நவம்பர் 1 திருவிதாங்கூர் தமிழரின் விடுதலை நாள்

Dr. ஆ. மலர்ரெத்னா

12th Aug 2018

A   A   A

தமிழர்களின் வடஎல்லைப் போராட்டம் தமிழ்நாட்டுடன் இருந்த பகுதிகளை (சென்னை மாகாணம்) இழக்காமல் இருப்பதற்காக நடந்த போராட்டம். திருவிதாங்கூர் தமிழர் போராட்டம் இன்னொரு நாட்டிலிருந்த தமிழ்ப்பகுதிகளை மீட்பதற்காக நடந்த போராட்டம். இந்தப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர் தென் எல்லைக் காவலன் குமரித்தந்தை மார்ஷல் நேசமணி.

இந்தியாவின் தென்மேற்குக் கோடியில் அமைந்திருந்த தனி நாடு திருவிதாங்கூர். இந்த நாடு வடக்கே கொச்சியையும், கோயம்புத்தூர் மாவட்டத்தையும், தெற்கே இந்துமகா சமுத்திரத்தையும், கிழக்கே மதுரை, இராமநாதபுரம், நெல்லை மாவட்டத்தையும், மேற்கே அரபிக்கடலையும் எல்லையாகக் கொண்டு அமைந்திருந்தது. இதனுடைய கடைசி மன்னர் ஸ்ரீ சித்திரைத் திருநாள் பாலராம வர்மா மகாராஜா.

திருவிதாங்கூரில் எங்கும் தமிழ் மக்களே வாழ்ந்தனர். கால வெள்ளத்தில் அவர்கள் 9 தாலுகாக்களில் மிகுதியாக வாழ்ந்தனர். அவற்றை இங்கு காண்போம். (06.01.1950 க்கு முன்) தொவாளை தாலுகாவில் தமிழர்கள் 42,448 பேரும் மலையாளிகள் 698 பேரும், அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 1,76,874 தமிழர்களும் 4,931 மலையாளிகளும், கல்குளம் தாலுகாவில் தமிழர்கள் 2,05,944 பேரும் மலையாளிகள் 36,100 பேரும், விளவக்கோடு தாலுகாவில் தமிழர்கள் 1,61,217 பேரும் மலையாளிகள் 46,023 பேரும், செங்கோட்டை தாலுகாவில் தமிழர்கள் 52,432 பேர்களும் மலையாளிகள் 1,677 பேரும், பீர்மேடு தாலுகாவில் தமிழர்கள் 31,911 பேர்களும் மலையாளிகள் 31,748 பேரும், தேவிகுளம் தாலுகாவில் தமிழர்கள் 53,394 பேரும் மலையாளிகள் 8,282 பேரும் வாழ்ந்தனர்.

இதில் நெய்யாற்றின்கரை, சிற்றூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலுள்ள தமிழ் மக்களை மலையாளிகளாகக் கணக்கெடுத்தனர்.

தமிழ்நாட்டின் வடஎல்லைப் போராட்டம், ம.போ.சி. தலைமையில் தமிழ்நாட்டுடன் இருந்த பகுதிகளை இழக்காமல் இருப்பதற்காக நடந்த போராட்டம். தென் எல்லை போராட்டம், சமூகநீதி, பெண்ணுரிமை, மண்காப்பு, ஆலய நுழைவு, மொழி காப்பு ஆகியவற்றுக்காக சுமார் 300 ஆண்டுகள் போராடிய போராட்டம். 19 இயக்கங்கள் இதற்காகப் போராடின. அவற்றுள் முதன்மையான இயக்கங்கள் இரண்டு. நதானியேல் தலைமையில் செயல்பட்ட அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் என்ற இயக்கம். திவான் சி.பி. இராமசாமி ஐயரை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்று மருந்துவாழ் மலையில் நடந்த கூட்டத்தில் முடிவு காணாமல் சிதறிப் போயிற்று. இதனால் நேசமணி சமூகநீதி வேண்டி 1945 இல் உருவாக்கிய திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை, 1947 செப்டம்பர் 8 இல் சிதம்பரம் பிள்ளை, சிவதாணுபிள்ளை, அப்துல் ரசாக் ஆகியோர் முன்னிலையில் ஆலன் மண்டபத்தில் வைத்து அரசியல் இயக்கமாக மாற்றினார். இதன் சின்னம் குடம். இதன் கொடி தங்கக் குடம் பதித்த பச்சை நிறம்.

தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் உள்ள தமிழினத் தலைவர்கள் சமூக நீதி வேண்டியும், ஆலய நுளைவுக்காகவும், பெண்கள் மேலாடை அணியும் உரிமைக்காகவும் போராடினர். ஆனால் அந்த போராட்டங்கள் நசுக்கப்பட்டன. நேசமணியும் முதன் முதலில் சமூகநீதிப் போராட்டத்திலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். எல்லோருக்கும் ஓட்டுரிமை, எல்லோருக்கும் கல்வி, நீதிமன்றத்தில் சம உரிமை, மருத்துவம் போன்றவைகளைப் பொதுமை ஆக்கல் ஆகியவற்றிற்காகப் பெரிதும் பாடுபட்டார்.  இதனால் பலன் இல்லை என்பதை அறிந்த நேசமணி 9 தாலுகாக்களையும் தாய்த் தமிழகத்தோடு இணைக்க விரும்பினார். அதற்காகப் போராட முடிவு செய்தார்.

சிரமப்படாமல், தியாகம் செய்யாமல் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்க முடியாது. அவைகளை நாம் சகித்தே ஆக வேண்டும் என்று முழக்கமிட்டார். “வீட்டுக்கு ஒரு தமிழன் நாட்டைக் காக்கப் புறப்படுக” என்று சங்கநாதம் செய்தார். “தமிழை மறந்தவன் தாயை மறந்தவன்” என்று சிம்மக்குரல் எழுப்பினார். “தமிழன் வாழ்ந்தால்தான் தமிழ் வாழும்” என்றார். இம்முழக்கங்கள் திருவிதாங்கூர் மக்களின் உள்ளங்களில் வீர உணர்வை உருவாக்கின.

அமைதியாக நடக்கும் தமிழர்களின் கூட்டங்களில் புகுந்து மலையாள போலீசார் அடிதடி நடத்தினர். தமிழ் மக்களை பிடித்துச் சென்று இடம் தெரியாத காடுகளில் விட்டனர். இதனால் திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகள் எங்கும் போராட்டம் நடைபெற்றது. தேவிகுளம், பீர்மேடு வட்டாரங்களில் போலீஸ் அட்டூழியங்கள் பெருகியது. தமிழ்த் தலைவர்களை அடித்து உதைத்தனர். சிலருக்கு செவிப்பறை பொட்டியது. கர்ப்பிணிப் பெண்களைச் சிறையில் அடைத்தனர். 800 க்கும் அதிகமான ஆண், பெண் தமிழர்கள் வழக்குகளில் சிக்குண்டு நீதிமன்றத்திற்கு அலைந்து திரிந்தனர். குப்புசாமி, சுப்பையா என்ற இருவரை விலங்கு போட்டு கடை வீதிகளில் இழுத்துச் சென்றனர். இதன் பொருட்டு நேசமணி, அப்துல்ரசாக், சிதம்பரநாதன் நாடார் ஆகியோர் 02.07.1954 அன்று தேவிகுளம் சென்றனர். அங்கு பி.சி.அலெக்சாண்டரால் கைது செய்யப்பட்டனர். நேசமணியை விடுதலை செய்யும்படி திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகள் எங்கும் போராட்டம் நடந்தது.

இப்போராட்டத்திற்கு எம்.வில்லியம், டி.டி. டானியேல், தாணுலிங்க நாடார், ஆர்.பொன்னப்பன் நாடார், பி. ராமசாமி பிள்ளை, எஸ்.எஸ்.சர்மா, எம்.டி. அனந்தராமன், சி. கோபாலகிருஷ்ணன், என். நூருமுகம்மது (துணை வேந்தர்), ஏ.எம்.சைமன், ஏ.குஞ்சன் நாடார் சர்வாதிகாரி, ஏ.காந்திராமன், வி. அருளப்பன் போன்றோர் தலைமை ஏற்று சிறைச் சென்றனர். இப்பொராட்டம் 11.08.1954 வரை நடைபெற்றது. “கண்டால் அறியும் புள்ளி” என்று பலரை கைது செய்து சிறையில் அடைத்தார். சிறையில் சிறுநீர்ப் பானையை சுமக்க வைத்தனர். சுமக்கும்போது அந்தப் பானையில் கம்பால் அடித்து சிறு ஓட்டைகளை போட்டனர். போராளியின் உடம்பில் சிறுநீர்ப் பாய்ந்தது. குஞ்சன் நாடார், பார்சல் செல்லப்பா ஆகியோர் முடமாக்கப்பட்டனர். சின்னையன் பட்டாளம், பொன். சின்னத்தம்பி போன்றோரைப் பிடித்து மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கொண்டுபோய் விட்டனர். போராட்டத்தை தாக்குபிடிக்க முடியாத அரசு நேசமணியையும், தலைவர்களையும் 09.08.1954 அன்று விடுதலை செய்தது. நேசமணி விடுதலை தினமும் நாடு விடுதலை தினமும் கொண்டாடப்பட்டது.

தமிழ் மண்ணுக்காக உயிர்நீத்த தியாகச் செம்மல்கள்…

      1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 8 ஆம் நாள் மூன்று பேர் பலியாயினர்.

  1. ஏ. தேவசகாயம், மங்காடு
  2. தி. செல்லையா, கீழ்க்குளம்
  3. கத்திக்குத்தில், பாகோடு என்னும் ஊரைச் சார்ந்த ஒருவரும் பலியானார்.

1954 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் நாள் நேசமணி விடுதலையை, நாடு விடுதலைத் தினமாக கொண்டாடிய போது துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகினர்.

  1. ஏ. அருளப்பன் நாடார், புதுக்கடை
  2. எஸ். முத்துசாமி நாடார், கிள்ளியூர்
  3. எம். குமரன் நாடார், தோட்டவாரம்,
  4. எம். செல்லப்பா செக்காலர், புதுக்கடை,
  5. ஏ. பீர்முகம்மது, தேங்காய்ப்பட்டணம்
  6. சி. பப்புப் பணிக்கர், தொடுவட்டி
  7. எஸ். இராமையன் நாடார், நட்டாலம்
  8. ஏ. பொன்னப்பன் நாடார், தோட்டவிளை, மணலி
  9. எம். பாலையன் நாடார், தோட்டவிளை, மணலி

மேலும் இப்போராட்டத்தில் சங்கரன்நாடார் என்பவர் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்டார். வண்டி ஏற்றி ஒருவர் கொல்லப்பட்டார். பனை உச்சியிலிருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டார். மொத்தம் 36 பேர் பலியானதாக சான்றுகள் கிடைத்துள்ளன. இவர்கள் தவிர பல தியாகிகள் வயிற்றில் மிதிப்பட்ட காரணத்தால் திருமணம் செய்ய முடியாத நிலையை அடைந்தனர். பலருடைய கை, கால்கள் முடமாக்கப்பட்டன. பலருடைய பற்கள் அடிபட்டு தெறித்தன. இத்தகைய மாபெரும் போராட்டத்தின் காரணமாக 1956 நவம்பர் 1 அன்று திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகளில் நாலரைத் தாலுகா தமிழகத்தோடு இணைந்தது. கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டையில் பாதி, இணைந்த பகுதிகளுக்கு நேசமணி கன்னியாகுமரி என்று பெயர்சூட்ட அன்றைய முதல்வர் காமராசரிடம் வேண்டினார். காமராசரும் கன்னியாகுமரி என்று பெயர்சூட்டி மகிழ்ந்தார்.

 


நவம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.