நலம்பேணும் நிலவேம்பு

Dr.R. ரிச்சர்ட் கென்னடி

20th Aug 2018

A   A   A

தற்பொழுது நிலவிவரும் மாறுபட்ட தட்பவெட்ப நிலையில் பல்வேறு நோய்கள் திடீர் திடீரென பரவி மக்களை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. அத்தகைய நோய்களுள் முதன்மையான இடத்தை பிடிப்பது வைரஸ் காய்ச்சல்கள் என்றால் அது மிகையல்ல. அதிலும் டெங்கு, சிக்கன்குனியா, பன்றிக்காய்ச்சல் என பல ரகங்கள் மக்களை பாடாய்படுத்துகின்றன. சரி காய்ச்சல் வந்தது குணமானது என்று இருக்க முடியாமல், அவற்றை தொடர்ந்து பல்வேறு பக்கவிளைவுகளும் மக்களின் துன்பத்திற்கு காரணமாய் அமைகின்றன.

இந்த சூழ்நிலையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள பல்வேறு மருந்துகள் அலோபதி மருத்துவத்தில் கொடுக்கப்பட்டாலும், தற்போது மக்களின் நம்பிக்கையை பெற்று வருபவை நாட்டு மருத்துவ முறைகள் ஆகும். அதிலும் குறிப்பாக நிலவேம்பு கசாயம் காய்ச்சலுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. அதிலும் காய்ச்சல் வராமல் வரும்முன் தடுப்பதிலும் இந்த நிலவேம்பு பெரும் பங்காற்றுகிறது. இக்கசாயம் நாட்டு மருத்துவ முறையாக இருந்தாலும் தற்போது அலோபதி மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்படுகிறது.

நிலவேம்பு கசாயம் என்று பொதுவாக கூறினாலும் இதில் 9 வகையான மூலிகைகள் சம அளவில் சேர்க்கப்படுகின்றன. அவை நிலவேம்பு (சமூலம்), சந்தனம் (கட்டை), இஞ்சி, மிளகு, கோரைக்கிழங்கு, பற்படாகம் (சமூலம்), வெட்டிவேர், பேய்புடல் (சமூலம்), விளாமிச்சை வேர் என்பனவாகும். இந்த 9 கூட்டுகளில் ஏதோ ஒன்று குறைந்தாலோ, அவற்றின் எடையில் வேறுபட்டாலோ எதிர்பார்க்கும் பலன் கிடைப்பதில்லை. தற்சமயம் இந்த நிலவேம்பு கூட்டுப்பொடியினை தயாரித்து விற்பனை செய்வது ஒரு சிறந்த சிறுதொழிலாகவும் திகழ்கிறது.

இத்தனை பயனை தன்னகத்தே கொண்டுள்ள நிலவேம்பு கூட்டுக்கலவையின் முக்கிய பொருளாக திகழும் நிலவேம்பினைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

நிலவேம்பு நம் நாட்டில் தோன்றிய முக்கிய தாவர மூலிகையாகும். இதன் கசப்புத் தன்மையால் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகள் தயாரிக்க பண்டைகாலம் தொட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கு ‘கசப்பின் அரசன்’ என்ற பெயரும் உண்டு. நிலவேம்பு அதிக தட்ப வெட்ப நிலை நிலவும் பகுதிகளில் இந்தியா, தாய்லாந்து, சீனா, வங்கதேசம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.

டைடெர்பினாய்டுகள் என்ற முக்கிய கசப்புத் தன்மை கொண்ட வேதிப்பொருள் இதிலிருந்து எடுக்கப்படுகிறது. இலைகளில் மட்டும் 2.5 சதம் ஆன்ரோகிராப்போலைடு என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது. மேற்கு வங்கத்தில் அலுயி என்ற மருந்தின் முக்கிய வேதிப்பொருளாக நிலவேம்பு உள்ளது. இது ஜீரணக் கோளாறுகளுக்காக குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. சிக்குன்குனியா, பாம்புக்கடி மற்றும் தீவிர மஞ்சள்காமாலையை குணப்படுத்தவும் பயன்படுகிறது.

இது குத்துச்செடியாக 45 முதல் 90 செ.மீட்டர் உயரம் வளரக்கூடியதாகவும், நீண்ட இலைகள் கொண்டதாகவும் இருக்கும். பூக்களில் மகரந்தச் சேர்க்கையினால் சிறிய காய்கள் தோன்றும். விதைகள் நுண்ணிய பழுப்பு மஞ்சள் நிறம் கொண்டதாக இருக்கும். இது எல்லாவகை மண்ணிலும் நன்கு வளரக்கூடியதாக இருந்தாலும் மணல் கலந்த வண்டல்மண் மிகவும் ஏற்றது. நீர்தேங்கும் நிலங்கள் ஏற்றதல்ல. வெப்பம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பிரதேசங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது.

இந்த நிலவேம்பு கசாயக் கலவை தரும் பலனைப் போன்றே பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு போன்ற மூலிகைகளும் வைரஸ் நோய்களை மட்டுப்படுத்துகின்றன. இவற்றில் பப்பாளி இலைச்சாறு இரத்த தட்டையணுக்கள் (Platelets) வைரஸால் பாதிக்கப்பட்டு குறையும்போது அதனை நிவர்த்தி செய்வதில் பெருமளவில் பயன்படுகின்றன. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இக்குறைபாடு ஏற்படுவது இயல்பு.

தொடர்ந்து பரவிவரும் வைரஸ் காய்ச்சல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு அல்லது மலைவேம்பு இலைச்சாறு இவற்றில் ஒன்றையாவது உண்டு நம்மையும் நம் குடும்பத்தையும் காத்துக்கொள்வோம்.

 


செப்டம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது...



Error
Whoops, looks like something went wrong.