தொடர்புடைய கட்டுரை


வைரம்

பி.ரெ. ஜீவன்

19th Jun 2018

A   A   A

வைர விழா என்பது 60 ஆம் ஆண்டு விழாவை குறிக்கும். நம் தொடரில் உள்ள 60 ஆம் கட்டுரையாகிய இக்கட்டுரையில் வைர கற்களை பற்றி பார்க்கலாம்.

உலகின் எல்லா கலாச்சாரங்களிலும் வைரம் ஒரு உயர்தரமான கல். இந்த கல்லை அடைய சில போர்கள் கூட நடந்துள்ளது. பார்பதற்கே அதிர்ச்சியூட்டும் அளவுக்கு அழகான கல். இதன் சிறப்பம்சங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

வைரம் எப்படி உருவானது? எங்கிருந்து வந்தது? எப்படி பட்ட பொருளால் ஆனது? ஏன் இவ்வளவு அழகாக ஒளியை வெளியேற்றி காட்சியளிக்கிறது? அவைகள் விண்வெளியில், வெள்ளை குள்ளன் (White Dwarf) என்ற வகை நட்சத்திரங்களில் உருவானவை என்று பல விஞ்ஞானிகள் கருத்து கூறி வந்தனர். ஆனால் இன்று மண்ணியல் ஆராட்சியாளர்களிடம் இதன் பதில் உள்ளது. அது மட்டும் அல்ல, பூமியின் கடந்த காலத்தின் ஒரு முக்கியமான காலகட்டத்திற்கு வைரங்கள் நம்மை எடுத்து செல்கிறது.

எழுதுவதற்கு பயன்படும் பென்சில் (pencil) முனையும் வைரமும் முற்றிலுமாக கார்பன் என்ற தனிமத்தினால் உருவானது. எப்படி உலகின் மிக கடினமான ஒரு பொருளும், மிக மென்மையான ஒரு பொருளும், ஒரே தனிமத்தினால் மட்டுமே உருவானது? ஒவ்வொன்றின் உள் கார்பன் அணுக்கள் வெவ்வேறு மாதிரி அடுக்க பட்டுள்ளது. பென்சில் முனையில் சிறு தட்டுகளாக இடைவெளியிட்டு அடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வைரத்தில் எந்தவித இடைவெளி இல்லாமல் மிக அடர்த்தியாக கார்பன் அணுக்கள் அடுக்கப்பட்டுள்ளது. இந்த அடர்த்தி, வைரம் தவிர இயற்கையாக பூமியில் காணப்படும் எந்தவித பொருளிலும் இருக்காது. இதனால் உலகின் மிக கடினமான பொருளாக வைரம் கருதப்படுகிறது.

வைரத்தின் அடர்த்திக்கு காரணம் அது உருவான சூழ்நிலை. பூமியின் ஆழத்தில் அதிக அழுத்தம் மற்றும் வெப்பம் உள்ளது. இந்த ஆழ்ந்த அழுத்தம் மற்றும் வெப்பம் இருக்கும் இடத்தில் தான் வைரம் போன்ற அடர்த்தியான பொருட்கள் உருவாகும்.

வைரம் உருவாக பூமியின் பரப்பைவிட 15,000 மடங்கு அதிக அழுத்தம் தேவை. இப்படி பட்ட இடங்கள் பூமியின் பரப்பில் இருந்து சுமார் 150 கிலோமீட்டரின் கீழ் உள்ளது. இந்த இடத்தில் திரவ நிலையில் உள்ள பாறைகள் தான் உள்ளது. இவ்விடங்களில் வெப்பம் ஏறக்குறைய 16,000 டிகிரி செல்சியஸ் இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட வெப்பத்தில் வைரம் உருகிவிடும். வைரம் உருவாக மிக குறிப்பிட்ட வெப்பம் தேவை. அது ஏறக்குறைய சுமார் 1100 டிகிரி செல்சியஸ். இந்த வெப்பத்தில் மட்டும் தான் வைரம் உருவாகும். இப்படி பட்ட இடம் பூமியில் சில இடங்களில் தான் உள்ளது. அவ்விடங்களின் பெயர் கிராடன் (Craton).

பூமியின் பரப்பு இன்று சில தட்டுகளாக உள்ளது. இந்த தட்டுகள் மிக மெதுவாக, ஏறக்குறைய நம் விரல் நகம் வளரும் வேகத்தில், நகர்ந்துகொண்டே வருகிறது. அதனுடன் சேர்த்து அதன் மேல் இருக்கும் கண்டங்களையும் நகர்த்திக்கொண்டே வருகிறது. இந்த தட்டுகள் சுமார் 6.3 கிலோமீட்டர் மட்டுமே ஆழமானது. அதன் கீழ் திரவ நிலையில் உள்ள பாறைதான் உள்ளது. ஆனால் சில இடங்களில் பூமியின் பரப்பு ஏறக்குறைய 160 கிலோமீட்டர் ஆழம் வரை திட நிலையில் இருக்கும். இவ்விடங்கள் தான் கிராடன். பூமியின் ஆழத்தில் இவை இருந்தாலும், இவை திட நிலையில் இருப்பதால், இவ்விடங்கள் அதை சுற்றி இருக்கும் இடத்தைவிட மிக குளிராக இருக்கும். அதாவது இவ்விடங்களில் ஏறக்குறைய 1000 - 2000 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருக்கும்.

கிராடன்கள் பூமியின் மிக பழமையான நிலங்கள். இன்று இருப்பதுபோன்று துவக்க கால பூமியில் கண்டங்கள் எதுவும் இல்லை. துவக்க கால பூமியில் சிறு சிறு தீவுகள் போன்று ஆங்காங்கே கடல் நடுவில் நிலங்கள் இருந்தன. இந்த நிலங்கள் இருந்த இடத்தில் இருந்து நகரவில்லை. இந்த துவக்க கால பூமியில் உள்ள நிலங்கள் பூமியின் ஆழம் வரை திட நிலையில் இருந்தது. அவைகள் தான் கிராடன்கள். பூமியின் பரப்பு எப்போது தட்டுகளாக உடைந்து, தட்டுகள் நகர துவங்கியது என்பதை பற்றிய முக்கிய தகவல்களை நமக்கு கொடுக்கும் கல் வைரம்.

இன்று வைரம் நில பரப்பின் அருகிலிருந்து எடுக்கப்படுகிறது. ஆனால் வைர கற்களின் உண்மையான துவக்கம் கிராடன்களின் அதிக பக்கத்தில். வைர கற்களை நிலத்தில் இருந்து எடுத்து, சரியான வடிவத்தில் வெட்டினால் தான் அதன் அழகு நம் கண்ணுக்கு தென்படும். வைர கற்களின் மேல் விழும் ஒளி, அதன் உள் சென்று பல மாற்றங்களை கண்டு, அப்படியே மறுபடியும் வெளியே பிரதிபலிக்கும். வைரத்தின் உள் சென்ற ஒளி மறுபக்கத்துக்கு ஊடுருவாது. 1919 இல் மார்செல் டொல்கோவ்ஸ்கி என்ற கணித மேதை, ஒளியை பற்றிய இயற்பியலை பயன்படுத்தி, வைரத்தை எப்படி வெட்டினால் அதிக ஒளி வெளியே வரும் என்பதை கண்டுபிடித்தார்.

கதிரியக்க அறிவியல் மூலமாக வைர கற்களின் வயதை கண்டுபிடிக்க முடியும். உலகத்தின் மிக பழமையான வைரங்கள் சுமார் 330 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது. சில வைரங்கள் மிக புதிது. ஏறக்குறைய 100 கோடி ஆண்டுகள் முன் தான் உருவானவை.

மிக விலைமதிப்பிற்குரிய வைரங்களினுள் எந்தவித கருப்பு புள்ளியும் இருக்காது. சில கலாச்சாரங்களில் கருப்பு புள்ளி உள்ள வைரம் கெட்டதாக கருதப்படுகிறது. ஆனால் ஒரு மண்ணியல் ஆராச்சியாளருக்கு கருப்பு புள்ளிகள் உள்ள வைரங்கள் தான் தேவை. அவைகள் தான் பூமியின் கடந்தகாலத்தைப் பற்றிய முக்கிய தகவல்களை நமக்கு தருகிறது.

வைரம் அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் இருக்கும் இடத்தில் உருவானது. இது உருவாகும்போது, அதை சுற்றி இருக்கும் பாறைகளில் உள்ள சிறு மண் துகள்கள் வைரத்தினுள் மாட்டிவிடுகிறது. இது தான் கறுப்பு புள்ளிகளாக வைர கற்களினுள் காட்சியளிக்கிறது. இந்த கருப்பு இடங்கள் வைரம் உருவான இடத்தைப்பற்றியும், அதை சுற்றி இருந்த பாறைகள் எப்படிப்பட்டவை என்பதையும் நமக்கு காட்டுகிறது.

வைர கற்களில் உள்ள கறுப்பு புள்ளிகளாக தெரிவது சில கனிமங்கள். பைராக்சீன் (pyroxene) மற்றும் ஆலிவீன் (olivine) என்ற இரு கனிமங்கள் தான் மிக பழமையான வைரங்களின் உள் காணப்படும் தாதுக்கள். கிராடன்களும் முழுவதும் பைராக்சீன் மற்றும் ஆலிவீனால் தான் ஆனது. இது வைரங்கள் கிராடன்களில் உருவானவை என்பதை நிரூபிக்கிறது.

சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு பின் உருவான வைரங்களில், ஏக்லொஜைட் (eclogite) என்ற ஒரு புதுவகை தாதுக்களும் சேர்ந்து உள்ளது. வழக்கமாக ஏக்லொஜைட் பூமியின் தட்டுகளின் அடி பகுதியில் உள்ளது. அதாவது இது கடலடியின் கீழ், மற்றும் கிராடன்களின் மேல் பகுதியில் மட்டுமே உள்ள தாது. ஏக்லொஜைட் வைர கற்களின் உள் மாட்டியது பூமியின் காலகட்டத்தில் மிக முக்கிய காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வை குறிக்கிறது.

சுமார் 330 கோடி முதல் 300 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான வைரங்கள் கிராடன்களின் அடியில் உருவானவை. சில நிலப்பரப்பில் உள்ள பாறைகள், 320 கோடி ஆண்டுகள் பழமையான வைரங்களுடன் சேர்ந்து இருப்பதையும் கண்டுபிடித்துள்ளோம். ஆனால் 320 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி ஒரு முக்கிய மாற்றத்தை அடைந்தது. பூமியின் பரப்பு தட்டுகளாக உடைந்து, அந்த தட்டுகள் நகர ஆரம்பித்தது. இப்படி நகர்ந்ததால் கடலின் நடுவில் தீவுகளாக காணப்பட்ட கிராடன்கள் நகர்ந்து முதல் கண்டங்களை உருவாக்க துவங்கியது.

இப்படி தட்டுகள் நகர துவங்கியதில் சில தட்டுகள் வேறு தட்டுகளின் அடியே தள்ளப்பட்டது. இதனுடன் சேர்ந்து அதில் இருந்த கிராடன்களும் பூமியின் ஆழத்தில் தள்ளப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஏக்லொஜைட் தட்டுகளின் கீழ் இருந்து கிராடனின் ஆலிவீன், பைராக்சீன் மற்றும் அதனுடன் இருந்த வைரங்களுடன் கலந்தது. இப்படி ஏக்லொஜைட் வைரத்தில் மாட்டியது. இது பூமியில் தட்டுகள் நகர்வதின் துவக்கத்தை குறிக்கிறது.

இப்படி ஏறக்குறைய 320 ஆண்டுகளுக்கு முன்பாகவே பூமியில் தட்டுகள் நகர துவங்கி முதல் கண்டங்கள் உருவாக துவங்கிவிட்டது. இப்படி கண்டங்கள் பல உருவானதால் கிராடன்கள் அழிய துவங்கிவிட்டது. பெரும்பான்மையான கிராடன்கள் அழிந்துவிட்டாலும், இன்னும் உலகில் சில கிராடன்கள் உள்ளன. பூமியின் மிக பழமையான கண்டமான ஆப்பிரிக்காவில் இன்று 5 கிராடன்கள் உள்ளன.

வைரங்கள் வழக்கமாக கிடைக்கும் இடங்கள் பழங்கால கிராடன்கள் மேல் தள்ளப்பட்டு நிலப்பரப்பாக மாறின இடங்கள். இந்த நிலங்கள் சுமார் 360 கோடி ஆண்டுகள் பழமையானது. எரிமலை வெடிப்பு மற்றும் தட்டுகள் நகர்வதால் பூமியின் கீழ் இருந்த வைரங்கள் பூமியின் நில பரப்பில் வந்தது. ஆப்பிரிக்காவில் பல இடங்களில் வைரங்கள் எடுக்க பட்டு வருகிறது. அதற்கு காரணம் ஆப்பிரிக்காவின் கிராடன்கள். ஆப்பிரிக்கா கிராடன்களால் பிறந்த கண்டம்.

ஆப்பிரிக்காவின் பல போர்களுக்கு இந்த வைரங்கள் தான் நிதியாக பயன்பட்டது. இந்த போரில் பல உயிர் சேதம் ஏற்பட்டது. இந்த உயிர் சேதத்திற்கு அங்கு கிடைத்த வைரம் தான் காரணம் என்பதால், அந்த வைரங்களை இரத்த வைரம் என்று கூறுவர். இப்படி வைரங்கள் அழகானவை, பலரை உயிரிழக்க செய்தவை, மற்றும் பூமியின் முக்கிய தகவல்களை அடக்கியுள்ளவை.

 


டிசம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது. . .

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.