தொடர்புடைய கட்டுரை


உலர்ந்த பழங்கள் தரும் பலன்கள்

Dr.V. செல்வராஜ்

23rd Aug 2018

A   A   A

பரம்பரையாக உடல் ஆரோக்கியத்தை காப்பாற்ற பழங்களை உண்டு வந்துள்ளதனை நாம் அறிகிறோம். உண்ணும் ஒவ்வொரு பழமும் பல்வேறு நோய்களை தடுக்கின்ற சக்தியையும், உடலுக்கு நலனை கொடுக்கும் பண்புகளையும் பெற்றுள்ளன.

அவற்றில் சில பழங்களின் விதைகள் கூட நல்ல பலனைத் தருகின்றன. இன்று பழங்கள் உற்பத்தியில் உலக நாடுகள் போட்டிபோட்டு ஈடுபட்டு வருகின்றன. ஏராளமான பழங்களை நாம் இன்று இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றோம்.

நாம் உட்கொள்ளும் இந்த பழங்கள் அனைத்தும் எல்லா நாட்களும் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மிகக் குளிர்ச்சியினால் சளித்தொல்லை மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தக் கூடியதாக இல்லாமல் இருக்க வேண்டும். அதோடு அனைத்துத் தரப்பு மக்களும் உட்கொள்ளும் படியாக பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்.

பல நாடுகளில் அன்றாட உணவில் ஏதேனும் ஒருவகையில் பழங்கள் சேர்க்கப்படுகின்றன. அதுபோன்று நாமும் ஏதாவது ஒரு பழத்தை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது அவசியமாகும். அப்படி உணவோடு சேர்க்கப்படும் பழங்களில் ஒன்று அதிக சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழம் ஆகும். தமிழில் சர்க்கரை பாதாமி என்று அழைக்கப்படுகிறது.

பொன்னிறமான மேல்தோலையும் ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்தது. இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிறப் பழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும் குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மிகவும் மகத்தானது.

இந்த பழங்கள் ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவிற்கு ஆர்மேனியாவிலிருந்து கிரேக்கர்களால் கொண்டுவரப்பட்டது. இது ஆர்மேனியாவிலிருந்து வந்ததால் இதன் தாவரவியல் பெயர் புருனஸ் ஆர்மெனைக்கா என்று அழைக்கப்பட்டது.  இதன் பூர்வீகம் சீனாவாகும்.

இந்த பழங்கள் தற்போது துருக்கி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ரஷ்யா, கிறீஸ், அமெரிக்கா மற்றும் சீனாவில் அதிகமாக உற்பத்தியாகின்றன.

ஆப்ரிகாட் பழத்தில் சக்தி அளவு 48 Kcal, கார்போஹைட்ரேட் 11 கிராம், நார்சத்து 2 கிராம், கொழுப்பு 0.4 கிராம், புரோட்டின் 1094 மி.கிராம், லுட்டின் செக்ஸந்தின் 89 மி.கிராம், வைட்டமின் B1 0.03 மி.கிராம், வைட்டமின் B2 0.04 மி.கிராம், வைட்டமின் B3 0.6 மி.கிராம், பொலேட் 9 மி.கிராம், வைட்டமின் B5 0.24 மி.கிராம், வைட்டமின் B6 0.054 மி.கிராம், வைட்டமின் சி 10 மி.கிராம், வைட்டமின் E  0.89 மி.கிராம், வைட்டமின் k 3.3 மி.கிராம், கால்சியம் 13 மி.கிராம், மெக்னீசியம் 10 மி.கிராம், இரும்பு 0.4 மி.கிராம், பாஸ்வரம் 23 மி.கிராம், பொட்டாசியம் 259 மி.கிராம், சோடியம் 1 மி.கிராம், மாங்கனீஸ் 0.077 மி.கிராம், துத்தநாகம் 0.2 மி.கிராம் ஆகிய சத்துக்கள் உள்ளன.

இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப்பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்தசோகையை குணப்படுத்த வல்லவை.

இதில் அடங்கியுள்ள நார்சத்து மலச்சிக்கலை நீக்குகிறது. ஆப்ரிகாட் பழங்கள் உடலுக்கு நன்மையானதாக விளங்க்குவது போன்று சருமத்திற்கும் சிறந்ததாகும்.  இதிலுள்ள வைட்டமின் A சத்து சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும்.

இதில் இயற்கையான எண்ணெய் உள்ளது. வைட்டமின் A முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. பழங்களிலுள்ள வானிலிக் அமிலம் மற்றும் ரூப்பின் என்ற எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது.

இதில் உள்ள பீட்டா காரெட்டின்கள் மற்றும் இரும்புச் சத்து இரத்த உற்பத்திக்கு ஏற்றது. இதில் உள்ள காரெட்டினாய்டுகள் எல்டிஎல் என்னும் பொருள் கெட்ட கொழுப்பை நீக்கி இதய நோயை தடுக்கிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. லைகோபின் என்னும் சத்து செல் முதிர்வை தடுக்கிறது. இதில் உள்ள டிரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்துகிறது.

மிகவும் சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள் குழந்தைகளுக்கு ஏற்றது. இருதய நோய், சிலவகை புற்றுநோயை கூட எதிர்த்துப் போராடும் சத்துக்கள் அடங்கிய பழமாகும். இப்பழத்தை நன்கு கழுவி வேக வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்.

மலைவாழைப்பழம், ஆப்ரிகாட் 4 ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தயிர் அரை கப் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து இரவில் படுக்கும் போது சாப்பிட்டுவர பார்வைத்திறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும்.

வைட்டமின் A பார்வை திறனை அதிகப்படுத்துகிறது. தினமும் இரண்டு ஆப்ரிகாட் பழத்தை இரவில் சாப்பிட்டுவர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அழிவதும் கட்டுப்படுத்தப்படும். எனவே தினமும் இரண்டு ஆப்ரிகாட் பழங்களை உண்டு உடல் நலனை பேணுவோம்.

அடுத்ததாக பாதாம் பருப்பு: பாதாமில் வைட்டமின்களும் தாதுசத்துகளும் அதிகமிருப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவுகிறது. புரதம், நார்சத்தோடு உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களான ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 இதில் உள்ளது.

அதோடு வைட்டமின் E, துத்தநாகம், சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, பாஸ்வரம், தாமிரம், பொட்டாசியம், செலோனியம், கால்சியம் மற்றும் மெக்னீசியமும் இதில் உள்ளது. பாதாமில் கால்சியம் நிரம்ப உள்ளது. அதோடு சேர்ந்து புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் பி17 என்ற சத்தும் இதில் உள்ளது.

மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இருதயக் கோளாறுகள், நீரழிவு நோய், சருமக் கோளாறுகள், சோரைசிஸ், பல்பாதுகாப்பு, இரத்தசோகை, ஆண்மைக்குறைவு, பித்தப்பை கல் போன்றவற்றை மாற்றுவதற்கு பாதாம் துணை புரிகிறது.

தினந்தோறும் பாதாம் உண்டு வந்தால் உடலில் நல்ல கொழுப்பு கூடி கெட்ட கொழுப்பு குறைகிறது. பாதாமில் உள்ள நல்ல கொழுப்பு, புரதம் மற்றும் பொட்டாசியம் இதயத்திற்கு நல்லது.

பாதாமில் உள்ள போலிக் அமிலம் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து நிறுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

பாதாமில் உள்ள சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. மூளைத் திறனை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

இரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பதால் நீரழிவு நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

பாதாமில் உள்ள நார்சத்து மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. மாங்கனீஸ், தாமிரம் மற்றும் ரிபோபிளாவின் சக்தியை உற்பத்தி செய்ய உதவுவதால் பாதாம் உட்கொள்பவர்கள் புத்துணர்வோடு இருப்பார்கள்.

முதியவர்களுக்கு ஏற்படும் ஞாபகமறதி நோயை பாதாம் உட்கொண்டு வருவதன் மூலம் தடுக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

இப்படிப்பட்ட சக்தியை உடைய பாதாமில் 5 ஐ தினமும் நீரில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வரலாம். நீரில் ஊறவைத்த பாதாமிலிருந்து லிபோஸ் என்கிற நொதி வெளிவருகிறது. இதனை உண்ணும் போது உணவுகள் எளிதில் செரிமானமடைகிறது.

ஊற வைத்து பாதாமை சாப்பிட்டால் நமது இரத்தத்தில் ஆல்பா டகோபெரோல் என்ற பொருள் அதிகரிப்பதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு போலிக் அமிலம் போதுமான அளவு கிடைப்பதால் குழந்தை ஆரோக்கியமாக வளர்கிறது. பிறப்பு குறைபாடுகள் குறைகின்றன.

இப்படி பல நன்மைகளைத் தருகின்ற பாதாம், ஆப்ரிகாட் பழத்தை உணவோடு சேர்த்துக் கொள்வது நமது உடலுக்கு மிகவும் பலன் தருகிறது. எனவே உணவோடு இவற்றையும் உண்போம் பலன் பெற்றிடுவோம்.

 


ஜூலை 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.