இறவா இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா

F.A.M. சேவியர்

22nd Oct 2019

A   A   A

நவம்பர் 22 கர்நாடக இசை மேதை காலமானார் என்ற செய்தி இசை ரசிகர்களை கண்ணீர் மல்க வைத்து விட்டது. எட்டு மொழிகளில் பாடி இந்தியா முழுவதும் இலட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றவர். உலகம் முழுவதும் இசை ரசிகர்களைப் பெற்ற பாலமுரளி கிருஷ்ணா இந்தியாவின் உயர்ந்த விருதுகள் பலவற்றைப் பெற்றவர்.

பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் முதலிய உயரிய விருதுகளைப் பெற்ற அவர் பிரான்ஸ் நாட்டின் உயர்ந்த விருதான செவாலியே விருதையும் பெற்றுள்ளார். அதோடு சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

பாலமுரளி கிருஷ்ணா பன்முகத்தன்மை கொண்ட கலைஞர். பாடகர், இசை அமைப்பாளர், நடிகர் என பல திறமைப் பெற்றவர். தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ், கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி, மலையாளம், பிரெஞ்சு, பஞ்சாபி, வங்காளி போன்ற மொழிகளில் எண்ணற்றப் பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் 400க்கு மேற்பட்டப் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். திருவிளையாடல் படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் “ஒரு நாள் போதுமா, கவிக்குயில் படத்தில் இளையராஜா இசையில் “சின்ன கண்ணன் அழைக்கிறான் உள்ளிட்ட இவரது பாடல்கள் மிகவும் பிரபலமானவை.

25000க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார். தென்னிந்தியாவில் அவர் கால் படாத சபாக்கள் இல்லை. 1967ல் பக்த பிரகலாதா என்ற தமிழ் படத்திலும், “சந்தினே செந்தின சிந்தூரம் என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.

கர்நாடக சங்கீதத்தில் ஏராளமான ராகங்கள் இருந்தாலும் அதன் மூலராகங்களின் 72லும் கிருதிகள் இயற்றி சாதனைப் படைத்துள்ளார். வாய்ப்பாட்டு, வாத்தியங்கள் வாசிப்பது, பாடல்கள் இயற்றுவது என பல பரிணாமங்களிலும் சாதனை படைத்துள்ளார். பல புதிய ராகங்களை உருவாக்கியும் சாதனை புரிந்துள்ளார். இசை ஆசிரியராகவும் விளங்கியுள்ளார். இவர் பண்டிதர்களுக்காகவும் பாடுவார். பாமரர்களுக்காகவும் பாடுவார்.

எந்த மொழியில் பாடுகிறாரோ அந்த மொழிதான் அவர் தாய்மொழி என எண்ணத் தோன்றும் அளவுக்கு மொழித்தெளிவோடு பாடக்கூடியவர்.

இவர் 1930ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி சங்கர குப்பம் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை பட்டாபிராமையா புல்லாங்குழல் மேதை, தாயார் சூரிய காந்தம் வீணைக் கலைஞர். சிறுவயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்டு முறையாக இசைபயின்றார். 9வயதில் வாய்ப்பாட்டு மட்டுமின்றி மிருதங்கம், வயலின், கஞ்சிரா உள்ளிட்ட வாத்தியங்களில் தேர்ச்சிப் பெற்றார். வானொலியில் முதல் முதல் அரங்கேற்றம் நடத்தினார். வானொலியில் பக்தி மஞ்சரி என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார்.

அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்திய நாத பாகவதர், மகாராஜபுரம் சந்தாணம், ஜி.என். பாலசுப்பிரமணியம் போன்ற முன்னணி பாடகர்களுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார்.

கலை பண்பாட்டை மேம்படுத்தும் விதமாக விரிவான இசை ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் எம்.கே.பி. அறக்கட்டளையை நிறுவி இசையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

கர்நாடக சங்கீத உலகில் இசை கலைஞராக, பாடகராக, இசை அமைப்பாளராக, இசை ஆசிரியராக, இசை ஆராய்ச்சியாளராக விளங்கியதோடு இளம் வயதில் நடிகராகவும் விளங்கி கலை உலகுக்கு சிறப்பான சேவை செய்து என்றும் அழியா புகழுடன் நினைவில் வாழும் கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவுக்கு அமுதம் மாத இதழ் அஞ்சலி செலுத்துகிறது.

 


2016 டிசம்பர் அமுதம் இதழில் வெளியானது…



Error
Whoops, looks like something went wrong.