வாழ்வை புரட்டிப்போடும் ஆன்மீக சிந்தனைகள்

Dr. பா. நாகராஜன்

29th Mar 2019

A   A   A

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு தனியார் மருத்துவமனையில் முப்பதெட்டு வயது மதிக்கத்தக்க பெண்மணியை வசதிகள் நிறைந்த குளிரூட்டப்பட்ட அறையில் வைத்து சிகிட்சை கொடுத்துக் கொண்டிருந்தேன்.   

இவரது வியாதி உருவான கதையை பார்ப்போமா?

ஏழெட்டு வருடங்களாக ஒரு அரபு நாட்டில் கணவருடன் வசித்து வருகிறார் அந்த பெண். கணவர் நல்ல ஒரு வியாபாரம் செய்து பணம் ஈட்டி வருகிறார். இரு குழந்தைகள் உள்ளனர். வயதுக்கு வந்த பையனும், சிறிய பெண் குழந்தையும் உண்டு. கணவர் இவரை அடிக்கடி வெளியிடங்களுக்கு கூட்டிச்செல்ல முடியாத அளவுக்கு பிசியானவர். அக்கம் பக்கம் தெரிந்தவர்கள் வீட்டிற்கு தன் மகளுடன் சென்று வருவது வழக்கம். அப்படியாக ஒருமுறை மெக்கா வரை சென்று வந்திருக்கிறார்.

கடந்த எட்டு மாதங்களாக வேலை எதுவும் செய்யாமல் தனி அறைக்குள்ளேயே அடைந்து கிடந்திருக்கிறார். இரவு முழுவதும் ஆண்டிராய்டு மொபைலை வைத்து பொழுதை கழித்திருக்கிறார். இரவு முழுவதும் மொபைலை வைத்துக்கொண்டிருந்து விட்டு பகலில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். பகலில் பசிக்கும் போது பெப்சி, பீட்சா என சாப்பிட்டு விட்டு வேலை எதுவும் செய்யாமல் தனது தனி உலகில் வாழ்ந்திருக்கிறார். அவரை சட்டென இங்கு கூட்டிக்கொண்டு வர முடியாதபடி சில விசா சிக்கல்கள் இருந்ததால் பல நாட்கள் கழித்துதான் இங்கு வந்து சேர்ந்தனர்.

5 நாட்களாக என்னிடம் கூட்டிவர மிக சிரமப்பட்டு குண்டுகட்டாக (ஏறக்குறைய) தூக்கிக்கொண்டு வந்தனர். நான் தொலைபேசி வழியாக சம்பந்தப்பட்ட செவிலியரிடம் ஊசிபோட சொன்னதற்கு மருத்துவரே நேரில் வந்தாலொழிய ஊசி போட்டுக்கொள்ள முடியாது எனக் கூறிவிட்டார். நான் சென்றபோது ஒரே கூச்சலும், ஆர்ப்பாட்டமும், அலைக்கழிப்புமாக இருந்தார். ஊசி போடுவதற்கு முன் செவிலியரும், மருத்துவரும் மட்டும் இருந்தால் போதும் வேறு எவரும் உள்ளே இருக்கக் கூடாது என்று கூறிவிட்டார். எனக்கு உள்ளூர பயம்தான். ஏனெனில் ஒருசில மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரை தாக்குவதும் உண்டு. என்னவோ நல்ல வேளையாக ஊசி போடுவதற்கு ஒத்துக் கொண்டார். ஊசி போட்டபின் வெளியே வந்து அவர்களது உறவினர்களிடம் விபரங்களை கேட்டேன்.

இந்த பெண்மணி மிகுந்த பக்தியுடன் இருப்பதாகவும், அத்தகைய பக்தியினால் தனக்கு ஞானம் கிடைத்துவிட்டதாகவும், அத்தகைய ஞானம் பெற்ற இன்னொரு மிக பிரபலமான நபர் தன்னை காதலிப்பதாகவும் தன்னுள் ஓர் அசையாத நம்பிக்கையை ஏற்படுத்தி வைத்துள்ளார். அந்த பிரபல நபரை தான் மணந்துகொள்ள விடாதபடி இன்னொரு பிரபல நபர் தடுக்க சதிசெய்து கொண்டிருக்கிறார் எனக் கூறிக் கொண்டிருக்கிறார். ஒரு நாளோ, ஒரு மாதமோ மட்டுமல்ல ஏறக்குறைய எட்டு மாதங்களாக இதே கனவுலகில் மிதந்து கொண்டிருக்கிறார்.

கணவரை விவாகரத்து செய்ய போவதாகவும், அந்த பிரபல மனிதரை திருமணம் செய்ய போவதாகவும் கொஞ்சம் கூட நாணமின்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருடன் அம்மருத்துவமனையில் ஒரே சமயத்தில் ஆறேழு உறவினர்கள் இருந்து கொண்டிருந்தார்கள். அத்தனை பேரிடமும் இதே காரியத்தைத்தான் திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார். அவர் சிறிதும் கூச்சமின்றி மீண்டும் மீண்டும் அதே விசயத்தை கூறிக் கொண்டிருப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் இவர் எத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கிறார் என்று.

தினமும் இருமுறை அவரது அறைக்கு சென்று வேண்டிய மருந்துகளும் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அவரது மனக்கிடக்குகளை வெளியே கொண்டுவந்து கொண்டிருந்தேன். இந்த அசைக்க முடியாத நம்பிக்கை எந்த அளவுக்கென்றால், நாம் இறைவனிடம் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஈடாக கொள்ளலாம். ஏனெனில் நாம் கடவுளிடம் வைத்திருக்கும் நம்பிக்கை எள்ளளவும் அசையாதபடி உள்ளதல்லவா, அது போன்றே இறைவன் இல்லை என்பதும் ஒரு சிலரது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இது போன்றே நாம் ஒவ்வொரு காரியத்திலும் நமக்கு பிடித்த அல்லது பிடிக்காத செயல்பாடுகளில், கருத்துக்களில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளோம்..

இப்படியான உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்தால் அது அசைக்க முடியாத நம்பிக்கையாகி நம்முள் வேரூன்றி விடுகிறது. இதற்கு பெயர் டெலூஷன் (Delusion) என்று கூறுவர். மேற்படி இப்பெண்ணிற்கு இருப்பது Dulusionare disorder என்பதாம். இத்தகையோர் பொதுவாக தன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரையுமே சந்தேகப்படுவதுண்டு. அப்பெண்மணியின் உறவினர் ஒருவரிடம் கேட்டதற்கு இவர் குடும்பத்தில் மூன்று தங்கைகளை அதாவது கணவரின் தங்கைகளை மணமுடித்து அவர்களுக்கு வேண்டிய அனைத்தும் செய்து இரண்டு மூன்று பிரசவங்களையும் பார்த்து பொறுப்பாக இருந்தவர். ஆதலால் இப்பொழுது நாங்கள் இவ்வளவு தூரம் அக்கரையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் என கூறினார். இவரது ஆசைக்காக மசூதிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு பின்பு கூட்டிச் சென்றனர். பேய்க்கும், நோய்க்கும் ஒரே சமயத்தில் பார்ப்பதொன்றும் தவறல்லவே!

 


2018 ஜூன் மாத அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.