தொடர்புடைய கட்டுரை

நெஞ்சம் மறப்பதில்லை - 7

குமரி ஆதவன்

01st Apr 2019

A   A   A

பத்தாம் வகுப்பைக் கடந்து பதினொராம் வகுப்பு வந்ததுமே மாணவர்களுக்கு வயது பூர்வமாகவும், வகுப்பு பூர்வமாகவும் தாம் ஓரடி உயர்ந்து விட்டது போன்ற ஒரு மதப்பு தோன்றும். ஒரு வகையில் இது உண்மைதான். அதுவரையிலும் குழந்தைகள் போல் நடத்தப்பட்டவர்கள், இனி இளைஞர்களைப்போல் நடத்தப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிற, அவ்வாறே நடந்து கொள்கிற பருவம். அதுவரைப் பார்த்த உலகத்தைக் கடந்து வேறொரு உலகம் தெரியும். குரல் உடையும்; உயரம் கொஞ்சம் அதிகரிக்கும்; பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவும், அதைச் சிறப்பாகச் செய்து ஆசிரியரின், சமூகத்தின், குறிப்பாக எதிர் பாலினத்தவரின் அங்கீகாரத்திற்கும் பாராட்டிற்கும் ஏங்குகிற பருவம். ஒரு சிறு காரியத்தைச் செய்துவிட்டாலே சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிற மனநிலை ஏற்படுகிற பருவம். இந்தப் பருவத்தில் தான் வெக்கம் கெட்டவன், தறுதலை, ஊர்ச்சுற்றி, யாருக்கும் அடங்காதது, தரிப்பு கொண்டு திரியுது, எதுத்துப் பேசுது என்றப் பட்டங்கள் கிடைக்கும். இந்த பருவத்தை நான் கடந்த கதையைத்தான் இனிச் சொல்லப்போகிறேன். இந்தப் பருவத்தில் என்னை எனது ஆசிரியர் எப்படிக் கடத்திவிட்டார் என்பதை இந்தக்கால மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சொல்வதற்காகத்தான் இங்கே சில உண்மைகளை ஒழிவு மறைவின்றிச் சொல்லப் போகிறேன்.

எனது பதினொன்றாம் வகுப்பு மற்றவர்களைவிட ஒருவாரம் கடந்துதான் ஆரம்பமானது. கேரளாவிற்கு வேலைக்குச் சென்றிருந்த நான் காலதாமதமாகவே பதினொன்றாம் வகுப்புச் சேர்க்கைக்கு வந்தேன். காலையிலேயே நல்ல மழை. அக்கா வீட்டிலிருந்து ஒரு புதிய குடையையும் தந்தனுப்பினார்கள். இருந்தாலும் பெரு மழையில் கொஞ்சம் நனைந்தபடிதான் வந்தேன். மழையில் நனைவது எனக்குப் பிடிக்குமென்பதால் காற்றோடு கூடிய மழைக்காக நான் ஒதுங்கவில்லை.

எனது சேர்க்கைக்கு நான் மட்டுமே வந்திருந்தேன். ‘பள்ளி திறந்து ஓரு வாரம் தாண்டி வந்திருக்குறியே இனி இடம் தருவாரோ என்னமோ? மார்க் இருக்கியதுனால ஒரு வேள தருவாரு. முதல்ல இல்லண்ணு சொன்னா உடனே விட்டுக்குப் போயிராத. அவருக்க அறைக்கு முன்னயே நில்லு என்று எனக்கு ஆலோசனை தந்து அவரது அறைக்கு அருகில் விட்டுச் சென்றார் அன்றைய தலைமை எழுத்தர் திரு. தபசுமுத்து அவர்கள். நான் கார்மெல் மாணவர் இல்லத்தில் தங்கிப் படித்ததால், அங்கேயே இருந்த அவர் எனக்கு ஒரு அண்ணனாகவே இருந்தார். தலைமையாசிரியர் திரு. வி.எஸ். அம்புறோஸ் அவர்கள் வெகுநேரம் போக்கு காட்டி, காலதாமதத்திற்காகத் திட்டித் திட்டியேதான் இடம் தந்தார்.

வகுப்பறைக்குள் நுழைந்த எனக்கு சற்று வெக்கமும் அதே நேரம் சந்தோஷமுமாகவே இருந்தது. பத்தாம் வகுப்பு வரை பெண்கள் இல்லாத தமிழ்வழி வகுப்பறையில் படித்துவிட்டு, திடீரென்று பெண்கள் இருந்த வகுப்பறைக்குச் சென்றது ஒருவிதமான பரபரப்பை உருவாக்கியது. நான் தலைமையாசிரியர் தந்த ஒரு துண்டு காகிதத்தை ஆசிரியையிடம் கொடுத்த போது, எல்லோரும் என்னை ஒருவிதமாகவேப் பார்த்தார்கள். வகுப்பறையில் ஆசிரியை திருமதி. சரோஜா அவர்கள் வகுப்பாசிரியையாக நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை அதற்குமுன் எனக்குத் தெரியாது. ‘நியூ அட்மிஷனா? இங்க ஒரு பாடம் முடியப்போகுது. இப்ப வந்திருக்க. போப்பா.... போ, மூணாவது பெஞ்சுல இடம் இருக்குல்லியா, அதுல போய் உக்காரு. நோட்டு வாங்கிட்டு வந்தியா? இங்க யாருக்கிட்டருந்தாவது மேக்ஸ் நோட்ட வாங்கிக் கொண்டு போய் எழுது. பத்தாங்கிளாஸ் மாதிரி ஈசியா ஒண்ணும் இருக்காது. நல்லா படிச்சாதான் தப்ப முடியும் என்றார்கள்.

கணிதத்தில் தப்ப முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு இராமசுவாமி ஆசிரியர் ஊட்டி வளர்த்திருந்தார். தைரியத்தோடுதான் போய் உட்கார்ந்தேன். பல்வேறு பள்ளியிலிருந்து வந்தவர்களுக்கிடையே எனது பத்து சி வகுப்பில் பயின்ற சிலரும் இருந்தனர். முதல் இருபாட வேளைகளும் கணிதம் பயின்றேன். இடைவேளை வந்ததும் எனது விட்டருகில் உள்ள தீபா ஓடி வந்தாள். ‘நோட்டு நான் தரலாம். ஏன் அத்தன லேட்?’ என்றாள். நான் சிரித்தபடி எனது புதிய குடையோடு டாய்லட் பக்கம் நகர்ந்தேன். மழை இப்போதும் நின்ற பாடில்லை.

இடைவேளை முடிந்து வகுப்பறைக்கு வரும்போது, நாங்கள் வழக்கமாக என். சி.சி சார் என்று அழைக்கும் திரு. ஜாண் இக்னேஷியஸ் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர் அருகே நின்று கொண்டிருந்த ஒரு பெண், என்னையும் எனது குடையையும் காண்பிக்கிறாள். உடனே, ஆசிரியர், ‘இன்னைணக்குத்தான் வந்திருக்க. அதுக்குள்ளயே பொம்பளைங்க குடைய எடுத்துட்டுப் போக ஆரம்பிச்சிட்டியா? குடையக் குடுடா என்றார். அந்தப் பெண் கையை நீட்டுகிறாள். நான், ‘எனக்க குடையை நான் எதுக்கு உனக்குத் தரணும் என்று முறைத்தேன். ‘என்னல முறைக்கிற? குடையக் குடுண்ணா, குடுக்கத்தானே செய்யணும் என்று சப்பதமிட்டார். நான் மீண்டும், ‘இது என்னோட குடைசார்.  அதுவும் எங்க அத்தான் கேரளத்திலருந்து வாங்கிட்டு வந்தது என்றேன். அந்த பெண்ணோ, ‘இல்ல சார். கள்ளம் பறயிணான். இது என்ற குட தன்ன. இவன் எடுத்தொண்டு போணத இவரு எல்லாவரும் கண்டிற்றொண்டு என்று மலையாளத்தில் சொல்ல, நான், ‘போட்டி, எவனாவது நல்லதா குட வாங்கிட்டு வருவான். அடிச்சுட்டு போலாமுண்ணு வந்திருக்குதியோ என்று கோபப்பட, ‘வகுப்பறை நாகரீகமேத் தெரியாத என்னலப் பேச்சு என்றவர், ‘ஜாண் கலோரியன் என்னோட டேபிள்ள பிரம்பு இருக்கு எடுத்துட்டு வா என்றார். அவன் மின்னல் வேகத்தில் பிரம்போடு வந்தான். என் இடது கையைப் பிடித்தவர் நாலைந்து அடி தொடையில் போட்டார். அது அவர் என்.சி.சி க்குப் பயன்படுத்தும் இரு பக்கமும் செம்பு மூடி போட்ட பிரம்பாக இருந்தது. எனது வலது கையிலிருந்த குடையை வாங்கி, ‘பாமினி, இந்தா எடுத்துட்டுப் போ என்றவர், ‘போய் இடத்துல உக்காருடா என்றார்.

அடியின் வலி ஒரு புறம், புதிய குடை பறிபோனது மறுபுறம் என நான் அழுதுகொண்டே எனது இருக்கையில் அமர்ந்தேன். அவர் இயற்பியல் பாடத்தை ஏற்கனவே விட்ட இடத்திலிருந்து துவங்கினார். எனக்கு எதுவும் புரியவில்லை. தமிழ் வழியில் படித்துவிட்டு, ஆங்கில வழிக்கு வந்திருந்தது ஒரு காரணம் என்றால் அடியின் வலியும் குடையின் ஏக்கமும் என்னை வகுப்பறைக்கு வெளியே கொண்டு நிறுத்தியது. உடல் மட்டும்தான் உள்ளே இருந்தது.

பாடம் துவங்கிய சிறிது நேரத்தில் ஒரு மாணவன் கையில் குடையோடு வகுப்பிற்குள் நுழைய வந்தான். ‘அலுவலகத்திலிருந்து அழைத்தார்கள் என்று கேட்காமலே கூற, அவரும் ‘எஸ் கம் இன் என்றார். அவன் கையிலிருந்த குடையை பெண்கள் பகுதியின் ஓரத்தில் வைத்துவிட்டு எனக்குப் பின் இருக்கையில் வந்து அமர்ந்தான். நான் அழுதுகொண்டிருப்பதைக் கவனித்த அவன், அதற்கான காரணத்தை அவன் அருகில் இருந்த ஜாண் கலோரியனிடம் கேட்பது என் காதில் விழுகிறது. அவன் மெதுவாக பாமினியின் குடை கதையைச் சொல்கிறான். அவன் சட்டென்று, ‘அந்தப் பெண்ணுக்க குடைய நான் இல்லியா எடுத்துட்டுப் போனேன். அவசரமா அலுவலகத்துல கூப்புட்டதுனால வாசல் பக்கம் இருந்தது, வந்து சொல்லலாமுண்ணு எடுத்துட்டுப் போனேன் என்றான்.

இவ்வளவும் கேட்டதும் எனக்கு எங்கிருந்து கொதிப்பு வந்ததென்றேத் தெரியாது. நான் எழும்புகிறேன். இக்னேஷியஸ் ஆசிரியர், ‘என்ன ஏன் எழும்பி நிக்கிற?’ என்று கேட்கிறார். நான் விங்கியபடி, ‘உண்மை தெரியாம என்ன நீங்க அடிச்சீங்க சார். அவளுக்க குடைய இவன் தான் எடுத்துட்டுப் போயிருக்கான். வேணுமுண்ணா கேளுங்க. இப்ப அங்க இவன் வச்சிருக்க குடைதான் அவளோடது என்று சொன்னேன்.

‘கதிரேசா எழும்பு. நீ இப்போ கொண்டு வச்ச குடை யாரோடது?’ அவன் தெளிவாக தான் எடுத்துப் போன நிகழ்வைச் சொன்னான். பாடத்தை நிறுத்தியவர், பாமினியை அழைத்தார். அவரது கோபம் என்னிடம் காட்டியது போல் இருமடங்கானது. ‘டேய், ஒரு கம்பிளைண்ட் பண்ணினா, தெளிவாத் தெரிஞ்சிட்டு பண்ணணும். வீணா ஒரு பையனுக்கு வந்த முதல் நாளே அடி குடுக்க வச்சிட்ட. குடைய அவனுக்கிட்ட குடுத்துட்டு மன்னிப்பு கேளுடி என்றார். அவள் அழுதபடி ஏதோ முணுமுணுத்தாள். குடையைத் தந்தாள். நான் வருடம் முடியும் வரைக்கும் அப் பெண்ணிடம் பேசவே இல்லை.

மூன்றாவது பாடவேளை முழுவதும் ஆசிரியரின் புத்திமதிகளால் நிரம்பி வழிந்தது. ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் அவர் படித்த கதையெல்லாம் சொன்னார். போகும்போது என்னை அழைத்துச் சென்றவர், ஆசிரியர் ஓய்வறை பக்கம் சென்றதும் தோளில் கை போட்டார். ஆதரவோடு எனது பெயரைக் கேட்டார். ‘பொண்ணு சொன்னத நம்பி அடிச்சிட்டேன். எல்லாத்தையும் மறந்துட்டு நல்லா படி என்று தோளில் தட்டிய போது இராமசாமி ஆசிரியர் அவரிடம் ஒரு மிட்டாயைக் கொடுத்துச் சென்றார். அதை என்னிடம் தந்தபடி அரைச்சிரிப்பு சிரித்தார். ஓடி வகுப்பறைக்கு வந்தால் எனக்கு ஆறுதல் சொல்ல ஒரு கூட்டமே காத்திருந்தது.

பதினொன்றாம் வகுப்பின் சில நாட்களிலேயே, கொற்றிகோட்டைச் சார்ந்த சேகர் என்பவர் என்னை ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தில் சேர்த்ததோடு வாரம் தவறாமல் ரஜினி நடிக்கும் திரைப்படங்களின் போஸ்டர்களையும், ரஜினிகாந்த் பற்றிய புத்தகங்களையும் தரத் துவங்கினார். இதை நான் வகுப்புக்குக் கொண்டு சென்று மற்ற மாணவர்களிடம் காட்ட, இந்தப் புத்தகங்களைப் பார்க்கவே ஒரு கூட்டம் சேர்ந்துவிடும். வகுப்பு தலைவன் ஜாண் கலோரின் ஏற்கனவே ரஜினி ரசிகனாக இருந்ததால் இருவரும் நெருக்கமாகிவிட்டோம். ரஜினி மாதிரியே நடந்து காட்டுவான்; தலையை மேல்நோக்கி கலைத்துப் போட்டபடி ஏதேனும் வசனமெல்லாம் பேசுவான்.  அவன் என்னிடம், ‘நம்ம இயற்பியல் சார் பயங்கர ரஜினி ரசிகராக்கும். புதுக்கடை ரசிகர் மன்றத்துல அவரும் உண்டாம். அதுனால இயற்பியல் புத்தகத்த ரஜினி புளோஅப் வச்சு அட்டைபோடு, நானும் போட்டுட்டு வாறேன் என்றான். இருவரும் ரஜினி புளோஅப்ல அட்டை போட்டுட்டு வந்தோம். அவர் அதை கண்டு கொள்ளவில்லை. நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தோம். இயற்பியல் ரெக்கார்டு குடுக்கும்போது ரஜினி புளோஅப் கொண்டு அட்டை போட்டு விட்டு, மேலே சிவப்பு கண்ணாடி பேப்பரால் பொதிந்து அழகாக வடிவமைத்துக் கொடுத்தோம். எல்லாரது ரெக்கார்டுகளும் அடுக்கிக் கட்டப்பட்டு இயற்பியல் ஆய்வதத்திற்குப் போனது.

மறுநாள் நான்காவது பாடவேளை முடிந்ததும், ஒரு பனிரெண்டாம் வகுப்பு மாணவன் வந்து, ‘இக்னேஷியஸ் சார் கூப்புடுறாரு ஸ்டாப் ரூமுக்கு வரணுமாம் என்று அழைத்துப் போனான். நான் உள்ளேப் போனதும், ‘உன்ன இங்குள்ள எல்லாரும் பாக்கணுமுண்ணு ஆசைப்பட்டாங்க. அதுதான் கூப்பிட்டேன் என்றார் சிரித்தபடி. எனது ரெக்கார்டு நோட்டு திரு. சகாயம் ஆசிரியரின் கையில் இருந்தது. இங்க காட்டும் ஓய் என்று ராமசாமி ஆசிரியர் கேட்கிறார். ஆளாளுக்கு எனக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனையை முன்மொழிகிறார்கள். அடித்து தொடையை கிழிப்பதிலிருந்து காந்தாரி மிளகை மூலத்தில் தேய்த்து நடு வெயிலில் நிறுத்துவது வரைக்கும் தொடர்கிறது. ‘நம்ம ஊரு மானத்த கப்பலேத்திட்டியடே என்று சகாயம் சார் முறைக்கிறார். ‘பேச்சுப் போட்டியில எல்லாம் பேசி முதல்பரிசு வாங்குற நீ, கிறுக்குத்தனமா இப்படி ரசிகர் ஆயிருக்கிறியடே., சினிமா மோகம் உன்ன படிக்கவிடாதே என்று எனக்கான அங்கலாய்ப்பை வெளியிட்டார் கலஸ்டின் ஆசிரியர். அப்போது, ‘அவனை சாப்பிட விடுங்க, பெறகு கூப்பிட்டு மற்ற விஷயங்களப் பாருங்க என்றார் லேமுவேல் அண்ணன்.

‘போ... போய் சாப்பிட்டுட்டு லேப்ல வா என்றார் இக்னேஷியஸ் ஆசிரியர். நான் வகுப்பறைக்கு வந்தாலும் சாப்பாடு இறங்கவில்லை. ‘ஒரு குடை விஷயத்துக்கே அந்த அடி அடிச்சவரு, இண்ணு உன்ன கொல்லுவாரு என்றார்கள் எனதருகில் அமர்ந்திருந்த நண்பர்கள். நண்பன் ஜஸ்டின் ராவ், அவரது பட்டப் பெயரைச் சொல்லி, ‘இன்ணைக்கு நீ அவருக்கு பலி தான் என்றான். நான் உள்ளபடியே நடுங்கித்தான் ஆய்வகத்திற்குச் சென்றேன். மேஜை மீது அதே கம்பு. நாற்காலியை பின்னோக்கி அசைத்தபடி ஆடிக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும், ‘இங்க வா’ என்றார். நான் தியேட்டருக்கே அதுவரைக்கும் போனதில்லை என்பது வரை எல்லா கதைகளையும் கேட்டறிந்தார்.

‘உங்க ஊருல நடந்த ரஜினி ரசிகர் மன்ற ஆண்டு விழாவுல ரஜினி என்ற மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்ணு பேசியிருக்க. பதினொராம் வகுப்புலேயே மன்றத்துக்கு செயலாளராகியிருக்க. இது உன்ன எங்கக் கொண்டு விடும்ணு தெரியுமா? கமல் ரசிகர்களோட அடி நடத்த வைக்கும். வாழ்க்கை பூராவும் உன்ன போஸ்டர் ஒட்ட வைக்கும். படிக்க விடாம அடுத்தப் படத்தை பற்றியே சிந்திக்க வைக்கும். எனக்குத் தெரிஞ்சு எத்தனையோ பேரு வாழ்க்கையையே ரசிகர் மன்றத்தால தொலச்சிருக்கான். நீ அப்பா இல்லாத பையன். உன்னக் கெடுக்குறதுக்கும் பயன்படுத்துறதுக்கும் பலரும் வருவான். ஆனா உனக்காக எவனும் பதினொன்றாம் வகுப்பு தேர்வெழுத வர மாட்டான். ஒரு படம் பாத்தமா, ரசிச்சமா அத அதோட விட்டுரணும். சுமந்துகிட்டு திரியக்கூடாது. உன்னோட பேச்ச நல்லதுக்குப் பயன்படுத்து. பெரிய அரசியல் தலைவனா கூட வர முடியும். ரசிகர் மன்றங்கள்ள பேசுறத விட்டுட்டு நல்ல மேடைகள்ள பேசு. கட்டவுட் வைக்கிறதும், பாலாபிஷேகம் நடத்துறதும் சுத்தப் பைத்தியக்காரத்தனம். சினிமா, சினிமா காரனுக்குத்தான் சோறு போடும். ரசிகனுக்கு சோறு போடாது. போய் நல்லா படி’ என்று அனுப்பினார்.

நான் வீட்டிற்குப் போனதும் முதல் வேலையாக என்னிடம் இருந்த ரஜினி புளோஅப் எல்லாத்தையும் ரசிகர் மன்றத் தலைவர்கிட்ட குடுத்தேன். ரசிகர் மன்றத்துல இனி பேசமாட்டேண்ணு சொன்னேன். சினிமா பைத்தியம் என்னை விட்டு முழுமையாகப் போகாவிட்டாலும் ரசிகர் பைத்தியம் தெளிந்தது. அதற்கு எனது இயற்பியல் ஆசிரியர் திரு. ஜாண் இக்னேஷியஸ் அவர்கள்தான் காரணம்.

(இன்னும் பேசுவேன்)

 


ஜூலை 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை



Error
Whoops, looks like something went wrong.