தொடர்புடைய கட்டுரை


வேகமான காற்றலை - 47

பி.ரெ. ஜீவன்

01st Nov 2019

A   A   A

பூமியை பற்றிய ஆராய்ச்சியில் புதிரான ஒன்று காற்று வீசும் விதம். காற்று எப்போது எந்த திசையில் வீசும்? அடுத்த வாரம் மழை வருமா வராதா? இந்த கேள்விகள் இன்றும் புதிராகவேதான் உள்ளது. ஆனால் நாம் காற்றைப் பற்றி கொஞ்சம் கூட தெரியாமல் இல்லை. கப்பல் ஓட்டிகள் காற்றை பற்றி அவர்களுக்கு தேவையான அளவு அறிந்து வைத்திருந்தனர்.

கிறிஸ்டோபர் கொலம்பஸ் வாணிப காற்றை கண்டுபிடித்துக் கொடுத்தார். பூமி 24 மணி நேரத்திற்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றுவது எப்படி வாணிப காற்றை உருவாக்குகிறது என்பதை சென்ற மாதம் பார்த்தோம். கொலம்பஸ் வாணிப காற்றை கண்டுபிடித்து 150 வருடத்தில் உலகெங்கும் புது கடல்வழி பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டது. உலகமயமாக்குதலுக்கு அது ஒரு அடித்தளமாக மாறியது.

வாணிப காற்றை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், மனித வரலாறே வேறுமாதிரி இருந்திருக்கும். ஐரோப்பா செழிப்படைந்தது, மாறாக ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற இடங்கள் அவர்களால் சுரண்டப்பட்டது. பல பழங்கால முக்கிய வர்த்தக மையங்கள் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டன. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற கண்டங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டன. வாணிப காற்றை உருவாக்கும் வளிமண்டல சுழற்சி அறைகளை (Atmospheric Circulation Cells) தவிர வேறு வகை காற்றும் உள்ளது.

உயர் வளிமண்டலத்தில், அதிவேக காற்று ஓடை உள்ளது. அதன் பெயர் வேகமான காற்றலை (Jet Streams). இந்த காற்று ஓடைகள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீளமானது. ஆனால் சில கிலோமீட்டர் மட்டுமே அகலமானது. இவை இரண்டும் வளிமண்டல சுழற்சி அறைகளின் இடையே ஒரு பெரிய பாம்பு போன்று செல்கிறது. இவை மிக வேகமாக பயணம் செய்யும் காற்று. மிக உயரமான இடத்தில் மட்டுமே இருந்தாலும், இவை உலகின் பெரும்பான்மையான வானிலையை முடிவு செய்கிறது.

பூமியின் ஒவ்வொரு துருவத்திலும், இரண்டு வேகமான காற்றலை உள்ளது. அப்படியாக மொத்த பூமியில் நான்கு வேகமான காற்றலை உள்ளது. பூமத்திய ரேகையின் (equator) மேலும் கீழும் 30o அட்சரேகையில் (30 degree latitude) இருக்கும் வேகமான காற்றலையின் பெயர், மிதவெப்ப மண்டல வேக காற்றலை (subtropical jet stream). அதை போன்று பூமியின் இரு துருவங்கள் பக்கமும் ஒன்று உள்ளது. பூமத்திய ரேகையின் மேலும் கீழும் 60 o அட்சரேகையில் இருக்கும் வேகமான காற்றலையின் பெயர் துருவ வேக காற்றலை (polar jet stream). இந்த நான்கு காற்று ஓடைகளும் பூமியின் வானிலையை பெரும்பாலும் முடிவு செய்கின்றன.

வேகமான காற்றலைப் பற்றி நமக்கு மிக குறைவாகத்தான் தெரியும். வேகமான காற்றலை எந்த அட்சரேகையில் உள்ளது என்பதை நாம் கண்காணித்து வருகிறோம். 30o அட்சரேகை மற்றும் 60o அட்சரேகையில் இருந்து அது மாறுபட்டால், அது மாறுபடும் இடத்தில் புயல் உருவாகிறது. பூமியில் எல்லா புயலுக்கும் வேகமான காற்றலை ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் உள்ள பல விவசாய நிலங்களில் 1930 - களில் ஒரு மிக பெரிய பேரழிவு ஏற்பட்டது. அந்த அழிவின் பெயர் தூசி உருண்டை (dust bowl). அதிவேக காற்று, எங்கு பார்த்தாலும் தூசி வந்துகொண்டே இருந்தது. பல விவசாயிகள் அங்குவரும் தூசியால் அந்த நிலங்களை கைவிட்டு சென்றனர். பல லட்சம் ஏக்கர் விவசாய நிலம், தரிசு நிலமானது. 5 லட்சம் விவசாயிகள் அவர்கள் வீட்டை அங்கே கைவிட்டுச் சென்றனர். அதில் பெரும்பான்மையானவர்கள் அவர்கள் நிலத்தை திரும்பி பார்க்க வரவே இல்லை. இன்று நமக்குத் தெரியும் இதற்கு காரணமும் வேகமான காற்றலைதான் என்று.

வேகமான காற்றலை அட்சரேகையில் இருந்து சிறிது மாறினாலும், அதனோடு மழையையும் சேர்த்து திசை மாற்றுகிறது. வேகமான காற்றலையின் பாதையை மிக துல்லியமாக கணிக்க முடியாததால், பூமியின் வானிலையையும் மிக துல்லியமாக கணிக்க முடியாது.

வேகமான காற்றலையின் ஒவ்வொரு சிறு மாற்றமும் பூமியின் அன்றாட தட்பவெட்ப நிலையை வேறுபடுத்துகிறது. அவற்றை தினமும் நாம் கண்காணித்து வருகிறோம். இது பூமியில் எப்போது எங்கு மழை பெய்யும் என்பதை நிர்ணயிப்பதில் அதிக பங்கு வகிக்கிறது.

பூமி வெப்பமடைவதால் முதலில் திசை திரும்புவது வேகமான காற்றலைதான். மனிதர்கள் பூமிக்கு ஏற்படுத்தும் பாதிப்பு முதலில் கண்கூடாக தெரியும் இடங்களில் ஒன்று வேகமான காற்றலை. இன்று வழக்கமாக இருக்கும் இடத்தைவிட துருவங்களை நோக்கி இவை சிறிது நகர்ந்து உள்ளது. இது பூமி வெப்பம் அடைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

பாலைவனங்கள் அருகில் இருந்த பல கலாச்சாரங்கள், அவர்கள் இருந்த இடம் இப்பொழுது முழுவதும் வாழ முடியாத பாலைவனமாக மாறியதால், அந்த இடத்தில் அழிந்துவிட்டன. இப்படி அழிந்த நகரங்களில் ஒன்று சின்குவட்டி (Chinguetti). 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டில் செழித்து விளங்கியது இந்த இஸ்லாமிய நகரம். அங்கு பல லட்சம் மக்கள் அப்போது வாழ்ந்தனர். அது அப்போது ஆப்பிரிக்காவின் ஒரு முக்கிய வாணிப மையம். ஆப்பிரிக்காவில் கிடைத்துள்ள மிக பழமையான இஸ்லாமிய புனித நூலான குரான், சின்குவட்டியில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார், 500 வருடங்களுக்கு முன் கூட சின்குவட்டி ஒரு பெரிய நகரமாக தான் இருந்துள்ளது. இன்று சுமார் 2000 மக்கள் தான் அந்த கடின பாலைவனத்தில் வாழ்கிறார்கள். இன்று இது ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் ஒரு பகுதி. இந்த இடம் பாலைவனமாக மாறியதற்கு ஒரு முக்கிய காரணம் வேகமான காற்றலை இடம் மாறியது தான்.

எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்டுள்ள இடங்கள் கூட, அவை கட்டப்பட்ட காலத்தில் மிக செழிப்பாக இருந்துள்ளது. சஹாரா பாலைவனத்தின் பல இடங்களில், சின்குவட்டியை விட மிக பழமையான கலாச்சாரங்கள் இருந்தது. அவை அனைத்தும் இன்று வாழ தகுதியற்ற இடங்களாக மாறியுள்ளது. சஹாரா பாலைவனத்தின் உள் காணப்படும் பல பாறைகளில், 6000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர். அங்கு வாழ்ந்த சிங்கம், மான் போன்றவைகள் அங்கு வரையப்பட்டுள்ளன. ஆனால் அவை வறண்ட பாலைவனமாக இன்று காணப்படுகிறது. இந்த பாலைவனம் விரிவடைந்ததற்கு காரணம் வேகமான காற்றலை இடம் மாறியதுதான். வேகமான காற்றலை இடம் மாறுவதற்கு காரணம் பூமி வெப்பம் அடைவது.

காற்று மக்களின் கலாச்சாரங்களையும், அவை இருக்கும் இடங்களையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாணிப காற்று, கொலம்பஸ், வாஸ்கோடகாமா, மெகலன், ஜேம்ஸ்குக் போன்றவர்கள் புதிய இடங்களை கண்டுபிடிக்க உதவியது. வேகமான காற்றலை எப்படி மனித கலாச்சாரங்களை நிர்ணயித்தது என்று பார்த்தோம். அடுத்த மாதம் எல் நினோ என்ற வகை காற்றைப் பார்ப்போம். வாணிப காற்று சில நேரம் வழக்கமாக அடிக்கும் இடத்தைவிட மறுபக்கம் மாறி அடிக்கும். அதுதான் எல் நினோ. அவையும் பல கலாச்சாரங்களை நிர்ணயித்துள்ளது.

 


நவம்பர் 2016 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை