தொடர்புடைய கட்டுரை

சட்டத்தை மாற்ற வேண்டும்..?

அதிமேதாவி ஆனந்தன்

16th Oct 2018

A   A   A

பக்கத்து வீட்டில் கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது. இரண்டு சிறுவர்கள் கையாள்களாக வேலை செய்து கொண்டிருந்தனர். பார்த்ததும் சமீபத்தில் செய்திதாளில் பார்த்த செய்தி நினைவுக்கு வந்தது. அதாவது சிறுவர்களை வேலைக்கு அனுப்பினால் பெற்றோருக்கு தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது தமிழக அரசு.

ஆனால், இந்த சிறுவர்களைப் பார்த்தால் ஏழ்மையில் வேலை செய்பவர்கள் போல் தெரியவில்லை. விசாரித்ததில் ஒருவன் ஒன்பதாம் வகுப்பும், இன்னொருவன் பத்தாம் வகுப்பும் படிக்கின்றனராம். விடுமுறை நாட்களில் இதுபோல் வேலைக்கு வருவது வழக்கமாம்.

’சரி இப்படி உடலுழைப்பு தொடர்பான வேலைகளில் சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது என கூறும் அரசு, திரைப்படத்துறையில் சிறுவர்கள் நடிகர்களாக பணியாற்றுவதற்கு என்ன செய்யும்.’ திடீரென்று ஒரு கேள்வி எழுந்து மறைந்தது.

”திரைப்படத்துறையில் சிறுவர்கள் பங்காற்றுவதை பற்றி பிறகு யோசிக்கலாம் ஆனந்தா. சிறுவர்கள் எதற்காக எந்த சூழ்நிலையில் வேலைக்கு செல்கின்றனர்? அவர்கள் ஓடி விளையாட வேண்டிய வயதில் எதற்காக இப்படி உடலை வருத்தும் வேலைகளை செய்கின்றனர் என்றல்லவா யோசிக்க வேண்டும்!” பல கேள்விகளை ஒரே நேரத்தில் கேட்டபடி வந்தார் மிஸ்டர் அனுபவம்.

”சரிதான் அப்படியும் யோசிக்க வேண்டுமே என்றேன் நான் பதிலுக்கு.

”உனக்கு தெரியுமா ஆனந்தா பல வீடுகளில் கடுமையாக உழைத்தும் இரண்டு வேளை உணவு உண்பதே கடினமானதாக இருக்கிறது அவர்களுக்கு. பல தொழில்களுக்கு வேலைக்கு தகுந்த கூலி கிடைப்பதில்லை. அதையெல்லாம் அரசும் கண்டுகொள்வதில்லை. மக்களும் புரிந்துகொள்வதில்லை. ஒரு வீட்டில் உள்ள அப்பா, அம்மா, பிள்ளைகள், தாத்தா, பாட்டி என அனைவரும் சேர்ந்து உழைத்தால் தான் கொஞ்சமாவது நல்ல உணவும் உடையும் கிடைக்கும் என்பது பல இடங்களில் நடைமுறையாக உள்ளது.

”சமுதாயத்தின் ஒரு பகுதியினர் வாங்கும் அதிகப்படியான ஊதியம், விலைவாசியை, ஏழைகள் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்த்தி விடுகிறது. அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டுமானால் வீட்டில் எல்லோரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது இவர்களுக்கு.”

”சிலபேர் அதிகமாக சம்பாதிப்பதால் தான் ஏழைகள் துன்பப்படுகிறார்கள் என்கிறீர்களா?”

”அதுவும் ஒரு காரணம் என்றுதான் சொல்ல வந்தேன். உதாரணமாக. அரசுத் துறையை எடுத்துக்கொண்டால், ஒரு மேலதிகாரி வாங்கும் சம்பளத்திற்கும், கடைநிலை ஊழியர் வாங்கும் சம்பளத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

”மேலும் கடைநிலை ஊழியர்களுக்கு மிகக் குறைவான ஊதியம் வழங்கும் தொழிற்கூடங்கள் அதிகமாக இருக்கின்றன.”

”அதனால் சிறுவர்களை வெலைக்கு அனுப்புவது தவறு இல்லை என்கிறீர்களா?” என் கேள்வியில் நியாயம் இருப்பதாக தோன்றியது எனக்கு.

”அப்படி சொல்லவில்லை ஆனந்தா, சட்டம் போட்டு ஒரு செயலை தடுத்து விடலாம் என்று நினைப்பதைவிட. அந்த செயல் எதனால் நடைபெறுகிறது என்பதை ஆராய்ந்து அதை சரிசெய்ய முற்பட வேண்டும் என்பதே இன்றைய தேவையாக இருக்கிறது. அதைத்தான் சொல்கிறேன்..”

”அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்? அரசாங்கம் அல்லவா அதற்கான முயற்சியை செய்ய வேண்டும்.” கொஞ்சம் ஆவலுடன் கேள்வியை முன்வைத்தேன்.

”ஏன் முடியாது. எல்லாவற்றையும் அரசாங்கம் தானாக செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டிராமல் இதுபோல் தேவைப்படும் சட்டத்திருத்தங்களை கொண்டுவரச் சொல்லி அரசை தொடர்ந்து கேட்கலாம். வற்புறுத்தலாம் அப்படி கேட்கும்போது அரசுகள் அவற்றைப் பற்றி ஆராய்ந்து சரியான சட்ட திருத்தங்களை கொண்டுவருவார்கள். அனைத்தும் நாம் விரும்பிச் செய்யும் முயற்சியில் தான் இருக்கிறது.”

”அப்படியானால், அனைவருக்கும் சரிசமமான ஊதியம் கிடைத்தால் இன்றைய பிரச்சனைகளுள் பல தீர்ந்து போகும் என்கிறீர்களா?”

”ஆம்.. அது ஒன்றுதான் சரியான தீர்வாக இருக்க முடியும் என்றவர் “சரி ஆனந்தா. நான் வருகிறேன் என்றபடி விடைபெற்றார்.

நானும் சிந்தித்தபடி விடைபெற்றேன்.

 


மார்ச் 2017 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை



Error
Whoops, looks like something went wrong.