தொடர்புடைய கட்டுரை


எல் நினோ

பி.ரெ. ஜீவன்

04th Oct 2019

A   A   A

பூமியின் காற்றை பற்றிய கதையை சொல்ல வேண்டும் என்றால், கண்டிப்பாக கிறிஸ்டோபர் கொலம்பஸ் (Christopher Columbus) வாணிப காற்றை (Trade Winds) நவீன அறிவியலுக்கு கண்டுபிடித்து கொடுத்ததில் இருந்து தான் ஆரம்பிக்க முடியும். ஆனால் வாணிப காற்றை பற்றிய அறிவு, பல காலகட்டங்களை சார்ந்த பல கலாச்சாரங்களுக்கு தெரியும். பல பழங்குடி மக்கள் இந்த காற்றை பயன்படுத்தி உலகின் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். ஆனால் கொலம்பஸ் தான் நவீன அறிவியலுக்கு அதை முதலில் நிரூபித்து காட்டியவர். இந்த மாத கட்டுரையும் வாணிப காற்றை பற்றியது தான். வாணிப காற்று சில நேரங்களில் திசை மாறி அடிக்கும், அதன் பெயர் தான் எல் நினோ. அதை பற்றி பார்க்கலாம்.

பசிபிக் பெருங்கடலில் பல தீவுகள் உள்ளன. இந்த தீவுகளில் பலவற்றில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் எங்கிருந்து அங்கு சென்றனர்? எப்படி அங்கு சென்றார்கள்? சுமார் 3000 வருடங்களுக்கு முன் இவர்கள் ஆசியாவில் இருந்து புறப்பட்டு, பசிபிக் பெரும்கடலில் உள்ள ஏறக்குறைய எல்லா தீவுகளுக்கும் சென்றுள்ளனர். நியூசிலாந்து போன்ற ஆசியாவின் அருகில் உள்ள தீவுகளில் துவங்கி அமெரிக்கா அருகில் உள்ள ஹவாய் மற்றும் ஈஸ்டர் தீவுகள் வரை மனிதர்கள் கப்பல் மூலமாக பயணம் செய்துள்ளனர். ஒவ்வொரு பயணமும் நூற்றுக்கணக்கன கிலோமீட்டர் தூரம் உடையது. இவர்கள் எப்படி அந்த தீவுகளுக்கு சென்றிருப்பார்கள் என்று யோசித்து பார்த்தால், இதில் ஒரு பெரிய புதிர் உள்ளது.

துடுப்புப்படகில் பயணம் செய்தால் சுலபமாக பசி எடுக்கும். அதிக உணவு சாப்பிட வேண்டும். கடலின் உள், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு தேவையான அளவு உணவு கொண்டு செல்வது மிக கடினம். எனவே அக்கால மாலுமிகள் பாய்மற கப்பலை தான் பயன் படுத்தினர். இந்த கப்பலில் காற்று செல்லும் திசையில் செல்வது சுலபம். காற்றிக்கு எதிரான திசையில் செல்வது மிகவும் கடினம். காற்றுக்கு எதிரான திசையில் பாய்மற கப்பல் மிக மெதுவாக தான் செல்லும். ஆசியாவில் இருந்து வாணிப காற்று எப்போதுமே அமெரிக்காவுக்கு அடிக்கும். எப்படி வாணிப காற்று ஒரே திசையில் அடிக்கும் என்பதை சென்ற இதழ்களில் பார்த்தோம். அப்படி என்றால் இந்த மனிதர்கள் காற்றிற்கு எதிரான திசையில் பயணம் செய்துள்ளனரா, இல்லை என்றால் காற்று எதிர் திசையில் அடித்ததா?

சுமார் 3 முதல் 7 வருடம்களுக்கு ஒருமுறை வாணிப காற்று வித்தியாசமாக செயல்படும். கடலில் உள்ள நீரோட்டங்கள் முதலில் மாறுபடும். இதனால் கடல் மட்டத்தில் உள்ள காற்றிற்கு, கடலில் உள்ள வெட்பம் பரிமாற்றம் ஆகிறது. இதனால் காற்றின் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாகிறது. இது வாணிப காற்றின் வலிமையை குறைத்து விடுகிறது. இப்படி வாணிப காற்றின் வலிமை குறைவதின் பெயர் எல் நினோ. சில ஆண்டுகளில் எல் நினோக்கள் மிக வலிமையாக இருக்கும், அப்போது வாணிப காற்று எதிர் திசையில் நிலையாக அடிக்கும். இது உலகின் எல்லா காற்றின் திசையையும் தலைகீழாக மாற்றிவிடும்.

எல் நினோ காற்று நிலையாக எதிர் திசையில் அடிப்பதை பயன்படுத்தி தான் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளை மனிதர்கள் ஆக்கிரமித்தார்கள். மனிதனின் வரலாற்றை பூமி பல விதங்களில் மாற்றி உள்ளது. பசிபிக் பெருங்கடலில் மனிதர்களின் பல கலாச்சாரங்களில் கூட வாணிப காற்று மாற்றி அடிப்பதை பதிவு செய்துள்ளனர். அவர்கள் வாழ்கையில் எல் நினோ ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளை ஆக்கிரமித்த மனிதர்களுக்கு எல் நினோ ஒரு வரபிரசாதமாக இருந்தாலும், உலகின் பல்வேறு இடங்களில் இது மிக பெரிய சேதாரங்களை விளைவிக்கும். செப்டம்பர் 2015 இல் துவங்கி, 2016 வரை ஒரு எல் நினோ அடித்தது. தென் அமெரிக்காவில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் 18 வருடமாக மழை பொழிவில்லாமல் இருந்தது, ஆனால் 2015 அக்டோபர் மாதத்தில் மழை பொழிந்தது. இதற்கு காரணம் அந்த வருடத்தில் இருந்த எல் நினோ தான். அட்டகாமா முழுவதும் இரண்டு வாரத்திற்கு ஊதா நிற அழகிய பூக்கள் பூத்தது. உலகின் மிக வறண்ட மற்றும் வினோதமான பாலைவனம் திடீர் என்று ஒரு அழகிய இயற்கை பூங்காவாக மாறியது. எந்த திசையில் பார்த்தாலும் கண்ணுக்கெட்டும் தூரம் வரை அழகிய ஊதா நிற பூக்களாக மாறியது. வழக்கமாக அடிக்கும் மழையை திசை மாற்றி எல் நினோ விட்டதால் ஏற்பட்ட விளைவில் இது ஓன்று.

வழக்கமாக எல் நினோ வருடங்கள் மற்ற வருடங்களைவிட சூடாக இருக்கும். இதுவரை மனிதன் பதிவு செய்ததிலேயே 2015-2016 எல் நினோ தான் மிக வலிமையானது. 2015 மற்றும் 2016 வருடங்கள் இதுவரை மனிதன் பதிவு செய்ததில்லையே மிக்க சூடான வருடம்களாக மாறியது. மனிதன் ஏற்படுத்திய பூமியின் வெட்பம், சாதாரண எல் நினோவுடன் சேர்ந்து மிக சக்தி வாய்ந்த எல் நினோவாக 2015-2016 இல் மாறியது. வெட்பம் அதிகரித்ததால் உலகின் எல்லா உயிரினமும் பாதிப்படைந்தது.

உலகின் மிக முக்கியமான காற்று வகையில் எல் நினோவும் ஓன்று. ஆனால் எல் நினோ பூமியின் மிக பெரிய அமைப்புகளில் ஓன்று. அதன் பெயர் தெற்கு அலைவு (southern oscillation). இதில் இரண்டு வகை உண்டு. ஓன்று எல் நினோ, மற்றொன்று லா நீனோ (La Nino). லா நீனோ என்பது எல் நினோவுக்கு எதிரான ஓன்று. லா நீனோ வருடங்களும் எல் நினோ வருடங்களும் 3 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி வரும். லா நீனோ வருடம் வழக்கமான வருடம்களை விட குளிராக இருக்கும். தெற்கு அலைவில் இவை இரண்டும் ஒரு பெரிய நிகழ்வு. தெற்கு அலைவானது காற்று மட்டும் அல்ல, கடலின் நீரோட்டத்தையும் சார்ந்து இருக்கிறது. கடல் நீரோட்டத்தை பற்றி நாம் இந்த தொடரில் பின்பு பார்க்கலாம். கடல் நீரோட்டத்தை பற்றி தெரிந்துகொண்ட பின்பு தெற்கு அலைவு பற்றி பார்க்கலாம்.

 


2016 டிசம்பர் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை