நோய்க்கிருமிகளை பரப்பிடும் பணப் பரிவர்த்தனைகள்

Prop. Dr. தங்க மாரியப்பன்

11th Feb 2019

A   A   A

இந்தியாவின் பண்டைய வணிகமுறை பண்டமாற்றத்தை மையமாகக் கொண்டிருந்தன. ஆகையால், அன்று விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களின் தரத்திற்கு மிக முக்கியத்துவம் வழங்கப்பட்டன. தற்போது பண்டமாற்று முறை பல பரிணாமங்கள் பெற்று பணப்பரிமாற்றத்திற்கு மாறியவுடன், விற்பனைப்பொருள்களின் தரத்தைப்பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை. பிறரிடமிருந்து பெறப்படும் பணம் காண்பதற்கு அருவருக்கதக்க நிலையிலிருந்தாலும், தயக்கமின்றி பெற்றுக்கொண்டு கண்களில் ஒத்திக்கொள்ளும் மனநிலையை தற்போதைய சமுதாயம் கொண்டிருக்கின்றது. அனைத்துதரப்பு மக்களின் அன்றாடத் தேவைகளை நிவர்த்திசெய்யும் வகையில், 5 முதல் 500 வரையிலான ரூபாய் நோட்டுகள் அதிகப் புழக்கத்தில் உள்ளன. இந்த ரூபாய் நோட்டுகள் தொற்று நோய்களை பரப்புவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது யாரும் அறியாதது.

மற்றவர்கள் அறியாத வகையில் மறைத்து வைக்க அக்கறை காட்டும் சமுதாயம், ரூபாய் நோட்டுகளை சுகாதாரமான முறையில் பேணிக்காக்க முற்படுவதில்லை. குறிப்பாக, பணம் எண்ணுதலின்போது எச்சிலை பயன்படுத்துதல், வியர்வை சுரக்கும் இடங்களில் பணத்தை வைத்திருத்தல், கழிவறையை பயன்படுத்தியபின் சரிவர சுத்தம் செய்யாத கைகளால் தொடுதல், மளிகைக்கடை, மீன் மற்றும் இறைச்சிக்கடை, காய்கறிக்கடை ஆகிய இடங்களில் நடைபெறும் பணப்பரிமாற்றங்கள் போன்ற செயல்பாடுகள் ரூபாய்நோட்டுகளின் சுகாதார தன்மையை கேள்விக்குறியாக்குகின்றன.

இதன் தொடர்பாக நுண்ணுயிர்த்துறை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் வெவ்வேறு வணிகச்சூழலில் ஈடுபட்டுள்ள நபர்களிடமிருந்து பெறப்பட்ட ரூபாய்நோட்டுகள் பயன்படுத்தப்பட்டன. ஆய்வுகளின் முடிவில், தொற்றுநோய்களை பரப்பிடும் காரணிகளான பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பது கண்டறியப்பட்டன. பொதுவாக ரூபாய்நோட்டுகள் மரக்கூழ்மங்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், அவற்றில் உள்ள செல்லுலோஸ் என்ற வேதிப்பொருள் ரூபாய்நோட்டுகளுக்கு நீர் உறிஞ்சும் தன்மையை கொடுக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக, தொண்டை அழற்சி புண்கள், நிமோனியா, சிறுநீரக குழாய் தொற்றுநோய், இரைப்பை அழற்சிநோய் மற்றும் நுரையீரல் இரைப்புநோய் போன்றவைகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களான எச்சரிஸ்சையா கோலை (Escherichia coli), பேசீலஸ் (Bacillus Sp.), கிளப்சிலா நிமோனியா (Klebsiella pneumoniae), ஸ்டைபலோகாக்கஸ் (Staphylococcus Sp.), சால்மோநெல்லா (Salmonella Sp.) மற்றும் சூடோமோனாஸ் (Pseudomonas Sp.) அதிக எண்ணிக்கையில் ரூபாய்நோட்டுகளில் படிந்துள்ளன. மேலும் இவைகளின் எண்ணிக்கை உடனடியாக நோய்களை ஏற்படுத்த போதுமானது என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விசயமாகும். இவைகள் ஆண்டிபயாட்டிக்ஸ் எனப்படும் நுண்ணுயிர்கொல்லி மருந்துகளுக்கு கட்டுபடாமல் பெருகும் தன்மையை கொண்டுள்ளன..

ஆகவே பணப்புழக்கம் அதிகமுள்ள இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களையறியாமலே அதிக தொற்று வியாதிகளின் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக வங்கியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் காசாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக பல்வேறு ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ரூபாய் நோட்டுகளை கையாளும் குழந்தைகளுக்கும் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. எனவே சுகாதார முறையில் ரூபாய் நோட்டுகளை கையாளுவது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது மிக அவசியமாகும். மேலும் ரூபாய்நோட்டுகள் தயாரித்தலின்போது அவற்றின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்புகளுக்காக கொடுக்கப்படும் முக்கியத்துவம், நோய்க்கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் காக்கும் அம்சங்களுக்கும் கொடுப்பது அவசியம். ஆஸ்திரேலியா, நியுசிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் பல்வேறு சுகாதார பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது தற்போது மிக இன்றியமையாததாகும்.

மேலும் பணமில்லாத பரிவர்த்தனைகள் தான் ஒரு முழுத் தீர்வாக இருக்க முடியும். அதன்படி தேவையான பொருள்களை கொள்முதல் செய்பவர்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஏ.டி.எம் கார்டு போன்ற வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுதல் மூலம் பல பாதிப்புகளை தவிர்க்கலாம்.

 


2018 ஏப்ரல் அமுதம் இதழில் வெளியானது…



Error
Whoops, looks like something went wrong.