தொடர்புடைய கட்டுரை


கண் காணாத உலகில்

F.A.M. சேவியர்

26th Jul 2018

A   A   A

நாம் வாழும் உலகம் மிகவும் அழகானது. ஆனால் நம் கண்களுக்கு மறைவாக இருக்கும் உலகம் அதைவிடவும் அழகானது. மறைவாக இருக்கும் உலகமா! அது எங்கே இருக்கிறது? என்கிறீர்களா. கடலுக்கடியில், நம் அருகாமையில் இருக்கும் நீர் நிலைகளுக்கு அடியில் அந்த அழகிய காட்சிகள் பரந்து விரிந்திருக்கின்றன. அழகானது என்னும் அதே நேரம், பல்வேறு மர்மங்களையும், உலகின் வரலாற்றையும் தனக்குள் மறைத்து வைத்துள்ள இடங்கள் அவை.

விஞ்ஞானிகளால் இன்னும் கண்டறியப்படாத இன்னும் எத்தனையோ உயிரினங்களும், தாவரங்களும், கனிமங்களும் கடல்களுக்கடியில் உள்ளன. அதனால்தான் தற்போது பெரும்பாலானோரின் கவனம் நீருக்கு அடியில் பயணிக்கிறது. பல்வேறு ஆய்வுகள் கடலுக்கடியில் நடந்தவண்ணம் உள்ளன.

இது தவிர பல்வேறு பணிகளும் நீருக்கடியில் அமிழ்ந்து சென்று செய்யக் கூடியதாக உள்ளது. உதாரணமாக துறைமுகங்களில், பாலங்களில் அவ்வப்போது செய்யப்படும் பராமரிப்பு பணிகளில், புதிதாக கட்டப்படும் கட்டுமானங்களின்போது, கப்பல்களின் அடிப்பகுதிகளை சோதனையிடுதல் என நீருக்கடியில் மூழ்கி செய்யக் கூடிய பணிகள் பல உள்ளன.

நீருக்கடியில் செய்யப்பட வேண்டிய ஆராய்ச்சிகளுக்கு பல்வேறு கருவிகள் இருந்தாலும் நேரடியாக சென்று ஆராய்ச்சி செய்வது பல இடங்களில் தேவையாகவே உள்ளது. அப்படி செல்வதையே ஸ்கூபா டைவிங் என்கின்றனர். இந்த ஸ்கூபா டைவிங் செல்வதற்கு என்று தனியாக பயிற்சிகள் நடைபெறுகின்றன. இதற்கு எதற்கு பயிற்சி என்கிறீர்களா?

நம் ஊர்களில் சிறுவர்கள் முதல் அனைவரும் ஆறு குளங்களில் குதித்து அதன் அடிவரை சென்று திரும்புவதை பார்த்திருப்போம். கடலில் முத்து குளிப்பவர்கள் கடலுக்கடியில் சென்று சில நிமிடங்கள் இருந்து முத்துசிப்பிகள் எடுத்துவருவர். ஆனால், ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து அதிக நேரத்தை நீருக்கடியில் செலவிட வேண்டியிருப்பதால் கருவிகளின் துணை இன்றி செல்லமுடியாது.

ஸ்கூபா டைவிங் செல்பவர்கள் தகுந்த உடை அணிந்து ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்களை எடுத்துச் செல்வர். இந்த சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் அதிக அழுத்தத்தில் நீர்ம வடிவில் அடைக்கப்பட்டிருக்கும். அந்த வாயு ரெகுலேட்டர் எனப்படும் கருவி மூலம் சீராக கிடைக்கும்படி செய்யப்படுகிறது.

முதலில் ஸ்கூபா டைவிங் பழகுபவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை எப்படி அணிந்து கொள்ளவேண்டும். அவற்றை எப்படி உபயோகிக்க வேண்டும் என பயிற்சி அளிக்கின்றனர். பின்னர் ஆழமான நீச்சல் குளத்தில் அந்த உடை மற்றும் உபகரணங்களை அணிவித்து பயிற்சியாளரின் உதவியுடன் குளத்தின் ஆழத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அத்துடன் பயிற்சி முடிந்துவிடுவதில்லை. நீருக்கடியில் நடப்பது, தரையில் கால் படாமல் நீந்திச் செல்வது, நீரில் அந்தரத்தில் அமர்வது, நீந்தியவாரே முன்னோக்கிச் செல்வது என சர்வ சுதந்திரமாக நீருக்கடியில் இயங்க பயிற்சி அளிக்கின்றனர்.

முக்கியமாக நீருக்கடியில் ஒருவரோடு ஒருவர் சைகையில் பேசிக்கொள்ள பயிற்சி அளிக்கின்றனர். இந்த தகவல் பரிமாற்றத்தில் சிறு தவறுகள் நடந்தாலும் அது உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

ஸ்கூபா டைவிங்கில் திறந்தவெளி நீர்நிலைகளில் செல்லுதல், ஆபத்தான இடங்களில் செல்லுதல், நீர்நிலைகளில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கச் செல்லுதல் என பல்வேறு தேவைகளுக்கு என தனித்தனியாக பயிற்சிகளை வழங்குகின்றனர். ஸ்கூபா டைவிங் செய்பவர்கள் பெரும்பாலும் குழுவாகவே செல்கின்றனர்.

படித்தவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும் இக்காலக்கட்டத்தில் ஸ்கூபா டைவிங் துறையில் பெருகிவரும் வேலை வாய்ப்புகளை கொஞ்சம் கவனத்தில் கொள்ளலாமே?

 


மார்ச் 2018 அமுதம் இதழில் வெளியானது.

தொடர்புடைய கட்டுரை