சுவாசித்து, எளிய வாழ்வு வாழ விரும்புவோம். இயற்கை மையங்களுக்கு சென்று தங்கி பயிற்சி பெறலாம். இந்த மையங்கள் மூலம் சமைக்காத உணவுகளான கனி, காய், தேங்காய்களை தம் உணவாக உண்ணும் முறை இன்று உலகெங்கும் பரவிவருகிறது. இவ்வாறு உண்பதால் தொழுநோய், யானைக்கால், புற்றுநோய், சிறுநீரகக்கோளாறு, ஆஸ்துமா, நீரழிவு போன்ற தீராத நோய்கள் குணமடைகிறது. வெளிநாட்டவர்கள்கூட இந்த மையங்களுக்கு வந்து தங்கி பயிற்சி பெற்று செல்கின்றனர்.

சில உணவுகளை உண்ணும்போது ஒவ்வாமை ஏற்படுவதாக நாம் எண்ணுகிறோம். சிலருக்கு சாத்துக்குடி பழம் சாப்பிட்டால் சளி, திராட்சை சாப்பிட்டால் சளி வருவதாகவும், முள்ளங்கி சாப்பிட்டால் பிடிக்காதெனவும் சொல்லுகிறார்கள். சிலர் ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்களை சாப்பிடுவதில்லை என்கிறார்கள். ஏனென்றால், சாப்பிட்டு கடுமையான சளி ஏற்பட்டு மூச்சுவிட முடியாமல் திணறியதாக சொல்லி அவை தனக்கு அலர்ஜி என்கிறார்கள். எந்த உணவும் அலர்ஜி ஏற்படுத்துவதில்லை என்றுதான் சொல்லவேண்டும் என்கிறார்கள் இயற்கை மைய மருத்துவர்கள்.

எது அலர்ஜி எனத் தோன்றுகிறதோ அதை சாப்பிடும்போது மிகவும் நிதானமாக, நன்கு உமிழ்நீர் கலக்க சுவைத்து சுவைத்து கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதால் அவை எந்த அலர்ஜியையும் ஏற்படுத்தாது.

இயற்கை நலமையத்திற்கு வந்த ஒருவருக்கு சாத்துக்குடி அலர்ஜி என்று சொல்லுகிறார். அவருக்கு இரண்டு சாத்துக்குடி பழங்கள் உரித்து சுளைகளை எடுத்து சாறு பிழிந்து, தண்ணீர் சர்க்கரை எதுவும் சேர்க்காது அப்படியே கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்து சுவைத்து சாப்பிடும்படி கொடுக்கிறார்கள். அதுபோல இரண்டு மணிநேரம் கழித்தும் குடிக்க கொடுக்கிறார்கள்.

பத்தாண்டுகள் ஒரு சுளை சாத்துக்குடி சாப்பிட்டாலே சில நிமிடங்களில் அலர்ஜிக்கு ஆளாகும் அவருக்கு நான்கு பழங்கள் சாப்பிட்ட பிறகும் எதுவும் ஏற்படவில்லை.  முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பது போல எந்த பொருள் அலர்ஜி செய்கிறதோ அந்த பொருளைக்கொண்டே அலர்ஜியைக் குணப்படுத்த முடியும்.

இதுபோன்ற பல ஆராய்ச்சிகளை தம் வாழ்நாளில் செய்துவந்த இயற்கை நலவாழ்வு மைய நிபுணர் அர்னால்டு எக்ரேட் என்பவர் எழுதியுள்ள The Mucusiess Diet Healing System என்ற புத்தகத்தில் காணலாம்.

திராட்சைப் பழங்கள் சளி பிடிக்க வைக்கும் என்று இருந்தவருக்கு உணவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தான் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாவுப் பொருட்களை நீக்கி திராட்சைப் பழங்களையே முழுக்க முழுக்க சாப்பிட்டு பூரண உடல்நலம் பெற்றார். அலர்ஜியிலிருந்து நாமும் விடுபட முடியும்.

பசித்தபின்புதான் எந்த உணவையும் சாப்பிட வேண்டும். அதைப்போல பசியெடுத்து சாப்பிடாமல் இருப்பதும் நமது உடலுக்கு கெடுதலே. பசியெடுத்து சாப்பிடும்போது உமிழ்நீர் நன்கு சுரக்கும். உண்ணும் உணவு செரித்துவிடும். எனவே, பசித்தபின் புசி என்கிற பழமொழிக்கேற்ப உண்பது மிகவும் சிறந்தது.

அதோடு பசியே எடுத்தாலும் இரவில் மாமிச உணவுகள், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், பால், தயிர், புளிப்பு சுவையுடைய உணவுகளை கட்டாயம் சப்பிடக்கூடாது.

இப்படியாக இயற்கை உணவை உண்டு இயற்கையாக இருப்போம். நோயின்றி வாழ்வோம்.

 


மார்ச் 2018 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.