தொடர்புடைய கட்டுரை

ஆதிவாசிகள் பாதுகாக்கும் மூலிகைத் தாவரங்கள்

சிதம்பரம் ரவிச்சந்திரன்

28th Mar 2019

A   A   A

நாம் அன்றாடம் காணும் பல தாவரங்களைப் பற்றிய முழுமையான அறிவு நமக்கு இருக்கிறதா என்றால் நம்மில் பலருக்கும் இலை என்றே சொல்லவேண்டிவரும். சாதாரணமான தாவரங்களைப் பற்றிய அறிவும், அவை நம் ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆற்றிவரும் அரும்பெரும் பங்கும் நம்மில் பலருக்கும் தெரிவது இல்லை. இத்தகைய ஒரு நிலையில், ஆதிவாசிகள் என்றால் எந்தவிதமான நாகரீகமும், அதிநவீன அறிவும் அற்ற ஒரு இன மக்களாகவே நம்மில் பலரும் கருதுகிறோம்.  ஆனால், உண்மையில் இயற்கையை நன்கு கற்றறிந்தவர்கள் அவர்களே ஆவர்.  ஆதிமனிதனின் முதல் வீடான காட்டைப் பற்றியும், அங்கு இயற்கையாக விளைந்து நிற்கும் அரியவகை தாவரங்கள் பலவற்றைப் பற்றியும் அறிந்தவர்கள் அவர்களே ஆவர். 

உலகம் முழுவதும் இன்று வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 84.3 மில்லியன் ஆதிவாசி மக்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.  10,000க்கும் கூடுதலான தாவரங்களை இவர்கள் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.  இவற்றில் 8000க்கும் மேற்பட்ட தாவரங்களை ஆதிவாசிமக்கள் மருத்துவப் பயன்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாக தெரியவருகிறது. இத்தகைய பல்வேறுவிதமான தாவரங்களைப் பற்றியும், அவற்றின் பாரம்பரியமான பயன்பாட்டு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றியும் உள்ள அறிவு விலைமதிக்க முடியாதது ஆகும்.. 

இன்று உபயோகித்து வரும் பற்பல அலோபதி மருந்துகளும் இத்தகைய பாரம்பரியமான சிகிச்சை முறைகளில் இருந்தும், அறிவுகள் மூலமும் நமக்குக் கிடைத்தவையே ஆகும். உதாரணமாக, மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்கு உதவுகின்ற மருந்து சிங்கோனா மரத்தில் இருந்து கிடைப்பதே ஆகும்.  இந்த அறிவு ஆன்டீஸ் ஆதிவாசிமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றதே ஆகும். இதைப்போலவே புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் வின்கிறிஸ்டின், வின்ப்லாஸ்ட்டின் ஆகிய மருந்துகளைத் தயாரிக்க துணைபுரிந்தது நித்தியக்கல்யாணி செடியைப் பற்றிய மடகாஸ்கர் தீவுகளில் வாழ்ந்த ஆதிவாசி சமூகத்தினரிடம் இருந்து நமக்குக் கிடைத்த அறிவாலேயே ஆகும். இதயத்தசைகளின் செயல்பாட்டோடு தொடர்புடைய, நரம்புகளின் செயல்பாட்டுக்கு உதவக்கூடிய டிஜாக்சின், சுவாசக்கோளாறுகளுக்கும், சுவாசப்புற்றுநோயான லுக்கிமீயா நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிற டெனாபோசைட் என்ற மருந்தும், வைரசுக்கு எதிராகப் பயன்படும் பிலோடாக்சின், இரத்த அழுத்தத்திற்காகப் பயன்படும் ரிசர்பின்,, கர்ப்பத்தடைமருந்தான ஔசிப்போன் போன்ற மருந்துகள் எல்லாம் ஆதிவாசிமக்களின் அறிவில் இருந்து நமக்குக் கிடைத்த சில அரியவகை மருந்துகள் ஆகும். 

கேரளாவில் ஆரோக்கியப்பச்சை என்ற செடியில் இருந்து அந்த மாநில அரசே ஜீவினி என்ற மருந்தை தயாரிக்கிறது.

வெவ்வேறு ஆதிவாசி சமூகங்களிலும், பல நாட்டுப்புற சமூகங்களில் இருந்தும் பல்வேறுவிதமான மருந்து பயன்பாடுகளும், சிகிச்சைமுறைகளும் இப்போதும் நாம் பயன்படுத்தி வருகிறோம். திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களில் வாழ்கின்ற ஆதிவாசி இனமக்களான காணிக்காரர்கள் பயன்படுத்தும் ஆவி சிகிச்சையும், விஷக்கல்லைப் பயன்படுத்தி விஷசிகிச்சை அளிக்கும் முறையும் இன்று பெரிதும் பயன்பட்டு வருகிறது. காசர்கோடு மாவட்டத்தில் விஷத்தை உறிஞ்சி எடுக்கும் பாரம்பரியமும் குறிப்பிடத்தக்கது ஆகும். தமிழகத்தில் கொல்லிமலை, நீலகிரி மலை மற்றும் பழனி மலைப்பகுதிகளில் வாழ்ந்துவரும் பல ஆதிவாசி சமூகங்களும், குடகு மலைப்பகுதியில் வாழ்ந்துவரும் ஆதிவாசி சமூகங்களும் இன்றும் தங்களின் ஆரோக்கியப் பாதுகாப்புக்காக பாரம்பரிய முறைகளையே பெரும்பாலும் பின்பற்றி வருகிறார்கள். 

இத்தகைய மகத்தான பாரம்பரியங்கள் எல்லாம் அழிந்துபோகாமல் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும்.  இவை அழிந்துபோக நாள்கள் அதிகம் தேவையில்லை. அத்தகைய அவலநிலையிலேயே இன்று இந்த சிகிச்சைமுறைகள் இருந்துவருகின்றன. இவற்றைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது அவசியமும், அவசரமும் ஆகும்.  இத்தகைய பாரம்பரிய அறிவுகளை அலட்சியமாக நினைக்காமல் இவற்றின் பின்னால் இருக்கும் அற்புதமான அறிவியல் ஞானத்தை உணர்ந்துகொண்டு இவை பற்றிய ஆராய்ச்சிகள் செய்யவும், வரும் தலைமுறைகளுக்காக இவற்றைப் பாதுகாத்துவைக்கவும் நாம் கடமைப்பட்டவர்கள் ஆவோம்.. நாம் இன்று சொகுசாக வாழும் வாழ்க்கைக்குப் பின்னால் நமக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்களின் கடினமான உழைப்பும், விடாமுயற்சியும், இன்றும் வாழும் ஆதிவாசிமக்களின் அர்ப்பணிப்பும், அபூர்வமான அறிவும் அடங்கியிருக்கிறது என்பதை நாம் என்றும் மறவாமல் இருப்போம்.. 

 


2018 ஜூன் மாத அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.