தொடர்புடைய கட்டுரை

நெஞ்சம் மறப்பதில்லை - 8

குமரி ஆதவன்

08th Apr 2019

A   A   A

பதினொன்றாம் வகுப்பைக் கடந்து பனிரெண்டாம் வகுப்பிற்குள் நுழைந்த பிறகு ரசிகர் மன்ற வெறி அடங்கிப் போயிருந்தாலும் சினிமா மீதான வெறி அடங்கவில்லை. ஒருவேளை என்னை யாரும் சினிமாவுக்கே அழைத்துச் செல்லாதது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். எப்போதாவது கோவில் திருவிழாவிலோ, ஆயுதபூஜை அன்று எங்களூர் காவல் நிலையத்திலோ கறுப்பு வெள்ளை திரைப்படம் போடுவார்கள். இப்படி பாசமலர், பாவமன்னிப்பு, விவசாயி, சிவந்தமண், தங்கமலை ரகசியம், கருணாமூர்த்தி என ஒரு சிலப் படங்களைப் பார்த்திருக்கிறேன். நான் முதன் முதலில் சினிமா தியேட்டரைப் பார்த்ததே பனிரெண்டாம் வகுப்பு பாதியில்தான். என்னுடைய அண்ணன் திரு. கிறிஸ்துதாஸ் தான் சக்கரவர்த்தி தியேட்டருக்குச் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த கவிரிமான் என்கிற திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றான். அம்மாவின் ஒழுக்கம் சரியல்லாவிட்டால் பிள்ளைகளும் கெட்டுப் போவார்கள் என்கிற பாடத்தை அப்படம் பார்ப்பவர்களுக்கு அறிவுறுத்துவதாக இருந்தது. பெண்கள் மீது பழிபோடும் படமாக இருந்தாலும் அன்று எனக்கு கலர் திரைப்படம் பார்த்த சந்தோஷம் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு யாரும் என்னை தியேட்டருக்கு அழைத்துச் செல்லவில்லை. தனியாகப் போகிற தைரியமும் எனக்கு அப்போது வரவில்லை.

பனிரெண்டாம் வகுப்பில் அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு, மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, எல்லோரும் ஐம்பது ரூபாய் கொண்டு வரும்படி இயற்பியல் ஆசிரியர் ஜாண் இக்னேஷியஸ் அவர்கள் சொன்னார்கள். நாங்கள் எல்லோரும் ஐம்பது ரூபாய் கொண்டு கொடுத்தோம். இந்த ஐம்பது ரூபாவைக் கொண்டு வருவதற்கு நான் பட்டபாடு பெரும்பாடு. கல்விச் சுற்றுலாவுக்கு போகாவிட்டால் பிராக்டிக்கல் தேர்வு தோற்றுவிடும் என்றெல்லாம் அம்மாவிடம் பொய்ச் சொல்லித் தான் வாங்கினேன். காரணம் வீட்டில் அந்த அளவுக்கு வறுமை இருந்தது.

இன்று நாளை என்று சொல்லிச் சொல்லி அந்தச் சுற்றுலா நடக்கவில்லை. ஆண்டிறுதித் தேர்வு தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் நுழைவுச் சிட்டு தந்தபோது, சுற்றுலாவுக்கு வாங்கிய ஐம்பது ரூபாவையும் இயற்பியல் ஆசிரியர் திரும்பத் தந்தார். செம்பருத்திவிளையிலிருந்து என் வகுப்பில் பயின்ற எனது நண்பன் ஜாண் டேவிட் என்னிடம் ஒரு ஆலோசனைச் சொன்னான். ‘இந்த ஐம்பது ரூபாவை விட்டில் கொண்டு கொடுக்காமல், இதை வைத்து சினிமாவுக்குப் போவோமா?’ என்றான். ஆசை இருந்தாலும், வீட்டில் எப்படிச் சொல்வது? கேட்காமல் போனால் என்ன காரணம் சொல்வது என்று திணறினேன். அப்போது ஜாண் டேவிட், ‘சினிமாவுக்குப் போகிறதாச் சொல்ல வேணாம். சுற்றுலாவுக்கு இக்னேஷியஸ் சார் கூட்டிகிட்டுப் போறதாவேச் சொல்லணும்’ என்றான். நான் இடை மறித்து, ‘எங்க விட்டுப் பக்கத்திலருந்து அலைக்சாண்டர் நம்ம கிளாசில் படிக்கிறானே, அவன் விட்டுல சொல்லிக் குடுத்துருவான்’ என்றேன். ‘இரண்டு பேருமா அவங்கிட்ட பேசுவோம். அவன் ஓக்கேச் சொன்னா போவோம்’ என்றான்.

அன்றைக்கு பள்ளிகூடம் விட்டதும் பூவங்காபறம்பு சாலையில் உள்ள நீலா குளக்கரையில் அலைக்சாண்டரையும் அழைத்துக் கொண்டுச் சென்றோம். அன்று பேசாவிட்டால் அவன் ஐம்பது ரூபாவை வீட்டில் கொடுத்து விடுவான். குளத்து சுற்றுச் சுவரில் அமர்ந்தபடி, டேவிட்டும் நானும் ஒரு சிலத் திரைப்படங்களின் பெயர்களைச் சொல்லி, ‘படம் நல்லா இருக்காம். ராணி புக்குல போட்டுருக்கான் என்று உசுப்பேற்றத் துவங்கினோம். சிறிது நேரத்தில் அலைக்சாண்டர், ‘நம்மகிட்டதான் ஐம்பது ரூபா இருக்கே, சினிமாவுக்கு போவோமா?’ என்றான். எங்களுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அடுத்த நாளுக்கு அடுத்த நாள் சனிக்கிழமை. இந்தநாள் சுற்றுலா என்று வீட்டில் சொல்வதாக முடிவு செய்தோம். அதற்குப் பிறகுதான் எனது வீட்டுப் பக்கத்தில் வகுப்புத் தோழி தீபா இருப்பதே ஞாபகத்திற்கு வந்தது. வீட்டில் உள்ளவர்கள் தீபாவிடம் கேட்டால் மாட்டி விடுவோமே என்று பயந்தபோது, பட்டென்று ஒரு யோசனை தோன்றியது.

தீபாவை எப்படியாவது சந்தித்து, ஐம்பது ரூபாவைக் கொண்டு, பத்மநாபபுரம் கோட்டை பார்க்கப் போவதாகவும், வீட்டில் கேட்டால் தனக்கு உடல் நலமில்லாததால் சுற்றுலா செல்லவில்லை, இக்னேஷியஸ் சார் தான் ISRO வுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் என்று ஒரு சின்ன பொய்யைச் சொல்லும் படியும் கேட்டுக் கொள்வதென முடிவு செய்து, அந்தப் பொறுப்பை என்னிடம் தந்தார்கள்.

மறுநாள் நான் நோட்டு கேட்க வந்ததாகச் சொல்லி தீபாவை அழைத்து விஷயத்தைச் சொல்லி அவளை சம்மதிக்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. அவளும் கடைசியாக, ‘என்றடத்து வந்து கேட்டாதான் சொல்லுவேன். அம்மயிடத்து கேட்டா எனக்குத் தெரியாது’ என்றாள். நான் அவளிடம், ‘நாளை ஒரு நாளும் நீ வெளியிலயே வந்திராத’ என்றேன். அவள் தலையாட்டினாள்.  இருந்தாலும் பயம் தான்.

வீட்டில் மாட்டி விடுவோமோ என்ற சின்ன பயத்தோடு, எங்கள் ஊர் பாதுகாவலர் மிக்கேல் அதிதூதருக்கு முன் நின்று, ‘கடவுளே! எங்க வீட்டுல உள்ளவங்க யாரு கண்ணுலயும் நாளை ஒரு நாளும் தீபா பட்டுரக்கூடாது என்று சில்லறை காசை காணிக்கையாகப் போட்டு விட்டு (கடவுளுக்கே லஞ்சம்) வீட்டிற்கு வந்தேன்.

பிள்ளை சுற்றுலா போறான் என்று அதிகாலையிலேயே அம்மா எழுந்து காலை உணவுக்காக இட்லியும், மதியத்திற்கு சோறும் கட்டித் தந்து, செலவுக்கும் இருபது ரூபா தந்து அனுப்பினார். நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி, ஆறு மணிக்கு பூவங்காபறம்பு நீலா குளக்கரைக்கு வந்துவிட்டோம். அங்கேயே பதுங்கி இருந்துவிட்டு, அருகில் இருந்த தென்னந்தோப்பில் வைத்து காலை உணவை உண்டோம். எட்டு மணிக்கு 13 N பேருந்தில் ஏறி, ஒன்பது மணியளவில் நாகர்கோவில் பழைய (குளத்து) பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம். இங்கு உட்கார்ந்தபடி எந்த தியேட்டருக்குச் செல்வது? என்ன படம் பார்ப்பது என முடிவு செய்தோம். அதன்படி பேருந்து நிலையம் அருகிலேயே இருந்த லட்சுமி தியேட்ருக்கு விஜயகாந்த் நடித்த காலையும் நீயே மாலையும் நீயே படத்திற்குப் போவதாக முடிவு செய்தோம். இந்தத் திரையரங்கம் நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் கட்டியது என்பார்கள்.

ஒன்பதேகால் மணிக்கு மெல்ல அங்கும் இங்கும் பார்த்தவாறு திரையரங்கின் முன் செல்கிறோம். அங்கு கேட் கூட திறக்கவில்லை. வீட்டுப் பக்கத்திலுள்ளவர்கள் யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற அச்சத்தோடு மீண்டும் பேருந்து நிலையத்தில் வந்து உட்கார்ந்தோம். தியேட்டரில் படம் பார்க்கிறோம் என்ற மகிழ்ச்சி ஒருபுறம், யாரேனும் பார்த்தால் கெட்டப் பெயர் வந்து விடுமே என்ற பயம் மறுபுறம். இருந்தாலும் டிக்கட் எடுத்துவிட்டு தியேட்டருக்குள் நுழைந்துவிட்டோம். அன்று பதினாறு பதினேழு வயது பையன்கள் தியேட்டரில் படம் பார்ப்பதே குற்றமாகக் கருதப்பட்ட காலமாக இருந்தது. இன்று டாஸ்மார்க் போவதுகூட கலாச்சாரமாக மாறியிருக்கிறது. சமூகம் எந்த அளவுக்குத் தொலைந்து போயிருக்கிறது, என்பதன் சாரம் இது.

கறுப்பு வெள்ளையைக் கடந்து பலவண்ணத் திரைப்படம் பார்த்தது, மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டு கதாநாயகிகள் ரேகா, சுகாசினி நடித்திருந்ததாக ஞாபகம். படம் முடிந்து வெளியே வந்ததும், காந்தி பூங்காவில் உட்கார்ந்து, என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் அமைத்த காந்தி சிலையருகே உட்கார்ந்து எங்கள் வீடுகளிலிருந்து தந்தனுப்பிய, மதிய உணவை உண்டோம். உண்ணும் நேரம் முழுமையும் மாறி மாறி, ‘இதுதான் ஐ.எஸ்.ஆர்.ஓ இல்லயாடே!’ என்று கிண்டல் பண்ணிக் கொண்டோம். உணவு முடிந்ததும் விட்டிற்குச் செல்லலாம் என்று நானும் அலைக்சாண்டரும் சொன்னபோது, ஜாண் டேவிட் யோசனையிலேயே இருந்தான்.

திடீரென்று, ‘நாம இப்போ போனோமுண்ணா நிச்சயம் வீட்டுல மாட்டுவோம். யாண்ணா மூணு மணிக்கெல்லாம் வீடு போய்ச் சேந்திருவோம். எந்த டூரும் இந்த நேரத்துக்கு முடியாது. அதனால இன்னொரு படம் பாத்துட்டு அஞ்சு மணிக்குத் திரும்புனா, ஆறரை மணிக்குப் போய்ச் சேருலாம். வீட்டுலயும் நம்புவாங்க’ என்றான்.

அவனது யோசனை நன்றாகத்தான் இருந்தது. அடுத்ததாக அடுத்த படம் எதைப் பார்ப்பது என யோசிக்க ஆரம்பித்தோம். மற்ற திரையரங்கங்கள் எங்கிருக்கின்றன என்றும் தெரியாது. இந்தப்பக்கம் தியேட்டர் எங்கிருக்கிறதென்று ஒரு பெரியவரிடம் கேட்டோம். அவர் எங்களை முறைத்தவாறே, ‘இந்த வழியா போங்க, வரிசையா இருக்கு’ என்று கையைக் காண்பித்துவிட்டு, ‘முட்டையிலருந்து வெளியே வரல்ல, தியேட்டருக்கு ஓடுதுக. காலம் கெட்டாச்சு என்று தனக்குள் புலம்பியபடியேச் சென்றார். நாங்கள் நேராக சுவாமி திரையரங்கிற்குச் சென்றோம். அங்கு எம்ஜிஆர் படம் எங்க விட்டுப் பிள்ளை போட்டிருந்தான். பழைய படம் சரிப்படாது என்று, அதே மீனாட்சிபுரம் சாலையில் முத்து திரையரங்கிற்குப் போனோம். அங்கு ஆங்கிலப்படத்தின் போஸ்டர் ஒட்டிருந்தான். கொஞ்சம் இல்லை நிறையவே ஆபாசமாக இருந்தது. வெள்ளைக்கார பெண்கள் அரைகுறை ஆடைகளில் போஸ்டரில் நின்றார்கள். மூன்று காட்சிகள், பயோனியர் முத்து என்றெல்லாம் துண்டு பிரசுரங்களை ஒட்டியிருந்தார்கள். அதைப் பார்த்தாலே அப்போது பயமாக இருந்தது. நேராக ஓடியே அந்த இடத்தைக் கடந்து விட்டோம்.

இடலாகுடி பக்கம் வந்ததும் குமார் என்றொரு தியேட்டரைப் பார்த்தோம். அங்கு சத்தியராஜ் கூர்க்காவாக நடித்த அண்ணாநகர் முதல் தெரு படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதுபோதுமென்று உள்ளே நுழைந்தோம். அம்பிகா, ராதா இருவரும் கதாநாயகியராக நடித்திருந்தார்கள். ஐந்து மணிக்கெல்லாம் படம் முடிந்து வெளியே வந்தோம். இந்தப் படத்தின் கதையும் காட்சிகளும் இன்று வரைக்கும் எனக்கு மறக்கவில்லை. அந்த அளவுக்கு என்னைக் கவர்ந்தது. இதில் கூர்க்கா சத்தியராஜ் பாடுவதாகக் காண்பிக்கப்பட்ட துவக்கப் பாடல் இந்தியும் தமிழும் கலந்து வரும். ‘தீம் தனகதீம் மேராநாம், பீம்சிங் பேட்டா கூர்க்கா நாம்; தீம்தனகதீம் தேக்கோஜி, திக்கால் பேகம் மதுராசி’ என்ற இந்தப் பாடலை நீண்டகாலம் நான் பாடல் போட்டிகளிலும் திருவிழா மேடைகளிலும் பாடினேன்.

தக்கலைக்கு 11 H பேருந்தில் ஏறி சுமார் ஆறரை மணிக்கெல்லாம் வந்து விட்டோம். அவசரமாக பெருஞ்சாணி பேருந்தில் ஏறி அமர்ந்த பிறகுதான், எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. பேருந்து எடுப்பதற்காக மெதுவாக பின்னோக்கி நகர்த்தவும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த டேவிட்டிடம் சென்று, ‘டேய்! பண்டம் எதாவது வாங்கலண்ணா நாம டூர் போயிட்டு வாறோமுண்ணு எப்படி நம்புவாங்க? இறங்கு இறங்கு என அவசரப்படுத்தி இருவரையும் கீழே இறங்க வைத்தேன். அந்தப் பேருந்தை விட்டு விட்டு என்னிடமிருந்த பதினைந்து ரூபா, டேவிட்டிடம் இருந்த இருபது ரூபா, அலைக்சாண்டரிடம் இருந்த பத்து ரூபா எல்லாம் சேர்த்து ஆளுக்கு ஒரு மிச்சர் பாக்கட், ஒரு இனிப்பு காரச்செவ் பாக்கட் வாங்கிக் கொண்டோம்.  ஏழரை எட்டு மணி வாக்கில் வீடு வந்து சேர்ந்தோம்.

இந்த உண்மையை எனது அம்மா இறக்கும்வரைக்கும் சொல்ல வேண்டுமென்று எனக்குத் தோன்றவே இல்லை. ஆனால் அம்மாவின் மரணத்திற்குப் பிறகு பலமுறை, அம்மாவை மறைத்து செய்த இந்த காரியத்தை அம்மாவிடம் சொல்லவில்லையே, ஏமாற்றிவிட்டேனே என அழுதிருக்கிறேன். நெஞ்சுக்குள் இடித்துக் கொண்டிருந்த இந்த நிகழ்வை இன்று இறக்கி வைத்தப் பிறகுதான் என் அழுக்கு கரைந்ததாக உணருகிறேன்.

பனிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு டேவிட் பயோனியர் குமாரசாமி கல்லூரிக்கு வேதியியல் படிக்கவும், நான் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரிக்குக் கணிதம் படிக்கவும் சென்றுவிட்டோம். ஆனாலும் எங்கள் நட்பு மறையவில்லை. அவ்வப்போது எனது கல்லூரி விடுதிக்கு வந்து பேசுவதும், விடுமுறை நாட்களில் திரையரங்கிற்குப் போவதும் நடந்துகொண்டிருந்தது. இன்று நானும் டேவிட்டும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றுகின்றோம். அவன் சென்னையிலும் நான் கன்னியாகுமரியில் குமாரபுரத்திலும் வாழ்ந்தாலும் வருடத்தில் பலமுறை சந்தித்தும் சிந்தித்தும் கொள்கிறோம். இருவரது குடும்பமும் ஒத்த கருத்துகளோடு நெஞ்சுக்கு நெருக்கமான குடும்பங்களாக மாறியதும் மட்டற்ற மகிழ்ச்சி.

இவை எல்லாவற்றையும் விட, எனது எழுத்தை ஆழமாக நேசித்து, விமர்சிக்கிற ஒரு சகோதரியாக, சென்னைக்கு போகும்போதெல்லாம் எங்களை ஏற்று உபசரித்து இனிமையாகச் சமைத்தும் தருகிற ஜெயந்தியும், அவன் மகள் ஜோஷியும் நெஞ்சிருக்கும் வரை மறக்க முடியாதவர்கள்.

நாங்கள் முதல் முறை திரைப்படம் பார்த்த லட்சுமி தியேட்டர் இப்போது கடைகளாக மாறிவிட்டது. குமார் தியேட்டர் கடைசி மூச்சை இழுக்கிற ஒரு கிழவியைப்போல உருமாறியிருக்கிறது. ஆனால் எங்கள் நட்பு மட்டும் வானளாவ வளர்ந்திருக்கிறது. நல்ல நட்பு கிடைப்பது அரிதினும் அரிது; அதைத் தொடர்வது அதனினும் அரிது.

(இன்னும் பேசுவோம் ...)

 


ஆகஸ்ட் 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை



Error
Whoops, looks like something went wrong.