தொடர்புடைய கட்டுரை

கலை இழக்கும் பல் (கலை) கழகங்கள்

Dr. S. பிரகாஷ்

05th Oct 2019

A   A   A

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் பஞ்சமில்லை. தமிழகம் கல்வித்துறையில் பல நிலைகளில் வளர்ச்சிக் கண்டுள்ளது. தமிழகத்தில் அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்களும் அவற்றின் கீழ் 1464 கல்லூரிகளும் செயல்படுகின்றன. இவற்றில் 4.5 இலட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இது தவிர மருத்துவ பல்கலைக்கழகங்கள் வேளாண் பல்கலைக்கழகங்கள் சட்ட பல்கலைக்கழகம் விளையாட்டு பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்கள் சேர்த்து மொத்தம் 20 பல்கலைக்கழகங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் 28 ம் தமிழகம் முழுவதும் பரவியிருக்கின்றன.     

பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகம் தொடங்கி பல பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தனித்தன்மை மிக்க கல்வி நிலையங்களாக விளங்கியது அந்தகாலம். பல கல்வி மேதைகள் துணைவேந்தர்களாக பணியாற்றினர். காலம் செல்லச் செல்ல பல்கலைக்கழகங்களின் தரம் நினைத்துப்பார்க்க முடியாத நிலைக்கு தாழ்ந்து நிற்கின்றன. இத்தகைய பல்கலைக்கழகங்களிலிருந்து வெளிவரும் மாணவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கின்றது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலையில் சேர தகுதியற்றவர்களாக பட்டங்களோடு அலைகின்றனர்.

இத்தகைய பல்கலைக்கழகங்கள் யு.ஜி.சி, அகில இந்திய தொழில்நுட்ப கழகம், இந்திய மருத்துவ கழகம் போன்ற பல கண்காணிப்பு குழுக்கள், அந்தந்த மாநிலங்களின் கவர்னர் மற்றும் உயர்கல்வி அமைச்சர்களின் நேரடி கண்காணிப்பில் இயங்குகின்றன. இத்தகைய கண்காணிப்பு குழுக்கள் இருந்தும் பல்கலைகழகங்கள் தரமற்று போனதற்கு ஊழலே முக்கிய காரணியாக திகழ்கின்றது. தற்பொதைய நிலையின் படி துணைவேந்தர் நியமனம் முதல் துப்புரவு பணியாளர்கள் நியமனம் வரை ஊழல் நிறைந்து நிற்கின்றது. உலகதரவரிசையில், தமிழகத்திலும் சரி, இந்தியாவிலும் சரி ஒரு பல்கலைக்கழகம் கூட வராததற்கு ஊழலும், அரசியல் ஊடுருவலும் மிகப்பெரிய காரணங்களாகும்.

கடந்த சில ஆண்டுகளில் ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் கூட அரசியல் தலையீடு இல்லாமல் பணியமர்த்தப்படவில்லை என்பது உண்மை. இந்தப் பணி நியமன லஞ்ச பேரத்தால் பல பல்கலைக்கழகங்கள் துணை வேந்தரின்றி ஸ்தம்பித்து நிற்கின்றன. அண்ணா பல்கலைக்கழகம், கலை மற்றும் உயர் படிப்பிற்கான சென்னை பல்கலைக்கழகம், ஆசிரியர் பணிக்கான பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஒரு ஆண்டாக பட்டமளிப்பு விழாக்கள் நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவின் படி படிப்பை முடித்த ஆறுமாதத்திற்குள் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட வேண்டும். பல்கலைக்கழக உயரிய பணிகளான துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுபாட்டு அதிகாரி, டீன் பொன்ற 3 வருட பணிகளுக்கு பல கோடிகளும், லட்சங்களும் லஞ்சமாக பெறப்படுகின்றன. இப்படி இருப்பின் மதிப்புமிக்க இப்பணிகளுக்கு நேர்மையாளர்கள், திறமையானவர்கள் எப்படி வரமுடியும். இது தவிர ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் மற்றும் ஆசிரியர் பணியான உதவிப் பேராசிரியர், இணைப்பேராசிரியர், பேராசிரியர் பணியிடங்கள் ஒன்று கூட ஊழல் பேரமின்றி நடைபெறுவதில்லை. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை (HRD) யால் இந்த ஆண்டு தமிழக பல்கலைக்கழக தரவரிசையில் முதலிடம் பெறப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கு ரூ. 45 லட்சம் வரை பேரம் நடைப்பெறுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளது. 

தற்போது எல்லா பல்கலைக்கழகங்களிலும் செய்யப் படுவதுபோல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திலும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் நடைபெற்று வருகின்றது. நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் இரண்டு நிமிடங்கள் கூட நேர்காணல் நடத்தபடவில்லை என கூறப்படுகிறது. தேர்வு கமிட்டியில் கவர்னரால் நியமிக்கப்பட்ட ஒருவர், அரசால் நியமிக்கப்பட்ட நான்குபேர், பல்கலை சார்பில் துணைவேந்தர், பாட வல்லுனர்களாக நான்குபேர், எஸ்சி - எஸ்டி பிரிவு சார்பில் ஒருவர், மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஒருவர் வீதம் 13 பேர் இருந்தும் பணிநியமனத்திற்கான தகுதியான கேள்விகள் எதுவும் கேட்கப்படாதது ஏற்கெனவே இப்பணிகளுக்கு ஆட்கள் தீர்மானம் செய்துள்ளதை நிரூபிக்கின்றது.

ஆசிரியர் பணி என்பது யார் லஞ்சம் அதிகமாக தருகிறார்களோ, அரசியல் மற்றும் அதிகார சிபாரிசுடன் வருகிறார்களோ அவர்களை நியமிப்பது அல்ல. அது ஒரு புனிதமான பணி, உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் யு.ஜி.சி. விதிமுறைப்படி நெட், ஸ்லெட், பி.எச்.டி. முடித்தவர்களும், இணைபேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர் பணியிடங்கள் யு.ஜி.சி. ஊதிய விகிதாச்சாரப் படி மற்றும் ஊதியம் தர ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டுமே நியமனம் பெற முடியும். ஆள் தேர்வுக்கான முடிவுகள் ஆட்சிக் குழுவின் (சின்டிகேட்) அனுமதிக்கு வைக்கப்படும்போது உறுப்பினர்கள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அப்படியிருப்பின் முறைகேடுகளை தடுக்கலாம். அப்படி தற்போது தமிழக பல்கலைகழகங்களில் ஆட்சிகுழு உறுப்பினர்களால் நியமன முறைகேடுகள் தடுக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. இப்படி பல பல்கலைக்கழகங்களில் நடந்தேறும் நிகழ்வுகள் தினமும் பத்திரிகைகளில் வெளியாகின்றன. அண்மையில் திருவள்ளுவர் பல்கலையில் கல்வி தகுதியே இல்லாத 3 நூலகர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட செய்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலமாகியுள்ளது.

வேலூர், திருவள்ளுவர் பல்கலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஆறு நூலகர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் யு.ஜி.சி அறிவித்த தகுதிகளை பெறவில்லை என புகார் எழுந்தது. இது குறித்து திருச்சியை சேர்ந்த கார்த்திகேயன் தகவல் அறியும் சட்டத்தில் மனுசெய்து விபரம் கேட்டார். பல்கலை நிர்வாகம் தங்களிடம் தகவல் இல்லை, சம்பந்தப்பட்ட நூலகர்கள் படித்த பல்கலைகளில் தகவல் பெற்று தருகிறோம் என கூறினர். இதையடுத்து நூலகர் கார்த்திகேயன் தகவல் ஆணையத்தில் மேல் முறையீட்டு மனு செய்தார். மாநில தலைமை தகவல் கமிஷ்னர் ராமானுஜம் விசாரித்து 20 நாள்களுக்குள் தகவல்கள் தர, ஜூலை, 25ல் பல்கலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து செப்டம்பர் 17-ல் திருவள்ளுவர் பல்கலை சார்பில் பதில் அனுப்பப்பட்டது. அதில் மூன்று நூலகர்களும் யு.ஜி.சியின் 2009-ம் ஆண்டு விதிமுறைப்படி பி.எச்.டி படிப்பை முடிக்கவில்லை. நெட், செட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வித் தகுதியை ஆராயாமல் பணி நியமனங்கள் நடந்துள்ளது அம்பலமானது. தகவல் கமிஷ்னர் கெடு விதித்த பின்பும், பதில் தர இரண்டு மாதங்கள் வரை பல்கலை நிர்வாகம் அவகாசம் எடுத்துள்ளது. அனுப்பிய பதில் கடிதத்தில் கோரப்பட்ட ஆவணங்களும் இணைக்கப்படவில்லை.

ஒவ்வொரு நாடுகளிலும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிக்காக மிகத் திறமைவாய்ந்த நபர்களை பிறநாடுகளில் இருந்தாவது வரவழைத்து அதிக சம்பளம் வழங்கி தங்கள் மாணவர்களுக்கு தரமிகு கல்வியையும், ஆராய்ச்சி அறிவுரைகளை வழங்கவும் நியமிக்கின்றனர். இந்தியாவிலோ லஞ்சம் பெற்றுக்கொண்டு திறமையில்லா நபர்களை நியமிக்கின்றனர். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திலும் இதே நடைமுறைதான். சமீபத்தில் கோவை அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணன், நாற்பதாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனைப் பெற்றுள்ளார். பெரிய அறிஞர்கள், பெருமக்கள், பெயர்களை தாங்கி நிற்கும் இத்தகைய பல்கலைக் கழகங்களின் பெயர்களையாவது மாற்றிவிடுவது அவர்களுக்கு நாம் செய்யும் சிறப்பு.

சில நாள்களுக்கு முன் தமிழகத்தில் 5451 அரசு வேலைக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.சி) நடத்திய குரூப் 4 பரிட்சையில் பத்தாம் வகுப்பு தகுதியுடைய வேலைக்கு 15 லட்சம் பேர் விண்ணப்பித்து, 12 லட்சத்து 60 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இவற்றில் கலை மற்றும் அறிவியல் பட்டம் பெற்றவர்களும் இன்ஜினியரிங், படித்தவர்களும், பி.எச்.டி படித்தவர்களும் 80 சதவீதத்திற்கு மேல் பங்கேற்றுள்ளனர். 10வது படித்தவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே இருந்தன. தரமற்ற கல்வி முறைகளும், வாரிவழங்கப்படும் பட்டங்களும், கல்வித்துறையில் ஊழலும், அரசியல் தலையீடுகளும் வரும் சந்ததியை மெல்ல மெல்ல நடைபிணங்களாக்கும். இந்நிலை தொடருமானால் இந்தியாவில் நிச்சயம் உள்நாட்டு தீவிரவாதம் பெருகும்.

 


2016 டிசம்பர் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை



Error
Whoops, looks like something went wrong.