உணவில் கலப்படம் - பால்

அக்ரி சுரேஷ்

19th Jun 2018

A   A   A

பால் அனைத்து மக்களாலும் விரும்பப்படக்கூடிய உணவு. ஆனால் பாலில் கலப்படம் செய்யப்படுகிறது என தற்போது ஊடகங்களில் செய்திகள் வந்தபின் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பால் பவுடராகவும், திரவ நிலையிலும் மக்களால் பயன்படுத்தப்பட்டாலும் கலப்படம் திரவநிலையில்தான் அதிகம் சேர்க்கப்படுகிறது. பாலில் தண்ணீர் சேர்ப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், வேதிப்பொருள்கள் சேர்ப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாலில் பார்மலின் (40% பார்மால்டிறைடு) என்ற வேதிப்பொருள் நீண்ட நாட்கள் பால் கெடாமல் வைத்திருக்க சேர்க்கப்படுகிறது. ஹைட்ரஜன் பெராக்சைட் (Hydrogen peroxide) பால் சேமிக்கும் கலன்களை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. பால் கட்டியாக இருப்பதை வெளிப்படுத்த மாவுப் பொருள்களான, மரச்சீனி மாவு, பிற மாவு வகைகள் சேர்க்கப்படுகின்றன. தண்ணீரான பாலில் நுரையை ஏற்படுத்த சோப்பில் சேர்க்கப்படுகின்ற காஸ்டிக் சோடா சேர்க்கப்படுகிறது. காலவதியான பால் பவுடர் பாலில் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாலில் உள்ள கொழுப்பின் (SNF) அளவை அதிகரிக்க செய்ய பயிர்களுக்கு இடும் யூரியா சேர்க்கப்படுகிறது. யூரியா சேர்ப்பது எதற்கென்றால் பாலின் விலை கொழுப்பின் (SNF) அளவை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் பாலில் சில தாவர எண்ணெய் பொருட்களும் சேர்க்கப்படுகிறது. பாலில் கலக்கப்படும் பொருள்களை நாம் சிலவகை சோதனைகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

1. பாலில் தண்ணீர் சேர்ந்திருப்பதை அறிய லாக்டோமீட்டர் கொண்டு அறியலாம். மேலும் சாய்வான தளத்தில் பாலை இடும்போது வேகமாக ஓடினால் பாலில் தண்ணீர் கலந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

2. பாலில் சோப்பு பொருள்கள் கலந்திருப்பதை அறியும் சோதனை:

10 மில்லி பாலுடன் 10 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாக குலுக்கி ஒரு டம்ளரில் ஊற்றும்போது கலப்படமான பாலில் நுரை பொங்கிவரும். மேலும் சோப்பு கலந்த பாலை சூடாக்கும்போது இளமஞ்சளாக மாறும்.

3. பாலில் மாவுப்பொருள்கள் கலந்திருப்பதை அறியும் சோதனை:

3 மில்லி பாலுடன் 5 மில்லி தண்ணீர் சேர்த்து இதனுடன் அடிப்பட்ட புண்ணிற்கு பயன்படுத்தப்படும் அயோடின் மருந்தையோ அல்லது அயோடின் உப்பையோ சேர்க்கும்போது நீலநிறமாக மாறும். இச்சோதனை மூலம் கலப்படப்பாலை அறிந்து கொள்ளலாம்.

4. பாலில் யூரியா கலந்திருப்பதை அறிய ஒரு தேக்கரண்டி பாலுடன் அரை தேக்கரண்டி சோயா மாவு கலந்து டெஸ்ட் டியூப் ஒன்றில் இட்டு ஐந்து நிமிடம் கழித்து இதனுடன் சிவப்பு லிட்மஸ் பேப்பரை நனைக்கும் போது பேப்பரானது நீல நிறத்திற்கு மாறினால் யூரியா கலந்திருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

பசும்பாலில் எருமை பால் கலப்பது இயல்பான செயல். இதனை அறிய கொழுப்பின் அளவை வைத்து நாம் வேறுபடுத்தலாம். பசும்பாலை விட எருமைப்பாலில் அதிக கொழுப்பு அடங்கியிருக்கும். எருமை பாலை, பசும்பாலை விட அதிக நேரம் சேமித்து வைக்கலாம். மேலும் நிறத்தை வைத்தும் வேறுபடுத்தலாம்.

பாலிலிருந்து எடுக்கப்படும் நெய்யிலும் கலப்படம் செய்யப்படுகிறது. இதனை அறிய அரை தேக்கரண்டி நெய்யுடன் இரண்டு சொட்டு டிங்சர் அயோடின் மருந்தை சேர்க்கும்போது நீலநிறத்தில் மாறும். நெய்யுடன் அவித்த உருளைக்கிழங்கு, சீனிக்கிழங்கு, ரவை போன்றவை பொருள்களாக சேர்க்கப்படுகிறது.

 


ஜனவரி 2018 அமுதம் இதழில் வெளியானது. . .



Error
Whoops, looks like something went wrong.