தொடர்புடைய கட்டுரை


டார்வின் மற்றும் வாலஸ்

பி.ரெ. ஜீவன்

06th Jul 2019

A   A   A

நமது பூமியானது உயிர்களை தக்க வைக்கும் ஒரே ஒரு கிரகம். அது அவ்வாறு மிக மிகுதியாக தக்க வைக்கிறது. விலங்குகள் மற்றும் தாவரங்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் வகைகள் நமக்கு ஆச்சரியமளிக்கின்றன. ஏறக்குறைய 1 கோடி வகையான உயிரினங்கள் இவ்வுலகில் வாழ்கிறது. யாருக்கும் சரியான எண்ணிக்கை தெரியாது. எங்கு பார்த்தாலும் உயிரினங்கள் இருக்கிறது. ஒற்றை வடிவத்தில் பல வேறுபாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு ஏறக்குறைய 260 வகையான குரங்குகள், 315 வகையான தென் சிட்டுக்குருவிகள், 1000 வகையான வெளவால்கள், 350000 வகையான வண்டுகள் மற்றும் 600000 வகையான பூக்கும் செடிகள். இந்த வகைகளின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுகிறது. ஒரு சிறு வனப்பகுதியிலேயே சுமார் 4-5 வகை சிட்டுக்குருவியை பார்க்கலாம்.

இத்தகைய திகைப்பூட்டும் பல்வேறு வகைகள் ஏன் இருக்க வேண்டும்? உயிரினங்களின் வேறுபாட்டை பற்றி நாம் எப்படி உணர முடியும்? ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் இந்த கேள்விகளுக்கு பதில் தேடும் வேட்டையில் இரு ஆங்கிலேயர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் பெயர் சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) மற்றும் ஆல்ஃபிரட் ரசல் வாலஸ் (Alfred Russel Wallace). இவர்கள் இருவரை பற்றி ஒரு சிறு முன்னுரையை பார்க்கலாம்.

பெரும்பான்மையான உலகம் பரிணாம கொள்கையின் தந்தை என்று டார்வினை சொல்கிறது. ஆனால் டார்வின் மற்றும் வாலஸ் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில், தனிப்பட்ட முறையில் பரிணாம கொள்கையை கண்டுபிடித்தவர்கள். பரிணாம கொள்கையை கண்டுபிடித்தது வாலஸ் என்று டார்வின் சொன்னார், ஆனால் வாலஸ் அது டார்வினின் கண்டுபிடிப்பு என்று சொன்னார். இருவரும் இருவருக்கும் இந்த கொள்கையின் கண்டுபிடிப்பின் பெயரை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையில் இருந்தனர். இங்கிலாந்து அரசு இருவருக்குமே ஒரே அளவான விருதுகளையும், பாராட்டுகளையும் வழங்கியது. ஆனால் ஏன் நாம் டார்வினை நினைவில் வைத்திருக்கிறோம், ஆனால் வாலஸை மறந்துவிட்டோம், என்பதற்கான பதில் மிகவும் விசித்திரமானது.

அக்காலத்தில் டார்வினின் குடும்பம் இங்கிலாந்து நாட்டின் மிக பணக்கார மற்றும் செல்வச்சிறப்புடைய குடும்பம். அந்நாட்டின் முதல் 10 பணக்கார குடும்பத்தில் அவர்களும் ஒருவர். அனைவரும் படித்த மேதைகள். பரிணாமம் எப்படி நிகழ்கிறது என்று தெரியாவிட்டாலும், பரிணாமம் என்று ஒரு நிகழ்வு உயிரினங்களிடையே நிகழும் என்று சார்லஸ் டார்வினின் தாத்தா எராஸ்மஸ் டார்வின் (Erasmus Darwin) கூட அக்காலத்தில் புத்தகங்களை எழுதியுள்ளார். கண்டிப்பாக சார்லஸ் டார்வினின் எண்ணங்களில் அவரின் செல்வாக்கு உண்டு. இத்தகைய செல்வச்செழிப்பு மற்றும் அறிவாற்றலால், சார்லஸ் டார்வின் தன் வாழ்க்கையில் ஒரு நாள் கூட எந்தவித வேலைக்கு போகவேண்டிய கட்டாயம் இருந்ததில்லை. அவரது தோட்டம் போதிய வருமானத்திற்கு மிக அதிகமாகவே அவருக்கு கொடுத்தது. வீடு முழுவதும் பணியாளர்கள், அவருக்கு சிறு வயதிலிருந்தே எல்லா வேலையும் செய்து கொடுத்திடுவார்கள்.

டார்வின் உலகின் மிக சிறந்த கல்லூரிகளில் உயிரியல் மற்றும் மண்ணியல் பயின்று வந்தார். வாழ்க்கையில் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் ஆக வேண்டும் என்ற கனவுடன் இளம் டார்வின் இருந்தார். அவருக்கு 22 வயதில் உலகத்தை சுற்றி வரும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. HMS Beagle என்ற கப்பல் 5 வருட பயணமாக உலகை சுற்றி வர இருந்தது. டார்வினின் தந்தை அவரை அனுப்ப விருப்பப்படாவிட்டாலும், அவரின் தாத்தா அவரின் தந்தையை சமாளித்துவிட்டு, டார்வினை அந்த பயணத்தில் அனுப்பிவிட்டார். அவரின் வேலை கப்பல் மாலுமிக்கு பேச்சு துணையாக இருப்பது. திரும்பி வரும்போது அவர் ஒரு புதிய மனிதனாக வந்தார்.

வாலஸ் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். இவர் டார்வினைவிட 14 வயது இளையவர். சிறுவயதில் படிப்பை நிறுத்திவிட்டு, நிலம் அளப்பவர்களுக்கு துணையாளராக பணிபுரியவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டவர். ஆனால் படிப்பதை ஒருபோதும் விடவில்லை. தானாகவே கிடைக்கும் புத்தகங்களை படிப்பார். அவருக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் சார்லஸ் டார்வின். வாலஸ் சிறு வயதிலிருந்தே டார்வினின் எழுத்துக்களுக்கு ரசிகன்.

டார்வின் ஒரு சிறந்த புத்தக எழுத்தாளர். பல்வேறு புத்தகங்களை சிறு வயதிலிருந்தே வெளியிட்டுள்ளார். அவரின் கப்பல் பயணங்கள், கடல் சிப்பி, மீன்கள், மனித முகத்தின் பாவனைகள் போன்று பல்வேறு தலைப்பில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இந்த புத்தகங்கள் அவருக்கு உலகளாவிய புகழ் சேர்த்து வந்தது. பரிணாம கொள்கையை வெளியிடுவதற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னராகவே டார்வின் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி மற்றும் எழுத்தாளர். இவரின் இயற்கை பற்றிய எழுத்திற்கு பல்வேறு ரசிகர்கள் இருந்தனர். அதில் வாலஸும் ஒருவர்.

வாழ்க்கை வாலஸ்சுக்கு மிக சுவாரஸ்யமாக செல்லவில்லை. பெரிய கனவுகளுடன் இருந்தாலும், பொருளாதார நிலை அனுமதிக்கவில்லை. டார்வினின் கப்பல் பயணம் போன்று, இவருக்கும் ஆய்வுப்பயணம் செல்ல ஆசை. 25 வயதில் அவரின் ஆசை நிஜமானது. தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளின் உள் சென்று அங்கிருக்கும் விலங்குகள், பூச்சிகள், செடிகளை பட்டியலிட்டு, பலவற்றை மறுபடியும் இங்கிலாந்துக்கு கொண்டுவர வேண்டிய வேலை. பல்வேறு பொருட்களை சேகரித்து கப்பலில் பின்பு வீடு திரும்பிய வழியில் கப்பல் தீ பிடித்து எறிந்துவிட்டது. அவர் சேகரித்த அனைத்தும் நெருப்பில் அவர் கண்முன் எரிந்து போனது. ஒரு சிறு படகில் சில நாட்கள் உணவின்றி இருந்தார். பின்பு வேறு கப்பல் அவரை காப்பாற்றியது. இந்த பயணத்தில் வாலஸ் ஏறக்குறைய அனைத்தையும் இழந்துவிட்டார். அவர் படம் வரைந்த குறிப்புகள் மட்டுமே குறைவான விலைக்கு விற்கவேண்டிய கட்டாயம். ஆனால் அவர் சோர்வடையவில்லை.

டார்வினுக்கு பல சிறந்த விஞ்ஞானிகள் நண்பர்களாக இருந்தனர். அவரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சார்லஸ் லயில் (Charles Lyell). இவர் அக்காலத்து சிறந்த மண்ணியல் ஆராய்ச்சியாளர். இவருக்கு வாலஸ்சை தெரியும். இவர் மூலமாக வாலஸ் முதன்முறையாக டார்வினை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, அவரின் அடுத்த பயணத்திற்கு அவர் தயாராகிக்கொண்டு இருப்பதாக வாலஸ் டார்வினிடம் கூறினார். இந்த சந்திப்பு டார்வினுடன் அவருக்கு நட்பை ஏற்படுத்தியது.

வாலஸ் அடுத்தது ஆங்கிலேயர் எவரும் இதுவரை செல்லாத இடமான மலே தீவுக்கூட்டத்திற்கு சென்றார். இன்றைய மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு முதன்முதலில் சென்ற வெள்ளையர் இவர்தான். ஆனால் முதலில் ஐரோப்பாவிலிருந்து மலே தீவுக்கூட்டத்திற்கு செல்வது, இன்று நாம் நிலவுக்கு செல்வதற்கு சமம். ஏறக்குறைய முடியாத ஓன்று. இந்த தீவு கூட்டத்தில் மனித தலையை வேட்டையாடும் கொடூர மனிதர்கள் இருப்பதாக ஐரோப்பாவில் பேசினர். எல்லா தடங்கல்களையும் தாண்டி வாலஸ் அந்த தீவுகளுக்கு சென்றார். அங்கு உள்ள விலங்குகள், பூச்சிகள், செடிகளை எடுத்து ஐரோப்பாவுக்கு அனுப்புவது தான் இவர் வேலை.

டார்வின் 27 வயதிலேயே, கப்பல் பயணம் முடிந்து வரும்போது பரிணாம கொள்கையை கண்டுபிடித்து மனதில் வைத்திருந்தார். சார்லஸ் லயில், தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி போன்ற சில நண்பர்களிடம் மட்டுமே இந்த சிந்தனையை பகிர்ந்துகொண்டார். பலமுறை இதை வெளியிட அவர்கள் வற்புறுத்தியும், டார்வின் மறுத்துவிட்டார். டார்வின் தன் மனைவியின் இருதயமே இதை கேட்டால் உடைந்துவிடும் என்று நம்பினார். டார்வினின் மனைவி ஒரு கிறிஸ்தவ பக்திமான். இந்த கொள்கை கிறிஸ்தவ கருத்துக்களை உடைத்து எறிந்துவிடும் என்று நன்கு அறிந்திருந்தார். எனவே தன் ஆராட்சியை ரகசியமாக தனக்குள் வைத்துக்கொண்டார்.

ஜூன் மாதம் 1858இல் டார்வின் வீட்டுக்கு மலே தீவுக்கூட்டத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது.  20 பக்கங்கள் இருந்த அதை எழுதியவர் வாலஸ். இந்த கடிதத்தை பார்த்ததும் பேரின்பம் மற்றும் பேரதிர்ச்சியில் டார்வின் இருந்தார். அவர் ஏற்கனவே கண்டுபிடித்த பரிணாம கொள்கையை வாலஸ் தனிப்பட்டமுறையில் கண்டுபிடித்துள்ளார். ஆனால் டார்வினின் நண்பர்கள் உடனடியாக அவரின் ஆய்வை வெளியிட கட்டாயப்படுத்தினர். அப்படியே நடந்தது.

மலே தீவுக்கூட்டத்தில் பலமுறை வாலஸ்சை மலேரியா காய்ச்சல் தாக்கியுள்ளது. அப்படி ஒருமுறை தாக்கி ஓய்வு எடுக்கும்போது, ஏன் இந்த கொடூர காய்ச்சல் மனிதர்களை தாக்குகிறது என்று எண்ணி வந்தார். அப்போது தான் இந்த கோட்பாட்டை கண்டுபிடித்தார். டார்வினின் புத்தகங்கள், மற்றும் உரையாடல் மூலமாக, அவரும் பரிணாமம் எப்படி நடக்கிறது என்ற கேள்வியை சிந்தித்து வருவார் என்று வாலஸ் யூகித்து வைத்திருந்தார். இப்படி இதை கண்டுபிடித்ததும், உலகில் இந்த கொள்கை தெரிந்த ஒரே ஒரு நபருக்கு கடிதம் எழுதினார். இங்கிலாந்தில் இந்த கடிதம் என்ன எப்படிப்பட்ட அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் என்று எண்ணி பார்த்திருக்க மாட்டார்.

ஜூலை மாதம், 1 ஆம் தேதி, 1858இல் லண்டனின் லின்னேன் என்ற விஞ்ஞான சமூகத்தில் இவர்கள் இருவரின் கொள்கையும் அரங்கேற்றப்பட்டது. டார்வின் எழுதிய கட்டுரையும், அதை தொடர்ந்து வாலஸ்சின் கடிதமும் செயலாளர் சத்தமாக படித்தார். கோட்பாட்டின் ஆசிரியர்கள் இருவருமே அப்போது அங்கு இல்லை. வாலஸ் மலே தீவுக்கூட்டத்தில் இருந்தார், டார்வின் அவரின் மகனுக்கு உடல்நிலை சரியாயில்லை என்று வீட்டில் இருந்தார். இந்த அரங்கேற்றத்தை கேட்டு வாலஸ் மகிழ்ந்தார். டார்வின் மீது எந்தவித கோபமோ, பொறாமையோ இருக்கவில்லை. அவர்கள் கூட்டத்தில் வாலஸ் பெயரை உச்சரித்ததையே பெரிய பாக்கியமாக கருதினார். டார்வின் ஏற்கனவே இதை கண்டுபிடித்து இவ்வளவு ஆராய்ச்சி செய்ததை கண்டு வியந்தார்.

அன்று அரங்கேற்றம் ஆன கோட்பாட்டை யாரும் கண்டுகொள்ளவில்லை. லின்னேன் சமூகத்தின் 1858ஆம் ஆண்டு அறிக்கையில், இந்த வருடம் விஞ்ஞான கண்டுபிடிப்புக்கு ஒரு மந்தமான வருடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவித பெரிய கண்டுபிடிப்பும் அந்த வருடம் நிகழவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அடுத்த வருடம் டார்வின் “On the Origin of Species by Means of Natural Selection, or the Preservation of Favored Races in the Struggle for Life” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். வாலஸை அதன் துணை எழுத்தாளராக இணைத்திருந்தார். இந்த கோட்பாட்டை இது அழகாக விளக்கியிருந்தது. உலகெங்கும் டார்வின் எதிர்பார்த்தது போன்று, இது ஒரு சீற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த கோட்பாடு பல்வேறு கேள்விகளை எழுப்பும் என்று டார்வின் நன்கு அறிந்திருந்தார். ஆனால் பெரும்பான்மையான விவாதங்களில் இவர் பங்குபெறவில்லை. இவரின் நண்பரான ஹக்ஸ்லி இவருக்கு பதிலாக வாதாடினார். இதனால் ஹக்ஸ்லிக்கு டார்வினின் வெறிநாய் என்ற புனைப்பெயர் உண்டு. வாலஸ் எல்லா விவாதத்திலும் பங்கு பெற்றார். டார்வின் போன்று அமைதியாக இல்லாமல், இந்த கொள்கையை உலகின் மேல் நின்று கத்தி சொல்லவேண்டும் என்று இருந்தார்.

வாலஸ்சும் பரிணாம கொள்கையை “Darwinism” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தில் வெளியிட்டார். எல்லா புகழும் டார்வினுக்கே என்று சொல்லுவார். வாலஸ் 1913இல் இறக்கும்போது உலகின் தலை சிறந்த விஞ்ஞானியாக கருத்தப்பட்டிருந்தார். அப்போது கூட டார்வின் வாலஸ் பரிணாம கொள்கை என்று தான் கூறப்பட்டு வந்தது. ஹக்ஸ்லி அவரின் வாதங்களில் டார்வின் பெயரை முன்வைத்தாலும், வாலஸ்சுக்கு என்று ஒரு தனி மரியாதை இருந்தது. டார்வின், அவரின் நண்பர்களை எல்லாம் விட, வாலஸ் அதிக காலம் உயிருடன் வாழ்ந்தவர். இவரின் கடைசி காலகட்டத்தில், இவர் விஞ்ஞான உலகில் ஒரு கடவுள் போன்று இருந்தார். கண்டிப்பாக டார்வினைவிட வாலஸை நியாபகம் வைத்திருப்பதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால் காலப்போக்கில் வாலஸ்சை மறந்துவிட்டோம்.

இந்த கோட்பாட்டை பற்றி மேலும், தொடர்ந்து பார்க்கலாம்.

 


டிசம்பர் 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.