தொடர்புடைய கட்டுரை


இந்திய மண்ணில் ஒலிவ எண்ணெய் மரங்கள்

Dr. பா. சாம்ராஜ்

23rd Aug 2018

A   A   A

ஓலியா யூரோபியா (Olea europea) என்ற விஞ்ஞான பெயரைக்கொண்ட ஒலிவமரம்   இஸ்ரேலிலும் பிற வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இயற்கையாகவே காணப்படுகிறது. ஆனால் இதன் தாயகம் வடக்கு வெப்பமண்டல ஆப்பிரிக்கா என்று கருதப்படுகிறது. இம்மரம் ஆப்பிரிக்காவிலிருந்து எகிப்தின் வழியாக இஸ்ரேல் நாட்டில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. இது வருடம் முழுவதும் இலை உதிர்த்தாலும் எப்போதும் பசுமையாக காணப்படும். நீண்டகாலம் நின்று பயன்தரக்கூடிய இம்மரம் 500-1000 வருடங்களுக்கு மேலாக நின்று வளரக்கூடியது. ஒலிவமரம் மிகவும் மெதுவாக வளரும் தன்மையைக் கொண்டது. இதன் கிளைகளும், இலைகளும் தழைத்து வளர்ந்து மேல்பாகத்தில் கடும்பச்சை நிறமாகவும், அடிப்பாகத்தில் வெள்ளை கலந்த பச்சை நிறமாக மினுமினுப்பாகவும் காணப்படும். இது கனிகொடுப்பதற்கு சுமார் 5 வருடங்கள் தேவைப்படுகிறது.

முதிர்ந்த வயதுடைய தடியின் பட்டையில் வெடிப்புகள் உண்டாகும். ஏறக்குறைய ஆயிரம் வருடமாக வளர்ந்து கனிகொடுக்கும் ஒலிவமரங்களை இஸ்ரேல் நாட்டில் இன்றும் காணலாம். ஒலிவ மரத்தின் காய்கள் பழுத்து கறுப்பு நிறமாகும்போது அவைகளை சேகரித்து செக்கில் போட்டு ஆட்டி எண்ணெய் எடுக்கலாம். மேல்தோடில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் சிறந்த முதல்தர எண்ணெய் ஆகும். முற்காலங்களில் விளக்குகள் எரியவைத்து நிரந்தரமாக ஒளி கொடுப்பதற்காக இஸ்ரேல் மக்கள் தெளிந்த எண்ணெயை உபயோகித்தனர். ஒரு முதிர்ந்த மரத்தில் இருந்து வருடத்திற்கு அரை டன் (500 கிலோ) எண்ணெய் எடுக்கக் கூடிய தரமான பழுத்த காய்கள் கிடைக்கும். யூதர்கள் ஒலிவ எண்ணெயை குறிப்பாக சமையல் எண்ணெயாகவும் மருந்தாகவும் உபயோகித்து வருகிறார்கள்.

பண்டைய காலங்களில் ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றி பெற்றோருக்கு ஒலிவ மரத்தின் இலைகளால் பின்னப்பட்ட கிரீடம் சூட்டுவது ஒலிவ மரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. காட்டொலிவ (Wild olive) மரத்தில் இருந்து நல்ல ஒலிவ மரத்தை உருவாக்குவதற்காக அவற்றின் கிளைகளை வெட்டி பதியன் வைக்கும் பழக்கத்தை இன்றும் காணலாம். நல்ல ஒலிவமரம் உருவாக்க பழங்காலத்தில் இருந்து ஒட்டவைப்பு (Grafting) செய்து வந்ததாக தெரிகிறது. ஒலிவ மரத்தை நன்றாக பராமரிக்காவிட்டால் அவைகளின் மகசூல் குறைந்து பயன் அற்றதாகி நாளடைவில் ஆரோக்கியம் குன்றி காட்டொலிவமரமாக மாறிவிடும் என்ற கருத்தும் உண்டு. மேலும், பறவைகளின் கழிவுகளிலிருந்து. முளைத்துவரும் விதைகள் காட்டொலிவ மரமாக மாறுகிறது என்றும் சொல்லப்படுகிறது. மனித கலாச்சாரத்திலும், வரலாற்றிலும் மிகவும் முக்கிய இடம் வகிக்கும் மரங்களில் ஒன்று ஒலிவமரம் ஆகும். திருவிவிலியத்திலும் முக்கிய இடம்பெற்றுள்ளது. முற்காலங்களில் இஸ்ரேல் நாட்டின் அரசர்களை அபிஷேகம் செய்ய “அபிஷேக தைலமாக ஆச்சாரியர்கள் இந்த ஒலிவ எண்ணெயை பயன்படுத்தினார்கள்.

எண்ணெய்களில் மிகவும் சிறந்தது ஒலிவ எண்ணெய் ஆகும். உணவுப் பொருட்களை பத்திரப்படுத்தும் தன்மை இந்த மரத்திலிருந்து கிடைக்கின்ற பழங்களுக்கு உண்டு. இதன் பழங்களை மருந்திற்காகவும் பயன்படுத்தலாம். ஒலிவ மரத்தின் தடியும் அதன் காய்களும் எண்ணெயும் வணிக ரீதியில் முக்கிய பங்காற்றி அந்நிய செலவாணியை நமக்கு கொடுக்கின்றது. ஸ்பெயின் நாட்டின் அத்திப் பழம் உலக பிரசித்தி பெற்று விளங்குவது போல இஸ்ரேல் நாட்டின் ஒலிவ பழங்களும் உலகப் பிரசித்திபெற்ற பழங்களில் ஒன்றாகும்.

ஒலிவமரம் பயிரிடுதல் 2007-2008- ல் இந்திய-இஸ்ரேல் கூட்டு முயற்சியாக ராஜஸ்தான் மாநில தோட்டக்கலை துறையினரால் இந்திய விவசாய ஆராய்ச்சி கழகத்தின் மத்திய வறண்ட மண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் (CAZRI) கூட்டு முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டு அதன் முதற்கனி 2011-2012 இல் கிடைக்கப்பட்டது. நம் நாட்டில் பயிரிடப்பட்ட ஒலிவ மரத்திலிருந்து கிடைக்கின்ற எண்ணெயின் அடக்கம் 9-14% ஆகும். அதேசமயம் ஒலிவம் விளையும் மற்ற நாடுகளிலிருந்து கிடைக்கின்ற எண்ணெயின் அடக்கம் 12-16% ஆகும். தற்போது ஒலிவமரம் ராஜஸ்தான் மாநிலத்தில் தகுந்த இடங்களில் ஆங்காங்கே பரிசோதனை முறையில் 182 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு 14000 மெட்ரிக் டன் எண்ணெய் எடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மண்ணில் பார்னியா ஒலிவ், கொராட்டினா ஒலிவ், பிராண்டியோ ஒலிவ், கொரோணைக்கி ஒலிவ், பிச்சொலின் ஒலிவ் மற்றும் பிக்குவல் ஒலிவ் பயிரிட்டு இதில் இரண்டு வகைகள் சிறந்ததாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உயர் ரகங்களை பயிரிடும் முயற்சியில் ராஜஸ்தான் மாநிலம் வெற்றியடைந்துள்ளது என்பதை பெருமையுடன் பாராட்டி மேலும் இந்த ஒலிவம் பயிரிடும் நிலத்தின் பரப்பளவு விரிந்து தன்னிறைவு பெற்று பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணியைப் பெருக்கி பயனடைய வாய்ப்புகள் ஏராளமாக உண்டு.

 


ஜூலை 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.