தொடர்புடைய கட்டுரை


நொச்சி மரம்

Dr. பா. சாம்ராஜ்

07th Oct 2018

A   A   A

விடெக்ஸ் நெகுண்டொ (Vitex negundo) என்ற தாவரவியல் பெயரினால் அழைக்கப்படும் நொச்சி மரம் (Vitex Tree) நம் நாட்டில் பல இடங்களிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும், அதிக ஈரப்பதமுள்ள பகுதிகளிலும், காடுகளின் திறந்தவெளிப் பகுதிகளிலும் வளர்கிறது. வெர்பினேசியே (Verbenaceae) என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது இந்த நொச்சி மரம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீட்டர் உயரம் வரையிலும் இந்த மரம் காணப்படுகிறது. நொச்சி மரம் குறு மரப்பிரிவைச் சேர்ந்தது. சமவெளிப் பகுதியில் 4 மீட்டர் வரையிலும், மலைப் பகுதிகளில் 6 மீட்டர் வரையிலும் வளரக்கூடியது. நொச்சி மரப்பட்டையில் நீளவாட்டில் வெடிப்புகள் இருக்கும். மேலும் பட்டை சாம்பல் நிறமுடையது.

நொச்சி மரத்தின் அருகில் சென்றால், இந்த மரத்திற்கு உரிய ஒருவகையான வாசனை அடுத்தவரைக் கவர்ந்து இழுக்கும். இந்த மரத்தின் சிறு கிளைகள், பூங்கதிர்கள், இலைகளின் கீழ்ப்பகுதி போன்றவை சாம்பல்பொடி தூவியது போல இருக்கும். இந்த மரத்தின் சிற்றிலைகள் ஈட்டி வடிவில் காணப்படும். சிற்றிலைகளின் அடிப்பகுதி சுருங்கியும், நுனி கூர்மையாகவும் இருக்கும். சிறுகிளைகளின் நுனிகளிலும், நுனிப்பகுதிகளிலுள்ள இலைச் சந்துகளிலும் பூங்கதிர்கள் உருவாகும். பின்னர் பூக்கள் உருவாகின்றன.

நொச்சி மரப் பூக்கள் நீல நிறம் கொண்டவை. இந்தப் பூக்கள் பூங்கொத்தில் அடர்த்தியாகக் காணப்படும். சமவெளிப் பகுதியில் ஜனவரி-ஏப்ரல் மாதங்களிலும், மலைப் பகுதியில் ஜூலை-அக்டோபர் மாதங்களிலும் பூக்கள் பூக்கின்றன. பூக்களிலிருந்து காய்கள் உருவாகின்றன. காய்களிலிருந்து கிடைக்கும் பழங்கள் கறுப்பு நிறமுடையவை. சில இடங்களில் வருடம் முழுவதும் இந்த மரம் காய்களையும், பழங்களையும் கொடுக்கின்றது.

நொச்சி மர இலைகளுக்கு பூச்சி தடுப்புத்திறன் உள்ளது. தானியக் குதிர்களில் தானியத்துடன் நொச்சி இலைகளை கலந்து வைப்பதால் தானியங்களை சேதப்படுத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். கிராமங்களிலும், நகரங்களிலும் பல இடங்களில் இந்தப் பழக்கம் உள்ளது. நொச்சி மர இலை மற்றும் குச்சிகளின் சாற்றில் பாக்டீரியாக் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் சத்து உள்ளது. மேலும் இலைகளில் ஆல்கலாய்டுகளும் இருக்கின்றன. அதோடு மட்டுமல்லாமல், இந்த மர இலைகள் பயிர் ஊக்கியாக செயல்படுவதாகவும், களைக்கொல்லியாகப் பயன்படுவதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

சாம்பல் நிறமுள்ள நொச்சி மரம் கடினமானது. சாதாரண கட்டிட உபயோகங்களுக்கும், விறகாகவும் மரம் பயன்படுகிறது. மரச் சாம்பலில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளதால், இதனை உரமாகப் பயன்படுத்தலாம். சாயத் தொழிலில் காரப் பொருளாகவும் பயன்படுகிறது. மலைச்சரிவுகளில் மண் அரிப்பைத் தடுக்க நொச்சியை நெருக்கமாகப் பயிரிடுகின்றனர். ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றின் கரைகளில் இந்த மரங்களை நட்டு, கரைகளை வலுப்படுத்துகின்றனர்.

 


ஏப்ரல் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.