உடலை காக்க எளிய வழிமுறைகள்

Dr.V. செல்வராஜ்

23rd Oct 2018

A   A   A

நாகரீகம் வளர வளர நகரமயமாக்கல் அதிகரித்து வருகிறது. கிராமங்கள் கூட இன்று மிகவும் சுறுசுறுப்பாகி விட்டன. காலை முதல் மாலை வரை அனைவருமே ஒரு வகையில் மிகவும் பிசியாக இருக்கிறோம். அவரவர் நிலையில் அவரவருக்கு வேலைப்பழு. வேலைப்பழுவினால் ஏற்படுகின்ற பிரச்சனைகள், அதன் மூலம் மன அழுத்தம் என சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மன உழைச்சலுக்கு உள்ளாகியிருப்பதை பார்க்க முடிகிறது.

மன உழைச்சல் அதிகமாகி தூக்கம் தொலைந்து போகிறது. தூக்கமில்லாமல் உடல் நலனும் கெடும் சூழ்நிலையும் உருவாகிறது. தூங்குவதற்கு மாத்திரைகளை விழுங்கும் நிலைக்கு பலர் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நம் முன்னோர்கள் எளிமையாக இருந்தார்கள், பதட்டப்படவில்லை, நிதானமாக யோசித்தார்கள், பணி செய்தார்கள், பணி செய்ய வழிமுறைகளும் இருந்தன. ஆனால், இன்று நிலை தலைகீழாக இருக்கிறது.

ஞாபக மறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைகளுக்கும் ஆளாகிப் போகிறார்கள். மன அழுத்தத்திலிருந்து, மன உழைச்சலிலிருந்து விடுபடவும், அறுபது வினாடிகளில் எளிதாக தூங்கும் முறையை அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்கூறியல் நிபுணரான டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் கண்டறிந்துள்ளார்.

எளிதில் உறங்கும் இந்த கலைக்கு 4-7-8 டெக்னிக் என அவர் பெயரிட்டுள்ளார். இந்த கலையை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்வுடன் துயிலெழும்ப முடியும் எனவும் கூறியுள்ளார். இம்முயற்சியின் முதல் படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக்காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்தி வைத்து அமைதியாக இருக்க வேண்டும்.

பின்னர் எட்டு வினாடிகளுக்கு மூச்சுக்காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும். இப்படி தொடர்ந்து மூன்றுமுறை செய்ய வேண்டும். இதனை செய்து முடிப்பதற்கு 57 வினாடிகள் ஆகும். அடுத்த மூன்று நிமிடங்களில் உங்களுக்கு நிச்சயமாக நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என இவர் கூறுகிறார்.

இந்த முறையில் என்ன நடைபெறுகிறது என்றால் ஏழு வினாடி நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்கும் பொழுது முக்கியமான வேலையாக நுரையீரல் முழுவதும் காற்றிலுள்ள ஆக்ஸிஜன் பரவுகிறது. இது உடலை தளர்வடையச் செய்து ஆசுவாசப்படுத்துகிறது. அதே நேரம் இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என மனதையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால் நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும் எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறி விடுகின்றன.

இந்த முறைகளின் மூலம் மனதைவிட்டு விலகாமல் ஒட்டிக்கொண்டிருக்கின்ற பிரச்சனைகள், எரிச்சல், படபடப்பு, தேவையற்ற மனக்கவலைகள் எல்லாம் வெளியேறிவிடுகின்றன. மனம் அமைதி நிலைக்கு வருகிறது. எனவே அடுத்த வினாடியே நிம்மதியான தூக்கம் உங்களை தழுவிக் கொள்ளும் என டாக்டர் ஆண்ட்ரூ வெய்ஸ் உறுதியோடு கூறுகிறார்.

இம்முறையை நாம் நமக்கு எப்போதெல்லாம் சிறு டென்சனான, படபடப்பான, எரிச்சலான சூழ்நிலைகள் ஏற்படுகிறதோ அப்போது பயன்படுத்தலாம். திடீரென ஏற்படுகின்ற அதிர்ச்சி வேளைகளில் கூட இதனை பயன்படுத்தலாம்.

மூச்சை சீராக உள்ளிழுத்து சில வினாடிகள் உள்நிறுத்தி ஒரேயடியாக வாய்வழியாக வேகமாக வெளியேற்றுவது இம்முறையாகும்.

மன உழைச்சல், மன அழுத்தத்தின் காரணமாகவும் அல்சர் பாதிப்புக்கு மனிதர்கள் உள்ளாகிறார்கள். உணவு பழக்கங்களும், மசாலா நிறைந்த உணவுகளும், மதுபானம் அருந்துதலும், கணையத்தில் ஏற்படும் கட்டிகளும், மருத்துவ கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதும், மனக்கவலை மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையும் வயிற்றுப்புண் ஏற்பட காரணமாகின்றன.

குமட்டல், வயிற்றின் மேல்பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணிநேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும் போது இரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சுவலி, இரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் இவைகளெல்லாம் வயிற்றுப்புண்ணின் அறிகுறியாகும்.

வயிற்றுப்புண்ணிலிருந்து விடுபட ஏராளமான வழிமுறைகள் உள்ளன. அரை ஸ்பூன் சுக்குத்தூளை கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தி வரலாம்.

ஏலம், அதிமதுரம், நெல்லிவற்றல், சந்தனம், வால்மிளகு இவற்றை சம அளவு எடுத்து பொடித்து, அதைப்போல் இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து 2 கிராம் வீதம் மூன்று வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம்பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்து பால்விட்டு அரைத்து சிறு எலுமிச்சை அளவு எடுத்து பாலில் பருகிவர நலம் பெறலாம்.

வால்மிளகை பொடித்து அரை ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து உண்ணலாம். பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்தி பொடித்து சம அளவு சுக்குத்தூள், மிளகுத்தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

மணத்தக்காளிக் கீரையை பாசிப்பயிறு, நெய் சேர்த்து சமைத்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு எடுத்து பொரித்து 2 கிராம் எடுத்து உணவிற்குப்பின் உண்ணலாம்.

சிப்பிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்து கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப்பாலில் கலந்து உண்ணலாம்.

வயிற்றுப்புண் உள்ளவர்கள் உணவில் கோஸ், கேரட், வெண்பூசனி, தர்பூசனி, பப்பாளி, ஆப்பிள், நாவல்பழம், மாதுளம்பழம், வாழைப்பழம், தயிர் மோர், இளநுங்கு இவற்றை உண்ணலாம்.

அதிகக்காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி இவைகள் உணவில் தவிர்க்கப்பட வேண்டும். தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

இரவில் கண்விழிப்பது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். சரியான நேரத்திற்கு தூக்கம் அவசியமானதாகும்.

தெரிந்தோ தெரியாமலோ பலருக்கு வயிற்றுப்புண் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்த எளிய வழிமுறைகளை பயன்படுத்தி வயிற்றுப்புண்ணிலிருந்து விடுபட வழி தேடலாம். மேலும் மனக்கவலைகள் படபடப்பு, மன உளைச்சலிலிருந்து விடுபடுவதற்கான வழிகளையும் நாம் பின்பற்ற வேண்டும்.

சிறு பிரச்சனைகள் ஏற்பட்டால் கூட அவை மன அழுத்தமாய் மாறி கஷ்டப்படுத்தாதபடி பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

நம் உடல்நிலையைப் பேணி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எளிமையான உணவு உண்பதும், சத்தான உணவாக உண்பதும் மிகவும் தேவை அதிலும் மன அழுத்தம் ஏற்படாதபடி நம்மை காத்துக்கொள்வோம்

மருந்தில்லா மருத்துவத்திலுள்ள பல எளிய வழியை அறிந்து நம்மையும் பாதுகாத்துக் கொள்வோம்.. பிறரையும் பாதுகாக்க வழி சொல்வோம்.

 


பெப்ரவரி 2017 அமுதம் இதழில் வெளியானது…