மாற்றுத்திறனாளர்களை, மாண்புறச் செய்தவர்

F.A.M. சேவியர்

17th Jan 2019

A   A   A

2016 டிசம்பர் 3 ஆம் நாள் புது டில்லியில் Department of Empowerment of Persons with Disabilities (Divyangian) துறையினரால் 2016 ஆண்டு சாதனையாளர் விருது இந்திய குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது. அந்த விருது கேரள அரசின் அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம் கோளரங்க இயக்குநர் G. அருள்ஜெரால்ட் பிரகாஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

விருதுபெற்ற அவரை நாகர்கோவில் புன்னைநகரில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். அமுதம் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவர் பெற்ற விருது பற்றி கேட்டோம். அவர் விருதைப் பற்றி விளக்கியதோடு ஆக்கப்பூர்வமான அவரது செயல்பாடுகளை விளக்கினார். புதுபுது எண்ணங்களால் அவர் நிறைந்திருப்பதும் எண்ணங்களைச் செயலாக்கும் துடிப்பும் சாதுர்யமும் அவரிடம் நிறைந்திருப்பதையும் காணமுடிந்தது.

கேரள அரசின் தன்னாட்சி நிறுவனமான கேரள மாநில மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் கோளரங்கத்தின் இயக்குநராக திருவனந்தபுரத்தில் 2007 முதல் பணிபுரிந்து வருகிறார். 1987 ல் பணியில் சேர்ந்த இவர் முதலில் இந்திய அரசின் தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தில் பணிபுரிந்தார். பின்பு 1990 ல் கேரள அரசின் அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியக துணை இயக்குநராக பணியேற்று பதவி உயர்வு மூலம் 2007 முதல் இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.

திருவனந்தபுரத்திற்கு பயணம் செய்யும் பலரும் திருவனந்தபுரம் கோளரங்கத்தைக் காணாமல் இருக்க மாட்டார்கள். கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருக்கும் கோள்களின் செயல்பாட்டையும் வானத்தின் அதிசயங்களையும் நம் கண்ணுக்குள் நிறுத்தி நமது அறிவியல் கண்ணைத் திறந்து விடுவர். கோளரங்கத்தையும் அறிவியல் அருங்காட்சியகத்தையும் பார்ப்பவர் பிரமிப்போடு வெளிவருவர்.

அருங்காட்சியக வளாகம் எழில்மிகு தோட்டங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. அழகுதோட்டமும், மூலிகை தோட்டமும், கள்ளிச் செடிகளின் தொகுப்பும், இவற்றிற்கு மேலாக வண்ணத்துப்பூச்சி வாழிடத் தோட்டமும் நம்மை அதிசயத்துடன் பார்க்க வைக்கும். அத்தனை நேர்த்தியான தோட்டங்களைக் காண்பது அரிது.

இந்த தோட்டத்தின் அழகுக்கும் நேர்த்திக்கும் பின்னால் மாற்றுத் திறனாளர்களான மனவளர்ச்சிக் குன்றி ஏழுபேரின் உழைப்பும் வியர்வையும் மறைந்துள்ளது.

2007 ல் அருள்ஜெரால்ட் பிரகாஷ் இயக்குராகப் பொறுப்பேற்றபோது அருங்காட்சியகத் தோட்டம் பராமரிப்பின்றி பாழ்பட்டிருந்தது. கேரள கல்வி அமைச்சருடன் நடந்த சந்திப்பின்போது இந்த தோட்டத்தை சீரமைக்க மாற்றுத்திறனாளர்களை பயன்படுத்தினால் என்ன என்ற சிந்தனையை அமைச்சர் தெரிவிக்க அதனை ஏற்று செயல்படுத்தி சாதித்துள்ளார்.

மனவளர்ச்சி குன்றியவர்களை எப்படி பணியமர்த்தி முறைப்படுத்துவது என்பது எல்லோருக்கும் கேள்விக்குறியாக இருந்தது. இரண்டு ஆண்டுகள் கடின முயற்சியிலும் பயிற்சியிலும் மனவளர்ச்சிக்குன்றிய அவர்கள் முறைப்படுத்தப்பட்டார்கள். முழுஅறிவு பெற்றவர்களிடமிருந்து அவர்கள் மாறுபட்டவர்களாக இருப்பதை அறியமுடிந்தது. கள்ளத்தனம் இல்லாத உள்ளம். கொடுத்த வேலையை நேரம் தவறாது முறையாக செய்யும் அவர்களது பண்பு ஊக்குவிக்கப்பட்டபோது அவர்களிடமிருந்து சாதனைகள் கிடைத்தது.

புதர்மண்டிய தோட்டம் சீராக்கப்பட்டு அழகுமிகு தோட்டம் உருவாக்கபட்டது. இந்தநேரத்தில் தான் வண்ணத்துப்பூச்சி குடில் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. வண்ணத்துப்பூச்சிகளின் கூட்டுப்புழு வாழ்வதற்கு ஏற்ற மரங்களைத் தேர்வு செய்து வளர்த்து அதில் வண்ணத்துப்பூச்சிகளின் முட்டையிருந்து உருவாகும் புழுக்கள் கூட்டுப்புழுவாக மாறும்போது அதை சேகரித்து கண்ணாடி கூண்டில் வைத்துவிடுவர் கூட்டுப்புழு வெடித்து வண்ணத்துப்பூச்சி வெளிவந்ததும் கூண்டுக்குள் உலாவிக் கொண்டிருக்கும். முதலில் இவ்வாறு துவக்கப்பட்ட இத்திட்டம் பின்பு இயற்கையாகவே விடப்பட்டது. இன்று அங்குச்சென்றால் வண்ணத்துப்பூச்சிகள் இயற்கையாகவே அந்த பகுதியை வட்டமடிப்பதைக் காணமுடியும். வண்ணத்துப்பூச்சிகள் வாழுமிடம் உருவாக்கப்பட்டு பார்ப்போரை பிரமிப்பு அடைய செய்துள்ளார்கள்.

அதை அடுத்து கள்ளிச்செடிகளின் தொகுப்பு உருவாக்கப்பட்டது. பின்பு வாழைத்தோட்டம் உருவாக்கப்பட்டது.

சக்கர நாற்காலியில் மாற்றுத்திறனாளர்கள் அந்த தோட்டத்தை வலம் வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனவளர்ச்சிக் குன்றியவர்கள் தோட்டத்தி9ன் ஒவ்வொரு பகுதியிலும் செடிகளையும், மரங்களையும், காய்கனிகள் பூக்களையும் தொட்டு உணரவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாதனைகளை மனவளர்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளர்களை வைத்து செய்து சாதனை புரிந்தமைக்காகவே இந்த திவ்வியன்ஜன் 2016 விருது இவருக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களால் வழங்கப்பட்டது.

முப்பது ஆண்டுகளாக இந்த துறையில் பணிபுரிந்து வரும் இவர் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். 1993-94 ல் மிகபிரம்மாண்டமான கோளரங்கத்தை உருவாக்கினார். லட்சத்தீவிலும் ஒரு கோளரங்கத்தை அமைத்துள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த கோளரங்கம் என்ற நிலைக்கு திருவனந்தபுரம் கோளரங்கத்தை உருவாக்கியுள்ளார். அதிலே வானியல் கல்வி மக்களுக்கு அளிக்கப்படுகிறது.

அருங்காட்சியகத்தில் அலைபேசி தொழில்நுட்பம், மின்னணு, மின்சாரம், கணிதம், வானியல், கணினி, விளையாட்டு அறிவியல் தொடர்பான தொழில்நுட்பம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களும், பொதுமக்களும் அறிவியல் உண்மைகளை உணர்ந்து கொள்ளவும் அதனால் ஏற்படும் விழிப்புணர்வு மூலம் வாழ்வை அறிவுசால் வாழ்வாக மாற்றிக் கொள்ளவும் இந்த மையம் சிறப்பான சேவையை செய்து வருகிறது.

இவை அல்லாது மாற்றுதிறனாளர்களுக்கான சக்கர நாற்காலிகள், நகரும் படுக்கைகள் பலவற்றையும் வடிவமைத்து கொடுத்து வருகின்றனர். மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு ஆய்வு கூடங்களை நிறுவியுள்ளனர். ஒவ்வொரு மாணவனும் தனது அறிவை பரிசோதித்து புதிய கண்டுபிடிப்பை உருவாக்க இந்த மையம் உதவி வருகிறது.

கோட்டயத்தில் அறிவியல் நகரம் ஒன்றை ரூ.100 கோடி செலவில் உருவாக்கும் பணியும், சாலக்குடியில் ரூ.20 கோடி செலவில் மண்டல அறிவியல் மையம் உருவாக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.

இன்றைய அறிவியல் உலகுக்கு விடிவெள்ளியாகத் திகழும் ஏ.அருள்ஜெரால்ட் பிரகாஷ் காரைக்குடி பொறியியல் கல்லூரியில் மின்னியல் தகவல் தொழில்நுட்பத்தில் 1984 ல் B.E. பட்டம் பெற்றுள்ளார். 1998 ல் மனிதவள மேலாண்மையில் M.B.A. பட்டமும் 2000 ஆண்டில் கேரள பல்கலைக்கழகத்தின் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் நடைமுறை மின்னணு மற்றும் உபகரணங்கள் பாடத்தில் M.Tech பட்டமும் பெற்றுள்ளார்.

மக்களின் அறியாமையை போக்கி அறிவியல் உண்மைகளை அனைவரும் அறியும் நோக்கோடு பணிபுரிந்து வருவதோடு மாற்றுத்திறனாளர்களை மேம்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். அவரை அமுதம் மனதாரப் பாராட்டுகிறது.

 


ஜனவரி 2017 அமுதம் இதழில் வெளியானது...



Error
Whoops, looks like something went wrong.