தொடர்புடைய கட்டுரை


கொள்ளு

Dr.V. செல்வராஜ்

15th Aug 2018

A   A   A

நாம் நம்முடைய அன்றாட உணவில் அரிசியை அதிகமாக பயன்படுத்துகிறோம். நம் முன்னோர்கள் தங்களின் உணவு பழக்க வழக்கங்களில் பல சிறுதானியங்களை பயன்படுத்தினார்கள். தங்களுக்குத் தேவையானவற்றை பயிரிடவும் செய்தார்கள்.

செழிப்பான அந்த சூழ்நிலையில் காலத்திற்கேற்ற பயிர்களை அவர்கள் பயிரிட்டு அதனை உணவாக உட்கொண்டார்கள் நலமோடு வாழ்ந்தார்கள். இன்று அவை மாறிப்போய் இவற்றை உண்ணுங்கள் என்று சொல்லுமளவுக்கு வந்துள்ளது.

சிறுதானியங்கள் என்று சொல்பவை யாதெனில் சோளம், மக்காச்சோளம், தினை அரிசி, சிறுபயறு, சோயாபீன்ஸ், ராகி, கம்பு, குதிரைவாலி, வரகு, மாப்பிள்ளைசம்பா, சவ்வரிசி, சாமை, சம்பா கோதுமை, பாதாம், நிலக்கடலை இவைகளாகும்.

இவற்றில் அரிசியைவிட சராசரியாக 12% த்திற்கும் அதிகமாக புரதச்சத்து உள்ளது. அரிசி, கோதுமையைவிட சிறுதானியங்களில் அனைத்து சத்துக்களும் நிரம்பிக் காணப்படுகிறது.

இந்த சிறுதானியங்களை முளை கட்டியவைகளாக மாற்றி பொடி செய்து இன்று பல சத்துமாவுகளாக பெயரிட்டு விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த சிறுதானிய சத்துமாவை நாமே தயாரித்திட முடியும். இந்த சிறுதானியங்கள் கடைகளில் கிடைக்கிறது. இவற்றை நாம் வாங்கி சிறிது வறுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு இதனுடன் பால் சேர்த்து கலக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

தினமும் உணவுடன் இந்த சிறுதானிய உணவை உட்கொண்டு வருவது மிகவும் நல்லதும் பயனுள்ளதுமாகும்.

சத்துக்கள் நிறைந்துள்ள சிறுதானியங்கள் ஒரு வகையான இனிப்பு கலந்த எளிதில் செரிமானமாகக் கூடிய உணவாக திகழ்கிறது. சிறுதானியங்கள் நல்ல ஆரோக்கியத்தையும் நீடித்த ஆயுளையும் தரவல்லது. சிறுதானியங்கள் உணவு நமது ஜீரண உறுப்புகளின் சுரப்பிகளை சரியாக சுரக்கச் செய்து மலச்சிக்கலிலிருந்து காக்கிறது.

இவை நமது உடல் உள்கட்டமைப்பின் செயல்பாட்டிற்கு தேவையான சுரப்பிகளையும், உறுப்புகளையும் வலுவடையச் செய்கிறது. இதில் உள்ள செரோட்டின் என்னும் மூலப்பொருள் நமது மூளையில் வேலை செய்து நம்மை சாந்தமாகவும் கட்டுக்கோப்புடனும் செயல்பட உதவுகிறது.

இதில் உள்ள மெக்னீசியம் சத்து இதயத்தைப் பலப்படுத்தி இதய நோய்கள், மாரடைப்பு, ஆஸ்துமா, ஒற்றைத்தலைவலி, இரத்த அழுத்தம் முதலிய நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

அதோடு உடல் தசைகளை சீர்செய்து உடலில் உள்ள 300 க்கும் அதிகமான சுரப்பிகள் சீராக சுரக்க உதவிசெய்து உடலின் இயக்கத்தை மேம்படுத்துகின்றது.

இதில் உள்ள நியாசின் (வைட்டமின் B3) கொழுப்பைக் கரைய செய்து கொலஸ்ட்ராலை சீராக வைக்க உதவுகிறது. சிறுதானியங்களில் வரகுவில் 8.3 கிராம் புரத சத்தும், 27 கிராம் கால்சியம் சத்தும், சாமையில் 7.7 கிராம் புரதச்சத்தும், 17 கிராம் கால்சியம் சத்தும், தினையில் 12.3 கிராம் புரதமும், 31 கிராம் கால்சியமும் உள்ளது. குதிரைவாலியில் 11.2 கிராம் புரதமும், 11 கிராம் கால்சியமும் உள்ளது. கம்புவில் 10.6 கிராம் புரதம், 38 கிராம் கால்சியம், கேழ்வரகில் 7.3 கிராம் புரதம், 343 கிராம் கால்சியம் உள்ளது.

அரிசியில் 6.8 கிராம் புரதம், 10 கிராம் கால்சியம், கோதுமையில் 11.8 கிராம் புரதம், 41 கிராம் கால்சியம் உள்ளது. எனவே சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல், மூல நோய்கள் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

சிறுதானியங்களில் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. இரவு நேரத்தில் சிறுதானிய உணவு உண்பதால் நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. சிறுதானிய உணவுகள் இதயம் சார்ந்த (Cardio Vascular) நோய்களுக்கு சிறந்தது.

சிறுதானியங்களில் வைட்டமின் பி6, மெக்னிசியம், பாஸ்பரம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளன. மெக்னிசியம், பாஸ்வரம் சத்துக்கள் இரத்த அழுத்தத்தை சீராக்க பயன்படுகிறது. இதிலுள்ள தாமிரச்சத்து இரும்புச்சத்து இரத்த சுழற்சிக்குப் பெரிதும் பயன்படுகிறது.

சிறுதானியத்திலுள்ள துத்தநாகம், மாங்கனீஸ் போன்றவை இரத்தக் குழாய்களைப் பாதுகாத்துச் சருமம் மற்றும் நரம்பு செல்களையும் பாதுகாத்து ஒழுங்கான ஜீரணத்திற்கு வழிவகுத்து நமது உடம்பில் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை வராமல் தடுக்கிறது.

நமது உடலுக்கு தேவையான (HDL) நல்ல கொழுப்பு சிறுதானியம் மூலம் அதிகமாக கிடைக்கிறது. தைராக்சின் பெர்ராக்சைடு சிறுதானியங்களில் இருப்பதால் தைராய்டு கட்டுப்படுத்தப்படுகிறது.

நீரழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் காணப்படுகிறது. இந்த உணவை தினமும் உட்கொள்வதால் ட்ரைகிளிஸ்ராய்டு, இதய இரத்தக்குழாய் அடைப்பு, அதிகபடியான இன்சுலின் சுரத்தல், மார்பக புற்றுநோய் ஆகிய நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

இரத்தத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட் செயல்பாட்டை சீராக்கும். சிறுதானிய உணவில் பசைத்தன்மை குறைவாக உள்ளதால் ஒவ்வாமை மற்றும் அதிக நோய் தொற்று ஏற்படும் நபர்களுக்கு அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது.

இதிலுள்ள அதிகமான புரதம் மற்றும் நார்சத்து சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும். சிறுதானியங்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புசத்து, கனிமச்சத்து இவை அதிகம் உள்ளன.

பாலில் உள்ளதைவிட அதிக கால்சியம் இந்த சிறுதானியங்களில் உள்ளது. எனவே உண்ணும்போது உடல் வலு பெறுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டைத் தணிக்கிறது. இரத்த சோகை வருவதற்கான வாய்ப்பை குறைத்து தாதுபொருட்கள் உடலில் அதிகரிக்கச் செய்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.

மேலும் சிறுதானியங்களை பொடிசெய்து பயன்படுத்தலாம். அரிசியில் எதெல்லாம் செய்கிறோமோ அதுபோன்று தோசை, இனிப்பு வகைகளை செய்தும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

கடைகளில் கிடைக்கின்ற பேக்கேஜ் சத்துப் பொருட்களை விட்டுவிட்டு சிறுதானியத்தை பொடிசெய்து அதனை பாலில் கலந்து கொடுப்பது குழந்தைகளின் உடல்நலத்திற்கு பெரிதும் உதவுகிறது.

எனவே நல்ல சத்துள்ள உணவினை உண்பதற்கு முன்னோர்கள் காட்டிய வழியில் வாழ்வதற்கு நாம் முயற்சிகள் மேற்கொள்வோம்.

இன்று இந்த சிறுதானியங்கள் பல்வேறு கடைகளிலும் கிடைக்கிறது. இவற்றை பயன்படுத்துவோரும் அதிகரித்து வருகிறார்கள். நாமும் பயன்படுத்துவோம். பலன் பெறுவோம். நம் குடும்பத்தில் சிறுதானியங்கள் பயன்பாடு முக்கியமானதாக மாறட்டும். இதன் மூலம் நோயில்லாமல் நலமான, உடல்நிலை பெறுவோம்.

 


அக்டோபர் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.