முதல் பெண் புகைப்பட நிருபர்

F.A.M. சேவியர்

21st Aug 2018

A   A   A

பெண் குழந்தைகளை வெறுத்த காலம் அது. பெண்கள் வீட்டைவிட்டு வெளியே சென்றால் குற்றம். கல்வி கற்றால் குற்றம் என்ற நிலை வழக்கில் இருந்த காலமது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு பெண்கள் கல்வி கற்று பல்வேறு துறைகளில் துளிர்விட ஆரம்பித்திருந்தனர். அவர்களுள் ஒருவராக 1930 புகைப்பட நிருபராக தன் பணியை துவக்கினார் ஹோமாய் வியாரவல்லா. அதிலும் இவர்தான் இந்தியாவிலேயே முதல் பெண் புகைப்பட நிருபர் என்ற சிறப்புடன்.

ஹோமாய் வியாரவல்லா, குஜராத் மாநிலத்தின் நவ்சாரி என்ற கிராமத்தில் 1913 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் நாள் பிறந்தார். இவர் தனது துவக்கக் கல்வியை சூரத் நகரில் பெற்றார். இவரது தந்தை ஒரு உருது பார்சி நாடக கம்பெனியில் பணியாற்றினார். 1930 ஆண்டு வாக்கில் இவர்களது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. பின்னர், இவர் தனது பட்டயப்படிப்பை மும்பையில் உள்ள புகழ்பெற்ற ஜே.ஜே.காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸில் பெயிண்டிங்கில் முடித்தார்.

இவரது நண்பராக இருந்த மானெக்‌ஷா வியாரவல்லா தான் புகைப்படம் எடுப்பதில் இவரது குருவாக இருந்தார். பின்னாளில் ஹோமாய் அவரையே திருமணம் செய்து கொண்டார். மானெக்‌ஷா ஒரு புகைப்படக் கலைஞர். ’டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பணியாற்றி வந்தார். இந்தியாவில் முதன்முதலில் படங்களால் நிகழ்வுகளைச் சொல்லும் முறையை பத்திரிகைகளில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். ஹோமாய் எடுக்கும் புகைப்படங்களை முதலில் பார்த்து ரசிப்பவரும் அவரது கணவர் தான் என்று ஹோமாய் பல்வேறு தருணங்களில் குறிப்பிட்டுள்ளார்.

ஹோமாய் எடுத்த புகைப்படங்களை பத்திரிகைக்கு அனுப்பச் சொல்லி ஹோமாயை ஊக்கப்படுத்தியதும் இவரது கணவர் தான். 1938ல் தனது முதல் புகைப்படம், ‘பாம்பே கிரானிக்கிள் பத்திரிகையில் வெளியானதையொட்டி துறையில் காலடி எடுத்து வைத்த ஹோமாய்க்கு அதன்பின் வரிசையாய் வெற்றிகள்தான். அதன் பின் ஹோமாய் பிரிட்டிஷ் இன்ஃபர்மேஷன் சர்வீஸஸ் நிறுவனத்துக்கு புகைப்படக்காரராய் பணியாற்றினார். ‘இல்லஸ்ட்ரேட்ட் வீக்லி ஆஃப் இந்தியாவில் அவரது படங்கள் தொடர்ந்து வெளிவந்தன.

ஹோமாயின் தாய் அவரை பிற பெண்களைப் போல திருமணம் செய்து கொடுத்துவிடாமல் படிக்க வைக்கவேண்டும் என்பதில் குறியாய் இருந்து தன் பெண்ணை படிக்க வைத்தார். சிறுவயதிலிருந்தே இருபாலார் பயிலும் பள்ளியில் படித்ததாலோ என்னவோ ஆண்களிடம் பேசுவதிலும், பழகுவதிலும் ஹோமாய்க்கு ஒருபோதும் சிக்கல் இருந்ததில்லை. தனது தொழிலில் பல ஆண்களுக்கு மத்தியில் ஒரே பெண்ணாக அவர் வேலை செய்தார். ஆண்களின் ஆதிக்கம் மிகுந்த துறையில் ஒரு பெண்ணாக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதில் பல சிக்கல்கள் உண்டு. சில சமயங்களில் பெண் எடுத்த படம் என்றால் வெளியிட முடியாது என்று பத்திரிகைகள் மறுத்த சந்தர்ப்பங்களில் தன் கணவர் மானெக்‌ஷா பெயரில் தன்னுடைய படங்களை பத்திரிகைகளில் வரவைத்தவர் ஹோமாய.

அமர்நாத்துக்கு சுற்றுலா சென்றபோது தன்னுடன் வந்த சக பெண்களை அவர் எடுத்த படம்தான் முதன்முதலில் வெளியான படம். சுதந்திர இந்தியாவில், செங்கோட்டையில் நடந்த முதல் கொடியேற்றத்தைப் படம் பிடித்தவர் ஹோமாய். இந்திரா காந்தி தன் தந்தை நேருவுடன் இருந்த தருணங்கள், நேரு மற்றும் லால்பகதூர் சாஸ்திரியின் இறுதி நிகழ்வுகள், இரண்டாம் உலகப் போருக்கான தயாரிப்புகள், ஜாக்குலின் கென்னடியின் இந்திய வருகை, 1956ல் தலாய் லாமாவின் முதல் இந்திய வருகை, பாகிஸ்தான் பிரிவினைக்கு ஒப்புதல் அளித்த காங்கிரஸ் கூட்டம், மவுண்ட் பேட்டன் கவர்னர் ஜெனரலாக பதவியேற்ற தருணம், பிரதமர் பதவியேற்றபின் நேரு நிகழ்த்திய உரை, வெளிநாட்டுத் தலைவர்களின் இந்திய வருகை என்று இவர் பல வரலாற்று சம்பவங்களுக்கு சாட்சியாய் இருந்து தனது ரோலிஃப்ளெக்ஸ் கேமிராவில் படம்பிடித்திருக்கிறார். பிரிட்டிஷ் ஹைகமிஷனரின் மனைவிக்கு சிகரெட் பற்றவைக்க உதவும் நேருவின் புகைப்படம் ஹோமாயின் பிரபலமான படங்களில் ஒன்று.

காந்தியின் இறுதிநொடிகளை படம் பிடிக்க இயலாமல் போனது ஹோமாய்க்கு வாழ்நாள் வருத்தமாக மாறிப்போனது. காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30, 1948 அன்று காலை அவரது ஆசிரமக் கூட்டத்தை பதிவு செய்யும்பொருட்டு கிளம்பிய இவரை தடுத்து அவரது கணவர், மறுநாள் இருவரும் சேர்ந்துபோய் ஒருவர் வீடியோவும், ஒருவர் நிழற்படமும் எடுக்கலாம் என்று யோசனை சொல்ல இவரும் ஒப்புக்கொண்டு இருந்துவிட்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில் காந்தியின் மரணச் செய்தி வெளியானது. ஆனால் அதை ஈடுசெய்யும் வண்ணம், காந்தியின் அஸ்தியை கரைப்பதற்காக ரயிலில் கொண்டு சென்றபோது அவர் எடுத்த படங்கள் சாகாவரம் பெற்றவை.

நியூஸ் கேமிராமேன் அசோசியோஷனை உருவாக்கியவர்களில் ஒருவர் ஹோமாய். 1973க்குப் பிறகு தன் தொழிலைக் கைவிட்டார். ”எங்கள் காலத்தில் இருந்தது போல தொழில்நேர்மை இல்லாததால், அவர்களோடு சேர்ந்து நானும் வேலை செய்வது மனதுக்கு ஒப்பவில்லை. அதனால் தொழிலை கைவிட்டேன்,” என்பது அதற்கு அவர் கூறிய காரணமாகும்.

மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்த ஹோமாயின் வாழ்க்கை வரலாற்று நூல் “India in Focus: Camera Chronicles of Homai Vyarawalla” என்ற பெயரில் வெளியான பிறகுதான் இவரைப்பற்றிய தகவல்கள் பிரபலமாகின. அதன்பிறகே மத்திய அரசின் ’பத்ம விபூஷன்’ விருது இவருக்கு வழங்கப்பட்டது. ஆம் 2011 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டில் இவருக்கு பத்ம விபூஷன் விருதினை வழங்கினார்.

1969ல் அவரது கணவர் இறந்துவிட, அதன்பின் தன் மகனுடன் குஜராத் மாநிலம் வடோதராவில் வசித்துவந்தார். அவரது ஒரே மகனும் புற்றுநோய் தாக்கி 1989ல் இறந்துவிட, தனிமரமானார் ஹோமாய். இறுதிவரை யாருடைய துணையையும் எதிர்பார்க்காமல் தனியாகவே வாழ்ந்துவந்தார். ”என் சமையலறைதான் என்னுடைய மருத்துவமனை. எந்த நோயும் அண்டாத அளவுக்கு என் உணவுப் பழக்கத்தை வைத்துள்ளேன் என்று ஒரு பேட்டியில் ஹோமாய் கூறினார். வீட்டில் தனியாக வாழ்ந்துவந்த ஹோமாய் படுக்கையிலிருந்து தவறி விழுந்ததில் இடுப்பு எலும்பு உடைந்து பல மணிநேரம் யாரும் கவனிக்காமல் இருந்து, பின்னர் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இருந்தும் மூச்சுக்கோளாறு ஏற்பட்டு தனது 98 வது வயதில் 2012 ஜனவரி 15 ஆம் தேதி மரணமடைந்தார்.

இன்று பெண்கள் சர்வ சாதாரணமாக பணியாற்றும் புகைப்பட பத்திரிகையாளர் துறையில் இளையவர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து சென்றவர் ஹோமாய் வியாரவல்லா.

 


ஆகஸ்ட் 2017 அமுதம் இதழில் வெளியானது…



Error
Whoops, looks like something went wrong.