வலிப்புநோய் போன்ற உடல் அசைவுகள்

Dr. பா. நாகராஜன்

08th Apr 2019

A   A   A

ஒரு பெற்றோர் தங்கள் மகளை என்னிடம் கூட்டி வந்தனர். அவர்கள் தங்கள் மகளுக்கு கடந்த ஒரு வருடமாக வலிப்பு நோய் வந்து கொண்டிருப்பதாகவும், அப்பெண்ணை கடந்த எட்டு மாதங்களாக நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம் நகரங்களில் உள்ள அனைத்து நரம்பியல் நிபுணர்களிடமும் காட்டி விட்டதாகவும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்கள். அவர்கள் அப்பெண்ணிற்கு வருவதாக கூறிய நோய்த்தன்மை உண்மையாக நரம்பியல் ரீதியாக வருவதாக எனக்கு தொன்றவில்லை.

நான் அப்பெண்ணிற்கு கொடுக்கப்பட்டிருந்த மருந்துகளை கவனித்தேன். ECG, Brain scan என்று இவர்கள் சென்ற மருத்துவ மனைகளிலெல்லாம் எடுத்து பின்னர் வலிப்பு நோய்க்குரிய மருந்துகளையே கொடுத்து அனுப்பியிருந்தனர். போகும் இடங்களிலெல்லாம் அவ்வகையான மருந்துகளையே கொடுத்திருந்ததால், ஏற்கனவே பருமனான அப்பெண் இன்னும் பருமனாகி இருந்தாள். இச்சமயத்தில் கட்டாயமாக கூறவேண்டிய காரியம் ஒன்று உண்டு. அப்பெண் என்று கூறுவதை விட சிறுமி என்று கூறுவது பொருந்தும். ஏனெனில் அவள் 14 வயதே நிரம்பியவள். 8 ஆம் வகுப்பில் ஆறேழு மாதங்கள் போகாமல் இருந்தும் பள்ளியின் தயவில் பரிட்சை எழுதி தேர்ச்சியும் பெற்றுவிட்டாள். ஆனால் அப்பெண்ணை மருத்துவ மனைகளுக்கு கூட்டிச் சென்றதன் பலனாக தானும் கூடவே இருந்து தங்கையை கவனித்ததில் இவளது அண்ணனும் பள்ளிக்கு செல்ல முடியாமல் ஒன்பதாம் வகுப்பில் தோல்வியுற்றிருக்கிறான். தாய், தந்தை மட்டுமல்ல அண்ணனுக்கும் இப்பெண்ணின் மேல் சொல்லவொண்ணா பாசமோ பாசம்.

அவளது உருவ அமைப்பு ஏறக்குறைய 20 வயதை ஒத்ததாக இருந்தது. வகுப்பிலேயே பெரிய பெண்ணாக இருக்கக் கூடும். அவள் விரும்பிச் சாப்பிடும் உணவுகள் முட்டை, மட்டன், சிக்கன் ஆகும். அனைத்து விபரங்களையும் கேட்ட பின்னர் நான்கு நாட்களுக்கு மட்டும் மருந்து எழுதி கொடுத்துவிட்டு பின்னர் வரும்படி கூறினேன். ஆனால் அவர்களோ தினமும் மூன்று வேளை, ஏன் கூடுதலாக கூட போனில் கூப்பிட்டு ஏழு முறை வெட்டு வந்தது, எட்டு முறை வெட்டு வந்தது என கூறிக் கொண்டே இருந்தனர்.

பின் நான் அவர்களிடம் உள்ளிருப்பு நோயாளியாக அனுமதித்தால் என்ன? ஏது? என்று விரிவாக நேரில் பார்த்து சிகிட்சையை முறைபடி அளிக்க இயலும் என கூறினேன். அவ்வாறே அடுத்த நாள் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அம்மருத்துவமனையின் செவிலியரிடம் பெண்ணிற்கு வரும் வலிப்பை முழுமையாக பார்த்து என்னிடம் விவரிக்க வேண்டும் எனக் கூறினேன். வலிப்பு வரும்போதெல்லாம் நாக்கின் மேல் வைப்பதற்கு மாத்திரையும், தேவைப்பட்டால் ஊசியும் போடும்படி கூறினேன். அப்பெண்ணிற்கு வழக்கமாக வீட்டில் காலையில் எழுந்தவுடன் அல்லது பள்ளிக்கு செல்லும் நேரத்தில், இன்னும் உணவு உட்கொள்ள செல்லும் பொழுதும் வலிப்பு வந்ததாக கூறினார். இரவு அவள் உணவு உண்ணச் செல்லும் பொழுது நான் வருவதாகக் கூறினேன். எதற்கும் அவளது வலிப்பை வீடியோ எடுத்து வைக்கும்படி அவளது சகோதரனிடம் கூறிச் சென்றேன். இரவு அவள் உணவு அருந்துவதற்கு முன்பு அப்பெண்ணிற்கு வந்த உடல் அசைவுகளை முழுமையாக என்னால் பார்க்க முடிந்தது. அது கன்வெர்சன் டிஸாடர் (Conversion Disorder) என்னும் மனம் சார்ந்த நோய் ஆகும்.

இந்நோய் பொதுவாக தன் மனதில் பிடிக்காத எண்ணங்கள் வந்தாலும், மற்றவர் இவளுக்கு பிடிக்காத பேச்சுக்கள் பேசினாலும் அல்லது பிடிக்காத செயல்பாட்டுகள் ஏதேனும் நடந்தாலோ மற்றும் பிடித்த காரியங்கள் ஏதும் நடக்காமல் போனாலோ ஒருவரது ஆழ்மனது ஐம்புலன்கள் ஏதாவது ஒரு கோளாறை ஏற்படுத்தி இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும். தன் மனதின் எண்ணங்கள் (வேண்டாதவை என்று அவளே தீர்மானித்துக் கொள்வது) ஆழ்மனதில் இருந்து இப்பொழுது உடல்ரீதியாக இத்தகைய அசைவுகளை கொணரும். இது அவளது கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதே உண்மை. எந்த ஒரு செயல்பாடும் வெளிமனது, நடுமனது, ஆழ்மனது என்ற மூன்று பகுதிகளுக்கும் ஒப்புதல் இருந்தால் மட்டுமே அச்செயல்பாடு நல்லதாகவும், முழு பலனையும் தரக் கூடும்.

அவளது தந்தையைக் கேட்கும் பொழுது அப்பெண் ஐந்தாம் வகுப்பிற்கு பின் எட்டாம் வகுப்பிற்குள்ளேயே நாலைந்து பள்ளிகள் மாற்ற வேண்டி இருந்ததாக கூறினார். ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு விதமான விரச்சனைகள். பொதுவாக ஆசிரியர்களும் மாணவர்களது மனநிலை அறிந்து நடப்பவர்கள் அல்ல. பெற்றோர்கள் எந்த அளவிற்கு மிக கவனம் செலுத்துகிறார்களோ எந்த அளவுக்கு ஆசிரியர்கள் அலட்சியம் படுத்துவதும் உண்டு. அப்பெண்ணிற்கு ஒரு ஆசிரியரிடமிருந்து மோசமான சில்மிசம் ஒன்று நடந்திருக்கிறது. இவள் பிறரிடம் சகஜமாக பேசும் நபரும் அல்ல. ஒன்றிரண்டு சினேகிதிகள். அவர்களும் வேறு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இவளது பயம், கூச்சம், பிறரோடு கலந்து பழகாத தன்மை, இத்துடன் பெற்றோரது பாசம் இவையெல்லாம் அவளை பள்ளிக்கு செல்லும்போது அல்லது உறங்கச் செல்லும் போது அல்லது உணவு உண்ண செல்லும்போது என முக்கியமான காரியங்களில் எல்லாம் மேற்குறிப்பிட்ட கன்வெர்சன் டிஸாடர் எனும் ஆழ்மனது பயப்பட உடல் அசைவுகளை உருவாக்கியுள்ளது.

அவளுக்கு மனக் கூறுகளை பாடம் எடுத்து, பெற்றோர்களுக்கும் அவ்வண்ணமே தனித் தனியாக கூறி மனவியல் பற்றி பேசித் தெளிய வைத்தேன். இதற்கென்று சில குறிப்பிட்ட மருந்துகள் உள்ளன. அவற்றுடன் அவளது உடற்பருமன் குறையவும் தகுந்த காரியங்களை கூறினேன். அப்பெண் தனக்கு உண்மையாகவே மூளை ரீதியான வலிப்பு இல்லையெனவும், மனரீதியான உடல் அசைவுகளே உள்ளன என தெரிந்து கொண்டுவிட்டாள். இன்னும் ஒரு மாதத்தில் அவளுக்கு சரியாகிவிடும். அந்த நம்பிக்கை அவளுக்கும் அவள் பெற்றோருக்கும் வந்துவிட்டது. இவ்வியாதியை பொறுத்தமட்டில் நம்பிக்கையை ஊட்டுவதே சிகிட்சையின் முதல்படி ஆகும்.

 


ஆகஸ்ட் 2018 அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.