தொடர்புடைய கட்டுரை


காலு நதியும், மினமாட்டா கடலும்…

சிதம்பரம் ரவிச்சந்திரன்

03rd Oct 2019

A   A   A

கடலும், நதியும் மனிதனுக்கும் அவன் வாழ்வுக்கும் என்றும் ஆதாரமாக இருந்ததோடு மட்டும் இல்லாமல் என்றும் வியப்புக்கு உரியதாகவும் இருந்துள்ளது. நீர் ஆதாரங்களின் வடிவமாக விளங்கும் நதிகளும், மனிதன் உட்பட பூமியில் நிலவாழ் உயிரினங்கள் தோன்றுவதற்கு தோற்றுவாயாக அமைய வழிவகுத்ததும் கடல்கள்தான். துள்ளி விளையாடும் மீன்கள் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்த நீர்நிலைகள்தான் இவைகள். அமைதியும், ஆனந்தமும் நிறைந்த வாழ்வை வாழ்ந்த இந்த உயிரினங்கள் இன்று ஆபத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றன. 

இந்தியாவின் மேற்கு பகுதியில் மும்பையின் புறநகர் வழியாக ஓடும் ஒரு சிறு நதிதான் காலு. இதுபோல அதிகம் ஊர்பேர் தெரியாத எத்தனையோ நதிகள் நம் நாட்டில் ஓடிக் கொண்டிருக்கின்றன. தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் ஓடும் இந்த நதி கடந்துசெல்வது 150க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் நிறைந்த சூழ்நிலையை. அதனால் சந்தேகமே இல்லாமல் அந்த தொழிற்சாலைகளின் கழிவுகள் எல்லாம் இந்த நதியில்தான் தஞ்சம் புகுந்து கொள்கின்றன. செயற்கைப்பட்டு, காகிதம், ரசாயனங்கள், சாயங்கள் போன்ற பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்தான் இங்கே இருக்கின்றன. அதனால் அந்த தண்ணீரில் பாதரசம், காட்மியம், காரீயம், தாமிரம், புளோரைடு, சாயங்கள், அமிலங்கள், உப்புகள் போன்ற விஷத்தன்மை அத்தனையும் அடங்கியுள்ளன. இதை மும்பை அறிவியல் கழகம் கண்டறிந்து வெளியிட்டுள்ளது. காலு நதியில் கலந்திருந்த பாதரசத்தின் அளவு ஜப்பானில் மினமாட்டா கடலில் கலந்திருந்த பாதரசத்தின் அளவுக்கு சமமாக இருந்ததாக இந்த ஆய்வு கூறுகின்றது. 

உலோகக்கழிவுகள் தண்ணீரில் மூழ்கி அப்படியே மிதந்து கொண்டிருக்காது. அவை நீரின் ஆழத்திற்கு சென்று அங்கே இருக்கும் சேற்றோடும், களிமண்ணோடும் கலந்துவிடுகின்றன. சேற்றில் இருக்கும் பாக்டீரியாக்கள் சேற்றில் கரைந்திருக்கும் பாதரசத்தை தண்ணீரில் கரையக்கூடிய மீதைல் மெர்க்குரியாக மாற்றிவிடுகின்றன. விஷத்தன்மை உடைய இந்த மீதைல் மெர்க்குரி உணவுச்சங்கிலியில் புகுந்துகொண்டுவிடுகிறது. 

பாதரச விஷம் உடலில் சேர்வதால் தசைநார் பிடிப்பு, வலிப்பு, மந்தத்தன்மை, கண்பார்வை இழப்பு, செவித்திறன் பாதிப்பு, உணர்ச்சிகளற்ற மரத்துபோன நிலை, பித்து பிடித்தது போன்ற நிலைமை போன்ற கொடும் மாறுதல்களை ஏற்படுத்திவிடுகிறது. காலு நதியில் இருக்கும் அம்பி வலி கிராமம் இந்த தண்ணீர் மாசு தந்த சோகங்களை சுமந்துகொண்டு இருக்கிறது. மனிதனின் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளும், அவன் சொகுசாக வாழ்வதற்காக பயன்படுத்தப்படும் எத்தனை எத்தனையோ விஷயங்களும் ஒரு பாவமும் செய்யாத ஏழைகளைத்தான் பாதிக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.. தொழிற்சாலைகளின் பெருக்கமும், நீரையும், காற்றையும், மண்ணையும் கொஞ்சமும் யோசிக்காமல் மனிதன் பாழ்படுத்துவதும்தான் இவற்றுக்கெல்லாம் காரணம். ஆனால், இவற்றை அனுபவிப்பது எல்லாம் யார் யாரோ..?

பூமியில் நமக்கு பார்க்க பார்க்க அலுப்புத்தட்டாத மூன்று பொருள்கள் இருக்கின்றன என்றால் அவைகள் 1. நிலா, 2. யானை, 3. கடல் என்று பொதுவாக சொல்வதுண்டு. கடல்தான் உயிர்களின் ஆரம்பகால இருப்பிடமாக இருந்துள்ளது என்பது தற்போது ஆய்வுகள் மூலம் தெரியவருகின்றது.  ஒருகாலத்தில் நிலப்பகுதி எவ்வாறு சூழல் சீர்கேடு அடையாமல் இருந்ததோ அதேபோல கடலும் தூய்மையாகத்தான் இருந்தது. அந்த சமயத்தில் கடல்வாழ் உயிரினங்கள் எல்லாம் தங்கள் வழியில் வாழ்க்கையை வாழ்ந்து வந்தன. ஆனால், பல நூற்றாண்டுகளாக நிலவிவந்த இந்த வாழ்க்கைமுறை எல்லாம் மனிதனுடைய 18, 19ம் நூற்றாண்டுகளின் தொழில்புரட்சிக்குப் பிறகும், பெட்ரோலும், நிலக்கரியும் எரிபொருளாக பயன்படுத்தலாம் என்று அவன் தெரிந்துகொள்வதற்கு முன்புவரையும் தான் நீடித்தது. அதன் பிறகு எல்லாம் தாறுமாறாக ஆகிவிட்டது. சூழல் சீர்கேடு கடலையும் வெகுகாலமாக பாதித்துக் கொண்டு வருகிறது. அதுவரை அமைதியாகவும், ஆனந்தமாகவும் துள்ளி விளையாடி துன்பம் இல்லாமல் வாழ்ந்த சிறியசிறிய மீனினங்கள் முதல் சுறாக்கள், டால்பின்கள், திமிங்கிலங்கள் வரை எல்லாவகையான உயிரினங்களுக்கும் மனிதனுடைய செயல்களால் வாழ்க்கை நரகமாக தொடங்கிவிட்டது. மாறிவிட்ட கடல்பகுதிகளில் ஒன்றுதான் ஜப்பானில் இருக்கும் மினமாட்டா. 

இங்கு வாழ்ந்த மீன்களின் எண்ணிக்கை வேகமாக குறையத் தொடங்கின. இவற்றை உணவாக உட்கொண்ட பூனைகள் தாறுமாறாக ஆட்டம் போட ஆரம்பித்தன. மீன்களை சாப்பிட்டு பறவைகள் உயிரை விட்டன. இந்த திடீர்மாற்றங்கள் சிறிதுகாலத்திற்கு பிறகு மனிதர்களிடமும் தென்பட தொடங்கின. மனிதர்களின் கை, கால்கள் உணர்ச்சியற்று மரத்துப்போகத் தொடங்கின. உடல் ஒரு நிலையில் நில்லாமல் நடுங்கியது.. இந்த நடுக்கம் நிற்கவில்லை. கண் பார்வை பறிபோனது.  திடீரென்று ஒரு அலறல் சத்தத்தை எழுப்பிவிட்டு மாண்டுபோனார்கள் மனிதர்கள்.. புதிதாக பிறந்த குழந்தைகள் உடல் ஊனங்களுடன் பிறந்தன. மினமாட்டா கடலோரப்பகுதியில் இத்தகைய மர்மமான, மனதை திடுக்கிடவைக்கும் காட்சிகள் தினம் தினம் அரங்கேற தொடங்கின. யாருக்கும் இதற்கெல்லாம் எது காரணம் என்று தெரியவில்லை. புதிது புதிதாக தோன்றும் எத்தனையோ நோய்களில் இதுவும் ஒரு வினோதமான நோய் என்று மருத்துவர்கள் கருதிக்கொண்டார்கள். 

இதைப்பற்றி ஆராய்ச்சிகள் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டன. இறந்துபோன மீன்கள், தாறுமாறாக ஆட்டம் போட்ட பூனைகள், பார்வையிழந்து, பரிதாபமாக அலறல் சத்தத்துடன் இறந்துபோன மனிதர்கள் இவர்கள் அனைவருமே ஒரு பொதுவான காரணத்தால் இத்தகைய அவலமான நிலைமைக்கு ஆளானார்கள் என்று தீவிர ஆய்வுகளின் முடிவில் தெரியவந்தது. மினமாட்டா பகுதியில் இயங்கிவந்த ஒரு தொழிற்சாலை கடலுக்குள் கொட்டிவந்த பாதரசக்கழிவுதான் இதற்கெல்லாம் காரணம். கடல்நீரில் கலந்திருந்த பாதரசத்தை மிதவை நுண்ணுயிர் தாவரங்கள் உறிஞ்சி இழுத்துக்கொண்டன. இவற்றை நுண்ணுயிர் விலங்குகள் உணவாக உண்டன.  நுண்ணுயிர்களை மீன்கள் சாப்பிட்டன. இந்த மீன்களை பூனைகளும், பறவைகளும், மனிதர்களும் சாப்பிட்டார்கள். உணவுச்சங்கிலியின் மூலம் பாதரசநஞ்சு வேகமாக உடலுக்குள் பரவியது. இந்த நோயில் இருந்து போராடி ஓரளவுக்கு மீண்டுவந்து 12 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த சோகங்களுக்கு எல்லாம் காரணம் பாதரசக்கழிவுகள்தான் என்பதை ஒப்புக்கொண்டார்கள். இதற்குள் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பலி கொடுக்கப்பட்டுவிட்டன. சொகுசான வாழ்க்கை முறைக்காகவும், சூழலை கெடுக்கிறோம் என்பதை உணராமலேயே மனிதன் செய்யும் விவேகமில்லாத செயல்களுக்கும் மீன்கள் முதல் மனிதர்கள் வரை பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலிகடா ஆனார்கள். 

மனித வரலாற்றில் சூழல் சீர்கேட்டால் விளைந்துவரும் எத்தனை எத்தனையோ விபரீதமான, மீளமுடியாத இழப்புகளுக்கு இந்த சம்பவங்கள் ஒன்றிரண்டு சிறிய உதாரணங்கள்தான். இன்னமும் ஆய்வுக்குட்படாத எத்தனையோ இதுபோன்ற நிகழ்ச்சிகள் இப்போதும் நாம் வாழும் இந்த பூமியில் நம்மைச் சுற்றிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஊர்பேர் தெரியாத இதுபோல நடக்கும் எத்தனையோ சீரழிவுகள் இன்னமும் உலக மக்களின் கவனத்துக்கு வராமலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு செர்னோபிலும், ஒரு போபாலும், ஒரு லவ் கேனாலும் ஏற்படுத்திய சோகத்தின் கறைகள் இன்னமும் அன்னை பூமியின் உடலில் வடுக்களாகவே இருக்கின்றன. சோகங்கள் மாறி சுகமான வாழ்வு நமக்கு மட்டும் இல்லை நம்மைச் சுற்றிலும் இருப்பவர்கள் எல்லோருக்கும் ஏற்பட வேண்டுமென்றால் நாம் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நம்மால் முடிந்தவரை முடிந்த விதங்களில் எல்லாம் இயற்கை வழியில் வாழ்க்கையை வாழ முயற்சிப்பதுதான். செய்வோமா..?

 


2016 டிசம்பர் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்
Error
Whoops, looks like something went wrong.