தொடர்புடைய கட்டுரை


சுண்ணாம்பு பாறை (Limestone)

பி.ரெ. ஜீவன்

20th Jun 2018

A   A   A

கடல்வாழ் உயிரினங்களில் பல அதன் உடம்பை சுற்றி கடினமான தோடுகளை உருவாக்கிக் கொள்கிறது. பிளங்டன் (Plankton), நத்தை, சிப்பி, நண்டு மற்றும் பவளப் பாறைகள் (Coral reef) போன்றவை அவற்றில் மிக பொதுவானவை. நாமும் உடம்பினுள் மிக கடின எலும்புகளை உருவாக்கியுள்ளோம். இந்த கடின உடல் பகுதிகள் கால்சியம் கார்பனேட் (CaCO3) என்ற தாதுவால் உருவானது. இப்படி கால்சியம் கார்பனேட் தாது, அதிக அளவில் ஒரே இடத்தில் படிமங்களாக பல்லாயிரம் வருடங்களாக சேர்ந்து சுண்ணாம்பு பாறையாக மாறுகிறது. சென்ற மாதம் சுண்ணாம்பை உருவாக்கும் பிளங்டன் பற்றி பார்த்தோம், இந்த மாதம் சுண்ணாம்பு பாறைகளை பற்றி பார்க்கலாம்.

உயிரினங்கள் மட்டுமல்ல, கால்சியம் கார்பனேட் உலகின் பல்வேறு இடங்களில் மிக சாதாரணமாக கிடைக்கிறது. உலகின் மிக அதிக அளவில் கிடைக்கும் தாதுக்களில் இது ஒன்று. எரிமலைகள் கூட இதை உற்பத்தி செய்வதால், இவை எரிமலை பாறையாகவும் காணப்படுகிறது. பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் காணப்படும் பாறைகள் அனைத்தின் உள் இருக்கும் தாது கால்சியம் கார்பனேட் தான். நமக்கு மிக சாதாரணமாக கிடைப்பதில் ஒன்று மார்பிள் (Marble). எரிமலை பாறைகள் மற்றும் படிம பாறைகள் இனத்தை சாராமல், மாற்றம் அடைந்த பாறை (Metamorphic Rock) இனத்தை சார்ந்தது மார்பிள். எரிமலை பாறைகள் மற்றும் படிம பாறைகள் பல லட்சம் வருடங்களாக நிலத்தடியில் உள்ள வெட்பம் மற்றும் அழுத்தத்தினால் உரு மாறுகிறது. இந்த உருமாற்றத்தினால் உருவானது மாற்றம் அடைந்த பாறைகள். அப்படி தான் சாதாரண கால்சியம் கார்பனேட் மார்பிளாக மாறுகிறது. இப்படி பூமியின் 3 வகையான பாறைகளிலும் கால்சியம் கார்பனேட் ஆனது சுண்ணாம்பு மற்றும் மார்பிளாக காணப்படுகிறது.

உலகின் சுமார் 10% நிலபரப்பு சுண்ணாம்பு பாறையால் ஆனது. பெரும்பாலும் இவை கடல்வாழ் பவள பாறைகளால் ஆனது. ஆனால் உலகின் பல இடங்களில் பெரிய மலைகளே சுண்ணாம்பு பாறையால் ஆனது. இந்த மலைகள் இன்று நிலத்தின் மேல் கம்பீரமாக பல்லாயிரம் அடி உயரமாக இருந்தாலும், ஒரு காலத்தில் அது கடலடியில் உருவானவை. கடல்வாழ் பவள பாறைகள் பல அடுக்கு அடுக்காக இந்த இடத்தில் ஒன்றின் மீது மற்றொன்று வளர்ந்து மலையாகவே மாறியுள்ளது.

கால்சியம் கார்பனேட் மிக எளிதில் அமிலங்களில் கரையும். குறிப்பாக கார்பானிக் அமிலம் இதை மிக எளிதில் கரைத்துவிடும். பூமியின் காற்று மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு மழை நீருடன் கலந்து கார்பானிக் அமிலம் உருவாகிறது. கார்பன் டை ஆக்சைடின் அளவு காற்று மண்டலத்தில் அதிகமாவதால், அதிக அளவில் அமில மழை உருவாகிறது. இன்று மனிதர்கள் காற்று மண்டலத்தில் அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், மனிதர்கள் பூமியில் தோன்றுவதற்கு முன்பாகவே எரிமலை வெடிப்பால் கார்பன் டை ஆக்சைட் காற்று மண்டலத்திற்கு வந்தது. கடந்த சில காலங்களில், இப்போதைவிட 5 மடங்கு அதிக கார்பன் டை ஆக்சைடு காற்று மண்டலத்தில் இருந்தது. அப்படி என்றால் அப்போது அதிக அமில மழை இருந்தது. அது உலகெங்கும் உள்ள நில அமைப்பை அமிலத்தால் கரைத்து, வடிவமைத்துள்ளது. இப்படி கரைப்பதால் ஏற்படும் விளைவுகளை பற்றி பார்க்கலாம்...

தாஜ் மஹால் 16 - ஆம் நூற்றாண்டில் மார்பிளால் கட்டப்பட்டது. அது அமில மழையால் கொஞ்சம் கொஞ்சமாக கரைகிறது. சில நூற்றாண்டில் அதன் விளைவு குறைவாக இருக்கலாம். ஆனால் பல லட்சம் ஆண்டுகளாக தொடர்ந்து பல பாறைகள் அமில மழையால் கரைந்து வருகிறது. அதில் சுண்ணாம்பு பாறை மிக அதிகமாக கரையும். பெரிய மலைகள் பல இடங்களில் சுண்ணாம்பு பாறைகளால் ஆனது. அவை கரைந்து மிக அதிசயமான நில அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.

மடகாஸ்கர் நாட்டில் உள்ள டிசிஞ்சி டி பெமாரஹ தேசிய பூங்கா (Tsingy de Bemaraha National Park) மற்றும் போர்னியோ நாட்டின் குனுங் முலு தேசிய பூங்காவிலும் (Gunung Mulu National Park) உள்ளது ஊசி போன்று கூர்மையாக மேல் நீண்டிருக்கும் பாறைகள். இவை பார்ப்பதற்கு ஒரு உலக அதிசயம் போன்று இருக்கும். எல்லா பாறைகளின் மேல் பகுதியும் மிக கூர்மையாக இருக்கும். அங்கு சில இடங்களில் ஒரு கூர்மையான பாறையின் மேல் வேறு ஒரு கூர்மையான பாறையை தூக்கி வைத்திருப்பது போல் இருக்கும். சில புகைப்படங்களில் அவை வானில் மிதக்கும் பாறைகள் போன்று இருக்கும். இந்த பாறைகள் அனைத்தும் எப்படி இந்த வடிவத்திற்கு வந்தது? இந்த நில அமைப்பு அனைத்தும் சுண்ணாம்பு பாறைகளால் ஆனது. பல லட்சம் ஆண்டுகளாக அமில மழை இந்த பாறைகளை கரைத்து கரைத்து இப்படிப்பட்ட அதிசய நில அமைப்புகளாக மாறியுள்ளது. இந்த நில அமைப்பு கண்டிப்பாக ஒரு அதிசயம்.

சில இடங்களில் பூமியின் பரப்பில் உள்ள பாறைகள் யாரோ செதுக்கிய பாதை அல்லது வடிவமாக தெரியும். அவற்றில் சுண்ணாம்பு பாறைகளால் ஏற்படும் அமைப்புகள் அனைத்தையும் வடிவமைத்தது அமில மழைதான். சில விலங்குகள் இந்த அபூர்வ வடிவங்களில் மட்டுமே வாழ்வதற்கு அவற்றை மாற்றிக்கொண்டுள்ளன. டிசிஞ்சி டி பெமாரஹ தேசிய பூங்காவில் வாழும் ஒரு வகை லெமூர் (Lemur) அங்கு இருக்கும் கூர்மையான பாறைகளின் இடையே தாவி தாவி செல்லும். அந்த கூர்மையான பாறைகளின் மேல் எளிதில் ஏறிவிடும். இதனால் மற்ற மாமிசம் உண்ணும் விலங்குகளிடம் இருந்து இவை தப்பித்துவிடுகிறது. அந்த நில அமைப்பு அவைகளுக்கு ஒரு அமைதியான வீட்டை கொடுக்கிறது.

சில இடங்களில் நிலத்தின் மேல் அல்லாமல் நிலத்தடியில் ஓடும் நீரோட்டங்கள் சுண்ணாம்பு பாறைகளை கரைத்துவிடுகின்றன. இதன் விளைவால் குகைகள் உருவாகின்றன. இப்படிப்பட்ட குகைகளில் தான் நம் முன்னோர் பனியுகத்தின்போது வாழ்ந்து வந்தனர். இவை மிகப் பெரியவை அவற்றுள் சிலவற்றில் ஒரு விமானத்தைக் கூட பறக்க விடலாம். அந்த குகைகள் பற்றி அடுத்த மாதம் பார்க்கலாம்.

நிலத்தடியில் உள்ள பாறைகள் கரைவதால் அதன் மேல் இருக்கும் நிலத்தின் பலம் குறைகிறது. இதனால் நிலத்தின் உள் ஒரு ஓட்டை விழுகிறது. இப்படி தான் ஒரு குகை முதலில் தோன்றும். ஆனால், சில இடங்களில் அதன் விளைவுகள் மிக அபாயகரமாக மாறியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் இத்தகைய அபாயம் அடிக்கடி நிகழும். ஏனென்றால் அதன் கீழ் இருக்கும் நிலம் சுண்ணாம்பு பாறைகளால் ஆனது. அதன் கீழிருக்கும் நிலம் மெதுவாக பல லட்சம் ஆண்டுகளாக கரைந்து வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்கள் பலர் திடீரென்று உயிரிழந்துள்ளனர்.

பிப்ரவரி 2013 இல் புளோரிடாவில் ஒரு இரவு ஒரு வீட்டிலிருந்து காவல்துறைக்கு தொலைபேசி தகவல் சென்றது. அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் ஒரு சாதாரண வீட்டை கண்டனர். உள் சென்றால் சாதாரணமாக தான் இருந்தது. ஆனால் அங்கு இருந்த படுக்கையறையில் தரையில் ஒரு பெரிய ஓட்டை. அங்கு உறங்கிக்கொண்டிருந்த இரு சகோதரர்கள் அப்படியே நிலத்தில் ஏற்பட்ட ஓட்டையில் விழுந்துவிட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். இது ஒரு சம்பவம்தான். ஆனால், உலகெங்கும் பல இடங்களில் திடீரென்று நிலம் ஓட்டை ஆவதால் பலர் உயிர் இழந்துள்ளனர். இதற்கு சிங்க்ஹோல் (Sinkhole) என்று பெயர்.

இப்படி சுண்ணாம்பு பாறைகளும் அமில மழையும் சேர்ந்து பல விளையாட்டுகளை பூமியில் நிகழ்த்துகின்றன. அடுத்த மாதம் இப்படி உருவான குகைகளை பற்றி பார்க்கலாம்.

 


மார்ச் 2016 அமுதம் இதழில் வெளியானது. . .

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.