தூக்கம் என்பது…

Dr.V. செல்வராஜ்

12th Aug 2018

A   A   A

நவீன யுகத்தில் இயந்திரமயமான வாழ்க்கையால் மனிதன் தன்னை மாற்றிக் கொண்டே வருகிறான். ஒவ்வொரு நாளும் விதவிதமான பிரச்சனைகளில் சிக்கும்போது தன்னை மறந்த நிலையில் ஆறுதலுக்காக பல வழிகளை நாடுகிறான். அதனால் தூக்கம் கெடுகிறது.

தொலைந்த தூக்கத்தை சமாளிப்பதற்கு கையாளும் முறைகளால் மேலும் சிக்கல் ஏற்படுகிறது என்பதை மறந்து விடுகிறான். விளைவு பல நோய்களுக்கு அடிமையாகிப் போகிறான்.

நாம் தூங்கும்போதுதான் நமது உடலின் தினசரி பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. அத்தகைய தூக்கம் தரமானதாக அமையாதபோது தான் நம் உடலில் கழிவுகள் தேங்கி உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூக்கத்தின் தரமும் அவசியமானதாகும். பெரும்பாலும் மக்கள் இதை உணராமல் இருக்கிறார்கள்.

முன்பெல்லாம் சாப்பிட்டுவிட்டு சீக்கிரமாகவே தூங்கும் பழக்கம் இருந்தது. ஆனால் இன்று எல்லாம் மாறிப்போய் விட்டது. நாம் இரவு ஒன்பது மணி அல்லது பத்து மணிக்கு படுத்து தூங்குவதாக சொல்ல முடியுமா?

கடந்த இருபது ஆண்டுகளில் நாம் தூங்கச் செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்கொண்டே இருக்கிறது. எட்டு மணிக்குள் இரவு உணவு உண்டுவிட்டு எட்டரைக்குள் வெளிச்சம் அணைத்து பேசிக் கொண்டே படுக்கையில் விழுந்தால், ஒன்பது மணிக்குள் தூங்கியது ஒரு காலம்.

ஆனால் இன்று ஒன்பது மணியென்பது மாறி பத்து மணி, நள்ளிரவாகி, இப்போது அதிகாலையாகி விட்டது. இரவு வேலையின் காரணமாக கண்விழித்திருப்பது என்பது என்றோ ஒருநாள் தூக்கம் வராமல் இருப்பது என்பது மாறிப் போய்விட்டது.

எக்காரணமுமில்லாமல் தொடர்ந்து இரவுகளில் கண்விழிப்போர் பெருகிக் கொண்டேயிருக்கிறார்கள். இதன் விளைவு அண்மையில் புதிது புதிதாக பெருகிவருகின்ற உடல் உபாதைகள், உடல் நலக்கேடுகள். இரவு தூக்கம் தள்ளிப் போவதற்கும் உடலில் ஏற்படும் தொந்தரவுகளுக்கும் நேரடித் தொடர்பு உண்டு.

இரவு தூக்கம் ஏன் தள்ளிப்போகிறது நமக்கு ஏன் தூக்கம் வருவதில்லை. இதற்கு நமது உடல் பிரச்சனைகள், மனக்கவலைகள் தான் காரணம் என்று நாம் எண்ணலாம். அது உண்மையில்லை.

நாம் உற்சாகத்தை தள்ளிப்போடும் ஒவ்வொரு நிமிடமும் பல நிறுவனங்கள் பல கோடிகளுக்கு வருமானம் பார்க்க ஆரம்பித்துள்ளன. இரவு சந்தையில் தான் இப்போது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கோடிகள் புரழ்கின்றது. இரவு முழுவதும் முழுக்க முழுக்க டிஜிட்டல் சந்தை டிஜிட்டல் பொருட்களை நாம் சரியாக அணுகத் தெரியாமல் தடுமாறுவதையே வியாபாரம் ஆக்கி வருகிறார்கள்.

எளிமையான வாழ்க்கை வாழாததால் தான் நாம் இத்தகைய இன்னல்களை சந்தித்து வருகிறோம் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

அதிகரித்து வரும் அன்றாட செலவினங்கள் மற்றும் குடும்ப கடமைகளை சமாளிக்க நமக்கு பிடிக்காத வேலைகளையும் செய்கிறோம். அதுவும் தொழிலாளர் சட்டத்தை மதித்து எட்டு மணிநேரம் என்பதெல்லாம் இப்போது இல்லாமல் மாறிவருகிறது.

பத்து மணி நேரம் உழைக்க வேண்டும். அதிலும் டார்கெட் முடிக்க வேண்டும். மன உழைச்சல் தரும் இந்த வேலையை செய்துவிட்டு வெளியே வந்தால் இன்னும் பிரச்சனைகள். எனவே சோர்வுடன் வீட்டுக்கு வந்ததும் டிவி யை ஆன் செய்துவிட்டு விடுகிறார்கள். டிவி யில் வரும் மாய வண்ணக் காட்சிகளில் மனம் பரந்து விரிகிறது. கவலையை மறைக்க சில நேரங்கள் செல்கிறது.

இதில் இளம்வயதினர் முதல் பலரும் ஆட்படுகின்றனர். ஆனால் இன்று அதையும் விட்டு ஸ்மார்ட் போனில் மூழ்கி பேஸ்புக், வாட்சப் பார்ப்பது அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் மூழ்கி அதிலே உலா சென்றுவிட்டால் நேரம் போவதே தெரிவதில்லை. ரொம்ப பிசியாகிப் போகிறார்கள்.

முன்பெல்லாம் இரவு உணவு முடிந்த பின்பு திண்ணையில் நண்பர்களோடு, குடும்பத்தோடு பேசிவிட்டு உறங்கச் செல்லும் காலம்போய், வீட்டுத் திண்ணை வாட்சப் ஆகிறது. அந்த உரையாடலில் நேரம் போவதே தெரிவதில்லை.

சொந்த வீட்டிற்குள் இருந்துகொண்டே சமூக வலைதளங்களில் தொடர்பு கொள்ளும் நிலையும் இருக்கிறது. தினமும் நள்ளிரவு தாண்டிய பின்பு குட்மார்னிங் சொல்லிவிட்டுத்தான் படுக்கைக்கு செல்கிறார்கள்.

இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது எழுந்து பேஸ்புக்கில் போட்ட போட்டோவுக்கு எத்தனை லைக் விழுந்துள்ளது என்று பார்ப்பவர்களும் உண்டு.

வாட்சப்பில் மெசேஜ் வந்துள்ளதா என அடிக்கடி பார்த்துக்கொண்டிருப்பதை கம்பல்சிவ் பிகேவியர் (compulsive behavior) என்று சொல்லப்படும் ஒருவகையான மனநலப்பிரச்சனை என்றும் கண்டிஷனல் இன்சோம்னியா (Conditional Insomnia) எனும் தூக்கமின்மை நோய் என்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

பலர் தினமும் காலையில் விழித்ததும் செய்யும் முதல் வேலை மொபைலை எடுத்து இடர்நெட்டை ஆன் செய்து வாட்சப்பில் ஏதாவது மெசேஜ் வந்துள்ளதா என பார்க்கும் நிலை அதிகரித்து வருகிறது.

இரவு தூக்கம் தடைபடுவதால் ஏராளமான உடல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நமது உடலுக்குள் சுழற்சிக் கடிகாரம் இருக்கிறது. உடலில் உள்ள ஒவ்வொரு மெரிடியன்களும் இரண்டு மணிநேரம் அதிகமாக வேலை செய்யும் நேரம் இரவு. அப்போது நாம் விழித்திருக்கும் போது அந்த மெரிடியன்கள் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படுகிறது.

இரவில் நாம் தூங்கும் போது, அதுவும் இருட்டில் தான் மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றம் உடலில் சீராக நடைபெறுகிறது.

நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் சமசீராக சுரக்கும் நேரம் இரவு தூங்கும் நேரம். ஹார்மோன்கள் சீராக உற்பத்தியாகாமல் போகும்பட்சத்தில் பல நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாகும்.

இதனால் குழந்தைபேறின்மை, பலம், சோர்வு, பதற்றம் ஆகியனவும் மனநலம் சார்ந்த பல பிரச்சன்னைகளுக்கும் காரணமாகிறது. இரவு நெடுநேரம் கழித்து தூங்குவதாலும், ஆழ்நிலை தூக்கம் இல்லாமல் மேலோட்டமாய் தூங்கினால் உடலில் கழிவுகள் தேக்கமடைந்து உடலில் அந்த இடங்களில் வலிகளும் ஏற்படுகிறது.

தரமான தூக்கத்திற்கு இயற்கை காற்றோட்டம் அவசியம். எனவே இரவில் ஜன்னலை திறந்து வைத்து தூங்குவது நல்லது. கொசுவத்தி சுருள், கொசுவிரட்டுவதற்கு பயன்படுத்தும் இரசாயனங்களை தவிர்க்க வேண்டும்.

தூங்கும்முன் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். இரவு பல் துலக்குவது மிகவும் நல்லது. பற்களில் ஏதேனும் உணவுப் பொருட்கள் சிக்கிக்கொண்டால் நம் உறக்கம் பாதிக்கப்படும்.

எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். உணவு சரியாக செரிமானம் ஆகவில்லை என்றாலும் தூக்கம் பாதிக்கப் படும்.

நண்பர்களுக்கு, மொபைலுக்கு, டிவிக்கு என நேரம் ஒதுக்குவதில் தவறு இல்லை. உடலுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். தூக்கத்தை பாதிக்கும் காரணிகள், வெளிச்சம், புகைப்பழக்கம், டீ, காபி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவை.

எனவே தேவையற்றவற்றை தவிர்ப்போம். நல்ல தூக்கமே உடல் நலத்தை காக்கும் என்பதனை உணர்வோம். மன அழுத்தம், உடல்பருமனாவது, இதய நோய்கள், நரம்பு சம்பந்தமான நோய்கள் இவற்றிலிருந்தும் விடுதலை அடைவோம். நம்மோடு வாழ நாம் நம்மை தயாரிப்போம். நம்மை காத்துக் கொள்வோம்.

 


நவம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது…