தொடர்புடைய கட்டுரை


நாட்டியமாடும் இந்தியத் தவளை

சிதம்பரம் ரவிச்சந்திரன்

25th Jan 2019

A   A   A

இயற்கை படைத்த இந்த அற்புதமான பூமியில் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் எத்தனையோ உயிரினங்களைப் பற்றி அறிந்துகொள்வதில் நாம் அக்கறை காட்டுவது இல்லை.  சாதாரணமாக நாம் காண்கின்ற உயிரினங்களாக இருந்தாலும் அவற்றைப் பற்றி அதிகமாக அலட்டிக்கொள்வது இல்லை. ஆனால் இத்தகைய உயிரினங்கள் ஒவ்வொன்றும் நாம் உருவாவதற்கு நேர்முகமகாவோ மறைமுகமாகவோ பேருதவியாக இருந்துவருபவை ஆகும்.  இவை இருந்ததால்தான் நாம் இன்று பரிணாம மாற்றங்களுக்கு ஆளாகி இன்றையநிலையை அடைந்துள்ளோம் என்பதை மறந்துவிடக்கூடாது.  அப்படிப்பட்ட உயிரினங்களில் ஒன்றுதான் தவளை (frogs).  மழைகாலங்களில் அந்தகாலத்தில் பள்ளிக்கு கால்நடையாக செல்லும்போது குளக்கரைகளிலும், ஏரிகளிலும், மழை பெய்து தேங்கியிருக்கும் குட்டைகளிலும் தவளைகள் துள்ளிக்குதித்து விளையாடுவதை ரசித்தபடியே நம்மில் எத்தனையோ பேர் பள்ளிக்குச் சென்றிருக்கலாம்.  ஆனால் ஒருகாலத்தில் சர்வ சாதாரணமாக நாம் பார்த்துவந்த இந்த உயிரினங்கள்கூட இன்று அழியும் அபாயத்திலும், இன்னும் சில அரிதானதாகவும் மாறிவருகின்றன. 

முதலில் கடலில் தோன்றிய உயிரினங்கள் பின் பரிணாம வளர்ச்சி பெற்று தரைக்கு வருவதற்கேற்றவாறு தகவமைப்பைப் பெறத்தொடங்கின.  இவ்வாறு நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் பரிணாம மாற்றங்களைப் பெறும் காலத்தில் இரண்டுக்கும் இடையே ஒரு பாலமாகத் திகழ்ந்த உயிரினங்கள்தான் இந்தத் தவளைகள்.  ஆதியில் கடலில் தோன்றிய உயிர்களை பின்னர் தரையில் பெரிய அளவுக்கு வளரச் செய்ய உதவியாக இருந்தன என்றாலும் இந்த தவளைகள் பற்றிய ஆராய்ச்சி அதிக அளவில் உலக அளவிலும், இந்தியாவிலும் இன்னும் நடைபெறவில்லை. இந்த நிலையில் இப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தவளை இனத்தின் ஒரு அரியவகை தான் இந்த இந்திய நாட்டியமாடும் தவளை இனம். இவை 2015ம் ஆண்டில் கண்டறியப்பட்டன.  இவற்றை கண்டறிந்த அறிவியல் அறிஞர்களில் டெல்லி பல்கலைகழகத்தைச் சேர்ந்த டாக்டர் S.D.பிஜு என்பவரும் உள்ளார். 

அபூர்வ இனமாகக் கருதப்படும் இந்த நாட்டியமாடும் தவளைகளுள் ஒன்று மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் கண்டறியப்பட்டுள்ளது. தவளைகளின் வாழ்க்கைச் சுழற்சியில் ஒரு பகுதியில் இவை அங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உயிர்கள் பற்றிய ஆய்வுகளில் ஒரு புதிய மகிழ்ச்சி தரும் திருப்பமாக உயிரியல் வல்லுனர்களாலும் இயற்கை ஆர்வலர்களாலும் இது கருதப்படுகிறது. 

டெல்லி பல்கலைகழகம், கொழும்புவில் உள்ள பரதேனியா பல்கலைக்கழகம், அமெரிக்காவில் இருக்கும் கெட்டிஸ்பெர்க் கல்லூரி ஆகிய இடங்களிலிருந்து வந்த ஆராய்ச்சியாளர்கள்தான் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் இருந்து இந்த அபூர்வ இனத் தவளையின் குஞ்சுகளைக் கண்டுபிடித்துள்ளார்கள்.  இந்திய நாட்டியமாடும் தவளைகள் (Indian Dancing Frogs) பிரிவைச் சேர்ந்த மிக்ரசாலிடே (micrizallidae ) குடும்பத்தில் மிக்ரசாலிடே ஹைரே (micrixalus Herrei) இனத்தைச் சேர்ந்த தவளைகளுடைய குஞ்சுகளைத்தான் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.. 

இதுவே உலகில் முதல்முதலாகக் கண்டறியப்பட்ட இத்தகைய நாட்டியமாடும் தவளை இனத்தைச் சேர்ந்த குஞ்சுகளை கண்டுபிடித்திருப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பொதுவாக இந்தவகைத் தவளைகள் நாட்டியாமடும் தவளைகள் என்று அழைக்கப்படுவதற்கு ஒரு சுவாரசியமான காரணமும் உள்ளது.  பொதுவாக இதுபோன்ற நாட்டியமாடும் வகை தவளைகள் உலகில் பல பகுதிகளிலும் காணப்பட்டாலும் இந்தியாவில் அறியப்பட்டுள்ள புதியவகை இனம் ஆகும் இது நாட்டியமாடும் தவளை என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் இவை மழைகாலத்தில் நாட்டையமாடுவதுதான்..  மழைகாலங்களில் பொதுவாக ஆண் தவளை தன் பெணிணையை இனச்சேர்க்கைக்காக கத்தி கத்தி தன் குரல்வளையில் இருந்து சத்தத்தை எழுப்பி கூப்பிடுவதுததான் வழக்கம்.  ஆனால், இந்த வகை தவளைகள் மலைபகுதியில் வாழ்வதால் அங்கு இவற்றின் குரல் பெண் தவளைகளுக்கு சரியாகக் கேட்காமல் போய்விடும்.  அதனால் இவை தன் பெண் இணையை நாட்டியமாடி அழைக்கின்றன. தங்கள் முன்னங்கல்கால்களைத் தூக்கி பின்னங்கால்களால் நின்றுகொண்டு ஆடிக்காட்டி தகவல் பரிமாற்றம் செய்துகொள்கின்றன.  இதைப் பார்ப்பதற்கு மனிதர்கள் நாட்டியாமாடுவதைப் போல இருப்பதால் இந்த வகை தவளைகளுக்கு ‘’நாட்டியமாடும் தவளைகள்’ என்று பெயர் வந்தது.  சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின்படி (International Union for Conservation of Nature_ IUCN) இந்த உயிரினம் அழிந்துவரும் உயிரினங்களின் சிவப்புப் பட்டியிலில் இடம்பெற்றுள்ள ஒரு உயிரினம் ஆகும்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், காட்டருவிகளில் உள்ள மணற்திட்டுகளின் அடியில் இருந்துதான் இவை கண்டறியப்பட்டிருக்கின்றன.  மணற்திட்டுக்களின் அடியிலேயே வாழ்நாள் முழுவதையும் செலவிடும் இந்தக் குஞ்சுகள் முழுமையான வளர்ச்சியை அடைந்தபிறகுதான் வெளியில் வருகின்றன.  உலகத்தில் இதுவரை ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ள ஐந்து இத்தகைய தவளை குடும்பங்களில் ஒன்றுதான் இவை என்பதும் சிறப்பான செய்தியாகக் கருதப்படுகிறது.

ஒருகாலத்தில் கொசுக்களையும், அவற்றின் முட்டைகளையும் உணவாக உண்டு நமக்கு நோய்நொடிகள் பரவாமல் தடுத்துவந்த இந்த அற்புதமான உயிரினங்களுள் பெரும்பாலானவை இன்று அழிந்துபோனதால்தான் ஒருபக்கம் கொசுக்கள் பெருகி நோய்கள் அதிகரித்துள்ளதும், இன்னொருபக்கம் பாம்புகளுக்கு இயற்கையாக உணவுச்சங்கிலியில் இரையாக வேண்டிய இவைகள் இல்லாமல் போனதால் பாம்புகள் இனம் அழிந்துவருவதும் நிகழ்ந்துவருகிறது  மழைக்காலத்தில் இந்தத் தவளைகள் மழை வருவதை முன்கூட்டியே அறிந்து குரல் கொடுத்து தன் இணையை அழைக்கும் காலம் என்பது எல்லாம் இன்று பழங்கதையாகப் போய்விட்டது.  இயற்கை நமக்கு அளித்திருக்கும் எத்தனையோ வரப்பிரசாதமான விஷயங்களில் நம்மோடு வாழ்ந்து நமக்காகப் பல நன்மைகளை செய்துவரும் இதுபோன்ற உயிரினங்களும் முக்கியமானவை ஆகும்.  இனியாவது இருக்கின்ற தவளை இனங்களை அழியாமல் காப்பாற்றுவோம்.  அதற்காக நாம் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்..  இயற்கையை மாசுபடுத்தாமல் இயற்கையோடு இணைந்து வாழ்வது என்பதுதான் அது.. 

தவளைகள் நம் வாழ்வோடு அந்த காலத்தில் நெருக்கமாக தொடர்புகொண்டிருந்தன.  அதனால்தான் தவளைகளின் பெயரில் சொல்வழக்குகளும், பழமொழியும் இருந்தன.  ‘தவளையும் தன் வாயால் கெடும்’, ‘கிணற்றுத்தவளையைப் போல..’ போன்றவற்றை உதாரணமாக கூறலாம்.

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.