கால்நடைத் தீவனப்பயிர் சாகுபடி மேம்பாட்டுத் திட்டம்
கேப்மல்லிகை மரம் (Cape jasmine)
தேவதாரு போல் காட்சியளிக்கும் “யு” மரம்
கன்னிப்பூவில் பொடி விதைப்பு நெல் சாகுபடி
இந்திய மண்ணில் ஒலிவ எண்ணெய் மரங்கள்
சீமைப்பலா அல்லது ஈரப்பலா மரம்
நொச்சி மரம்
கன்னியாகுமரி ‘உலகின் தோட்டக்கலை கிண்ணம்’
நெட்டிலிங்க மரம்
அருநெல்லி மரம்
மலைக்காடுகளும் கடலோர பகுதிகளும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புற்களின் பங்கு
குமரி மாவட்ட இயற்கை வளப்பாதுகாப்பு
இரட்டைத் தேங்காய்
ஓகி புயலில் தப்பிய அதிசய நாவல் மரம்
கடல்சார் மண்டல ஆராய்ச்சி நிறுவனம்
ஒரு மரத்தின் உண்மை மதிப்பு
தோப்பு மரம்
மாடித்தோட்டம் - 12
22nd Oct 2019
ஆதியில் மனித வாழ்வு செழித்திருந்தது. வேதாகம கால மனிதர்கள் நோய்நொடியின்றி பல நூற்றாண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள். அன்று தோட்டங்கள் செழித்திருந்தன. மனித வாழ்வும் தளைத்தது. படைப்பின் மகுடமாக மனிதனைப் படைத்து அவனை அழகும் செழுமையும் நிரம்பிய ஏதேன் தோட்டத்தில் உலாவ விட்டு அழகுப் பார்த்தார் கடவுள். அவனுக்கு வேண்டிய காய் கனி மரங்களை படைத்து, அவன் கையில் கொடுத்து இவற்றை பராமரித்து மனைவியோடு இன்புற்று வாழ்ந்திடு என்று பணித்தார்.
ஆதி மனிதன் உள்ள நிறைவோடு மேற்கொண்ட பணி தோட்டக்கலை (Horticulture) மண்ணை பண்படுத்தி பராமரித்தான். நிறைவாக உண்டு குறைவின்றி, நீடூழி வாழ்ந்தான். இறைவழியினின்று தடம்புரண்டு, இயற்கையான உன்னத வாழ்வை இழந்து போராட்டமான, நோய் நொடி நிரம்பிய குறுகிய ஆயுளுடனான வாழ்வுக்கு நேராக தள்ளப்பட்டான் என்கிறது பைபிள் சொல்லும் படைப்பின் வரலாறு.
இழந்த சுவர்க்கத்தை பூமியில் உருவாக்க முயன்று உழைத்தான். எங்கெங்கு நாகரீகங்கள் தழைத்ததோ அங்கெல்லாம் தோட்டங்களும் செழிப்பும் நிரம்பின. நைல் நதி நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம் என்று வரலாறு கூறும் நாகரீகங்கள் எல்லாம் நதிக்கரைகளில் குடிபெயர்ந்து அவர்கள் வடிவமைத்த இயற்கை சார்ந்த - விவசாயம் சார்ந்த வளர்ச்சிகளால் சாத்தியமாயின. இந்த வரலாற்றின் தொடர்ச்சி தான் உலக அதிசயமாக போற்றப்படும் பாபிலோனாவின் தொங்கும் தோட்டம். அவைதான் இன்றைய மாடித்தோட்டங்களுக்கு முன்னோடி. பின்னர் வந்த மன்னராட்சி காலங்களிலும் அந்தப்புரங்கள் இயற்கை சூழலில் ரம்மியமாக அமைந்திருந்தன. பெர்சியன், கிரேக்கம், முகலாயர், ஆங்கிலேயர் என ஒவ்வொருவரும் தங்களுக்கென தோட்டங்கள் அமைப்பதில் தனி பாணியை உருவாக்கிக் கொண்டனர்.
வெற்றிகளின் கொண்டாட்டங்களுக்கு நினைவுச் சின்னமாக தோட்டங்கள் நிர்மாணிக்கப் பட்டன. பாபர் பானிப்பட்டில் இப்ராகிம் லோடியை வென்றதற்கு சாட்சியாக ‘ராம்பாக்’ என்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மா மரங்களாலான தோட்டத்தை நிர்மாணித்தார். வாழ்வின் ஒவ்வொரு கணமும் தாவரங்களோடு கழித்திட சிரத்தை மேற்கொண்டனர். அரண்மனைக்குள்ளும், அந்தபுரத்துக்குள்ளும் தொடங்கி, வாழ்விடங்களைச் சுற்றிலும் இயற்கை தோட்டங்களை பராமரித்தனர். அதுமட்டுமின்றி பயணம் செல்லும்போதும் சுற்றிலும் தாவரங்கள் சூழ்ந்திருக்க, மகிழ்ந்து பயணம் மேற்கொள்ள ஏதுவாக சாலையோரங்களில் மரங்களையும், செடிகளையும் நடும் பழக்கத்தை அறிமுகப்படுத்தினார் அசோக சக்கரவர்த்தி.
இவைகளை தொலைத்து இன்று பூமியை பாழ்படுத்தி, வாழ்வை முடித்துக்கொள்ளும் பரிதாப நிலையை விஞ்ஞான முன்னேற்றம் என்கிறோம். சாலையை அலங்கரித்த நூற்றாண்டு கால மரங்களை வெட்டி தள்ளினோம். பொது இடங்களில் சுற்றுச்சூழலை பராமரித்துக் கொண்டிருந்த பெரிய மரங்களை முன்னேற்றத் திட்டங்கள் என்ற பெயரில் காலி செய்ததோடு, கிராமங்களை கல்வியிலும், சுகாதாரத்திலும் மேம்படுத்துவதை விட்டுவிட்டு, நகரங்களை நவீனப்படுத்தி, கிராமங்களை பாழடையச் செய்தனர். வசதி வாய்ப்புகள், பிழைப்பு தேடி நகர வாழ்வுக்கு மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு, அடுக்குமாடி, தொழிற்கூடங்கள், மால்கள், வணிக வளாகங்கள் என கூண்டு வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு தாவரங்களோடு உள்ள தொப்புள் கொடி உறவைத் துண்டித்து, கல்லோடும், சிமெண்ட் கான்கிரீட் கோட்டைகளுக்குள்ளும் வாழும் வாழ்வு வழக்கமானது.
சுற்றுச் சூழல் புகை மயமாகவும், தூசு மயமாகவும் மாறிப்போனது. உண்ணும் மேசையில் கொடிய விஷங்களில் குளிப்பாட்டிய பழங்களும், காய்கறிகளும், தானியங்களும் படைக்கப்பட்டன. கால்நடைகள், கோழிகள், நவீன மீன் வளர்ப்பு என அனைத்தும் விஷ மருந்துகளின் பக்க பலத்தோடு பராமரிக்கப்பட்டு தாய்க்கும், பிள்ளைக்கும் பரிமாறப்பட்டு இன்றைய சமூகம் ‘அமுதெனும் உணவை’ விடுத்து ‘நஞ்செனும் உணவுக்கு’ அடிமையாகிப் போனது.
இந்த சமூகத்தை மீட்டெடுக்க மனிதன் நடந்து வந்த பாதைக்கு நேராக மீண்டும் ‘U’ திரும்பம் திரும்பிச்செல்ல வேண்டியுள்ளது காலத்தின் கட்டாயம். ஆதி மனிதர்கள் முதற்கொண்டு வரலாற்று நாயகர்கள் வரை அவர்கள் கையாண்ட இயற்கையான பெருவாழ்வுக்கு நேராக கடந்துச் செல்ல வேண்டும். தாவரங்களையும், விலங்குகளையும் சக ஜீவிகளாக போற்ற வேண்டும். அப்போதுதான் ஆதியில் மனிதன் இழந்த பெருவாழ்வை நோக்கி மீண்டும் நடைபோட முடியும். அந்த ஆவலில் கடந்த ஒரு வருடமாக சிந்தித்தோம். நம் வீட்டை சுற்றிலும், மாடியிலும் தோட்டங்கள் அமைத்து சுற்றுச்சூழலை பேணுவதோடு, நஞ்சில்லா உணவையும் உற்பத்தி செய்யலாம். பூமி சூடேறுவதையும், மாசு படுவதையும் தடுக்க ஒவ்வொரு வீடுகளிலும் தோட்டங்கள் என்ற கருத்து வட்டங்கள் (Blocks), தாலுகாக்கள், மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகள் என்ற எல்லைகள் தாண்டி விரிவடைந்துச் செல்ல வேண்டும். அப்போது பூமி புனரமைக்கப்படும், வாழ்வு பெறும். இது தான் இந்த தொடரின் நோக்கமும், கருப்பொருளும். இந்த இறுதி பகுதியிலும் விட்டைச் சுற்றி விளைவிக்கப்படும் காய்கறிகளின் பயன்பாடுகளை சிந்திக்க இருக்கிறோம்.
1) முருங்கை: எல்லா விட்டமின்களும் இரும்பு சத்தும் நிரம்பியதாகையால் சோகையை விரட்டும். குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் உகந்தது. இதன் கீரை மட்டுமின்றி பூ, மொட்டு, காய், விதை, பட்டை என அனைத்தும் நோய்களுக்கு எதிரான அரணாக நின்று நம்மை பாதுகாக்கின்றன.
2) கத்தரிக்காய்: நம் நாட்டு பயிர். ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரு ரகமுண்டு. நிரம்ப நார்சத்தும் குறைந்த கொழுப்பு, மாவுச்சத்து மற்றும் கலோரியையும் கொண்டு இருப்பதால் நீரழிவு நோயாளிகளுக்கு உகந்த காய். குடல் இரத்த கசிவு, வயிற்று பொருமல், வாயு போன்றவற்றிற்கு மருந்தாகிறது.
3) குடமிளகாய்: சிகப்பு, பச்சை, மஞ்சள் வண்ணங்களில் பசுமை கூடாரங்களில் வணிக ரீதியாகவும், வீட்டுமாடிகளில் நிழல் வலைகளிலும் வளர்வது. இதில் கலோரியும் கொழுப்பும் குறைவாக இருப்பதால் எடை குறைப்பில் பயன்படுகிறது. இதிலுள்ள ‘சேப்சைன்’ என்னும் காரப்பொருள் இதயத்தை பலமாக்கி புற்றுநோய் செல்களையும் அழிக்கவல்லது.
4) வாழைதண்டு: ‘சிறுநீரகங்களின் தோழன்’ என சிறப்பிக்கப்படுவது. சிறுநீரகக்கல் கரைப்பதிலும், மலச்சிக்கல் போக்குவதிலும், கொழுப்பை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. நார்ச்சத்து நிரம்பியதால் சுத்திகரிப்பானாக செயல்பட்டு சிறுநீரகத்தை சீராக்குகிறது.
5) சுரைக்காய்: கோடையில் ஏற்படும் களைப்பு மற்றும் சோர்வை நீக்கி உடலை குளுமையாக்கும். குறைந்த கலோரி மற்றும் கொழுப்பை கொண்டமையால் எடை குறைப்புக்கு உகந்தது. கல்லீரல் நோய்கள், மஞ்சள் காமாலை, இளநரை, சிறுநீர் கடுப்பு, செரிமானமின்மை இரத்த அழுத்தம் ஆகியவற்றை சமன் செய்கிறது.
6) பாகற்காய்: ’மெம்மோர் டிசின்’ எனும் வேதிப்பொருள் நிரம்பிய பாகல் இயற்கை இன்சுலின் மருந்தாக சர்க்கரை நோய்க்கும், பழைய செல்களை புத்தாக்கம் செய்து நீண்ட ஆயுளுக்கும் உதவுகிறது. செல்லுலோஸ் அதிகம் இருப்பதால் சிறந்த செரிமான ஊக்கியாகும். நோய் எதிர்ப்பு சக்திக்கும், கண் பிரச்சனைகளுக்கும், கீல்வாதத்துக்கும், குஷ்டம், புற்றுநோய் சிகிட்சைகளிலும் பயன்படுகிறது.
7) மாங்காய்: மாதா ஊட்டாத சத்து ‘மா’ ஊட்டி விடும். உயிர் சத்துகள், தாதுப்பொருட்கள் நிரம்பிய மாங்காய் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. பிஞ்சு அல்லது வடுமாவில் பெக்டின் அதிகமாக இருப்பதால் அஜீரணம் மலச்சிக்கலை போக்குகிறது. மசக்கை காலத்தில் வாய்க்கு சுவையூட்டுவது. புற்றுநோய், குடல் கோளாறுகள், மிகுதாகம், சோகை, கல்லீரல் குறைபாடுகளைப் போக்கும்.
8) வெள்ளரி: உடல் வெப்பத்தை தணித்து மனச்சோர்வுக்கும் மருந்தாகிறது. குறைவான கொழுப்பு, கலோரி மற்றும் நிரம்ப நார்ச்சத்து கொண்டுள்ளமையால் எடை குறைப்பு, மலச்சிக்கல், இரத்த அழுத்தம், எலும்பு, தோல் நோய்கள், மூளை குறைபாடு புற்றுநோய், வாய் துர்நாற்றம், மனச்சோர்வு போன்றவற்றுக்கும் சிறந்த மருந்தாகிறது.
9) கோவைக்காய்: வேர், இலை, காய் எல்லாமே சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக நோய்க்கு மருந்தாகிறது. மலமிளக்கி, கண் பார்வை குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆகியவற்றிற்கும் உகந்தது.
10) பீட்ரூட்: கீரையும், கிழங்கும் ஆன்டி ஆக்சிடன்ட், உயிர்சத்துகள், கரோட்டினாய்டு மற்றும் பிளேவினாய்டு சத்துக்கள் நிரம்பியவை. இதிலுள்ள பீட்டா சயானின், பீட்டா சாந்தின் போன்றவை அழற்சியை போக்கி, உடல் நச்சுகளை நீக்கி, இரத்த விருத்தியை தூண்டி, புற்றுநோய், கல்லீரல் நோய் போன்றவற்றிற்கு பரிகாரமாகிறது.
11) வெங்காயம்: கந்தக சத்து நிரம்பியது. இதய நோய்கள், கல்லீரல் நோய்கள், கொழுப்பு, ஆஸ்துமா, சர்க்கரை நோய், பெருங்குடல் கட்டிகள் போன்றவற்றை மட்டுப்படுத்துகிறது.
இத்தகைய உன்னத பண்புகளை துய்க்க வேண்டுமானால் இவை நஞ்சில்லா முறையில் இயற்கையான வழியில் சாகுபடி செய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகிறது.
இயற்கைக்கு திரும்புவோம் என்னும் அறைகூவலோடு இந்த தொடரை நிறைவு செய்யும் தருணத்தில், ஆதிமனிதன் முதல் சக்கரவர்த்திகள் நேபுகத்நேசர், பாபர், அசோகர் என மனிதகுலம் கடந்து வந்த பாதைகளாலும், நாகரீக வளர்ச்சிகளாலும் நாம் துய்த்த நலன்கள் தடைபட்டுள்ளது. இது தொடர் ஓட்டம் (Relay Race). இதை மீட்டெடுத்து அடுத்த சந்ததி கைகளில் பொறுப்புடன் கொடுக்கும் பங்கு நம் தலைமுறைக்கு உண்டு. ஆகவே இந்த தொடர் ஓட்டத்தில் இழந்தவைகளை மீட்டெடுத்து நோயில்லா பெருவாழ்வை நாமும் துய்த்து வருங்கால சந்ததிக்கும் விட்டுச் செல்வோம். நன்றி.
(முற்றும்...)
2016 டிசம்பர் அமுதம் இதழில் வெளியானது….
கால்நடைத் தீவனப்பயிர் சாகுபடி மேம்பாட்டுத் திட்டம்
கேப்மல்லிகை மரம் (Cape jasmine)
தேவதாரு போல் காட்சியளிக்கும் “யு” மரம்
கன்னிப்பூவில் பொடி விதைப்பு நெல் சாகுபடி
இந்திய மண்ணில் ஒலிவ எண்ணெய் மரங்கள்
சீமைப்பலா அல்லது ஈரப்பலா மரம்
நொச்சி மரம்
கன்னியாகுமரி ‘உலகின் தோட்டக்கலை கிண்ணம்’
நெட்டிலிங்க மரம்
அருநெல்லி மரம்
மலைக்காடுகளும் கடலோர பகுதிகளும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புற்களின் பங்கு
குமரி மாவட்ட இயற்கை வளப்பாதுகாப்பு
இரட்டைத் தேங்காய்
ஓகி புயலில் தப்பிய அதிசய நாவல் மரம்
கடல்சார் மண்டல ஆராய்ச்சி நிறுவனம்
ஒரு மரத்தின் உண்மை மதிப்பு
தோப்பு மரம்
மாடித்தோட்டம் - 12
Copyright © 2018 Amudam Monthly Magazine