கண்டுபிடிப்புகளால் சாதனைபுரியும் சரவண முத்து

F.A.M. சேவியர்

19th Jun 2018

A   A   A

ஒருவர் பிடித்துத் தள்ளப்படும்போது தான் அவரது முன்னேற்றம் சாத்தியமாகிறது என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார், படிக்காத விஞ்ஞானி சரவண முத்து. ஆம். வெல்டிங் தொழில் செய்துகொண்டிருந்தவர் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு புராஜெக்ட் செய்ய வருபவர்களுக்கு அவர்கள் ஐடியா படி தகுந்த மாதிரிகளை செய்து கொடுத்திருக்கிறார். அப்படி செய்தவைகளில் பல பரிசுகளை வாங்கவே... ‘இதே மாதிரி நம்ம ஐடியாக்கள செஞ்சு பரிசு வாங்க முடியாதா’ன்னு நண்பர்கள்கிட்ட கேட்க, ‘உனக்கு படிப்பறிவே இல்லை, உனக்கெதுக்கு இந்த ஆசை’னு கிண்டல் செய்ய அதையே சவாலாக ஏற்றிருக்கிறார்.

இன்று. நோயாளிகளுக்கான படுக்கையுடன் கூடிய கழிப்பறை, மாசகற்றும் பேருந்து, மின்சாரம் உற்பத்தி செய்யும் மாதிரிப் பூங்கா, தேங்காய் துருவும் இயந்திரம், கால்களால் தேங்காய் உரிக்கும் கருவி, இருளில் எழுத உதவும் லைட்பேனா, குப்பை அள்ளும் பணியாளர்களுக்கான காற்றை சுத்தம் செய்து கொடுக்கும் மாஸ்க் என்று பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்.

இதில் நோயாளிகள் வயோதிகர்களுக்கான படுக்கை கழிப்பறை தான் இவரை பல்வேறு ஊடகங்களும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த படுக்கை பார்ப்பதற்கு சாதாரண கட்டில் போலவே தோற்றமளிக்கிறது. இதில் மூன்று மீட்டர் நீள வயருடன் இணைக்கப்பட்டுள்ள ரிமோட்டின் டவுன் பட்டினை அழுத்தியவுடன் கட்டிலுக்கு நடுவில் கழிப்பறை வடிவ கதவு திறக்கும். அதில் கழிவு வெளியேற தனி குழாய் வீட்டின் கழிப்பறையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இன்னொன்று தண்ணீர் பைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். இன்னொரு பட்டினை அழுத்தியவுடன் பக்கவாட்டிலிருக்கும் குளோசெட் மேலெழுந்து வரும். இதில் சிறிய ஷவரும் உள்ளது பயன்படுத்திய பின் மூன்றாவது பட்டனை அழுத்தினால் தண்ணீரை பீச்சியடித்து சுத்தம் செய்து விடும்.

ஆரம்பத்தில் தேவையான பணம் இல்லாததால் மாதிரி மட்டுமே செய்து வைத்திருந்தார். இதைப்பற்றி கேள்விப்பட்ட சென்னையை சேர்ந்த குருமூர்த்தி என்பவர் தனது உடல்நலமில்லாது படுக்கையிலிருக்கும் தாயாருக்காக இந்த கட்டில் கழிப்பறையை செய்து தரும்படி கூறி பணமும் கொடுத்திருக்கிறார். உடனடியாக வேலையை துவங்கி சில வாரங்களில் முழுமையான கட்டிலை செய்து முடித்திருக்கிறார். அதை செய்து முடித்த பிறகு கூடுதல் நம்பிக்கை வந்ததாக கூறுகிறார் இவர்.

இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில். படித்தது மூன்றாவது வரை, அப்பா கார் மெக்கானிக் என்பதால் அவருடன் சேர்ந்து அந்த தொழிலை படித்திருக்கிறார். பின்னர் சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தவர் வெல்டிங் தொழில் பழகியிருக்கிறார். இவரது ஆராய்ச்சி ஆர்வமும் இங்கிருந்துதான் தோன்றியது என்கிறார். இவரது முதல் ஆராய்ச்சி எரிபொருள் இல்லாமல் இயங்கும் மோட்டாரை கண்டுபிடிப்பதுதான்.

இதற்கான முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறுகிறார். சுமார் பதினெட்டு ஆண்டுகள் தொடரும் இந்த முயற்சியைப் பற்றி நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களிடம் சொன்னபோது, ‘எரிபொருள் இல்லாமல் இயங்கும் மோட்டார் கண்டுபிடிக்க நீங்கள் செலவிட்டிருக்கும் 18 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவானதே, இன்னும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்று கூறி உற்சாகப்படுத்தி இருக்கிறார். அதுவரை சோர்ந்துபோய் இருந்த சரவணன் பின்னர் புது தெம்புடன் ஆய்வை தொடர்ந்து வருகிறார்.

தற்போது இவரது இரண்டு கண்டுபிடிப்புகள் இந்திய ஆராய்ச்சி கழகத்திடம் சமர்பிக்கப்பட்டு விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளன. விரைவில் விருதிற்கான அறிவிப்பு வரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

38 வயதாகும் சரவண முத்துவின் மனைவி பெயர் கிருஷ்ணம்மாள். தனது மனைவியைப்பற்றி சரவணன் கூறும்போது, மிகவும் பொறுமைசாலி, அவரது பொறுமையும் ஒத்துழைப்பும் தான் தன்னை தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட செய்கிறது என்கிறார். இவருக்கு அகிலா என்ற மகளும், ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். இவரது பிள்ளைகளும் இவரைப்போலவே வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவலும் சிந்தனையும் கொண்டவர்களாகவே உள்ளனர். தற்போது தந்தையுடன் சேர்ந்து பல புதிய பொருட்களை உருவாக்க திட்டமிடுகின்றனர். இவர்கள் உருவாக்கும் பொருட்கள் பல்வேறு அறிவியல் கண்காட்சிகளில் பரிசுகள் வென்றுள்ளன.

நாகர்கோவிலில் தளவாய்புரம் ஊரில் தற்போது வசித்துவரும் இவர் இங்குள்ள ஒரு கிரில் செய்யும் ஆலையில் வேலைப்பார்த்து வருகிறார். மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகே இவரது ஆய்வு பணிகள் நடைபெறுகின்றன.

கரூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இவரைப்பற்றி கேள்விப்பட்டு, இளநீர் சீவும் கருவி ஒன்றை உருவாக்க சரவணனை தொடர்பு கொண்டிருக்கிறார். ஒரு நாளைக்கு 18,000 இளநீர் சீவ வேண்டும் என்பது இலக்கு. சரவண முத்துவும் தீவிரமாக முயன்று சுமார் மூன்று டன் எடையுடைய கருவி ஒன்றை உருவாக்கியுள்ளார். இக்கருவி 95 % கச்சிதமாக இயங்குவதாகவும், மிக விரைவில் இக்கருவி நூறு சதவிகிதம் சரியாக இயங்கும்படி செய்து விடுவேன் என்று நம்பிக்கை கலந்த குரலில் தெரிவிக்கிறார்.

தனது கண்டுபிடிப்புகளால் சாதனை புரிந்துவரும் சரவண முத்து மேலும் பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி வாழ்வில் வளம்பெற அமுதம் சார்பாக வாழ்த்துகிறோம்.

 


ஜனவரி 2018 அமுதம் இதழில் வெளியானது. . .



Error
Whoops, looks like something went wrong.