பல்வலி தீர

Dr.V. செல்வராஜ்

13th Oct 2018

A   A   A

மனிதர்களுக்கு உடல் நலமில்லாமல் வருவது அன்றாட நிகழ்வு ஆகிவிட்டது. உடல்வலி, மூட்டுவலி, தலைவலி, பல்வலி என்று பலவிதமான வலிகளும் ஏற்படுகிறது. உடம்புவலி என்று வருகிறபோது களைப்பு, சோர்வினால் ஏற்படுகிறது என்று எளிய, நம் முன்னோர்கள் பயன்படுத்திய மருந்தில்லாத சில முறைகளை உணவிலே சேர்த்து பலன்பெற்று வருகிறோம்.

ஆனால் மனிதர்கள் எல்லோரும் அந்த பாரம்பரிய வழிமுறைகளை பயன்படுத்துகிறார்களா என்றால் அது இல்லை. உடனே மருத்துவரை போய் பார்ப்பதும், அதற்குரிய அலோபதி மருந்துகளை எடுத்துக் கொள்வதுமாக இருக்கிறார்கள்.

சிலர் மருந்துகடைகளில் சொல்லி வலிநிவாரணிகளை வாங்கி உண்டு பக்கவிளைவுகளையும் சந்தித்து வருகிறார்கள். சில வலிகள் மருத்துவரைப் பார்த்து ஆலோசனைகள் பெற்று மருந்துண்டால் மட்டுமே சரியாகும்.

ஆனால் அன்றாடம் ஏற்படுகிற பல்வலி ஏற்பட்டது எனில் சமாளிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். பல்வலி பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் அதிகரித்து மிகுந்த துன்பத்தை தரும்.

அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் இயற்கையான நிவாரணிகளைக் கொண்டு பல்வலியை போக்க முயற்சி செய்யலாம். இந்த இயற்கை முறைகள் பற்களுக்கு பாதுகாப்பு தருகின்றது.

பொதுவாக பல்வலி வருவதற்கு பல் சொத்தை விழுவது ஒரு காரணமாக இருக்கிறது. 90% த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பல் சொத்தை இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பல் பராமரிப்பு என்பது இன்று மிகவும் முக்கியமாக மக்களிடம் பரவி வருகிறது. உணவு உண்ட பின்பு வாய் கொப்பளிப்பது, காலையிலும் மாலையிலும் பல் தேய்ப்பது என்பது மிகவும் தேவையாக இருக்கிறது.

குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை இரவு நேரங்களில் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பல்லுக்கு தேவையான ஃபுளூரின் நீரிலிருந்து கிடைக்கிறது. ஃபுளூரின் ஒரு மனிதனுக்கு 1.5 மி.கிராம் தேவை அதனைவிட குறையும்போது பல் சொத்தை விழுவதும் அதற்குமேல் கூடுகின்ற போது பல்லில் களிம்பு போன்ற நிலை ஏற்பட்டு பல் கேடுறுவதும் நிகழ்ந்து வருகிறது.

நாம் பயன்படுத்தும் பற்பசைகள் 500 ppm என்ற அளவில் இருந்து வருகிறது. அதனை தான் நாம் பயன்படுத்துகிறோம். மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும்போது தினமும் காலையும் மாலையும் இருவேளை பல்தேய்ப்பதற்கு அறிவுறுத்துகிறார்கள்.

ஆனால் எளிய முறைகளை பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம். பல்வலியை போக்குவதில் சிறந்து விளங்குவதில் கிராம்பும் ஒன்றாகும். கிராம்பு பல்வலியை போக்கக்கூடிய எதிர்ப்பு அழற்சி, எதிர்ப்பு பாக்டீரியா, ஆக்ஸிஜனேற்ற மற்றும் உணர்ச்சி நீக்கும் பொருட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. கிராம்பு தைலத்தை ஒரு காட்டன் துணியில் நனைத்து பல்வலி ஏற்படும் இடத்தில் சிறிது நேரத்திற்கு வைக்க வேண்டும். இப்படி செய்தால் பல்வலி குணம்பெறும். பல்வலியால் அவதிபடுபவர்கள் அரை டம்ளர் நீரில் சிறிதளவு கிராம்பு எண்ணெயை ஒருசில துளிகள் கலந்து வாயில் ஊற்றி கொப்பளிக்கலாம். மேலும் சில கிராம்பை அரைத்து சிறிது கிராம்பு எண்ணெய் சேர்த்து பாதிக்கப்பட்ட பல்லின் மேல் தடவி வைத்தால் பல்வலி தீரும்.

பூண்டை பயன்படுத்தினாலும் பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும். பூண்டு ஆன்டிபயாடிக் பண்புகள் மற்றும் பிற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது பாக்டீரியா பாதிப்பு உள்ள பகுதிகளை பாதிப்பிலிருந்து குறைக்கும் ஆற்றல் கொண்டது.

பூண்டையும் கிராம்பையும் சேர்த்து சில துளிகள் உப்புடன் சேர்த்து பல்வலி உள்ள இடத்தில் தடவினால் பல்வலி குணம்பெறும். பூண்டையும் கிராம்பையும் வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இப்படி செய்வது பற்களுக்கு தரும் இயற்கை சிகிட்சை முறையாகும்.

மேலும் கோதுமைப் புல்லும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டு செயல்படும் ஒன்றாகும். இது பல்வலிக்கு தேவையான பாக்டீரியா எதிர்ப்பு சக்திகளை கொண்டு செயல்படுகிறது. கோதுமைப்புல் பல்வலியை சரிபடுத்தி பற்களில் சிதைவு ஏற்படுவதை தடுக்கிறது.

கோதுமைப்புல்லில் இருந்து சாறு எடுத்து அதை வாய் கழுவ பயன்படுத்தலாம். இது ஈறுகளில் உள்ள நச்சுகளை பிரித்தெடுத்து பாக்டீரியா வளர்ச்சியை குறைத்து நோய்தொற்றை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது மேலும் கோதுமைபுல் செடியை வாயிலிட்டு மென்று பல்வலியைப் போக்கலாம்.

சின்ன வெங்காயம் பல்வலியை குணப்படுத்தக் கூடிய கிருமி நாசினி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது. பல்வலி வருகிறது என்று அறிந்ததும் ஒரு முழு வெங்காயத்தை எடுத்து வாயிலிட்டு சுவைக்க தொடங்குங்கள். மெல்லமுடியவில்லை என்றால் வெங்காயத்தை பசைபோல் அரைத்து பற்களின் மேல் தடவி வைக்க வேண்டும். இப்படி செய்தால் பற்களில் உள்ள கிருமிகளை கொன்று சில நிமிடங்களில் பற்களுக்கு நிவாரணம் தருகிறது.

கொய்யா இலைகளுக்கு பல்வலியை தீர்க்கும் தன்மை உள்ளது. பல்வலி வரப்போகிறது என அறிந்ததும் கொய்யா இலைகள் ஒன்று இரண்டை வாயில் போட்டு மென்றுவிடலாம். மேலும், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொய்யா இலைகளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நிலையில் சிலதுளி உப்பு சேர்த்து வாயை சுத்தம் செய்யலாம். நன்கு கொப்பளித்து நலம் பெறலாம்.

மிளகு கலந்த உப்பு பல்வலிக்கு சிறந்த மருந்தாகும். சம அளவு உப்பு, மிளகு எடுத்து சிறிது தண்ணீர் கலந்து பசைபோல் அரைத்து பாதிக்கப்பட்ட பற்களின் மேல் சில நிமிடங்கள் வைக்கலாம். இந்த முறையை தினமும் தொடர்ந்து சில நாட்கள் செய்துவந்தால் பல்வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

தொடர்ந்து இந்த எளிய சிகிட்சை முறைகளை செய்து பலன் பெற முடியும்.

மருந்து இல்லாமல் எளிய முறைகள் எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. இந்த முறைகள் நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழிமுறைகளாகும். அவற்றை நாமும் கடைபிடித்துப் பார்ப்போம். நலமோடு வாழ முயல்வோம்.

 


மார்ச் 2017 அமுதம் இதழில் வெளியானது..



Error
Whoops, looks like something went wrong.