தொடர்புடைய கட்டுரை


பாலைவனம்

பி.ரெ. ஜீவன்

08th Dec 2018

A   A   A

பார்ப்பதற்கு வாழ முடியாத இடம் போன்று இருந்தாலும், பூமியில் எந்த பாலைவனமும் உயிரற்றதாக இல்லை. எல்லா பாலைவனத்திலும் ஏதேனும் ஒரு வகை உயிரினம் வாழ்ந்துகொண்டு தான் வருகிறது. பாலைவனத்தில் தண்ணீர் மிக குறைவாக தான் இருக்கும். எனவே, அங்கு வாழும் உயிரினங்கள் குறைவான அளவு தண்ணீரை பயன்படுத்துவதற்கு ஏற்ப அவற்றின் உடல் உள்ளது.

உலகின் மிக வறண்ட பாலைவனமாக கருதப்படும் அட்டகாமா பாலைவனத்திலும், காலை பனியில் கிடைக்கும் சிறிதளவு தண்ணீரால் உயிரினங்கள் வாழ்கிறது. சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் 2015இல் அங்கு மழை பொழிந்தது. அடுத்த சில நாட்களில் அட்டகாமா ஒரு அழகிய பூங்காவாக மாறியது. எந்த திசையில் பார்த்தாலும் கண் எட்டும் அளவுக்கு ஊதா நிற பூக்கள் படர்ந்து இருந்தது.

பல விலங்குகளும் பாலைவனத்தில் வாழ்கின்றன. குறிப்பாக பல வகை பூச்சிகள், அதை சாப்பிடும் பல்லி வகை சார்த்த விலங்குகள், மற்றும் பல விலங்குகள் பாலைவனத்தில் உண்டு. பாலைவனத்தின் வாகனமாக கருதப்படும் ஒட்டகம், குறைவான தண்ணீரை வைத்தே உயிர்வாழக் கூடிய ஒரு மிருகம். பாலைவனத்தில் வாழ்வதற்கே அவைகளின் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாலைவனத்தில் வாழ்வதற்கு என்றே மிக சிறந்த உடல் அமைப்பை உடைய விலங்கு அரேபியா ஓரிஃஸ் (Arabian Oryx) என்ற வகை மான். சஹாரா பாலைவனத்தில் சென்ற மக்கள், பாலைவனத்தின் உள்பகுதியில் இந்த மான்களை கண்டுள்ளனர். எந்த உணவும் கிடைக்காத இடத்தில் இந்த மான்களின் இறைச்சி ஒரு பெரிய விருந்தாக அரேபியர்களுக்கு இருந்தது. பின்பு இந்த மானை வேட்டையாடுவது ஒரு விளையாட்டாகவே மாறியது. இதை வேட்டையாடுவதற்கு பாலைவனத்தின் உட்பகுதிக்குச் செல்ல வேண்டும். இதன் அழகிய நீளமான கொம்புகளை கொண்டு வருபவர்களை வீரர்களாக பழங்குடி அரேபியர்கள் கருதினர்.

1930களில் அரேபியாவில் எண்ணை இருப்பதை அறிந்து பல தொழில்சாலைகள் பாலைவனத்தில் வந்தன. அவர்கள் பாலைவனத்தில் பயணிக்க வாகனங்களைக் கொண்டு வந்தனர். இந்த வாகனங்கள் அரேபிய ஓரிஃஸை வேட்டையாடுவதற்கு உதவியாக இருந்தது. 1972இல் அரேபிய ஓரிஃஸ் பாலைவனத்தில் அழிந்துபோன விலங்காக அறிவிக்கப்பட்டது. வேட்டையாடியதில் அவை முற்றிலுமாக எல்லா பாலைவனத்திலும் அழித்துவிட்டது. ஆனால் சில அரேபியா ஓரிஃஸ், அமெரிக்கா மற்றும் துபாய் (Dubai)யில் இருந்த மிருககாட்சிசாலைகளின் (Zoo) கூண்டில் இருந்தது. அப்போது உலகில் வெறும் 9 அரேபியா ஓரிஃஸ் மட்டுமே இருந்தது.

அதை அறிந்து, அன்றில் இருந்து இந்த விலங்கை United Arab Emirates (UAE) பாதுகாக்க துவங்கியது. அரேபியா ஓரிஃஸ் இனப்பெருக்க திட்டம் ஓன்று ஆரம்பித்து, 1980இல் துவங்கி மறுபடியும் வெற்றிகரமான பல அரேபியா ஓரிஃஸை பாலைவனத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தியது. அழிந்த விலங்கு ஸ்தானத்தில் இருந்து அரிய விலங்கு ஸ்தானத்திற்கு சென்ற முதல் விலங்காக 2007இல் அரேபியா ஓரிஃஸ் அறிவிக்கப்பட்டது. 2011இல் ஏறக்குறைய 1000 அரேபியா ஓரிஃஸ் பாலைவனத்திலும், சுமார் 7000 அரேபியா ஓரிஃஸ் மிருகக்காட்சிசாலை கூண்டிலும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இன்று UAE, ஜோர்டான், ஓமன், பஹ்ரைன் மற்றும் கத்தார் நாடுகளுக்கு அரேபியா ஓரிஃஸ் தேசிய விலங்காக கருதப்படுகிறது.

பாலைவனங்களை பற்றி சொல்லும்போது அரேபிய ஓரிஃஸ் ஒரு நாயகன் விலங்கு. அதைப் போன்று உலகில் வேறு எந்த விலங்கும் கிடையாது. இவற்றின் வெள்ளை நிற தோல் சூரிய வெளிச்சத்தை வெளியே பிரதிபலிக்கும். எனவே இதன் உடலினுள் அதிக வெப்பம் போகாது. மனிதர்களுக்கு உடலில் வெப்பம் 98.4 டிகிரி, ஆனால் அரேபியா ஓரிஃஸுக்கு 116 டிகிரி. அதிக வெப்பமான இடத்தில் வாழ இதன் உடல் அமைப்பு வடிவமைக்க பட்டுள்ளது. இதனால் ஒரு மாதத்திற்கு மேல் கூட தண்ணீர் குடிக்காமல் வாழ முடியும். இதற்கு ஒருபோதும் வேர்க்காது. இவற்றிக்கு உலகின் மிக சிறந்த சிறுநீரகங்கள் உள்ளன. இவற்றின் சிறுநீர் திரவமாக இல்லாமல் திடமானதாக இருக்கும். இவற்றின் சிறுநீரில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்காது. அதன் உடலில் உள்ள தண்ணீரை தக்க வைப்பதற்கு என்று இதன் உடல் அமைப்பு உள்ளது.

பாலைவனத்தில் வாழ அரேபிய ஓரிஃஸ் அளவு இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட அளவு உடல் மாற்றம் தேவை. வாழ கடினமான பாலைவனத்திலும் பல உயிரினங்கள் வாழ விரும்புகின்றன. அங்கு அவற்றை வேட்டையாடும் விலங்குகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும். எனவே அவை மற்ற விலங்குகளுக்கு எளிதில் இரையாக முடியாது. சஹாரா பாலைவனத்தில் மட்டுமே ஏறக்குறைய 1200 வகை தாவரங்கள் உள்ளன. இவற்றை உண்ணும் விலங்குகள் அங்கு குறைவு தான்.

பாலைவனங்கள் முற்றிலும் வறண்ட காற்றில் உருவானது. இங்கு வரும் காற்றில் தண்ணீர் இருக்காது. இந்த வறண்ட காற்று இங்கு வருவதால், இங்கு மழை அதிகமான பொழியாது. இந்த காற்று வரும் வழியிலேயே எல்லா தண்ணீரையும் மழையாக வேறு இடங்களில் இழந்துவிடுகிறது. பாலைவனங்களின் காரணம் வெப்பம் அல்ல, வறண்ட காற்று தான். மிக அதிக வெப்பம் இருக்கும் இடமான பூமத்திய ரேகையில் எந்த பாலைவனமும் இல்லை. இங்கு மேகங்கள் மிக குறைவாக இருப்பதால், அதிக சூரிய ஒளி பாலைவனங்களின் தரையில் விழும். எனவே இந்த இடங்கள் வெப்பமாக இருப்பது போன்று காட்சி அளிக்கிறது. 

காலையில் பாலைவனத்தில் அதிக வெப்பம் இருந்தாலும், இரவில் அதிக குளிரான இடமாக மாறிவிடும். பல விலங்குகள் காலையில் வெயில் இருக்கும்போது, பாலைவனத்தின் மண்ணின் கீழ் ஒளிந்து இருக்கும். இரவின் குளிரில் மட்டும் இந்த விலங்குகள் வெளியே வரும்.

முன்பு பாலைவனமாக இருந்த இடங்கள் பல, இன்று பாலைவனமாக இல்லை. இன்று பாலைவனமாக இருக்கும் இடங்கள் அனைத்தும் முன்பு ஒரு காலத்தில் அழகிய பூங்காவாக இருந்தவை தான். ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனம் சுமார் 3 கோடி ஆண்டுகள் பழமையானது. ஆனால் சஹாராவின் பல இடங்கள் மிக அண்மையில் பாலைவனமாக மாறியவை. சஹாராவின் சில இடங்களில் உள்ள பாறைகளில் பழங்கால மனிதன் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளான். இந்த ஓவியங்கள் சுமார் 6000 வருடம் பழமையானது. அந்த ஓவியத்தில் அழகிய குளங்களில் பல விலங்குகள் தண்ணீர் குடிப்பது போன்ற படங்கள் உள்ளன. ஆனால் அந்த இடங்களில் இன்று எந்தவித தண்ணீர் தேங்கி நிற்கும் இடமும் இல்லை.

பாலைவனங்களின் வயதை கண்டுபிடிப்பது மிக கடினம். நமீபியா நாட்டின் நம்பி பாலைவனம் தான் உலகின் மிக பழமையான பாலைவனம். நம்பி பாலைவனம் ஏறக்குறைய 5½ கோடி ஆண்டுகள் பழமையானது. ஆனால் பெரும்பான்மையான பாலைவனங்கள் மிக அண்மையில் உருவானது தான். பெரும்பான்மையான மண்ணியல் ஆராச்சியாளர்கள் இந்தியாவின் தார் பாலைவனம் சுமார் 4,000 முதல் 10,000 ஆண்டுகள் மட்டுமே பழமையானது என்று கூறுகின்றனர். எகிப்து நாட்டின் பிரமிட் இருக்கும் இடம் இன்று ஒரு பாலைவனம், ஆனால் அந்த பிரமிட்களை கட்டும்போது அது ஒரு அழகிய சோலை.

இன்று பனியுகத்தில் இருப்பதால் பாலைவனங்களின் அளவு குறைவுதான். முன்பு ஒரு காலகட்டத்தில் பூமியின் பெரும்பான்மையான இடங்கள் பாலைவனமாக இருந்தது. இன்று பூமியின் மொத்த வாழ்க்கை காலத்தில் குளிர்காலம். அதிக வறண்ட காற்று உருவாகி, அதிக பாலைவனங்கள் உருவாகாமல் இருப்பது இன்று நம் கையில் தான் உள்ளது. மனிதனின் செயல்பாட்டால் பூமி வெப்பம் அடைத்துக்கொண்டு இருப்பதால், இன்று பாலைவனங்கள் விரிவடைந்துகொண்டு வருகிறது.

நாம் சென்ற மாதம் பார்த்த எல் நினோ (El Nino) காலம் 2015 தில் துவங்கி 2016 வரை நிலைத்தது. நவம்பர் 2016 ல் இருந்து லா நினோ (La Nino) வருடம் துவங்கியுள்ளது. இதனால் 2017, 2016 ஐவிட குளிரான வருடமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பூமி குளிராகிறது என்று அர்த்தம் இல்லை. பூமியின் வழக்கமான வெப்பநிலை சுழற்சிகள் தான் இது. பூமி வெப்பமடைவதிலிருந்து தப்பித்துவிட்டது என்ற பொய்யான தீர்மானத்திற்கு யாரும் வந்துவிடவேண்டாம். லா நினோ வருடங்கள் சாதாரண வருடங்களைவிட குளிராக இருக்கும். எல் நினோ வருடங்கள் சாதாரண வருடங்களைவிட சூடாக இருக்கும். அதிக வெப்பமான எல் நினோவிலிருந்து அதிக குளிரான லா நினோவுக்கு செல்கிறோம். வழக்கமாக இந்த இடைவேளை 3-7 வருடங்கள் இருக்கும். ஆனால் இப்போது ஒரு வருடம் கூட இல்லை.

 


ஜனவரி 2017 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.