16th Oct 2018
ஒவ்வொரு நாட்டிற்கும், ஒரு கலாச்சாரம் உண்டு, அந்த கலாச்சாரம் பல சோதனைகளையும், சாதனைகளையும், கடந்தே வந்திருக்கும். அதன் அடிப்படையில் எகிப்திய மருத்துவமும் சரியான எடுத்துக்காட்டாகும். பல நாடுகளை வாழவைத்தவர்கள், பல நாடுகளை கிழி கிழியென கிழித்த இவர்கள் தான் துளையில்லா அறுவைசிகிட்சைக்கும் (non invasive surgery), பல் மருத்துவத்திற்கும், எலும்பியல் சம்பந்தமான நோய்களுக்கும் முன்னோடிகளாக இருந்தனர். மருத்துவத்தில் ஸ்பெசலைசேசன் என்ற முறையை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர்கள் இவர்கள்.
இவர்கள் கலாச்சாரமும், சமூக அமைப்பும் வித்தியாசமானது, காரணம் திருமணங்களில் தங்கள் குடும்ப சகோதர சகோதிரிகளையே திருமணம் செய்தனர். இதனால் தங்கள் சொத்துகளை குடும்பத்துக்குள்ளேயே வைத்துக்கொள்ள நினைத்தனர். நகத்திற்கு வண்ணம், முகத்திற்கு பவுடர், காதிற்கு அணிகலன் என உடம்பிற்கும், துணிகளுக்கு வாசனைதிரவியமென உலகத்திற்கு அழகுகலையை உருவாக்கி அறிமுகம் செய்தவர்கள் இவர்கள். இவர்கள் நிறத்தில் கறுப்பானவர்களாக இருந்தாலும் உலகளவில் கலர்புல்லாகவே கருதப்பட்டார்கள்.
இவர்களது அரசியலமைப்பு மிகவும் வலுவானதாக இருந்தது, கி.மு 1500 வருடங்களில் இவர்களது இராஜியம் வலுப்பெற்று இருந்தது. மன்னர்கள் மருத்துவத்திற்கு மிகமுக்கியத்துவம் அளித்தனர். மன்னர்கள் பொதுவாக “பாரோன்கள்” என்று அழைக்கப்பட்டனர், இதற்கு தெய்வத்தின் மகன் என்று பொருள்படும். எகிப்தியர்கள் பல விதமான தெய்வத்தை நம்பினார்கள், ஒவ்வொரு நோயும் ஒரு தெய்வத்தால் வருகிறது என்று நம்பினார்கள், அவைகளில் ஒசிரிஸ் (osiris) மரணத்திற்கான இறைவன் எனவும், நைல் (nile) உணவுவகைகளின் இறைவன் எனவும், இபிஸ் (ibis) ஞானத்தின் கடவுள், எனவும் பல கடவுள்களை பிரித்திருந்தனர்.
மருத்துவம், மாயாஜாலத்திலிருந்தே ஆரம்பித்தது. இவர்களின் மருத்துவ சிகிட்சைக்கு ஒரு பழமொழியேயுண்டு..
"மாயஜாலம் மருந்துடன் சேர்ந்து பயனுள்ளதாக இருக்கும். மருத்துவம் மாயஜாலத்துடன் சேர்ந்து பயனுள்ளதாக இருக்கும்.”
"ஹேக்கா (Heka) மாயாஜாலத்தின் கடவுளென அழைக்கப்பட்டார்,, செக்மெட் என்பவர் பல்வேறு மருத்துவ பிரச்சினைகளுக்கு மருத்துவராகயிருந்தார்.. நிஃபெர்டம் (Nefertum) என்பவர் நறுமண சிகிச்சையை அறிமுகப்படுத்தினார்.. பியிஎஸ் மற்றும் டாவ்ரீட் (Tawreret) தாய் சேய் நல மருத்துவர்களாக இருந்தனர், இந்த குழுவில் பகுதி வித்தைக்காரர்கள், பகுதி பூசாரிகள், மற்றும் பகுதி மருத்துவர்களென மக்கள் பணியில் ஈடுபட்டனர்.
நோய்களை குறித்து மருந்தியல் புத்தகங்களை உருவாக்கியிருந்தனர். இது உலகளவில் பாராடப்பட்டது. எகிப்தியர்கள், உடம்பிலுள்ள துளைகள் வழியாக கெட்ட ஆவிகள் உள்ளே சென்று நோய்களை உருவாக்குகின்றன என நினைத்து இருந்தனர். இறப்பிற்கு பின் வாழ்க்கை உண்டென நினைத்தனர், அதனால்தான் இறந்த உடல்களை பக்குவமாக பதப்படுத்தினர். மம்மிகளை உலகத்திற்கு அறிமுகப்படுத்தி அனைவரையும் இன்றளவும் ஆச்சிரியத்தில் வைத்திருப்பவர்கள் இவர்கள்தான்.
இதயத்திலிருந்துதான் அறிவாற்றல் வருகிறது என்று நினைத்தனர், இதன் காரணத்தால்தான் இதயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். மலக்குழாயும், இதயமும் நேரடித்தொடர்புடையதென கருதினர். இதனால்தானோ என்னவோ உணவுக்கழிவுகள் மலக்குழாய் வழியாக வருவதை நோயின் காரணமாகக் கருதினர்.
சமூக சுகாதார மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர், நைல் நதியை உயிராக நினைத்தனர். நதி மாசுபடுவதை தடுத்தனர். நகரங்களில் தூய்மையை கடைபிடித்தனர், சுய ஒழுக்கத்தை முறையாக பராமரித்தனர். மக்கள் அனைவரும் தினமும் இரண்டு முறை குளிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டனர்.
மருத்துவம் மாயாஜாலம் மற்றும் கோயில் நம்பிக்கைகளின் அடிப்படையில் இருந்து நடைமுறை மருத்துவமாக வளர்ந்தது. மூன்றுவிதமான மருத்துவர்களை இவர்கள் கொண்டிருந்தனர். முதலாவதாக மருத்துவர்கள், இரண்டாவதாக அறுவைசிகிட்சை நிபுணர்கள், மூன்றாவதாக மந்திரவாதிகள் அல்லது பேயோட்டுபவர்கள்.
மருத்துவர்கள் பொதுவாக உலகளவில் நிபுணத்துவம் உள்ளவர்களாக இருந்தார்கள். தனியுறுப்பு சிறப்பு மருத்துவர்கள் அரசாங்க மருத்துவர்களாக அரண்மனையில் அமர்ந்தனர். இவர்களில் கண்மருத்துவரும், மலகுழாய்க்கு சிறப்பு மருத்துவரும், பல் மருத்துவர், உணவுக்குழாய் மருத்துவர், என பல சிறப்புத்துறை மருத்துவத்தை உருவாக்கியிருந்தார்கள்.
கருத்தடைக்கு அறிவியலை அதிகமாக பயன்படுத்தினார்கள், பின்நாட்களில் கருத்தடை மருத்துவம் வளர்வதற்கு, இவர்கள் தான் முன்னோடிகள்.
கிரேக்கத்திற்கு அடுத்தபடியாக அறிவிலும், மருத்துவ துறையிலும் வளர்ந்தவர்கள், விவேகமில்லாத போர்குணங்களால் தலைகீழாக விழுந்தார்கள். அழியா சரித்திரம் கொண்ட எகிப்து, மாவீரன் அலெஸ்சாண்டரால் கடைசியாக வீழ்த்தப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டது,
பின்நாட்களில் அலேக்ஸாண்டிரியா நகரத்திற்கு அனைத்து நூல்களும் மாற்றப்பட்டு, அலெக்ஸாண்டரால் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்வி நிலையத்திற்கு இவர்கள் நூல்களால் பெருமை சேர்ந்தது.
ஆம் வாழ்கையில் தோற்றவர்கள் கற்றுத்தந்தது பின்வருபவைகள் தான்..
அறிவிருந்தால் போதுமா??
விவேகம் முக்கியமல்லவா!!
உலகையாள உடல்வலிமைப் போதுமா??
மனவலிமை தேவையில்லையா!!!
வாழ்க்கைக்கு போர்குணம் தேவைதான்-ஆனால்
பொறுமையும், மனவலிமையும்-மிக மிகத்தேவை
இதைபுரிந்தால் வரலாறுகள்
நம் கையில்...!!
மார்ச் 2017 அமுதம் இதழில் வெளியானது...
Copyright © 2018 Amudam Monthly Magazine