தொடர்புடைய கட்டுரை


உடல் சுத்தம்

Dr.V. செல்வராஜ்

15th Oct 2019

A   A   A

நமது உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றும் திறம்பட வேலைசெய்திட வேண்டுமெனில் நாம் நலமோடு வாழ்தல் அவசியமாகிறது. பணிச்சுமைகள், குடும்பப் பிரச்சனைகள் அதன் மூலம் தூக்கமின்மை காரணத்தால் உடலின் வெப்பநிலை அதிகரிப்பு, உடல் வெப்பநிலை குறைக்க குளிர்ந்த நீர் குடிப்பது பழக்கமாகி விட்டது.

குளிர்ந்த நீர் உடலுக்கு சில நேரங்களில் ஒத்துக்கொள்வதில்லை. எனவே சளி பிடித்து விடுகிறது. தொடர்ந்து இந்த பிரச்சனைகள் இருந்து சைனஸ் வரை சென்றுவிடுகிறது. அது தலைவலி, தும்மல், இருமல் என பல பிரச்சனைகளுக்கு காரணமாகி விடுகிறது.

இப்படிப்பட்ட நாள்பட்ட சளி தொந்தரவு, நுரையீரலையும் விட்டுவைப்பதில்லை. நுரையீரலில் சளி படிந்து பல தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது. எனவே நுரையீரலை சுத்தம் செய்து நலமோடு வாழ வழி உள்ளது.

நுரையீரலை சுத்தம் செய்வதன் மூலம் ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி சைனஸ் தொல்லையிலிருந்து விடுபட முடியும்.

புகைபிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கும் அலர்ஜி, சுற்றுப்புற சூழல் மாசுபாட்டால் ஏற்படும் தூசுகளினால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு. பல ஆண்டுகள் தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களாலும் எந்த பாதிப்பும் இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும் உண்டு. இது மனிதர்களுக்கு மனிதர் வேறு படலாம்.

என்றாலும் நுரையீரலை சுத்தப்படுத்துவது உடலுக்கு நல்லது. நுரையீரல் சுத்திகரிப்பு முறையை துவங்குவதற்கு முன் இரண்டு நாட்களுக்கு முன்பே பால் பொருட்கள் உள்ள உணவுகள் உண்பதை நிறுத்திவிட வேண்டும். பால், தேநீர், தயிர், மோர், வெண்ணெய் உள்ள உணவை நிறுத்திவிட வேண்டும். உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் இரு நாட்களில் வெளியேறுகிறது. எனவே உடலில் நச்சுக்கள் நீக்க வேண்டியது அவசியமாகிறது.

சுத்தம் செய்வதற்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை காபி நீரை குடிக்க வேண்டும். இது குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. சுத்தம் செய்ய நுரையீரலுக்கும் உடலுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது. எனவே கடுமையான பயிற்சிகள், வேலைகள் செய்ய வேண்டாம்.

முதல் நாளில் இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து காலை உணவுக்கு முன்பு குடிக்கவும். ஒரு மணிநேர இடைவெளிக்கு பிறகு 300 மில்லி சுத்தமான திராட்சை பழச்சாற்றை குடிக்கவும். இதன் சுவை பிடிக்காது இருப்பின் திராட்சை பழச்சாறுக்கு பதில் அன்னாசிப்பழச் சாறு குடிக்கலாம். பழச்சாற்றில் தண்ணீரோ, சர்க்கரையோ சேர்க்கக் கூடாது.

இந்த சாறுகளில் இயற்கையான சுவாசத்தை சீராக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ஸ் நிறைந்துள்ளதால் நமது நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.

மதிய உணவுக்கு முன்பாக 300 மில்லி சுத்தமான கேரட் சாற்றை பருகவும். இதில் தண்ணீரோ சர்க்கரையோ சேர்க்கக் கூடாது. கேரட் சாறு மூன்று நாட்களுக்கு பருகும்போது இரத்தத்தை அமில நிலையிலிருந்து காரத்தன்மைக்கு மாற்றுகிறது.

இரவு படுக்க போகும் முன்பு 400 மில்லி பொட்டாசியம் நிறைந்த திராட்சை அல்லது அன்னாசி பழம் அல்லது ஆரஞ்சு சாற்றை குடிக்க வேண்டும். பொட்டாசியம் சுத்தம் செய்ய ஒரு டானிக்காக உதவுகிறது.

இது உடலின் உள்ளுறுப்புகளில், முக்கியமாக சிறுநீர்பாதை, நுரையீரல் தொற்றுகளை உருவாக்கும் பாக்டீரியாக்களை நீக்குகிறது. இதனை மூன்று நாட்கள் தொடர்ந்து கடைபிடிக்கும் போது எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

குறைந்தது 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வேர்வையை வெளியேற்றுவது நல்லது. மேலும் 20 நிமிடங்களில் சுடு தண்ணீரில் குளிக்கலாம். வியர்வை வெளியேறும்போது நச்சுகளும் வெளியேறுகிறது. இரவில் கொதிநீர் ஆவி பிடிக்க வேண்டும்.

5 முதல் 10 சொட்டு யூகாலிப்டஸ் தைலம் கொதிநீரில் சேர்த்து தலையினை சுத்தமான போர்வையை கொண்டு மூடி ஆவியை நன்றாக உள்ளுக்குள் இழுத்து சுவாசிக்கவும் இவ்வாறு கொதிநீர் ஆறும்வரை ஆவிபிடிக்கவும்.

மூன்று நாட்கள் இவ்வாறு கடைபிடித்தால் ஆஸ்த்துமா, நுரையீரல் அழற்சி, சைனஸ் தொல்லை நீங்கி நல்ல நலன் பெறலாம்.

சிறுநீரக பாதுகாப்பு உடலை மேலும் நலமாக வைத்திருக்க உதவுகிறது. உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு முக்கிய உறுப்புதான் சிறுநீரகம். இது இரத்தத்திலுள்ள நச்சுத் தன்மை மற்றும் அளவுக்கு அதிகமான தண்ணீரை பிரித்தெடுத்து சிறுநீர் பைக்கு அனுப்புகிறது.

இதற்கு சிறுநீரகம் நன்கு செயல்பட வேண்டும். இல்லையெனில் இரத்தத்திலுள்ள நச்சுகள் சேர்வதுடன் சிறுநீரக கற்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். எனவே சிறுநீரகங்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்கவும் ஒரு சில பழங்களை, பழச்சாற்றை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும்.

எலுமிச்சை பழச்சாற்றை தினமும் குடித்துவந்தால் சிறுநீரக கற்கள் வரும் வாய்ப்பு குறையும். மேலும் எலுமிச்சை சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்பட பெரிதும் உதவுகிறது.

தற்பூசணி பழத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இது அதிக அளவில் சிறுநீரை உற்பத்தி செய்து உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுகிறது.

பெர்ரிப்பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதோடு நோய்களை எதிர்த்துப் போராடும் பொருட்கள் பல நிறைந்துள்ளன. மேலும் இது சிறுநீரகங்களில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்றி சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. எனவே முடிந்த அளவுக்கு அவ்வப்போது பெர்ரி பழங்களை சாப்பிடுவது நல்லது.

ஆப்பிள் பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளது. இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

பூசணி விதைகளில் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், கனிமச்சத்துகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. எனவே இவற்றை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் குறையும்.

இஞ்சியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கு நல்லது. மேலும், இது இரத்தம் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்தும் சக்தி கொண்டது.

மஞ்சளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரகங்களில் பிரச்சனைகள், சிறுநீரகத் தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்பட்டு சிறுநீரகங்கள் நன்கு செயல்படும்.

கொத்தமல்லியை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை குளிர வைத்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக்கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமானது.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உருவாகும். செம்பருத்திப்பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுற்றியுள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உடல் சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம்பருப்புடன் சமைத்து ஒரு கோழி முட்டையை உடைத்துவிட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டுவர இரத்தம் விருத்தியாகும்.

நாவல்பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படும். தக்காளி பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாதநோய் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

இலந்தம்பழம் சாப்பிட்டால் இரத்தம் சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும். பசியைத்தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

உடலின் உறுப்புகள் நலமோடு இருக்கும் பட்சத்தில் நாமும் நலமோடு இருப்போம். நலமோடு வாழ்வோம். எனவே சிறுசிறு முறைகளை கடைபிடிப்போம். நலமோடு வாழ்வோம்.

 


2016 டிசம்பர் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை