நம்பிக்’கை’ யால் விமானம் ஓட்டும் ஜெசிகா காக்ஸ்

F.A.M. சேவியர்

23rd Aug 2018

A   A   A

’தன் கையே தனக்குதவி’, ’ஒரு கை தட்டினால் ஓசை எழுப்புமா?’, ’சித்திரமும் கை பழக்கம்’ போன்ற பழமொழிகள் கைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவன. வாழ்க்கையில் கைகளின் பங்கு மிக இன்றியமையாதது. ஆனால் நாம் அதை உணர்வதில்லை. நம்மிடம் இருக்கும் ஒன்று போனால் தான் அதன் அருமை தெரியும் என்பார்கள்.

விபத்து ஒன்றில் கைகள் தற்காலிகமாக செயல்படாத நிலை ஏற்பட்டாலே நாம் துவண்டு விடுவதுண்டு. வாழ்க்கையே முடிந்ததென்று துவண்டு விடுவோம். ஆனால் பிறவியிலேயே இரு கைகளும் இல்லாதவர்களும் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்பதையும் சிலர் வாழ்ந்துகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி சாதித்தவர்களுள் ஒருவரைத் தான் இந்த மாதம் பார்க்கப் போகிறோம்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் 1983 ல் பிறந்தவர் ஜெசிகா காக்ஸ். இவர் பிறவியிலேயே கைகள் இல்லாமல் பிறந்தார். சிறிதளவும் நம்பிக்கை குன்றாத ஜெசிகா தன் கால்களால் வாழ்க்கையை வாழப் பழகிக் கொண்டார். கைகள் செய்ய வேண்டிய பணிகள் அத்தனையையும் கால்களால் செய்கிறார். சாப்பிடுவது, குடிப்பது, எழுதுவது, தலை வாருவது, கடல் அலையில் சறுக்கிச் செல்வது என அனைத்தையும் செய்ய பழகிக் கொண்டார்.

இவரது தந்தை பெயர் வில்லியம், தாயார் பெயர் இனீஸ். இவரது உடன்பிறந்தவர்கள் இருவர் சகோதரர் பெயர் ஜாசன், சகோதரி பெயர் ஜாக்கி. ஆரம்பத்தில் இவரது பெற்றோர் இவரை பல மருத்துவர்களிடம் கொண்டு சென்றனர். இவரது இந்த குறைபாட்டிற்கான காரணத்தை அறியவும், செயற்கை கையை பொருத்த முடியுமா எனவும் கடுமையாக முயன்றனர். பல்வேறு காரணங்களால் அந்த முயற்சிகள் வெற்றிபெற வில்லை.

பெற்றோர் கொடுத்த தன்னம்பிக்கையும், குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் இவரை வாழ்க்கையை வாழ தூண்டியது. தனது 14 வது வயதில் தட்டச்சு இயந்திரத்தில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளை கால்களால் டைப் செய்து அசத்தினார். தனது தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியாலும் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் மனதத்துவ இயலில் படித்து பட்டம் பெற்றுள்ளார்.

தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள டேக்வான்டோ என்ற தற்காப்புக் கலை பயின்று 2 கறுப்பு பட்டைகளையும் பெற்றவர். பின்னாளில் இவரை திருமணம் செய்துகொண்ட சாம்பர்லெய்ன் இவருக்கு சிறப்பு பயிற்சியாளராக இருந்து பயிற்சி அளித்தார். நீச்சலிலும் முன்னணியில் திகழ்கிறார். கால்களால் கார் ஓட்டவும் பழகிக் கொண்டார். இந்த நிலையில்தான் அவருக்கு விமானம் ஓட்ட வேண்டும் என்ற ஆசை பிறந்தது. உடனடியாக அவர் டக்சன் நகரில் உள்ள விமான பயிற்சி மையத்திற்குச் சென்று தனது விருப்பத்தைக் கூறினார்.

கை இல்லாத பெண்ணால் எவ்வாறு விமானம் ஓட்ட முடியும் என்று வியந்த பயிற்சி நிறுவனம், அவர் தானே காரை ஓட்டிக் கொண்டு வந்தார் என்பதை அறிந்ததும், அவரது தன்னம்பிக்கையை பாராட்டி உடனடியாக அவருக்கு பயிற்சி அளிக்க முன் வந்தது.

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் விமானங்கள் காலால் இயக்க இயலாதவையாக இருந்ததால், 1945 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட குட்டி விமானத்தை ஜெசிகாவின் பயிற்சிக்கு பயன்படுத்த முடிவு செய்தனர். உடனடியாக அந்த பழைய குட்டி விமானம் புதுப்பிக்கப்பட்டு ஜெசிகாவிற்கு 3 ஆண்டுகள் தொடர்ந்து பயிறசி அளிக்கப்பட்டது. இறுதியில் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் நாள் விமான ஓட்டிக்கான லைசென்ஸ் இவருக்கு வழங்கப்பட்டது.

உச்சகட்ட சாதனையாக குறைந்த எடையுள்ள விமானத்தை கால்களால் இயக்கியபடியே 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து, உலக அளவில் இந்த சாதனையை படைத்த ஒரே நபர் என்ற வகையில் கின்னஸ் புத்தகத்திலும் ஜெசிகா காக்ஸ் தனி இடம் பிடித்துள்ளார்.

சிறந்த தன்னம்பிக்கை பயிற்சியாளராக திகழும் இவர் இதுவரை 17 க்கும் அதிகமான நாடுகளுக்கு சுற்றுபயணம் செய்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்களுக்கு மனவலிமையை ஊட்டும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் கருத்தரங்கங்களில் உரையாற்றி உள்ளார். தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு பயணமாகி வருகிறார்.

இவர் தனது காதல் கணவரை முதல்முதலில் சந்தித்தது டேக்வான்டோ பயிற்சியில் தான். பாட்ரிக் சாம்பர்லெய்ன், ஜெசிகாவைப் பற்றி குறிப்பிடும்போது ‘இவர் ஒரு அற்புதமான பெண்மணி’ என்கிறார். டேக்வான்டோவில் தொடங்கிய சந்திப்பு நட்பாக மலர்ந்து காதலானது. பின்னர் 2011 மே மாதம் இருவரும் சேர்ந்து பிலிப்பைன்ஸ் சென்றிருந்த போது தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்தனர். தொடர்ந்து, மே 2012 – ல் இவர்களது திருமணம் நடந்தது.

இவரது தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் பற்றி அறிந்த 16ம் போப் பெனடிக்ட், ஜெசிகாவை வாட்டிகன் அரண்மனைக்கு வரவழைத்து பாராட்டி ஆசி வழங்கியுள்ளார்.

இவர் தன்னைப் பற்றியும், தான் வழங்கும் பயிற்சிகள் பற்றியும் தனது இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். இவரது இணைய முகவரி www.jessicacox.com ஆகும். இந்த சாதனை பெண்ணின் சாதனைகள் தொடர அமுதம் சார்பாக நாமும் வாழ்த்துவோம்.

 


ஜூலை 2017 அமுதம் இதழில் வெளியானது…



Error
Whoops, looks like something went wrong.