ஸ்மார்ட் பான்டேஜ்

சிதம்பரம் ரவிச்சந்திரன்

13th Aug 2018

A   A   A

மருத்துவத்துறையில் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் மனித நலத்தை மேம்படுத்துவதற்கான ஆய்வுகளும், அதற்காக அளிக்கப்படும் சிகிச்சை முறைகளும் எவ்வாறு மேம்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றி ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அறுவைசிகிச்சை, புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பு, நோய் அறிகுறிகளை கண்டறிதலை விரைவாக மேற்கொண்டு சிகிட்சையை சீக்கிரமாகவே தொடங்குவது எப்படி, நவீனமான கருவிகளை கொண்டு நோயாளியே தன் உடல்நல பாதிப்பை பற்றி ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து கொள்ளுவது எப்படி என்பது போன்ற பல்வேறு பிரிவுகளில் பல நாடுகளிலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் எல்லாம் வித்தியாசமாக சாதாரணமானவர்களும் அடிக்கடி காயம் பட்டால் பயன்படுத்தும் சில விஷயங்களை பற்றியும் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. காயம் பட்டால் சாதாரணமாக நாம் உபயோகிக்கும் பான்டேஜ் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த ஸ்மார்ட் பான்டேஜில் பல்வேறு புரட்சிகரமான விஷயங்களும் அடங்கியிருக்கின்றன.

இந்த வகை பான்டேஜ் தானாகவே மருத்துவரின் உதவியின்றி காயம் அல்லது புண்ணினுடைய தன்மையை பற்றி தொடர்ந்து கண்காணிக்கும். இதற்காக இந்த பான்டேஜில் உணரிகள் (sensors) பொருத்தப்பட்டிருக்கின்றன. இவை புண்ணில் இருக்கக்கூடிய ஆக்சிஜனுடைய அளவு, அதில் இருக்கக்கூடிய அமிலத்தன்மையுடைய அளவு, புண் எந்த வெப்பநிலையில் இருக்கிறது என்பது போன்ற பல விஷயங்களை கண்காணித்து உணர்ந்துகொள்ளும் ஆற்றல் வாய்ந்தது ஆகும். இந்த பணி தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கும். இந்த பான்டேஜுடைய பின்புறத்தில் புண்ணை அல்லது காயத்தை ஆறவைப்பதற்கான சரியான மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும்.

இந்த மருந்தை எந்த அளவுக்கு காயத்தின் அல்லது புண்ணின் மீது தெளிப்பது என்பதை பற்றி இந்த பான்டேஜின் பின்பக்கத்தில் இதற்கு என்று அமைக்கப்பட்டிருக்கும் ஒரு வெப்பமானி முடிவு செய்கிறது. அதாவது குறிப்பிட்ட அந்த காயத்தை குணப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அந்த மருந்தை செலுத்தவேண்டும் என்று ஸ்மார்ட் பான்டேஜ் முடிவு செய்துவிட்டால் உடனடியாக பான்டேஜுடைய பின்புறம் சூடாகிவிடும். இவ்வாறு சூடானவுடன் மருந்து துகள்கள் சுருங்கும். அவ்வாறு மருந்துடைய துகள் சுருக்கமடையும்போது அவை நேரடியாக காயத்துக்குள் செலுத்தப்படுகிறது. இந்த பான்டேஜ் தேவைப்பட்டால் தானாகவே மருத்துவரையும் தொடர்பு கொள்ளும் வசதியையும் பெற்றிருக்கிறது. புண் அல்லது காயத்தில் ஏதாவது பிரச்சனை என்று இந்த அதிபுத்திசாலி பான்டேஜ் கண்டுபிடித்தால் உடனடியாக இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொலை தகவல் தொடர்பு கருவியின் மூலம் காயத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை பற்றி மருத்துவருக்கு உடனடியாக தகவல் அனுப்பிவிடுகிறதுஎடுத்துக்காட்டாக புண்ணில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றால் இந்த விஷயத்தை உடனே அந்த ஸ்மார்ட் பான்டேஜ் கண்டுபிடித்து இது பற்றிய தகவலை மருத்துவருக்கு அனுப்பிவிடுகிறது.

தகவல் கிடைத்தவுடன் மருத்துவர் உடனடியாக பான்டேஜில் இருக்கக்கூடிய மருந்துடைய அளவை அதிகப்படுத்துவதற்கோ அல்லது மருந்து போடவேண்டிய கால இடைவெளியை குறைப்பதற்கோ பான்டேஜுக்கு அறிவுரை வழங்குகிறார்அதனால் இந்த ஸ்மார்ட் பான்டேஜ் மூலம் தொலை தூரத்தில் இருந்தபடியே மருத்துவரால் கண்காணிக்க முடிகிறது. காயம் ஆறுவதற்கு தேவையான சரியான அளவு மருந்தையும் காயத்தில் இடமுடிகிறதுஇது நடைமுறைக்கு வரும்போது அதனால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.

பான்டேஜை சாதாரணமாக போடும்போது அவ்வப்போது பிரித்து திரும்ப திரும்ப வேறு பான்டேஜ்களை பயன்படுத்தி காயத்துக்கு கட்டு போடவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறதுஆனால் இந்த ஸமார்ட் பான்டேஜில் இந்த மாதிரி பிரச்சனைகள் எதுவும் ஏற்படுவது இல்லை. காயம் படும்போது பாதிக்கப்பட்டவர் ஒரு தடவை மட்டும் வந்து மருத்துவரை பார்த்து இந்த ஸ்மார்ட் பான்டேஜை போட்டுக்கொண்டு விட்டால் போதும்மறுபடியும் வந்து பான்டேஜுக்காக அலையவேண்டியது இல்லை. இதனால் பொருளாதார லாபமும், அலைச்சலும் மிச்சமாகிறது. அதோடு அடிக்கடி நோய் தொற்றுள்ள பான்டேஜ்களை சூழலில் அப்படியே விட்டுவிடும் போது உருவாகக்கூடிய சூழல் கேட்டையும் இதன் மூலம் குறைக்க முடிகிறது. அடிக்கடி மருத்துவமனையை நோக்கி படையெடுப்பதால் உருவாகும் போக்குவரத்து நெரிசலும், எரிபொருள் செலவும் தவிர்க்கப்படுகிறது. எரிபொருள் சேமிக்கப்படுவதுடன் சூழல் மாசடைவதும் தடுக்கப்படுகிறது. அடிக்கடி பான்டேஜ்களை கழற்றி எறிவதால் ஏற்படும் மருத்துவமனை கழிவுகளும் பெருமளவில் இதனால் குறைந்துவிடும். இதுவும் சூழலுக்கு நன்மை செய்யக்கூடியதே ஆகும்

இப்படி பலவிதங்களிலும் நமக்கு உதவக்கூடிய ஸ்மார்ட் பான்டேஜ் போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகள் நமக்கும், நாம் வாழும் சூழலுக்கும் நல்லது செய்யும்போது அதை இருகரம் கூப்பி வரவேற்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்இது போன்ற உலக சமுதாயத்துக்கு உதவக்கூடிய ஆராய்ச்சிகளுக்கு தாராளமாக நிதி அளிக்கப்பட வேண்டியதும் அவசியம் ஆகும். எப்படி இருந்தாலும் ஸ்மார்ட் பான்டேஜ்கள் போல இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாகட்டும் என்று மனதார வாழ்த்துவோம்வரவேற்போம்..      

 


அக்டோபர் 2017 அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.