தொடர்புடைய கட்டுரை


நம்மைக் காக்கும் ’நுண்பாதுகாவலர்கள்’

Dr. S. பிரகாஷ்

07th Oct 2018

A   A   A

நாம் அறியாமலேயே நம்மை பாதுகாக்கும் பணியை செய்து கொண்டிருக்கும் கண்ணிற்கு புலப்படாத ‘நுண்பாதுகாவலர்கள்’ என்றழைக்கப்படும் நுண்கிருமிகளை (Microbiome) பற்றியது தான் இந்தக்கட்டுரை. சாதாரணமாக நாம் அறிந்த நுண்கிருமிகளான பாக்டீரியா, பூஞ்சை, மற்றும் வைரஸ் கிருமிகள் மனிதர்களுக்குப் நோய்களை மட்டும்தான் உருவாக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால், இந்நுண்கிருமிகளில் பல நம் உடலில் இருந்துகொண்டு இரவு பகல் பாராமல் விழித்திருந்து நமக்காக நோய்கள் வராமல் தடுக்க போராடிக் கொண்டிருக்கின்றன என்ற செய்தி மிகவும் ஆச்சர்யமானது தான். இத்தகைய நுண்கிருமிகள் ஒரு மனிதனின் உடலில் சராசரியாக 30 டிரில்லியன் அளவு வாழ்ந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டிருப்பது ஆச்சர்யமாக உள்ளது. மனித செல்களில் ஒன்றுக்கு ஒரு நுண்கிருமி வீதம் உடலில் வாழ்ந்து கொண்டிருக்கிறதாம். ஒரு கிலோவிற்கு அதிகமான இத்தகைய நன்மை செய்யும் ’பாதுகாவலர்கள்’ நம் உடலில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்ற செய்தி உண்மையில் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமானது.

இத்தகைய நுண்பாதுகாவலர்கள் நம் உடலின் ஒவ்வொரு பகுதிகளிலும் இருந்துகொண்டு நம் பிறப்பு முதல் இறப்புவரை நம்மை பல வழிகளில் பாதுகாத்து நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கின்றனவாம். இவற்றைப் பற்றிய தேடல்களில் பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் கிடைக்கின்றன. தாய் தன் குழந்தைக்கு ஊட்டும் அந்த முதல் பாலில் 700 க்கும் அதிகமான வகைகளைக் கொண்ட இந்த நுண்பாதுகாவலர்கள் குழந்தையின் உடலுக்குள் பாலின் வழியாக செல்கின்றனவாம். இவைகள் அந்த குழந்தையின் வாழ்நாள் முழுவதும் உடலில் இருந்துகொண்டு பல வழிகளில் அந்த உடலுக்கு அளப்பரிய நன்மைகளை செய்துக் கொண்டிருக்கின்றன. சாதாரண உணவு செரிமானத்திற்கு உதவுவது முதல் உலகின் கொடிய நோயான புற்றுநோய்கள் வரை நம்மை அறியாமலேயே தடுத்துக் கொண்டிருக்கின்றன.

தாய் குழந்தையை பெற்றெடுத்த பின் முதலில் வரும் சீமைப்பால் (Colostrum) மாதிரிகளை சோதனைச்செய்த போதுதான் இந்த ஆச்சர்யம் விஞ்ஞானிகளுக்கு காத்திருந்தது. 700 க்கும் மேற்பட்ட நுண்கிருமி வகைகள் அந்த பாலில் இருந்தது. வேசெல்லா (Weissella), லிகோனாஸ்டாக் (Leuconostoc), ஸ்டெபலோகாக்கஸ் (Staphylococcus), ஸ்ரெப்டோகாக்கஸ் (Streptocoocus) மற்றும் லேக்டோகாக்கஸ் (Lactococcus), வெலியோனெல்லா (Veillonella), லெப்டோடிரைசியா (Leptotridhia), பிரிவோடெல்லா (Prevotella) குடும்பத்தை சார்ந்த நுண்கிருமிகள் இப்பாலில் இருந்தது ஆச்சர்யமான விஷயம். இவை குழந்தைகளின் வாயிலும், உணவுக் குழாய்களிலும் முதலில் உறைந்து கொண்டு தன் பணியை தொடங்கும். பின் உடலின் எல்லா பகுதிகளிலும் சென்று உறைந்து பல பாதுகாப்பு பணிகளை செய்ய தொடங்குமாம். உணவு செரிமானத்தை ஊக்குவிக்கும் இந்த நுண்கிருமிகள், பல உடல் வேதிவினைகளுக்கும் (Metabolism), நோய் தடுப்பிற்கும் தேவையான ஊட்டச் சத்து பொருள்களை (Vitamins) உற்பத்தி செய்வது போன்ற பல அரிய பணிகளை செய்து கொண்டிருப்பது ஆச்சர்யம் தான்.

இதில் மேலும் ஆச்சர்யம் என்னவென்றால் சிசேரியன் செய்யப்படும் தாயின் பாலில் இத்தகைய நுண்கிருமி வகைகள் இருப்பதில்லை என்று இந்த ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இயற்கையாக பிறக்கும் குழந்தையின் தாயின் பாலில் இந்த 700 வகை நுண்கிருமிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த வித்தியாசம் ஹார்மோன்களின் விளைவால் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த குழந்தைகள் வளரும்போது பல இத்தகைய நுண்கிருமிகள் சுற்றுச்சூழலில் இருந்து பெறப்படுகின்றன. சாதாரணமாக நம் உடல் தோல்களில் உறைந்திருக்கும் இந்த நுண்கிருமிகள் தோல்பகுதிகளில் அமிலங்களை உற்பத்தி செய்து வைக்கும். இந்த பகுதிகளில் நோயை உருவாக்கும் நுண்கிருமிகள் ஏதாவது வந்து உட்கார்ந்தால் இந்த அமிலத்தால் அழிக்கப்பட்டு விடும். இதைப்போல் பல பணிகளை உடலின் வெளியிலும், உடலின் உள்ளிலும் இந்த நுண்பாதுகாவலர்கள் செய்து கொண்டிருக்கின்றன.

இந்த அதிசய நுண்பாதுகாவலர்களை நாம் அழிப்பதால்தான் நாம் பல நோய்களுக்கு ஆட்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தேவையற்ற ‘ஆண்டிபயாட்டிக்ஸ்’ களை நாம் உட்கொள்வதால் இந்த அதிசய உலகம் உடலில் அழிக்கப்படுகின்றன. இதனால் சர்க்கரை நோய் (வகை – 2), உடல்பருமன், புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் வேதியியல் வினைகளுக்கும், உடலில் வகிக்கும் இத்தகைய ‘நுண்பாதுகாவலர்களை’ பாதுகாத்தாலே நாம் பல நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளவியலும்.

நம் உடலில் உள்ள நோய் தடுப்பு உறுப்புகள் (Immune system) இத்தகைய நுண்கிருமிகள் நம் உடலில் வளர துணைபுரிகின்றன. ஆனால், நாம் இந்த நுண்கிருமிகள் மேல் அக்கரையில்லாமல் இருப்பதால் பல நோய்களுக்கு ஆட்படுகின்றோம். இந்த அதிசய உலகம் நம் உடலில் பாதுகாக்கப்படுமானால் நோயின்றி நெடுநாள் வாழ முடியும். இயற்கை முறையில் குழந்தையை பெற்றெடுப்போம் (Normal delivery). ஒரு வருடத்திற்கு தாய்பால் கொடுப்போம். தேவையற்ற ஆண்டிபயாடிக்குகளை தவிர்ப்போம். இயற்கையாக வாழுவோம். நோயற்ற சமூகம் படைப்போம்.

 


ஏப்ரல் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.