தொடர்புடைய கட்டுரை


கை கழுவி விட்டு சாப்பிடும் விலங்கு

சிதம்பரம் ரவிச்சந்திரன்

24th Jun 2019

A   A   A

இயற்கையின் படைப்பில் எத்தனையோ அதிசயமான படைப்புகள் நம்மைச் சுற்றிலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அவை பற்றிய எந்தவிதமான அறிவும், விழிப்புணர்வும் இல்லாமலேயே வாழ்ந்து விட்டுச் செல்கிறோம். நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டு சகலவிதமான வசதிகளையும் அந்த அறைக்குள்ளாகவே கிடைக்கும்படி செய்துகொண்டுவிட்டு அதோடு வாழ்க்கையே நிறைவடைந்துவிட்டதாக நம்மில் பலரும் கருதிக்கொண்டிருக்கிறோம். தகவல் தொழில்நுட்பம் நம் உலகத்தையும், தூரத்தையும் மட்டும் சுருக்கவில்லை. நம் வாழ்க்கையையும் சுருக்கிவிட்டது.  கை விரல் நுனியில் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்துகொண்டு விட்டதாக கருதும் நாம் மாத்திரைகள் வடிவத்தில் தினம் தினம் நம் ஆயுளையும் சுருக்கிக்கொண்டிருக்கிறோம். நீல வானத்தையும், பிரகாசிக்கும் சூரிய ஒளியையும், தென்னங்கீற்றுகளையும் கண்டு இரசிப்பதற்கு தெரியாமலேயே போய்விட்டது நமக்கு.. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் நம்மைச் சுற்றிலும் நம்மோடு நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் தாவரங்களையும், விலங்குகளையும் பற்றி அறிந்துகொள்வது நமக்கு இயற்கையைப் பற்றி ஒரு சிறிதாவது தெளிவான சிந்தனையையும், ஞானத்தையும் கொடுக்கும். 

இயற்கை படைத்த எத்தனையோ அருமையான உயிரினங்களில் இதுவும் ஒரு வினோதமான வகை விலங்கே ஆகும். ரக்கூன் என்ற விலங்குதான் அது. இதன் அறிவியல் பெயரும் Raccoon (ரக்கூன்) என்பது ஆகும். தமிழில் இது அணில் கரடி என்று அறியப்படுகிறது இப்படி ஒன்று விலங்குலகத்தில் இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாது. பார்வைக்கு வினோதமாக இருக்கும் இந்த விலங்கு வாழ்க்கை முறையிலும் வித்தியாசமானது.  ரக்கூன் இனத்தில் ஏழு பெரும் பிரிவுகளும், அதில் பல உட்பிரிவுகளும் அடங்கியுள்ளன. முதல் பிரிவு வட அமெரிக்காவில் உள்ளது.  இதன் அறிவியல் பெயர் லோட்டர் என்பதாகும். கேன்க்ரீவர்ஸ் எனப்படும் பிரிவு இரண்டாவது பிரிவு ஆகும். இதன் மற்றொரு பட்டப்பெயர் நண்டு தின்னும் ரக்கூன்.  இது தென் அமெரிக்காவில் வாழ்கிறது. மற்ற ஐந்து பெரும் பிரிவுகள் ப்லோரிடா தீவுகள், மெக்சிகோ நாடு, மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றன.  இவை வாழும் நிலப்பகுதியின் பெயரை ஒட்டி இவற்றின் சிறுபிரிவுகள் பெயரிடப்பட்டுள்ளன. இவைகள் அளவிலும், நிறத்திலும் வேறுபட்டு காணப்படுகின்றன.

அத்தகைய ரக்கூன் இனங்களில் ஒன்றுதான் வட அமெரிக்க ரக்கூன். இது ஏறக்குறைய 30 செ.மீ நீளம் இருக்கும். வேறு ஒருவகை ரக்கூன் 60 செ.மீ நீளம் இருக்கும்.  குள்ளநரியின் முகம் போன்ற சிறிய முகமும், லேசான வெண்மை நிறம் உடைய புருவம், கருத்த திட்டுக்களின் நடுவில் கண்கள், சிறிய காதுகள், குட்டையான முன்கால்கள், கால் முனையில் விரல்கள், சற்று தடிமனான பின்கால்கள், தடிமனான வால், இந்த சாம்பல் நிற வாலில் கறுப்பு பட்டைகள், முதுகில் முரட்டுத்தனமான உரோமங்கள் இத்தகைய அங்க அடையாளங்களுடன் திகழும் ஒரு அரியவகை விலங்குதான் இந்த ரக்கூன். 

இதன் கைகள் மரம் ஏற, உணவைப் பிடிக்க, பிடித்த உணவை வாயருகில் கொண்டு செல்ல மனிதனுடைய கைகளைப் போல ரக்கூனுக்கு பெரிதும் உதவுகிறது. சண்டையிலும் இதன் கைகள் பங்குகொள்கின்றன. அப்போது இதன் பின்கால்களும் இதற்கு உதவுகின்றன. இவற்றின் காலடிச்சுவடுகள் குள்ளமனிதன் ஒருவனின் பாதச்சுவடுகள் போல இருக்கும். தனக்குக் கிடைப்பதை எல்லாம் உண்ணும் பழக்கம் உடைய விலங்கு இது.  காட்டில் இருக்கும் பலாப்பழம் இதற்கு மிகவும் பிடித்தமான உணவு. தவளை, மீன், நண்டு, குட்டி ஆமை போன்றவற்றையும் இது தாராளமாக சாப்பிடுகிறது. குரங்கைப் போல மரத்தில் கடகடவென்று ரக்கூன் ஏறிவிடும்.  மரப்பொந்தில், பாறை சந்துபொந்துகளிலும் வாழும் இயல்புடையது இந்த அபூர்வமான விலங்கு. 

பெரும்பாலும் நீரோடும் பாதைகளில் அதாவது ஆற்றங்கரையோரங்களில் இது அதிகமாக வாழ்கிறது. இரவில் நடமாடும் தன்மை கொண்ட ஒரு வித்தியாசமான விலங்கு இது. தனிமையை மிகவும் விரும்பும் ரக்கூன் நீண்டநேரம் தூங்கும் இயல்பு கொன்டது. பொதுவாக ரக்கூன் 7 வருடங்கள் வாழும். பாதுகாக்கப்பட்ட உயிரியல் பூங்காக்களில் கூடுதலாக வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு பிரசவத்தில் 3 அல்லது 4 குட்டிகள் வரை ரக்கூன் போடுகிறது. பிறந்தவுடன் ரக்கூனுடைய குட்டி கண்களைத் திறக்காது. தாய் ரக்கூன் குட்டியை வெகுகவனமாக பராமரிக்கும். குட்டிகள் பசியால் அழும்போது குழந்தை அழுவதைப் போலவே இருக்கும். குட்டி 3 அல்லது 4 மாதங்களிலேயே முழுமையான வளர்ச்சியைப் பெற்றுவிடும். அந்த வயதிலேயே அது உணவைத் தேடி வேட்டைக்குக் கிளம்பிவிடும்.  என்றாலும், இந்த குட்டி ரக்கூன் ஒரு வருடம் ஆகும்வரை தாயை விட்டுப் பிரிந்துசெல்லாது.

வினோதமான உடலமைப்பைக் கொண்டிருந்தாலும் ரக்கூன் எப்போதும் துருதுருவென்று இருக்கும்.  எப்போதும் எதையாவது செய்துக்கொண்டே இருக்கும் ஒரு சுறுசுறுப்பான விலங்கு இது. எதையும் திட்டமிட்டு செயல்படும் திறமையும் இதற்கு உண்டு.  இரைக்காகவும், தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் சண்டை போடும்.  ரக்கூன் தண்ணீரில் பலசாலி விலங்கு. தண்ணீர்ப்பரப்பில் சண்டை நடந்தால் ரக்கூன் தன் எதிரியை தண்ணீருக்குள் மூழ்கடித்துவிடும் அளவுக்கு திறமைசாலியான விலங்கு. நன்றாக நீந்தத்தெரிந்த ஒரு அற்புதவிலங்கு இது. இதைப் பார்த்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் முக்கியமான ஒன்று உள்ளது. ஆறறிவு படைத்தவர் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நாம் சாப்பிடும்போதும்கூட கைகளைக் கழுவிவிட்டு சாப்பிடுவது கிடையாது. அந்த அளவுக்கு நமக்கெல்லாம் சோம்பேறித்தனம். ஆனால் இந்த விலங்கு தன் முன்கால்களையே கைகளாக பயன்படுத்துவதால் தான் பிடித்த உணவையும் கூட தண்னீரில் நன்றாகக் கழுவிவிட்டுத்தான் சாப்பிடும். அந்த அளவுக்கு சுத்தப்பேர்வழி விலங்கு இது. 

மனிதனிடம் நன்றாகப் பழகும் தன்மையும் இதற்கு உண்டு. குட்டியாக இருக்கும்போதே இதைப் பிடித்து வளர்த்தால் மற்ற செல்லப்பிராணிகளைப் போலவே இதையும் நாம் நம்மோடு வீடுகளில் வைத்துக்கொள்ளலாம். இப்படிதான் அமெரிக்காவில் பலரும் இந்த அதிசய விலங்கை தங்கள் செல்லப்பிராணியாக வளர்க்கிறார்கள். இதன் உடலில் காணப்படும் அழகான உரோமங்களுக்காக இந்த விலங்கு மனிதனால் அதிக அளவு வேட்டையாடப்பட்டது. இதன் தோலைப் பயன்படுத்தி தொப்பிகளும், பெண்களுக்கான அழகிய மேலங்கிகளும் செய்யப்பட்டன.  இதன் இறைச்சிக்காகவும் இந்த விலங்கு கொல்லப்பட்டது. முடி நீக்கப்பட்ட இதன் தோல் மங்கலான பழுப்புநிறத்தில் இருக்கும்.  இது பெண்களை வெகுவாகக் கவரும் தன்மையுடையதாக இருக்கும். இதுவே இதன் உயிருக்கும் உலை வைக்கும் விஷயமாக மாறிவிட்டது. அழகு என்றால் அது என்றும் ஆபத்துதானோ..!  மனிதர்களுக்கு மட்டும் இல்லை.. இது விலங்குகளுக்கும் பொருந்தும் போல இருக்கிறது..! 

 



நவம்பர் 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.