தொடர்புடைய கட்டுரை


ஜீன் திருட்டு

Dr. S. பிரகாஷ்

10th Dec 2018

A   A   A

நள்ளிரவில், திருடன் உடல் முழுவதும் எண்ணெய் தடவி வீடுகளில் அண்டா, குண்டா, பாத்திரங்கள், தண்ணீர் மீட்டர் திருடியது ஒரு காலம். துப்பாக்கி முனையிலும், கத்தி முனையிலும் கொள்ளையிடுவதும் ஒரு காலம். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து திருடுவது இந்தக்காலம். மேலை நாடுகளில் தற்போது ‘ஜீன்ஸ் திருட்டு’ (Gene Theft) பிரபலமடைவது ஆச்சரியமான விஷயம். ஜீன்ஸ் என்றால் ஏதோ நம் நாட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் விரும்பி உடுத்தும் உடை என்று நினைத்து விடாதீர்கள். நம் உடல் செல்களில் இருக்கும் ‘ஜீன் களை அதாவது மரபணுக்களை திருடும் கூட்டம் தற்போது மேலை நாடுகளில் அதிகரித்து வருகிறது. நமக்கு தெரியாமலேயோ அல்லது நமது அனுமதி இல்லாமலேயோ திருடர்கள் நம் மரபணுக்களை திருடுவதே ‘ஜீன் திருட்டு ஆகும்.

கிரேட் பிரிட்டனில் 2006 ஆம் ஆண்டு ஜீன்கள் திருட்டு தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இத்தகைய தவறுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை என்னும் சட்டம் 2008 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அமெரிக்காவில் எட்டு மாகாணங்களில் ஜீன் திருட்டு கிருமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சிறைத்தண்டனைகளும் அபராதங்களும் விதிக்கப்படுகின்றன. மனிதர்களிடமிருந்து இந்த ஜீன்களை அதாவது மரபணுக்களை அவர்கள் பயன்படுத்தும் பொருள்களிலிருந்து திருட முடியும். காபி குடிக்கும் கப், குடித்து முடித்த சிகரெட் துண்டுகள், சீப்பு போன்ற அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களிலிருந்து ஜீன்களை திருட முடியும். இந்த ஜீன்களை எதற்கு திருடுகின்றனர் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

மேலை நாடுகளில் நடக்கும் குற்றங்களை கண்டுபிடிப்பதற்காக நம் நாட்டில் பயன்படுத்தும் கைரேகை நுட்பங்கள் போன்றில்லாமல் ஜீன்களை வைத்து அதாவது மரபணுக்களை வைத்து குற்றவாளிகளை கண்டறியும் தொழில்நுட்பங்கள் (DNA finger printing) அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டிலும் இத்தகைய நுட்பங்கள் பெரிய குற்றங்களில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. கொலைக்கு பயன்படுத்தப்படும் கத்தி, சிகரெட் துண்டுகள் போன்ற பொருட்களில் குற்றவாளிகளின் உடலிலுள்ள செல்கள் படிந்திருக்கும். இந்த செல்களை எடுத்து அதனுள் இருக்கும் மரபணுக்களை பிரித்தெடுத்து குற்றவாளிகளின் மரபணுகளோடு ஒப்பிட்டு சரியான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குகின்றனர்.

இதிலிருந்து தப்பிப்பதற்காக திருடர்களும், குற்றவாளிகளும் வேறு நபர்களின் மரபணுக்களை திருடி தாங்கள் திருட செல்லும் இடங்களில் அதாவது பயன்படுத்தும் பொருட்களின் மேல் தூவிவிட்டு சென்று விடுவர். இதனால் குற்றவாளிகள் தப்பிவிட முடியும். அப்பாவிகள் மாட்டிவிடுவர். இதனால் பல நாடுகளில் ஜீன் திருட்டு மிகப்பெரிய குற்றமாக சட்டமாக்கப்பட்டுள்ளது. தெரியாத நபர்களிடமிருந்து திருடப்படும் ஜீன்களை வைத்து அந்த நபர்களின் குணாதிசயங்களையும், எதிர்காலங்களில் வரும் நோய்களையும் கண்டுபிடிக்க முடியும். அவர்களின் முழு அந்தரங்கங்களையும் வெளிச்சமாக்க முடியும். இதனால் தற்போது மேலைநாடுகளில் ஜீன் திருட்டு மிக அதிக அளவில் நடைபெறுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மேலை நாடுகளில் நடைபெறும் இத்தகைய வினோத நிகழ்வுகளைப் பற்றி வலைதளத்தில் தேடியபோது பல ஆச்சர்யமான தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இயற்கையில் வாழும் பல உயிரினங்களுக்கிடையில் இத்தகைய திருட்டுகள் நடந்திருப்பது உண்மையிலேயே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. விஞ்ஞானிகள் இயற்கையிலிருந்து கண்டெடுத்த “அமீபா” எனும் ஒரு செல் உயிரினத்தில் இந்த ஆச்சர்யம் காத்திருந்தது. ஒரு செல் பாசியினமான “ஆல்கே” எனும் செல்லிற்கே உரிய “பச்சயம்” (Chlorophyll) அமீபா செல்களினுள் காணப்பட்டது ஆச்சர்யத்தை உருவாக்கியது. சூரிய ஒளியிலிருந்து தனக்கு வேண்டிய உணவை தயாரிப்பதற்கும், கரியமில வாயுவை பிராண வாயுவாக மாற்றும் பாசிகளின் உடலிலுள்ள பொருட்கள் அமீபா செல்களில் காணப்பட்டது. தாவர வகையை சார்ந்த பாசியின் குணாதிசயம் விலங்கு வகையை சார்ந்த அமீபாவிற்கு இருந்தது உண்மையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் தான்.

நுண்பாசியிலுள்ள ஜீன்கள், அமீபா செல்களுக்குள் சென்று இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் இத்தகைய உயிரினங்களுக்குள் மூக்கை நுழைத்து ஆராய்ச்சியை மேற்கொள்ள தொடங்கினர். பாலினல்லா (Paulinella) எனும் அமீபா செல்கள் 100 ஆண்டுகளுக்கு முன் இந்த “ஜீன்ஸ் திருட்டை” நடத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது. பாசிகளை உணவாக முழுங்கும் அமீபா செல்கள் உட்கொண்ட பாசிகளின் உடலிலுள்ள ஜீன்களை தன் உடல் குரோமோசோம்களோடு இணைத்துக் கொண்டு பாசிகளின் குணாதிசயத்தை பெற்றது மிகப்பெரிய ஆச்சர்யம்.

விலங்கு உயிரினமான மனிதர்களுக்கு தாவர குணாதிசயமான ஒளிச்சேர்கையின் மூலம் சூரிய ஒளியிலிருந்து தனக்கு வேண்டிய உணவை தாமே உடலினுள் தயாரிக்கும் குணாதிசயம் கிடைத்தால் மனிதர்கள் உணவிற்கான ஓடி ஓடி உழைக்க வேண்டாம் அப்படிதானே. அதே போல்தான் அமீபா செல்கள் தாவர குணாதிசயத்தை பெற்று சூரிய ஒளியிலிருந்து உணவை தயாரிக்கும் குணாதிசயத்தை பெற்றது இந்த ஜீன் திருட்டால் தான் சாத்தியப்பட்டது.

இத்தகைய ஜீன் திருட்டுகளை மேலும் பல உயிரினங்கள் தங்கள் வாழ்க்கையில் செய்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தாவர ஒட்டுண்ணியான (Striga hermonthica) எனும் ஒரு களைச்செடி நெற்செடிகளின் மேல் வளரும். இந்த ஒட்டுண்ணி தாவரம் நெற்செடியின் உடலிலிருந்து “ஜீன்களை திருடி” அந்த ஜீன்களில் சில மாற்றங்களை செய்து (Genetic Engineering), ஆச்சர்யமாக இருக்கிறதா? மீண்டும் நெற் செடிகளினுள் செலுத்தி விடுகின்றன. இதனால் இந்த ஒட்டுண்ணி செடி தாராளமாக நெற்செடிகளினுள் புகுந்து நெற்செடி வைத்திருக்கும் உணவுகளை எந்த தடையுமின்றி எடுத்து விடுகின்றன. இல்லையேல் நெற்செடிகள் இந்த உயிரினங்கள் தன் உடலுக்குள் செல்ல முடியாமல் பல தடைகளை (Resistance) உருவாக்கும். இத்தகைய “அறிவியல் திருடர்கள்” (Scientific thief) இயற்கையில் இருப்பதும் ஆச்சர்யம் தான். “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.”

 


ஜனவரி 2017 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.