தொடர்புடைய கட்டுரை

சரியான திசையை காட்டுங்கள்

அதிமேதாவி ஆனந்தன்

15th Oct 2019

A   A   A

ஒருவர் கூடவா நல்லவிதமா சிந்திக்கக் கூடாது. சிந்தித்தபடி நடந்துகொண்டிருந்தேன். ’ஒருவேளை வேலை கிடைக்கலனா?’ என்று வேலை இண்டர்வியூக்கு செல்லும் என் அக்கா மகனிடம் கேட்கிறார், பக்கத்து வீட்டு ராமு மாமா. எப்படி தோன்றியது, இப்படி ஒரு விசயத்தை கேட்க.

கோபம் கோபமாக வந்தது. ’போறகாரியம் நல்லவிதமா நடக்கட்டும்னு ரெண்டு நல்ல வார்த்தை சொல்வார்னு பார்த்தா... பெரியவர்னு நெனச்சது தப்பா போச்சு… முனங்கியபடி நடந்து கொண்டிருந்த என் தோளினை தட்டி நிறுத்தினார் மிஸ்டர் அனுபவம்.

“என்ன ஆனந்தா, ரொம்ப கோபமா இருக்க போல.” என்றவரிடம்...

“ஆமாம் மிஸ்டர் அனுபவம். ரொம்ப கோபமா இருக்கேன். ஒருவர் மனதில் கூட நல்ல எண்ணங்கள் இல்லை. எல்லோரும் குப்பைகளையே சுமந்து கொண்டிருக்கின்றனர்.” எரிச்சல் மேலிட கூறினேன்.

சிரித்தவர் “ஒருவர் கூடவா இல்லை என்றார் என் முகத்தைப் பார்த்தப்படி.

ஆம் என்பதா, இல்லை என்பதா தெரியாதவனாக புருவத்தை உயர்த்தினேன்.

இப்போதும் சிரித்தார். “ஒருவேளை இன்னும் கொஞ்ச நேரம் நீ அவரை பேச விட்டிருந்தால் அவரது இன்னொரு முகமும் தெரிந்திருக்கும். இதில் கொஞ்சம் சைக்காலஜியும் இருக்கு. இந்த முயற்சி பொய்த்துப் போனால் இவன் தொடர்ந்து முயற்சி செய்வானா? எப்படிபட்ட மனநிலையுடன் இவன் வேலை தேடுகிறான் என்பதை தெரிந்துகொள்ள அவர் அப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கலாம். நீ பொறுமை இழந்து இடைமறித்து உன் அக்கா மகனை பதில் சொல்ல விடாமல் அழைத்து வந்துவிட்டாய்.”

இருக்கலாமோ. அவர் அனுபவசாலியும் கூட. பிரபல கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ’சே நான் தான் அவசரப்பட்டு விட்டேனோ.’ எனக்குள் மீண்டும் குளம்பினேன்.

“பொதுவாக இளைஞர்கள், முதன்முதலில் வேலைக்கான நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொள்ள செல்லும்போது மிகுந்த நம்பிக்கையுடன் செல்வர். இதை நம்பிக்கை என்பதைவிட ‘கனவு என்ற வார்த்தையால் குறிப்பிடுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதன் அளவு உண்மை நிலவரத்துக்கு கொஞ்சம் அதிகமாக கூட இருக்கலாம்.

அப்படியான நம்பிக்கை அல்லது கனவு பொய்க்கும் போது மிகவே நிலைகுலைந்து போகின்றனர். அடுத்த நிலைகளை எதிர்கொள்ள தயங்குகின்றனர். அதைத் தெரிந்துகொண்டு, ஏதாவது உபயோகமான ஆலோசனைகள் வழங்க யோசித்திருப்பார். இன்றைய இளைஞர்கள் தோல்விகளை எதிர்கொள்ளும் மன பக்குவம் இல்லாதவர்களாவே இருக்கின்றனர்.”

“ஏன், அப்படி அளவுக்கதிகமான நம்பிக்கை கொள்கின்றனர்.” புரியாதவனாக கேட்டேன்.

“பெரும்பாலும் அதற்கு காரணம் பெற்றோர்கள் தான். என்ன படிக்கலாம் என்ற தேடலில் ஈடுபடும் தருணத்தில் இளைஞர்களுக்கு அவர்களது பெற்றோர், நல்ல நிலையிலிருக்கும் பலரை உதாரணம் காட்டி, அந்த பிரிவை எடு… இந்த பிரிவை எடுத்து படி. எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று ஆசை காட்டுகின்றனர். தான் உதாரணம் காட்டிய நபர் எப்படி நல்ல வேலையில் சேர்ந்தார்? அதற்காக எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தார்? என்னென்ன கூடுதலாக படித்தார்? என்று இவர்களும் தெரிந்து கொள்வது கிடையாது. தங்கள் பிள்ளைகள் தெரிந்துகொள்ள வழி ஏற்படுத்தி கொடுப்பதும் கிடையாது.”

“இப்போது நீங்கள் சொல்வது உண்மைதான். வேலைதேடும் ஒவ்வொருவரும் எவ்வளவோ அனுபவங்களை பெற்றும், எவ்வளவோ விஷயங்களை தெரிந்துகொண்டும், மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கின்றனர் என்பது உண்மையே. அதை நாம் தெரிந்து கொள்வதும் இல்லை. பிறருக்கு சொல்லிக்கொடுக்க தெரிவதுமில்லை.”

“முதலில் நாம் மாணவர்களை தவறாக வழிநடத்துவதை விட வேண்டும். அவர்களின் திறன்களை அவர்கள் உணரச் செய்து, அவர்களாக என்ன படிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய உதவ வேண்டும். அப்போதுதான் அவர்களாக அதற்கு மேலே என்ன படிக்க வேண்டும். என்ன தேவை என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்கள். தெரிந்து கொள்வார்கள்.

அந்நிலை ஏற்பட்டால்தான் உண்மையான தகுதியுடன் இளைஞர்களால் நேர்முக தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்.”

“சில இளைஞர்கள் எதுவும் தெரியாத நிலையில் தவிக்கின்றார்களே? அவர்களுக்கு நம் ஆலோசனை தேவைப்படுகிறதே?”

“ஆம் ஆனந்தா. சில இளைஞர்கள் அப்படி இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், அவர்கள் தெரியாமல் அப்படி இருக்கவில்லை. தாங்கள் எடுக்கும் முடிவு சரியானது தானா என்ற சந்தேகத்தில் தான் இருக்கின்றனர். அப்படி பட்டவர்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும் என்றாலும் கூட, அவர்களின் தனித் திறன் எதில் இருக்கிறது என்பதை கண்டறிந்து, அதற்கேற்ற துறைகளை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு ஆலோசனை வழங்க தெரிந்திருக்க வேண்டும். அப்படி செய்ய தெரியவில்லையானால், அவர்களைப் போன்றே நாமும் தெரியாது என்று கை விரித்துவிட வேண்டும்.

“என்ன நான் சொல்வது சரிதானே...” கேள்வியுடன் என் முகத்தை பார்த்தார்.

“சரிதான்.” என்றபடி என் வழியில் நடக்கலானேன்.

 


2016 டிசம்பர் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை